அவன் அவள் Unlimited



சில பெண்கள் திருமணம் செய்துகொள்வதற்கு பதில் ஒரு வேலையைத் தேடிக் கொள்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் வேலை தேடிக்கொள்வதற்கு பதில் திருமணம் செய்து கொள்கிறார்கள்!
- மொகொகோமா மொகொனோனா

அமெரிக்க மாப்பிள்ளை... தமிழ் சினிமாக்களில் இன்று வரை தவிர்க்க முடியாத கேரக்டர். கொஞ்சம் கலராக... கொழுக் மொழுக்கென... ஹீரோவை விடவும் பெட்டர் லுக்கில் ஒரு இளைஞன் சிக்கினால், கோடம்பாக்கத்தில் அவன் அடையக் கூடிய அதிகபட்ச பதவி, அ.மாப்பிள்ளைதான். இந்த கேரக்டருக்குப் பின்னால் உள்ள உளவியல், சுவாரஸ்யமானது. பெரும்பாலும் ‘கதையின் நாயகி பணத்துக்கு ஆசைப்படாதவள், ஆடம்பரத்தை விரும்பாதவள், படிப்பைக் கூட ஒரு பொருட்டாக நினைக்காதவள்’ என்பதையெல்லாம் நிரூபிக்கத்தான் இந்த அமெரிக்க மாப்பிள்ளைகள் உதவுவார்கள். மேற்கண்ட எல்லா தகுதிகளும் இவர்களிடம் இருக்கும்.

ஆனாலும் ஹீரோயின் இவர்களை நிராகரித்து ஹீரோவின் கரம் பிடிக்கும்போது, கரகரவென நமக்குள் ஏதோ உருகும். ஆனால், இந்த எமோஷன் சரியா? அறிவியல்பூர்வமாக பணம் என்பது ஆண் - பெண் ஈர்ப்பில் எந்த அளவு ஆதிக்கம் செலுத்துகிறது? உலகம் முழுவதும் உளவியல் நிபுணர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி இது. எக்கச்சக்க உளவியல் சோதனைகள் இதற்காகச் செய்யப்பட்டிருக்கின்றன. எல்லாமும் தந்தது ஒரே ரிசல்ட்டைத்தான். உதாரணத்துக்கு ஒன்று...

பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்களான நிக்கலஸ் குகன் மற்றும் லுபமிர் லாமி என்பவர்கள் அங்குள்ள வான்னஸ் நகர வீதிகளில் செய்த ஆராய்ச்சி இது. மூன்று தனித்தனி ஏரியாக்கள்... அங்கே சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் கார்களுக்குள் மூன்று ஹேண்ட்சம் இளைஞர்கள் அமர்த்தப்பட்டிருப்பார்கள். அந்தப் பகுதியைக் கடக்கும் பெண்களிடம் அவர்கள் கார் கதவைத் திறந்துகொண்டு போய் பேச்சுக் கொடுப்பார்கள்.

நிறம், உயரம், எடை, முகவெட்டு எல்லாவற்றிலும் அந்த இளைஞர்கள் ஒரே மாதிரி இருந்தனர். பேசும் டயலாக்கிலும் இம்மியளவு வித்தியாசமில்லை. வித்தியாசமெல்லாம் அவர்கள் உட்கார்ந்திருக்கும் காரில்தான். ஒருவனுக்கு மிக விலை உயர்ந்த கார், ஒருவனுக்கு ஓரளவு விலையுள்ள நடுத்தர கார், மூன்றாமவனுக்கு கிட்டத்தட்ட ஷேர் ஆட்டோ ரேஞ்சுக்கு ஒரு மலிவான கார் தரப்பட்டிருந்தது.

இவர்கள் பேச்சுக் கொடுத்த பெண்களில் எத்தனை பேர் பதிலுக்கு நட்பு பாராட்டினார்கள் எனக் கணக்குப் பார்த்தார்கள்... பெண்களைக் கவரும் வெற்றி விகிதத்தில் விலையுயர்ந்த காருக்குக் கிடைத்தது 23.3%, நடுத்தரக் காருக்கு 12.8%, மலிவான காருக்கு... ஜஸ்ட் 7.8% இந்தச் சோதனை மட்டுமல்ல... உலகின் எல்லா மூலையிலும் எல்லா காலகட்டத்திலும் நிகழ்த்தப்பட்ட இதே மாதிரியான பரிசோதனைகள் அனைத்துமே இதே முடிவைத்தான் காட்டியிருக்கின்றன. ஆனால், ஆண்களிடம் நடத்தப்பட்ட சோதனைகளில் அவர்கள் பணமுள்ள பெண்ணைவிட, அழகுள்ள பெண்ணிடம்தான் அதிகம் வழிந்திருக்கிறார்கள்.

