விஜயகாந்த்துடன் ஒரு நாள்



வானத்தில் பறந்து வருபவருக்கு மக்கள் கஷ்டம் தெரியுமா?

பறவைகள் கூட பயணம் தொடங்காத அதிகாலை நேரம்... நாமக்கல் ‘நளா’ ஓட்டலில் தங்கியிருந்தார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். உள்ளேயும், வெளியேயும் வரிசை கட்டி நிற்கின்றன வாகனங்கள். யார் யாரோ காத்திருக்கிறார்கள். ஆளுயர இரும்பு கேட் முனகிக்கொண்டே நமக்காகத் திறக்கும்போது, உள்ளே ஆழ்ந்த அமைதி. நேரம் ஆக ஆக சூடு பறக்கிறது இடம். ‘‘நாளைக்கு எங்கெங்கே பிரசாரம், என்னென்ன வேலைகள்...

இங்கே மக்களுக்கு என்னென்ன பிரச்னைகள்னு எல்லாம் பேசிட்டு தலைவர் தூங்க லேட் நைட் ஆயிடுச்சு...’’ என உதவியாளர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். தே.மு.தி.கவின் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி லுங்கியில் பரபரக்கிறார். அவரிடம் பேசிவிட்டு உள்ளே போனால், கறுப்பு சபாரி அணிந்த இரண்டு காவலர்கள் அறை வாசலில் நிற்கிறார்கள். ‘‘தலைவர் பார்க்கிறதெல்லாம் பிரசாரத்திற்குக் கிளம்பும்போதுதான். முதல் மீட்டிங் பரமத்தி வேலூர்ல... அங்கே போயிடுங்க...’’ என தகவல் தருகிறார்கள்.

பரமத்தி வேலூர் அதிரிபுதிரிபடுகிறது. ‘அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே.... பனித்துளியைப் போல குணம் படைச்ச தென்னவனே...’ என ஊரே அதிர்கிற டெஸிபலில் பாடல் ஒலிக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியும், தே.மு.தி.கவும் ‘கலந்து’ விட்டது தெரிகிறது. ‘கண்ணுபடப் போகுதய்யா...’ பாட்டுக்கு குத்து டான்ஸ் போட்டதில் தே.மு.தி.க. தொண்டர்களை வென்றார்கள் பா.ம.க தொண்டர்கள். ‘‘இன்னிக்கு தலைவர் யாரைப் பார்த்து கோவிச்சுக்கப் போறாரோ...’’ என அடங்கிய குரலில் பேசிக்கொள்கிறார்கள். ‘‘கொடிகளை தாழ்த்திப் பிடிச்சுக்கப்பா, அவருக்குப் பிடிக்காது’’ என வேண்டுகோள் விடுகிறார்கள். ‘‘இதோ வந்துவிட்டார் கேப்டன்’’ என அடிக்கொரு தரம், நொடிக்கொரு விதம் சொல்கிறார்கள். ஒரு சில நிமிடங்களில் ஃப்ளாஷ் நியூஸ் போட்ட மாதிரி அள்ளி அப்பி
விட்டது கூட்டம்.

‘பளீர்’ வேகத்தில் வழுக்கிக்கொண்டு வருகிறது விஜயகாந்தின் வாகனம். கூட்டத்தின் மையமாக இடம் பார்த்து வாகாக நின்ற வேனைப் பார்த்ததும் ‘‘கேப்டன் வாழ்க...’’ சத்தம் வானத்திற்குப் போகிறது. வேன் நின்று நான்கைந்து விநாடிகள் வெளியே இருந்த பரபரப்பிற்கு வண்டியிலிருந்து எந்த பதிலும் இல்லை. ஐந்தாவது விநாடியில் ஹைட்ராலிக் மேடையில் மெல்ல மெல்ல மேலே வருகிறார் விஜயகாந்த். தொட்டுப் பார்க்க, கிள்ளிப் பார்க்க, கை குலுக்க, தொட்டுக் கும்பிட என முண்டியடிக்கிற அத்தனை பேர் அன்பையும் கைகூப்பலில் ஏற்றுக்கொள்கிறார்.

