ஷீரடி பாபாவின் புனித சரிதம்
வினோத் கெய்க்வாட்
தமிழில்: பி.ஆர்.ராஜாராம்
எங்கு பொறுமையும் நம்பிக்கையும் இருக்கின்றதோ, அங்கு நான் சேவகனாக என்றும் இருக்கிறேன். இவ்விரண்டும் இல்லையெனில் நான் என்றுமே எட்டிப் பிடிக்க முடியாதவனாகவே ஆகிறேன்
- பாபா மொழி
அன்று ஞாயிறு. எனவே, ஷீரடியில் கூட்டம் அலைமோதியது. மதியவேளை. அன்னா சாகேப் தாபோல்கர் எனப்படும் ஹேமாடபந்த், பாபாவின் காலை அமுக்கி சேவை செய்துகொண்டிருந்தார். மாதவராவ், வாமன்ராவ், கோபால்ராவ் புட்டி மற்றும் காகா சாகேப் தீட்சித் எல்லோருமே அருகில் உட்கார்ந்திருந்தனர்.ஹேமாடபந்த் கீழே குனிந்து, பாபாவின் நாமாவளியைச் சொல்லிக்கொண்டே பாபாவின் கால்களை அமுக்கிக் கொண்டிருந்தார். அவருடைய கோட்டின் மீது பொட்டுக்கடலை நிறைய ஒட்டிக் கொண்டிருந்தது. ‘‘இது எப்படி வந்தது?’’ என்றவாறே மாதவராவ் கோட்டின் மீது தட்டினார். பொலபொலவென்று பொட்டுக்கடலை கீழே விழுந்தது. இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் சிரித்தார்கள்.
‘‘எப்படி இவ்வளவு பொட்டுக் கடலை வந்தது?’’ என்று அன்னா சாகேப் வியந்தார். வேண்டுமென்றே யாரோ கேலிக்காக செய்திருக்கிறார்கள். அதற்குள் பாபா சிரித்துக்கொண்டே, ‘‘இந்த ஹேமாடபந்த்திற்கு ஒவ்வொரு கடலையாக சாப்பிடப் பிடிக்காது. எனவே, பஜாருக்குப் போய் நிறைய வாங்கிச் சாப்பிட்டு, மீதியை கோட்டில் நிரப்பிக் கொண்டு வந்திருக்கிறான், இங்கே சாப்பிட!’’ என்று கேலி செய்துகொண்டே சொன்னார். அவருடைய பேச்சைக் கேட்டு, அங்கிருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
‘‘என்ன பாபா, இப்படிச் சொல்கிறீர்கள்? நான் தனியாகச் சாப்பிட்டுப் பழக்கமில்லை. யாருக்காவது கொடுத்துவிட்டுத்தான் சாப்பிடுவேன். மேலும், நான் ஷீரடியின் பஜாரைப் பார்த்ததேயில்லை. எனவே, அங்கு போய் கடலை வாங்கினேன் என்பதற்கான பேச்சே இல்லை’’ என்றான் ஹேமாடபந்த். ‘‘ரொம்பவும் ஜம்பம் அடித்துக் கொள்ளாதே! உன் அருகில் யாரும் இல்லை. அதனால் கொடுக்கவில்லை. என்றைக்காவது சாப்பிடும்பொழுது என்னுடைய நினைவு வந்ததா? எனக்கு ஒரு கவளம் கொடுத்திருக்கிறாயா?’’ என பாபா சிரித்துக்கொண்டே கேட்டார்.
அப்பொழுதுதான் எல்லோருக்கும் பாபா சொன்னதன் அர்த்தம் புரிந்தது. கோட்டிலிருந்து கடலையை பொலபொலவெனக் கீழே விழச் செய்த அவருடைய அற்புதத்தைக் கண்டு வியந்தனர். ஹேமாடபந்த் தன் குற்றத்தை
ஒப்புக்கொண்டார்.
மேலும் பாபா கூறலானார்...