‘‘பாலுறவின் உயிரியல் விளைவுகளை ஆண்கள் சுமக்கப் போவதில்லை. எனவே, குறுகிய கால பார்ட்னரைத் தேடுவது அவர்களின் இயல்பு. இதனால்தான் அவர்கள் பெண்களின் வெளிப்புற அழகை மட்டுமே பார்த்து ஜொள் விடுகிறார்கள். ஆனால், பெண்கள் குறுகிய கால உறவுகளை மதிப்பதில்லை. நீண்ட கால குடும்ப வாழ்வையும் அது தரும் பாதுகாப்பையுமே நாடு
கிறார்கள். எனவேதான் அவர்கள் ஆணின் வெளிப்புற அழகை விட, அவனுடைய உள்ளார்ந்த குணத்தையும் ஆரோக்கியத்தையும் தகுதியையும் ஆராய்ந்து பழகுகிறார்கள். நவீன காலத்தில் அந்தத் ‘தகுதி’, பணமாகவும் அந்தஸ்தாகவும் பொருள்படுகிறது’’ என இதற்கு விளக்கம் தருகிறார்கள் அந்த ஆராய்ச்சியாளர்கள்.

‘‘ஆனால், இது நம் ஊருக்கு சரியாக வருமா?’’ உளவியல் நிபுணர் ரஜனி நந்தகுமாரிடம் கேட்டோம்...‘‘நிச்சயம்  நம் நாட்டில் இப்படி ஒரு சோதனை செய்வதும்... அதில் இப்படி ரிசல்ட் வருவதும் முடியாத காரியம். ‘பணம் இருந்தா... நீ பெரியவனா?’ என்றோ, ‘பணக்காரனிடம் ஆபத்து இருக்கும்’ என்றோ நிச்சயம் நம் பெண்கள் யோசிப்பார்கள். இந்த விஷயத்தில் நகரத்துக்கும் கிராமத்துக்கும் கூட பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடியும். ஆனால், பெண்களுக்கு திருமணம் செய்யும் பெற்றோர் என்று எடுத்துக் கொண்டால்... யெஸ்... மாப்பிள்ளையின் சம்பளம் எவ்வளவு? வேலையே இல்லை என்றாலும் சொத்து இருக்கிறதா என்றெல்லாம் இங்கே காலம்காலமாகப் பார்க்கிறார்கள். இன்று மனித வாழ்வாதாரத்துக்கு பணம் முக்கியத் தேவை என்பதால் இது புரிந்துகொள்ளக் கூடியதே!’’ என்றார் அவர்.

பெண்களுக்கு இது சரி... ஆனால், நம்மூரில் ஆண்களும் பெண்களிடம் பணத்தை எதிர்பார்க்கிறார்களே..! ‘பொண்ணு கொஞ்சம் உயரம் கம்மி’ என்றதும், ‘அப்ப இன்னும் ரெண்டு பவுன் சேர்த்துப் போடுங்க’ என்கிற கலாசாரம் பிரபஞ்சத்தில் வேறெங்கும் இல்லை. பெண் உயரமாக இருக்க வேண்டும் என்ற அவனது பாலியல் விருப்பத்தை, இரண்டு பவுன் தங்கம் மாற்றி அமைத்துவிடுமா?
வரதட்சணையின் வேர்க்கால்களை உளவியல் ரீதியாகத் தேடிக் கண்டறிய முடியவில்லை. எனவே, சென்னைப் பல்கலைக்கழகத்தின் மனிதவியல் துறைத் தலைவர் டாக்டர் எஸ்.சுமதியிடம் இது பற்றிப் பேசினோம்..

‘‘நாம் ஹோமோ செபியனாக மாறிய காலத்திலிருந்தே பெண்ணுக்கு ஆண் பரிசு கொடுப்பதுதான் மனித குலத்தின் வழக்கம். அது பெரும்பாலும் பூவாக இருந்தது. அதுவும் கிடைத்தற்கரிய பூ. அந்தப் பெண் மீது அவனுக்குள்ள அக்கறையையும் அன்பையும் அவளுக்காக அவன் எடுத்திருக்கும் ரிஸ்க்கையும் அது வெளிப்படுத்தியது. இந்தப் பழக்கம் இன்னும் கூட ‘பரிசம் போடுதல்’ என்ற வடிவில் நம்மிடையே உண்டு.