மந்திரப்பேச்சு இல்லை. சொல்லாடல்கள் கிடையாது. கீழே இருக்கிற சாமான்யனின் பேச்சும், மேலே நிற்கிற தலைவரின் பேச்சும் ஒரே அலைவரிசையில் ஒத்துப்போகிறது. ‘‘மறுபடியும் காங்கிரஸை நம்பாதீங்க. இந்த அம்மாவையும் நம்பாதீங்க. உங்களுக்கு என்ன கிடைச்சது இங்கே? நான் இரண்டு நாளா இங்கேதானே சுத்தி வர்றேன்.  வேண்டிய வசதிகள் ஒண்ணும் இல்லையே... கல்வி மாவட்டம்னு நாமக்கல் பெயர் வாங்கிவிட்டது. ஆனால், மாணவர்களுக்கான வசதிகள் எங்கே இருக்கு?

காங்கிரஸில் பெரிய பெரிய தலைவர்கள் இருந்தது எல்லாம் அந்தக்காலம். அதற்கு வேண்டிய மரியாதையெல்லாம் நாம் நிறைய கொடுத்தாச்சு. இனிமேல் போதும். இந்த அம்மா டாஸ்மாக்கில் எவ்வளவு கலெக்ஷன் வரும்னுதான் பார்த்துக்கிட்டு இருக்காங்க. இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை வேற... கலெக்ஷன் களை கட்டும். வானத்தில் பறந்து வர்றவங்களுக்கு மக்கள் படுகிற கஷ்டம் தெரியுமாய்யா? வெயில் சூடு தெரியுமாய்யா? பட்ட கஷ்டம் போதும்.

எல்லாத்தையும் தீர்த்து வைக்க நரேந்திர மோடி வந்திருக்கார். அப்படிப்பட்ட நல்லவர் வரணும்னுதான் இவ்வளவு பெரிய கூட்டணியை அமைச்சிருக்கோம். மோடி நல்ல மனிதர். நாடே அவரைக் கொண்டா டுது. நாம கொண்டாட வேண்டாமா! எந்தப் பிரச்னையும் இல்லாமல் மோடி ஆட்சிக்கு வரணும்னா, நம்ம வேட்பாளர் டெல்லிக்குப் போகணும். அதற்கு நீங்க ஓட்டு போட ணும்...’’
விஜயகாந்த் உணர்ச்சிகரமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது, சில பா.ம.க. தொண்டர்கள் உற்சாகமிகுதியில் தங்கள் கட்சிக் கொடியை உயர்த்திக் காட்டுகின்றனர். ‘‘சொன்னா கேட்கமாட்டியா, நீ வந்திருந்தேன்னு டாக்டர்கிட்ட சொல்லுறேன்.

கொடியை இறக்கு. மக்களை நான் பாக்க வேண்டாமா? மக்கள் என்னையப் பாக்க வேண்டாமா?’’ என்று கண்டிக்கிறார். இடையிடையே உற்சாகத்தில் குரலெழுப்பும் தொண்டர்களை ஒழுங்குபடுத்துகிறார். கை நிறைய வைத்திருக்கிற மைக்குகளை கீழே வைத்துவிட்டு, ‘‘இப்பிடியே நீங்க பேசிக்கிட்டிருந்தா நான் கீழே வந்திடுவேன்... நீ மேலே ஏறி வந்து பேசு...’’ என அவர் சொன்னதும் கூச்சல் அடங்கி, கொடிகள் கீழிறங்குகின்றன.

சமாதானமாகி மறுபடியும் பேசுகிறார். ‘‘நாளுக்கு நாள் எகிறும் விலைவாசி, நித்தம் மக்களை இம்சைப்படுத்தும் மின்வெட்டு, விலை நிலமாக மாறிவரும் விவசாயிகளின் வாழ்க்கை, என்னங்க அனுபவிச்சீங்க... எதைக் கண்டோம்...’’ - இப்படிப் போகிறது அவரது பேச்சு. எல்லாமே சாதாரண வார்த்தைகள். கோபம், அமைதி என்ற இரண்டே அணுகுமுறைதான். கோபப்பட்டாலும் கை தட்டுகிறார்கள்... சிரித்தபடி பேசினாலும் கை தட்டுகிறார்கள். ‘‘சட்டசபையில என்னால் வாயைத் திறக்க முடியலை. மக்கள் மன்றம்தான் எனக்கு மேடை. மோடிக்கு ஓட்டுப் போடுங்க. நீங்க நல்லாயிருக்கணும்னு நினைக்கிறவன் நான்’’ என சொல்லிவிட்டு திருச்செங்கோடு பறக்கிறார் கேப்டன்.

