பொன். ராதாகிருஷ்ணனுடன் ஒரு நாள்



‘‘ஓட்டுக்கு பணம் வாங்கி அடிமை ஆகாதீர்கள்!’’

நாகர்கோவில், சிவதாணு சாலையில் உள்ள வீட்டி லிருந்து காலை 8 மணிக்கெல்லாம் தயாராகி பளிச்சென வெளியில் வருகிறார் பொன்.ராதாகிருஷ்ணன். எளிமையான வெள்ளுடை. இயல்பான பணிவு. எந்த அலட்டலும் இல்லாமல் தனியொரு வாகனத்தில் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் வாசலில் இறங்குகிறார். அர்ச்சகர்கள் பிரசாதத்துடன் தாமரையும் கொடுத்து வாழ்த்த, முகம் மலர்ந்து நன்றி தெரிவிக்கிறார். ‘பாரத் மாதா கீ ஜே’ என்று தொண்டர்கள் குரலெழுப்ப, கைகூப்பி தாணுமாலயனை வணங்கிவிட்டு, அவரின் இயல்பைப் போலவே எளிமையாக வடிவமைக்கப்பட்ட பிரசார வாகனத்தில் ஏறுகிறார்.

தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தல் ஒரு வித்தியாச அனுபவம். எதிரெதிர் துருவங்களாக அரசியல் செய்த கட்சிகளை ஒருங்கிணைத்ததில் தொடங்கி, தொகுதி ஒதுக்கீடு பஞ்சாயத்துகள் வரை எல்லா சிக்கல்களையும் தீர்த்து வைத்துவிட்டு, தான் போட்டியிடும் கன்னியா குமரி தொகுதியில் அவர் கால் வைப்பதற்குள் பிற வேட்பாளர்கள் பாதிக்களம் கடந்திருக்கிறார்கள். ஆனாலும், டென்ஷனே இல்லாமல் வலம் வருகிறார். அவரது இயல்புக்கு மாறாக பேச்சில் வெப்பம்.

‘‘1952 முதல் தமிழகத்தில் பல்வேறு கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளன. திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைக்காதவர்கள் அரசியல் அனாதைகளாக நிற்கவேண்டிய நிலை. இந்த சரித்திரத்தை மாற்றியிருக்கிறோம்’’ என்று பெருமிதமாகச் சொன்னவர், ‘‘நரேந்திர மோடியைப் போன்ற உறுதியான மனிதர் பிரதமரானால்தான் இந்தியா வலிமை பெறும். 15 வருடத்தில் அமெரிக்காவை மிஞ்சும் அளவுக்கு சீனா வளர்ந்துள்ளது. ஆனால், இங்கே இளைஞர்களின் திறமை அழிக்கப்படுகிறது. வாழ்க்கை இருட்டாக்கப்படுகிறது’’ என்று ஆதங்கப்படுகிறார்.

தாமரைகளும், காவித்துண்டுகளும் வழங்கி கட்சி முன்னணியினர் வழியனுப்பி வைக்க, மக்களுக்கு நெருக்கமாகப் பயணிக்கிறது அவரது பிரசார வாகனம். ‘‘மண்ணின் மைந்தர், கறைபடாத கரத்துக்குச் சொந்தக்காரர், குட்டி காமராஜர்... இதோ உங்களை நாடி வந்து கொண்டிருக்கிறார்’’ என்று முன்வாகனம் முழங்கிச் செல்ல, கைகூப்பியபடியே வரும் ராதாகிருஷ்ணனை சினேகத்தோடும், மரியாதையோடும் வணங்குகிறார்கள் மக்கள். காக்குமூர், கற்காடு, அக்கரை என சந்து பொந்துகளைக்கூட விட்டுவிடாத பயணம். ஊருக்கொரு இடத்தில் நின்று துண்டு அணிவித்து வரவேற்கிறார்கள் தொண்டர்கள். வெயிலுக்கு இதமாக இளநீர், பானகம், சர்பத் தருகிறார்கள்.

கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ராதாகிருஷ்ணனின் பிரசாரத் தொனி வேறு மாதிரி இருக்கிறது. ‘‘எங்களை மதவாதக்கட்சி என்கிறார்கள். வைகோ மதவாதியா? கேப்டன் மதவாதியா? ராமதாஸ் மதவாதியா? சதக்கத்துல்லா தலைமையிலான அகில இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் எங்களுக்கு ஆதரவு அளித்திருக்கிறதே, எப்படி? நான் எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தபோது மதரீதியாக, ஜாதி ரீதியாக செயல்பட்டேன் என்று யாராவது நிரூபித்தால் இந்த தேர்தலிலிருந்தே விலகிக்கொள்கிறேன்...’’ என்று சவால் விடுகிறார்.

குலசேகரம்புதூரில் தனக்கு தாமரைப்பூவைப் பரிசளிக்கும் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுகிற ராதாகிருஷ்ணன், ‘‘நான் பிரம்மச்சாரி. எனக்கு பிள்ளை, குட்டிங்க கிடையாது. அதற்காக என்னை ஒண்ணும் இல்லாதவன்னு நினைச்சுடாதீங்க. உங்கள் குடும்பம்தான் என் குடும்பம். நான் நாளைக்குச் செத்தா நீங்கதான் தூக்கிப் போடணும்’’ என்று சொல்லும்போது கண் கலங்குகிறார்கள் பெண்கள்.

