தேர்தல் கேம்ஸ்



குர்சி கிரிக்கெட்

இந்தியில் ‘குர்சி’ என்றால் நாற்காலி என்று அர்த்தம். நாற்காலிக்காக தலைவர்கள் மோதும் கிரிக்கெட் இது. துவக்கத்திலேயே ராகுல், மோடி, கெஜ்ரிவால் என நமக்கான தலைவரை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அவர் பேட்டிங் செய்ய, மற்ற தலைவர்கள் பவுலிங் போடுவார்கள்.

எத்தனை விக்கெட்டுகள் இருக்கிறதோ அத்தனை முறை அவுட் ஆகிக் கொள்ளலாம். நாம் சேர்க்கும் ஒவ்வொரு ரன்னும் நம் தலைவரின் பெயரில் வோட்டாக பதிவாகும். மோடி, ராகுல், கெஜ்ரிவால் என எல்லா தலைவர்களின் ஆதரவாளர்களும் இதற்கு ஆதரவளிப்பதால், இந்த விளையாட்டு கூகுள் பிளே ஸ்டோரில் 5 லட்சம் முறை பதி விறக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

மோடி 272

இந்தியா முழுவதும் 272 இடங்களை வெல்ல வேண்டும் என்ற நரேந்திர மோடியின் சூளுரைதான் இந்த கேமின் கான்செப்ட். ஒவ்வொரு மாநிலத்திலும் மோடி ஓடுவார். அவர் ஓட ஓட, மண் தரைகள் தார்ச் சாலைகளாக மாறும்!

 வழியில் வரும் தடைகளையும் எதிர் பார்ட்டிகளையும் மோடி துவம்சம் செய்தால் அவர் கணக்கில் அதிக இடங்கள் சேரும். எல்லா ஸ்டேட்டிலும் ஓடிய பின் மொத்தம் 272 வருகிறதா என்பது தான் சவால். 50 ஆயிரம் பேர் வரை பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள் இதை...

மோடி ரன்

அப்படியே ‘டெம்பிள் ரன்’ மாதிரி என்பது பெயரிலேயே தெரிகிறது. ஆனால், இது 3டி கேம் அல்ல. சைடு ஸ்க்ராலர் வகை. பக்கவாட்டு கோணத்தில் மோடி வேகமாக ஓடுவார். தடைகளைத் தாண்டி, ஆபத்துகளைக் கடந்து, விசேஷ சக்திகளை சேகரித்து அவரை ஓட வைக்க வேண்டியது நம் பொறுப்பு. ஒவ்வொரு லெவலிலும் குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு என மாறி மாறி ஓடுவார். பேக்கிரவுண்ட் படங்களே அது என்ன மாநிலம் என்பதை பளிச்செனக் காட்டும். சில லெவல்களில் அவரே சைக்கிள் ஓட்டுவதும் உண்டு. 10 லட்சம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் பாப்புலர் கேம் இது.

ஆங்க்ரி வோட்டர்ஸ்

அட, எல்லா கேமும் தலைவர்களைத் தூக்கி வைத்துக் கொண்டாடத்தானா? ‘கடுப்பேத்தறாங்க மை லார்ட்’ என டார்ச்சர் ஆகியிருக்கும் வாக்காளர்களுக்கு..? யெஸ்... அவர்களுக்காகத்தான் இந்த ஆங்க்ரி வோட்டர்ஸ். அப்படியே ஆங்க்ரி பேர்ட்ஸின் ஜெராக்ஸ்தான். ஆனால், இங்கே அடுக்கி வைக்கப்பட்டிருப்பது அரசியல் பெருந்தலைகள். நமக்குப் பிடித்தவர்கள் என்றால் அவர்களை நோக்கி நாணயங்களையும் பூங்கொத்துகளையும் வீசி வெற்றி பெறச் செய்யலாம். அதுவே பிடிக்காதவர் என்றால் பாதுகைகளையும் முட்டையையும் வீசி மண்ணைக் கவ்வச் செய்யலாம். வாக்காளரின் உணர்ச்சிகளுக்கு வடிகால்!

மோடி மேன் 3டி

மாநில முதல்வராக இருந்தபோதே மோடி ஸ்பெஷலாக ‘நமோ’ என்ற பெயரில் ஸ்மார்ட் போன் தயாரித்தார்கள். இப்போது பிரதமர் வேட்பாளர் வேறு. விடுவார்களா? எக்கச்சக்க ஆண்ட்ராய்டு கேம்களில் இப்போது மோடிதான் கதாநாயகன். முந்தைய கேம் 3டி இல்லை என்ற குறையை இந்த கேம் தீர்த்து வைக்கிறது. இது கொஞ்சமும் வித்தியாசம் இல்லாமல் அப்படியே ‘டெம்பிள் ரன்’தான். பதவியை நோக்கி மோடி ஓடுவார்.

வழியில் அவருக்கான எம்.பி சீட்டுகள் எல்லாம் தாமரை வடிவில் இருக்கும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு ‘சீட்’களை அவர் சேகரித்துக் கொண்டே ஓட வேண்டும். சில சூப்பர் பவர் கிடைத்தால், அவரே ஹெலிகாப்டரிலும் பறந்து சீட்களை அள்ளலாம். எதிர்ப்படும் ஆட்டோக்களிலும் தள்ளு வண்டிகளிலும் அடாசு பொருட்களிலும் மோதினால் காலி. தற்போதுதான் கவனம் பெற்று வரும் இந்த விளையாட்டை இதுவரை பதிவிறக்கியிருப்பவர்கள் ஜஸ்ட் 5000 பேர்தான்.

ராகுல் ரன்/ கெஜ்ரிவால் ரன்

மோடி ரன் போல ராகுல் காந்திக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் உருவாக்கப்பட்டவைதான் இந்த கேம்கள். மோடிக்கு பதில் இதில் ராகுலும் கெஜ்ரிவாலும் ஓடுவார்கள். கிட்டத்தட்ட மோடி விளையாட்டு போலவே எல்லா அம்சங்களும் இதில் உண்டு. ஆனாலும், இரண்டுமே தலா 5000 முறைதான் டவுன்லோடு செய்யப்பட்டிருக்கின்றன. மோடி ரன் கேமையே இந்தியில் பெயர் மாற்றி ‘பாக் மோடி பாக்’ என்று விட்டிருக்கிறார்கள். அதற்கும் கிட்டத்தட்ட இதே அளவு வரவேற்புதான்.

- நவநீதன்