திருச்செங்கோட்டில் தே.மு.தி.க கொடிகளுக்கு இணையாக பா.ம.க கொடிகள் பறக்கின்றன. பரமத்தி வேலூரைப் போலவே பெருங் கூட்டம் காத்திருக்கிறது. குழந்தைகள் படிப்பு, வசதிகள் பற்றியே இங்கும் பேசுகிறார். ‘‘எவ்வளவு ஸ்கூல் இருக்கு இங்கே... எப்படிப்பட்ட வசதிகள் இருக்கணும்... எதையாவது இவ்வளவு காலம் செய்ய முடிஞ்சதா! அப்புறம் எதுக்கு ஓட்டுப்போடணும்? தாய்மார்கள் யோசிக்கணும்...’’ என்கிற விஜயகாந்த், ‘‘இங்கே நிற்கும் வேட்பாளர் பெயர் தெரியுமா? சின்னம் தெரியுமா?’’ என்று கேள்வி கேட்க, வாகனத்தை ஒட்டி நிற்கிற தொண்டர்களிட
மிருந்து பதில் பறக்கிறது. புருவம் உயர்த்தி, ‘‘நீங்க நிறுத்துங்க. பின்னாடி இருக்கவங்க சொல்லட்டும்’’ என்பவரின் குரலும் உயர்கிறது.

‘‘தூக்கம் கெட்டுப் போயி, பிள்ளைகள் படிப்பு பாழாகி, வயசானவங்க புழுக்கத்தாலே கஷ்டப்பட்டு... என்னத்தை கண்டீங்க? எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்ட மோடி வந்திருக்கார். எங்களுக்கு ஓட்டுப் போட்டா இன்னும் அவரை தாங்கி நிற்போம்’’ என நாலாபக்கமும் சுற்றிச் சுழன்று பேச கூட்டத்திற்கு அருள் ஏறத் தொடங்குகிறது. ‘‘ஆட்சிக்கட்டிலில் இருந்தவங்க பண்ணின தப்புக்கு நாம் ஏன் தண்டனை அனுபவிக்கணும் மக்களே?’’ என கேள்வி கேட்டு பதில் வாங்குகிறார்.

அடுத்து ராசிபுரம்... அண்ணா சிலை அருகே திரண்டிருந்த கூட்டத்தில் உற்சாகமாக மைக் பிடித்த விஜயகாந்த், நிதி அமைச்சர் சிதம்பரத்தையும், முதல்வர் ஜெயலலிதாவையும் வகையாக ஒரு பிடி பிடிக்கிறார். ‘‘நம்ம நிதியமைச்சர் சிதம்பரம் மக்களோட பி.எஃப். பணத்தை பங்குச் சந்தையில போட்டிருக்கார். லாபம் வந்தா தருவாராம். நஷ்டம் வந்தா மக்கள் தலையில விழுமாம். இதெல்லாம் என்னங்க கணக்கு... மக்களை பந்தாடுறீங்களா? 17 வருஷமா சொத்துக் குவிப்பு வழக்கை ஜெயலலிதா இழுத்தடிக்கிறாங்க. அவருக்கு ‘வாய்தா ராணி’ன்னு விருதே குடுக்கலாம்...’’ என்று அவர் சொல்ல, கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. 

பேசி முடித்ததும் கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு வாகனம் நகர... சிவந்த கண்களில் தன்னம்பிக்கை மிளிர அடுத்த இடம், பிறகொரு மீட்டிங் என தாவி ஏறி மைக்கைப் பிடிக்கிறார் விஜயகாந்த்.

நா.கதிர்வேலன்
படங்கள்: புதூர் சரவணன்