‘‘மனம், புத்தி, வாக்கு போன்ற எல்லா இந்திரியங்களும் பிற விஷயங்களில் மிகவும் ருசியிருப்பதாக நினைத்து ஈர்க்கப்படும்பொழுது, பக்தர்கள் முதலில் என்னை நினையுங்கள். இந்திரியங்கள் எப்பொழுதும் இன்பத்திற்கு அடிமை. ஆனால், அவற்றை குருவின் சரணங்களில் அர்ப்பணித்துவிட்டால், சுகபோகங்களிலுள்ள ஈடுபாடு தானே குறையும். ஆசை, கோபம், துக்கம், குரோதம் போன்றவை மனதில் எழுந்தால், அவற்றை என்னிடம் அர்ப்பணித்து விடுங்கள்.
இப்படிச் செய்தால் நீங்கள் எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை அடைவீர்கள். இப்படிப்பட்ட எண்ணங்களை பகவான் அழித்துவிடுவார். எனவே, உங்களுடைய மனதும் தூய்மை அடையும். இறைவன் உங்கள் அருகில் இருக்கிறார் என்கிற உறுதியான எண்ணம் இருக்குமானால், உங்களுக்கு எந்த தீங்கும் நேராது. எவரிடம் இப்படிப்பட்ட நல்ல எண்ணம் இருக்கிறதோ, அவர்களுக்கு இந்த சம்சாரம் என்கிற வலியிலிருந்து விடுதலை கிடைக்கும். ஒவ்வொரு விஷயத்திலும் பாபா நம்முடனேயே இருக்கிறார் என்ற எண்ணத்தினால் சுக துக்கங்களிலிருந்து விடுபட்டு, மூலப்பொருளான பகவானிடத்தில் மனம் தானே நிலைத்துவிடும்.’’
பாபாவின் வாயிலிருந்து அமிர்தம் போன்ற வார்த்தைகள் வந்து விழுந்தன. பக்தர்கள் அவருடைய உபதேசத்தில் திளைத்தார்கள்.
தாஸ்கணு மற்றும் நாநா சாகேப் சாந்தோர்கர் பாபாவின் தரிசனத்திற்காக வந்தபொழுது, அவர் கோபத்துடன் சொன்னார்...
‘‘டேய் நாநா, இந்த கணு நான் சொல்வதைக் கேட்க மாட்டேன்கிறான்!’’
‘‘என்னவாயிற்று பாபா?’’
‘‘டேய், இவனை வேலையை விட்டு விடு என்றேன். நாடகத்தை நிறுத்து என்றேன். ஒரு வழியாக நாடகம், லாவணி இவற்றை இப்பொழுது விட்டுவிட்டான்... சரி! ஆனால் வேலையை ஏன் இன்னும் விடவில்லை? மேலிடத்தில் எனக்கு சேவை செய்யணும் என்று சொல்லலாமே?’’
தாஸ்கணு குனிந்து பாபாவின் காலைத் தொட்டு, ‘‘பாபா, தவறு நேர்ந்துவிட்டது. சீக்கிரம் நான் வேலையை விட்டுவிடுகிறேன்’’ என்றான்.
‘‘இல்லை. நீயெல்லாம் வேலையை விடமாட்டாய். உன் மீது யாராவது வீண்பழி சுமத்தினாலோ அல்லது ஏதாவது விபத்து ஏற்பட்டாலோதான் நீ வேலையை விடுவாய். உனக்கு எல்லாம் ஒழுங்காக நடந்து வருவதினால், நீ என் பேச்சைக் கேட்பதில்லை.’’
‘‘இல்லை பாபா! எனக்கு எந்த வித ஆபத்தும் தூஷணையும் வர வேண்டாம். நான் உறுதியாக வேலையை விடுகிறேன்.’’ ‘‘டேய், நாலு இடத்திற்குப் போய் பக்கீரின் மகிமையைச் சொல்லிப் பாடு, பஜனை செய். உனக்கு நன்மை பயக்கும். நல்ல எழுத்து வன்மையும் பாடுவதற்கான இனிய குரலும் இருக்கும்பொழுது, எதற்காக போலீஸ் வேலை செய்து அலைகிறாய்? சரி... சரி... இப்பொழுது போ...’’ என்று பாபா விரட்டிவிட்டார்.