ஆனால், ஆணுக்கு மணமகள் வீட்டினர் பணம், தங்கம் போன்றவற்றைக் கொடுப்பது, மிகமிக நவீன காலத்தில் ஏற்பட்ட செயற்கையான பழக்கம். தொழில்புரட்சியின் விளைவாக உலகம் பணம் சார்ந்ததாக மாறியபோது, இங்கே ஆங்கிலேயர் ஆட்சி நடந்தது. அந்தக் காலகட்டத்தில்தான் வரதட்சணை பழக்கம் இங்கே பெரும் வீச்சு பெற்றிருக்க வேண்டும்!’’ என்றார் அவர்.
நம்மூர் மனிதர்களிடம் பேசிப் பார்த்தால், தனித்துவமான ஒரு மனப்போக்கை உணர முடிகிறது.

இங்கே பாலியல் தேர்வில் பணம் குறுக்கிடுவதை ஆண், பெண் இருவருமே வெறுக்கிறார்கள். ஆதி மனிதன் உடல் பலத்தால் போட்டி போட்டுப் பறித்து வந்த உணவும் பரிசுப் பொருளும் அவனது ஆண்மையை - ஆரோக்கியத்தைப் பறைசாற்றியது. பெண்களுக்கு அது கிளர்ச்சி தந்தது. ஆனால், ‘இன்றைய பணம்’ அப்படியல்ல. பணிந்து போவதாலும் அண்டிப் பிழைப்பதாலும் கூட பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதால், அதை ஆண்மைக்கும் ஆரோக்கியத்துக்கும் அடையாளமாக நாம் ஏற்பதில்லை. உண்மை நிலை எப்படியோ... நம் ஊரில் கற்பிக்கப்படும் ஒழுக்கங்கள் லிஸ்ட்டில் பணத்தை மதியாமைக்கு ஓரிடம் எப்போதும் உண்டு!

அது சரி, ‘பெண்கள் வெளிப்புற அழகை மதிப்பதில்லை’ என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் பேச்சு வாக்கில் சொன்னதை கவனித்தீர்களா?‘காலம் காலமா குட் ஃபிகருக்கு அட்டு பாயும்... அட்டு ஃபிகருக்கு குட் பாயும்தான் அமையும்’ என்ற ‘மசாலா கபே’ இலக்கணத்துக்கு இதுதான்
அடித்தளமா?

பெண்களை சுண்டி இழுக்குறதுனாலதான் இந்த சென்ட் இவ்வளவு காஸ்ட்லியா?’’

இல்ல சார்... வாசனையே இது காஸ்ட்லி சென்ட்னு சொல்லிடும்.சென்ட்டுக்கே இவ்வளவு செலவு பண்றவர்ங்கிறதுதான் பெண்களை இழுக்கும்!

நீங்கள் யார்?

மனிதர்களில் இடது மூளைக்காரர் வலது மூளைக்காரர் என இரண்டு வகை உண்டு. நீங்கள் எந்த மூளைக்காரர் எனக் கண்டறியும் டெஸ்ட் இது. உங்கள் இரு கை விரல்களையும் இயல்பாகக் கோர்த்துப் பிடியுங்கள். எப்படி விரல் கோர்க்கிறீர்கள் என்பதைக் குறித்துக் கொண்டு கீழிருக்கும் பலன்களை தலைகீழாகத் திருப்பிப் படியுங்கள்!

* இப்படி... அதாவது, இடது கை கட்டை விரல் மேலிருக்கும்படி விரல் கோர்த்திருந்தால், நீங்கள் வலது மூளைக்காரர். அதீத கற்பனையும், படைப்பாற்றலும், வடிவங்களை வேறுபடுத்திப் பார்க்கும் திறனும் வலது மூளைக்காரரின் ஸ்பெஷல்!

* இப்படி... அதாவது, வலது கை கட்டை விரல் மேலிருக்கும்படி விரல் கோர்த்திருந்தால் நீங்கள் இடது மூளைக்காரர். எதிலும் லாஜிக் தேடுவதும், பேச்சில் வல்லவராக இருப்பதும், கணக்கு, அறிவியலில் புலி என்று பெயரெடுப்பதும் இடது மூளைக்காரரின் ஸ்பெஷல்.

- தேடுவோம்...