கிசுகிசுவுக்கு பயந்தால் வாழ முடியாது!



ஸ்ருதி ஹாசன் சுர்ர்ர்

பேசுவதற்கு நிறைய இருக்கிறது ஸ்ருதி ஹாசனிடம். ஆனால், நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கிறார். ‘‘இன்னும் இரண்டு மணி நேரத்தில் துபாய் ஃபிளைட் பிடிக்கணும். இருபது நிமிஷத்தில பேசி முடிச்சிடலாமா?’’ என ட்வென்ட்டி 20 பரபரப்பு காட்டியவரின் கொள்ளை அழகில் கிளீன் போல்டாகிறது மனசு. சமாளித்து வீசினோம் கேள்விப் பந்துகளை.‘‘தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் எண்ணத்தில்தான் தொடர்ந்து இந்தியில் நடிக்கிறீங்களா?’’

‘‘அப்படியெல்லாம் இல்லைங்க. இந்திப் படங்களில் நடிச்சாதான் தேசிய அங்கீகாரம் கிடைக்கும்னு எந்த விதியும் இல்லை. எந்த மொழிப் படமா இருந்தாலும், ரசிகர்களுக்குப் பிடித்திருந்தால் அவர்கள் மத்தியில் ரீச் ஆகிட முடியும். தமிழ், தெலுங்குப் படங்கள் கூட பாலிவுட்டில் பெரிய அளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கு. இங்க வெற்றி பெற்ற ‘ரமணா’ இப்போ ‘கப்பார்’னு இந்தியில் ரீமேக் ஆகுது. அந்தப் படத்தில் அக்ஷய்குமார் ஜோடியா நடிச்சிருக்கேன். அப்புறம் ஜான் ஆபிர காம் ஜோடியா ‘வெல்கம் பேக்’ படம் பண்ணியிருக்கேன். தேசிய விருது பெற்ற இயக்குனரான டிக்மான்ஷு துலியா இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கப்போறேன். தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த ‘ரேஸ் குர்ரம்’ ரிலீஸ் ஆகியிருக்கு...’’

‘‘அப்பா படத்தில் (‘உத்தம வில்லன்’) நடிக்க மறுத்துட்டீங்களாமே?’’‘‘என்ன பண்றதுங்க... ஏற்கனவே கமிட் ஆன படங்களுக்கு கொடுத்த கால்ஷீட் முடியுறதுக்கே நாள் இருக்கும்போது புதுசா ஒரு படத்துக்கு எப்படி தேதி கொடுக்க முடியும்? தொழில் வேற, உறவு வேற. அதுல கரெக்டா இருக்கணும் என்பதில் கவனம் எடுத்துக்கிறேன். அப்பாவோட படத்தில் நடிக்கணும்னு எனக்கும் ஆசைதான். அப்பாவும் மகளும் நடிக்கப்போறோம்னா அது ரொம்ப ஸ்பெஷலான கதையா இருக்கணும். அப்படி அமைஞ்சா மட்டுமே நடிப்பேன்.’’

‘‘ஹரி படத்தில் உங்க கேரக்டர் என்ன?’’‘‘கொஞ்சம் கேப்பிற்கு பிறகு நான் நடிக்கப்போகும் தமிழ் படம் இது. எனக்கு இதில் யூத்ஃபுல்லான ஒரு கேரக்டர். ஹரியோட படங்களில் எதிர்பார்க்கும் பர
பரப்பு, விறுவிறுப்பு, காமெடி, ரொமான்ஸ் எல்லாம் கலந்த கதைதான். விஷாலுக்கு ஜோடியா பண்றேன். இந்த மாசத்தில் ஷூட்டிங் ஆரம்பிச்சிடும். இப்போதைக்கு அந்தப் படம் பற்றி அவ்வளவுதான் சொல்ல முடியும்.’’

‘‘அப்பா சகலகலா வல்லவன். நடிப்பு, நடனம், இசையமைப்பாளர், பாடகி, மாடல் என நீங்களும் சகலகலாவல்லியா கலக்குறீங்களே..!’’ ‘‘இவ்வளவு விஷயம் எனக்குத் தெரியும்னு நீங்க போட்ட பட்டியலைத் தாண்டி, கமல் மகள் என்பதைத்தான் நான் பெருமையா நினைக்கிறேன். 50 வருடங்களுக்கு மேல் அப்பா சினிமாவில் இருக்கார். ஒருநாளும் சினிமா அவருக்கு சலித்ததில்லை. நாளுக்கு நாள் சினிமா மீதான அவரது காதல் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

சினிமாவில் வேலை பார்ப்பதை பெருமையா நினைக்கும் ஒருத்தருக்கு நான் மகளாகப் பிறந்ததை பெருமையா நினைக்கிறேன். அப்பா ஆஸ்கர் விருது வாங்கணும்னு எத்தனையோ ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்; விரும்பலாம். எந்த விருது வாங்கினாலும் அலமாரியில்தான் வைக்கணும். ரசிகர்களின் கைதட்டல்தான் என்றைக்குமே தரமான, உண்மையான விருது. அதுக்கு ஈடு இல்லை.’’
‘‘மர்ம மனிதன் தாக்க வந்தது, குடல்வால் அறுவை சிகிச்சை என்று சோதனைகள் தொடருதே..?’’

‘‘அந்தப் பிரச்னைக்கு பிறகு, பயம் நீங்கி தைரியம் வந்திருக்கு. இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு பெரிய பிரச்னையாகவே இருக்கு. இப்போதைக்கு என்னுடைய பாதுகாப்பை மட்டும் பார்த்துக்கறேன். எதிர்காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கறதுல முடிந்தவரை என்னை ஈடுபடுத்திக்கிற திட்டம் இருக்கு. அப்புறம், உடம்புக்கு திடீர்னு முடியாமப் போறது எல்லோருக்கும் இயல்புதானே! எனக்கும் வந்துவிட்டது. அதுக்கு என்ன பண்ண முடியும்? சோதனைகளும் அனுபவங்களும்தான் நமக்கு நிறைய கற்றுத்தரும்.’’

‘‘ ‘டி டே’ படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்ததால்தான் தமிழில் வெளியிட மறுத்தீர்களா?’’
‘‘அப்படி நினைத்திருந்தால் அந்தப் படத்தில் நடித்திருக்கவே மாட்டேன். அது எனக்கு ரொம்பப் பிடித்த கேரக்டர். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததை நினைத்து சந்தோஷப்படுகிறேனே தவிர, ஏன் நடித்தோம் என்று ஃபீல் பண்ணவில்லை. ஒப்பந்தத்தை மதிக்கவில்லையே என்ற ஆதங்கம்தான்.’’

‘‘ஆர்யாவுடன் இணைந்து நடித்தால் காதல் கிசுகிசு கிளம்பி விடும் என்பதால்தான் ‘மீகாமன்’ படத்தில் நடிக்கவில்லையா?’’ ‘‘சேச்சே... யார் சொன்னது. கிசுகிசுவுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கும் ஆள் இல்லை நான். அடுத்தவர்கள் சொல்வதை நினைத்துக் கொண்டிருந்தால் இங்கு வாழவே முடியாது. ஆர்யா படம் என்றில்லை... நிறைய வாய்ப்புகளை மிஸ் பண்றேன். சத்தியமா கால்ஷீட் தவிர அதுக்கு வேற காரணங்கள் இல்லை!’’

ட்வென்ட்டி மினிட்ஸ் ஓவர்!

அமலன்
ஸ்பெஷல் படங்கள்: கபில்கணேஷ்
நன்றி: ஜுவல் ஒன்