தாமோதர் தனஹ்ஷ்யாம் பாபரே என்பதுதான் உண்மையான பெயர். ஆனால் அவரை அன்னா சிஞ்சனீகர் என்று சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும். சாயியின் பரமபக்தரான அன்னா, சுபாவத்தில் முன்கோபக்காரர். கோபம் தலைக்கேறிவிட்டால் எதிரில் யார் இருந்தாலும் பார்க்காமல் கண்டபடி திட்டிவிடுவார். ஆனால், இவர் பாபாவின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார். யாருக்கும் பயப்பட மாட்டார். மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்லி விடுவார். மனதில் சூது, வாது, கபடம் எதுவுமில்லாத ஒழுக்கமானவர்.
ஐம்பதைக் கடந்த அன்னாவிற்கு வாயில் ஒரு பல் இல்லை. அன்றும் வழக்கம்போல பாபாவிடம் வந்து சேவை செய்தார்.
மதிய வேளை. கூட்டமாக இருந்த மசூதியிலுள்ள தர்பாரில் தன் இருக்கையின் கட்டை மேல் இடது கையை ஊன்றிக்கொண்டு பாபா உட்கார்ந்திருந்தார். அன்னா கட்டையின் வெளியில் குனிந்து நின்று பாபாவின் இடது கையை அமுக்கிவிட்டுக் கொண்டிருந்தார். பாபாவின் வலது கைப் பக்கம் வேணுபாய் உட்கார்ந்து பாபாவிற்கு சேவை செய்து வந்தாள். பாபா அவளை ‘ஆயி’ (தாயி) என்பார். அவள் ஒரு விதவை... வயதானவள்... கேலியாகப் பேசுபவள். பாபாவைத் தவிர, ஏனையோர் அவளை சித்தி என்பார்கள். அவள் மனசால் சுத்தமானவள். பாபாவின் மேல் அன்பு வைத்து சேவை செய்பவள்.
அன்று அவள் பாபாவின் வயிற்றை அமுக்கிக் கொண்டிருந்தாள். அதனால் அவள் முகம் முன்னே பின்னே சென்று எதிரில் சேவை செய்து வந்த அன்னாவின் முகத்தின் மிக அருகில் வந்தது. இதைக் கண்டு வேணுபாய் சித்தி அவரை வம்பிழுத்துப் பரிகாசம் செய்ய ஆசைப்பட்டாள். ‘‘என்னப்பா அன்னா? என்ன நடக்கிறது இங்கே? என் முகத்தின் எதிரில் உன் முகத்தை மோதவிடும்படி என்கிட்டே நெருங்குகிறாய்? ரொம்பவும் ஆசையால் துடிப்பது போலத் தெரிகிறது. என்னை முத்தமிட ரொம்ப ஆவலாக இருக்கா? மீசை நரைத்தும் ஆசை விடவில்லையா?’’
இதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்தார்கள். அன்னாவிற்குக் கடுங்கோபம் உண்டாயிற்று.
‘‘ஏ பாயி! வாய்க்கு வந்தபடி பேசாதே. நானோ வயதானவன்... வாயில் பல் இல்லாதவன். அப்படியிருக்க உன்னையா முத்தமிட முடியும். அதுவும் பாபா எதிரில்?’’
‘‘அப்படியானால் அப்படியொரு ஆசை வேறு இருக்கா?’’ - அவள் கேட்டதும் மேலும் பலர் சிரித்தார்கள். ‘‘ஏய்... இஷ்டப்படி உளறாதே! உன்னை முத்தமிட நான் என்ன பைத்தியமா? நீதான் என் முகத்தினருகில் உன் வாயைக் கொணர்ந்து, வீணாக சண்டையை இழுக்கிறாய்.
என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய் உன் மனதில்?’’ என்று அன்னா கோபத்துடன் பெருங்கூச்சலிட்டார்.
இரண்டு பேரையும் அமைதி காக்கும்படி கையைத் தூக்கி சைகை செய்த பாபா, ‘‘அடேய் அன்னா, ஏன் இப்படிக் கத்துகிறாய்? அப்படியே நீ முத்தமிட்டாய் என நினைத்துக்கொண்டாலும், ஆயியை (தாயை) முத்தமிட்டதில் என்ன தவறு இருக்க முடியும்?’’