ராதாகிருஷ்ணனின் நேரடி இலக்கில் இருப்பது காங்கிரஸ்தான். ‘‘நான் அரசியல்ல எதுவும் சம்பாதிச்சதில்லை. உங்களைத்தான் சம்பாதிச்சிருக்கேன். அமைச்சரா இருந்தப்போ வாங்கின சம்பளத்தைக்கூட என் சொந்த செலவுக்குப் பயன்படுத்தல. அதை வச்சு 38 ஆயிரம் பேருக்கு ‘ஹெபடைடீஸ் பி’ தடுப்பூசி போட்டேன். ஜெய்ப்பூர் பூட்ஸ் கம்பெனியைக் கூட்டிவந்து கால் இல்லாதவங்களுக்கு செயற்கைக்கால் செஞ்சு கொடுத்தேன். என்னால உங்களுக்குப் பணம் தரமுடியாது. நான் என்னையே உங்களுக்குத் தர்றேன்.

மத்தவங்ககிட்ட பணம் வாங்கிட்டு அடிமையா இருக்கிறதுக்குப் பதிலா, ஓட்டுப் போட்டு நீங்க என்னை வாங்கிடுங்க. நான் உங்களுக்கு அடிமையா இருந்து உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளோட எதிர்காலத்துக்காகவும் உழைப்பேன்’’ என்கிறபோது நெகிழ்ந்து போய் கைதட்டுகிறது கூட்டம். இளைஞர்கள் மிகுந்த இடங்களில், பாலசந்திரனுக்கும், இசைப்பிரியாவுக்கும் நேர்ந்த கொடூரத்தை நினைவுபடுத்துகிறார். 100 நாள் வேலைத் திட்ட வேலைகள் நடக்குமிடத்தில், ‘வாஜ்பாய் கொண்டு வந்த உணவுக்கு வேலைத் திட்டம்தான் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் முன்னோடி’ என்கிறார்.

‘‘நரேந்திர மோடி பிரதமரானதும் இந்தியா பெரும் வளர்ச்சியை எட்டப் போகிறது. தமிழகம் வளர வேண்டாமா? கன்னியாகுமரியும் வளர வேண்டாமா?’’ என்ற கேள்வியை எல்லா இடங்களிலுமே முன் வைக்கிறார் அவர். பெரும்பாலும் பிற கட்சிகளை விமர்சிப்பதைத் தவிர்த்து வளர்ச்சியைப் பற்றியே பேசுகிறார். நாளொன்றுக்கு சுமார் 100 கிராமங்களை இலக்கு வைத்து பிரசாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு மேல் ஏதேனும் ஒரு தொண்டர் வீட்டில் மதிய (?) உணவு. மற்றபடி தொண்டர்கள் தரும் பழங்கள், பிஸ்கெட், இளநீர்தான் உணவு. ஒவ்வொரு ஊரிலும் பலரையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கான நெருக்கமும், மக்களின் மனதுக்கு நெருக்கமான பேச்சும் ராதாகிருஷ்ணனின் பிரசாரத்தை தனித்துவமாக்குகிறது.

தனிப் பெரும்பான்மை கிடைக்கும்!

பிரசார இடைவெளியில் பொன்.ராதாகிருஷ்ணனுடன் சிறு நேர்காணல்:இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் 5 முனை போட்டி... இது யாருக்கு சாதகமாக இருக்கும்?
நிச்சயமாக எங்கள் கூட்டணிக்கு சாதகமாகவே இருக்கும். இப்போது பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் புதிய உருவம் பெற்றிருக்கிறது. ஒரு காலத்தில் தேர்தல் என்றால் தி.மு.க அல்லது அ.தி.மு.க கூட்டணியில் மட்டுமே இடம்பெற முடியும் என்றிருந்த நிலைமை இன்று மாறியிருக்கிறது. நரேந்திர மோடியை மையமாக வைத்து முதன்முறையாக தமிழகத்தில் வலுவான கூட்டணி கட்டப்பட்டுள்ளது. அதுவே ஆக்கபூர்வமான முதற்கட்ட வெற்றி.

அதிமுக தன் பிரசாரத்தில் மோடியை விமர்சிப்பதில்லை. தேர்தலுக்குப் பிறகு உங்களுக்கு அக்கட்சி ஆதரவு அளிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறதே?மோடியை விமர்சிக்க எந்தக் காரணமும் இல்லை. மனசாட்சிப்படி அவரை விமர்சிக்க முடியாது. இப்போது எந்தக் கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கின்றனவோ அக்கட்சிகள் மட்டுமே தேர்தலுக்குப் பிறகும் அங்கம் வகிக்கும். பாரதிய ஜனதா தனித்தே 272 இடங்களுக்கு மேல் பெற்று ஆட்சியைக் கைப்பற்றும். எங்கள் கூட்டணி கண்டிப்பாக 300 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும். எனவே வெளியில் எவருடைய ஆதரவும் எங்களுக்குத் தேவைப்படாது.

ஈழத்தமிழர் விவகாரம் போன்ற உணர்ச்சிபூர்வமான விஷயங்களில் காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கும் பிஜேபி நிலைப்பாட்டுக்கும் பெரிய வித்தியாசமில்லையே? 2009ல் காங்கிரஸ் அரசாங்கம் இலங்கைத் தமிழர்களை அழிப்பதற்கான ஆயுத உதவிகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் செய்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் செயல்பட்டபோது, நாங்கள் தமிழர்களுக்கு ஆதரவாகவே நின்றோம்.

இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் அழிவுக்கு மூல காரணம் அமெரிக்காவோ, ரஷ்யாவோ, பாகிஸ்தானோ இல்லை. இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் செய்த துரோகம். ‘இலங்கையில் யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, யுத்தம் முடிந்து விட்டதென்று என்னிடம் பொய் சொன்னார்கள்’ என்று கலைஞரே சொல்லியிருக்கிறார். காங்கிரஸ் செய்த துரோகத்துக்கு கணக்குத் தீர்க்க வேண்டிய தேர்தல் இது.

 வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.மணிகண்டன்