ஊன் வெஞ்சன ரொட்டியும், பொதியப்பமும் உங்களுக்குப் பிடிக்கும்தானே? பொங்கு ரொட்டியை சாப்பிட்டுக் கொண்டே கதைக்கலாமா? அல்லது தானியங்கி பணப்பொறியில் பணம் எடுத்து, பகிர்வுத் தானியில் மெரினா சென்று கடலழகை ரசிக்கலாமா? உங்கள் பகுதியில் கள வினை எப்படி இருக்கிறது? அதற்காக வரும் அரசி யல்வாதிகள் வான் சிவிகையை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர் அல்லவா? இன்று ஆக்கத் துணை இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படுவதில்லை!’’
- பதற்றமாகாதீர்கள். பேச்சு மொழியில் நாம் இயல்பாகப் பயன்படுத்தும் அயல் மொழி வார்த்தைகளைத்தான் இப்படித் திருத்திப் பேசச் சொல்கிறது தமிழ் வளர்ச்சித்துறை. பொதுமக்களின் புழக்கத்திற்காக இதுபோன்ற தமிழ்ச் சொற்களை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு அசத்தி வருகிறது தமிழ் வளர்ச்சித் துறையின் ‘சொல்வங்கி’ திட்டம். இதுவரை இப்படி 936 புதிய தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன!
‘‘இன்றைக்கு நம் மக்களிடையே அதிகப்படியான ஆங்கில வார்த்தைகள் புழக்கத்தில் உள்ளன. அவை அன்றாடம் பயன்படுத்தும் அவசியமான வார்த்தைகளாகவும் இருக்கின்றன. உதாரணத்துக்கு, ஃப்ளாஷ் நியூஸ் (பளீர் செய்தி), கால் டாக்சி (அழைப்புந்து), புரூட் சாலட்(பழக்கூட்டு), லஸ்ஸி (குடிதயிர்), நூடுல்ஸ் (இழையுணவு), மெமரி கார்டு (நினைவு சில்லு), மெட்ரோ ரயில் (சுரங்க தொடரி), பிளாஸ்டிக் (குழைமம், நெகிழி), பென் டிரைவ் (குறும் பதிலி),
ஆன்டி வைரஸ் (நச்சுமுறி மென்பொருள்), பீக் அவர் (நெரிசல், உச்ச நேரம்), ரிமோட் கன்ட்ரோல் (தொலைபடு கலன்), டூவீலர் (ஈருருளி), சிக்னல் (வழிக்குறி), ஆன்லைன் (இணையதடம்), டிஜிட்டல்(எண்மம்), தட்கல் (உடனடி), நிலவரம் (நடப்பு), அவகாசம் (கால வாய்ப்பு)... இப்படி ஏகப்பட்ட வார்த்தைகள் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இவை அப்படியே புழக்கத்தில் இருந்தால் நம் தமிழ் மொழி பயன்பாட்டிலிருந்து மெல்ல விலகிவிடும். எனவே அதற்கு இணையான தமிழ்ச் சொற்களை உருவாக்க நினைத்தோம். அதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த ‘சொல்வங்கி’ திட்டம்’’ என்கிறார் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் கா.மு.சேகர்.
இந்த வார்த்தைகளை உருவாக்க மொழி வல்லுநர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து விறுவிறுப்பாக செயல்படுகிறது தமிழ் வளர்ச்சித் துறை. ஒவ்வொரு மாதமும் கூடும் இந்தக் குழு, முதலில் மக்களிடம் புழக்கத்தில் வந்துவிட்ட ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களை ஆராய்கிறது. பிறகு, அதற்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிகிறது. இதனையடுத்து, அவை மக்களின் புழக்கத்திற்கு விடப்படுகின்றன.
‘‘இந்த மாதம் நடந்த கூட்டத்தில் நிறைய சொற்கள் பற்றி விவாதித்தோம். குறிப்பாக, கணினியின் ‘மவுஸ்’ பற்றி பேசினோம். அப்படியே மொழிபெயர்த்தால் எலி அல்லது சுண்டெலி எனச் சொல்ல வேண்டும். ஆனால், அது நன்றாக இருக்காது. மவுஸ் செய்யும் பணி என்ன? என்பது பற்றி ஆலோசித்தோம். மவுஸ் சுட்டிக் காட்ட பயன்படுத்தப்படுகிறது. எனவே, அதனை ‘சுட்டி’ என வழங்குவதே சரி எனத் தீர்மானித்தோம். இப்படி ஒவ்வொரு சொற்களும் விவாதிக்கப்பட்டு, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகே பயன்பாட்டிற்கு அளிக்கிறோம்’’ என்கிறார் அவர் மகிழ்ச்சி பொங்க.
அது சரி, துவக்கத்தில் இருக்கும் வார்த்தைகளுக்கு அருஞ்சொற்பொருள் என்னாச்சு என்கிறீர்களா?
இதோ...
ஊன் வெஞ்சன ரொட்டி - பர்கர்
பீட்சா - பொதியப்பம்
பொங்கு ரொட்டி - பப்ஸ்
கதைத்தல் - சாட்டிங்
தானியங்கிப் பணப்பொறி - ஏ.டி.எம்
பகிர்வுத் தானி - ஷேர் ஆட்டோ
கள வினை - பிரசாரம்
வான் சிவிகை - ஹெலிகாப்டர்
ஆக்கத் துணை - ஸ்பான்ஸர்ஷிப்
இந்த
ஈருருளிக்காரனுங்க தொல்ல
தாங்கல...
இன்னா
அப்படி பாக்குற? உனக்கு வோனும்னா நீ ஒரு ஊன் வெஞ்சன ரொட்டி வாங்கி சாப்புடு!
தாயீ! கொஞ்சம்
பழக்கூட்டு இருந்தா போடு தாயீ... வெயிலு தாங்கல!
கொழந்த பரீட்ச முடியற வரைக்கும் டிவிய போட்டீங்க.... தொலைபடு கலனாலேயே அடிப்பேன்!
அப்படியே பையனுக்கு ஒரு பொதியப்பம் வாங்கிட்டு வாங்க...
இந்த உச்ச நேரத்துல வீட்டுக்கு போறத நெனச்சா... ஐயோ, சுரங்க தொடரி எப்படா வரும்னு இருக்கு!
- பேராச்சி கண்ணன்