பாபா இப்படி சகஜமாகச் சொன்னதும் இருவரும் வெட்கப்பட்டார்கள். அங்கிருந்த சூழ்நிலையையே பாபா வேறுவிதமாக மாற்றிவிட்டார், தன் சாமர்த்தியமான பேச்சால். கோபம் மறைந்து, சிரிப்பலைகள் அங்கு எழும்பின! சென்ற முறை பாபாவைப் பார்த்தபோது அவர் சொன்னது நினைவிற்கு வந்து தாஸ்கணுவின் மனதை உலுக்கியது. பாபா எச்சரித்தபடி, உண்மையில் அபாயம் ஏதாவது நிகழுமா?
அவர் சொன்னபடியே நடந்தது!
கானா பில்லா என்னும் கொள்ளைக்காரன்... அக்கால பிரிட்டிஷ் சமஸ்தானத்தில் அகமத் நகர், பீட் ஜில்லாவில் பெரிய பெரிய கொள்ளைகள் செய்து வந்தான். பயங்கரமானவன். அவன் பெயரைக் கேட்டாலே மக்கள் நடுங்குவார்கள். மூன்றாண்டுகளாக போலீஸ் அவன் பின்னாலேயே சுற்றியும், அவர்களிடம் அகப்படாமல் எப்படியோ தப்பித்து வந்தான். ஆனால், கொள்ளை அடிப்பதை நிறுத்தவில்லை.
இச்சமயத்தில் தாஸ்கணு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். வேறு மூன்று பேருடன் இவரையும் சேர்த்து, கானா பில்லாவைப் பிடிக்க நியமித்தனர் மேலதிகாரிகள். இந்நால்வரும் ரகசியமாக அவனைத் தொடர்ந்து கண்காணித்து, பிடிப்பதில் ஆயத்தமானார்கள். கானா பில்லாவும் அவனுடைய கூட்டாளிகளும் மிகத் தந்திரமாகச் செயல்பட்டு, கொலை, கொள்ளைகளை நடத்தி வந்தார்கள். அவர்களும் தங்களுக்குள்ளே ஒற்றர்களை வைத்துக்கொண்டு, இந்த நான்கு காவலர்களைக் கண்காணித்தார்கள்.
தங்களைத் தொடர்ந்து வந்து கண்காணித்த மூன்று பேரைச் சுட்டுக் கொன்றார்கள். தாஸ்கணு மட்டும் தப்பினார். அவருக்கு பயத்தினால் உடம்பு வெடவெடத்தது. தன்னையும் நிச்சயம் சுட்டுவிடுவார்கள் என்கிற பயம் ஏற்பட்டது.
தாஸ்கணு அப்போது மாறுவேடத்தில் இருந்தார். லோனிவர்ணி என்னும் இடத்திலிருந்த ராமர் கோயிலில், பாபா சொன்னது போல பக்திப் பாடல்களைப் பாடி வந்தார். ஒருநாள் இரவு பாடல்கள் பாடி முடித்ததும், பக்தர்கள் சென்றுவிட்டனர். தாஸ்கணு மட்டும் இரவில் தனியாகக் கோயிலில் இருந்தார். இருள் சூழ்ந்திருந்த நேரத்தில் கானா பில்லா திடீரென அங்கு வந்து நின்றான். தன் துப்பாக்கி முனையை தாஸ்கணுவின் மார்பில் வைத்தான்.
கர்ஜிக்கும் குரலில் சொன்னான், ‘‘உன்னுடைய பெயர் கண்பத் தத்தாத்ரேய சஹஸ்கார புத்தே. உன் போலீஸ் உடையின் பக்கிள் (பெல்ட்) நெம்பர் 727 என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்!’’
தாஸ்கணுவிற்கு உடல் நடுங்கியது. கண்களில் மரண பயம் பிதுங்கி நின்றது. அச்சத்தில் உடல் வியர்த்தது. இதயம் படபடவென அடித்துக் கொண்டது. ‘ராமராயா, என்னைக் காப்பாற்று’ என வேண்டினார்.
ஆனால், கானா பில்லா அவரைக் கொல்லவில்லை. ‘‘உன்மேல் எனக்கு ஒரு கண் இருக்கிறது. போலீஸில் சொல்லி என்னை மாட்டிவிட ஏதேனும் சதித் திட்டம் செய்தால், அடுத்த கணம் உன்னைச் சுட்டு வீழ்த்திவிடுவேன். இதை மறக்காதே!’’ என்று சொல்லி விட்டு, குதிரை மேல் ஏறிச் சென்றுவிட்டான். ரொம்ப நேரம் குளம்படிச் சத்தம் கேட்டது.
சிறிது நாட்கள் கழிந்தன. தாஸ்கணு சுதாரித்துக்கொண்டார். தன் கடமையைச் செய்ய வேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டது. ஒரு பையன் மூலம் கானா பில்லாவின் நடமாட்டம் பற்றிய தகவல் தெரிந்ததும், அதை மேலதிகாரிகளுக்கு உடனே தெரிவித்தார். உடனே ஒரு போலீஸ் படை அவன் இருக்கும் இடத்தைச் சுற்றி வளைத்தது. கானா பில்லா, தன் ஆட்களுடன் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டான். போலீசும் சுட்டது. சிறிது நேரம் நடந்த இச்சண்டையில் பல போலீஸ்காரர்களைச் சுட்டுவிட்டு, மிச்சமிருந்தவர்களை ஏமாற்றிவிட்டு கானா பில்லா குதிரையில் ஏறித் தப்பிவிட்டான்.
இதையறிந்து வருந்தினார் தாஸ்கணு. அடுத்ததாக தன்னை அவன் நிச்சயமாக சுட்டுத் தள்ளிவிடுவான் என பயந்தார். இந்த பயத்திலேயே அவரது இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவச் சான்றிதழ் வாங்கி உயர் அதிகாரிகளுக்குக் கொடுத்தார். இதனால் வேவு பார்க்கும் வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்தச் சமயத்தில் வேலையை விட்டுவிட தீர்மானம் செய்தார். ஆனால், ஆசை விடவில்லை. பிறகு இன்னொரு சங்கடத்தில் அவர் மாட்டிக்கொண்டார். தண்டனையடைந்த ஒரு குற்றவாளியின் அபராதத்தொகை முப்பத்து இரண்டு ரூபாய் அரசாங்க கஜானாவில் கட்டுவதற்காக, தாஸ்கணுவிடம் வந்தது. ஆனால், அவருடைய உதவியாள் அப்பணத்தைக் கையாடிவிட்டான். சில நாட்கள் கழித்து, அந்தக் குற்றவாளியை விடுவிக்கும்பொழுது, அப்பணம் அரசாங்கத்திற்குக் கட்டாமல் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் பழி தாஸ்கணு மேல் விழுந்ததால் தற்காலிகப் பணிநீக்கம் செய்தார்கள்.
அவருக்கு இதனால் அவமானமாயிற்று. அவர் பாபாவை இவ்வாறு மனமுருகி பிரார்த்தித்தார். ‘பாபா என்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றுங்கள். நான் கண்டிப்பாக வேலையை விட்டுவிடுகிறேன்!’
பாபாவின் ஆசியினால், தாஸ்கணு தண்டனையிலிருந்து தப்பினார். மறுபடி வேலையில் சேர்த்துக்கொண்டார்கள். பிறகு, அவர் வேலையை ராஜினாமா செய்தார்.
இனி பாபாவின் வேலைதான். எல்லா இடங்களிலும் சுற்றினார். பக்திப்பாடல்களைப் பாடினார். பிறகு அவருடன் தாமு அன்னாவும் சேர்ந்துகொண்டார். இருவரும் சாயியின் மகிமையைச் சொல்லி, அவருடைய புகழைப் பரப்பினார்கள். பக்தர்கள் எல்லோரும் ஷீரடியை நோக்கிப் படை எடுத்தார்கள். தாஸ்கணு முற்றிலும் மாறிவிட்டார்!
இறைவன் உங்கள் அருகில் இருக்கிறார் என்கிற உறுதியான எண்ணம் இருக்குமானால், உங்களுக்கு எந்த தீங்கும் நேராது.
ஆசை, கோபம், துக்கம், குரோதம் போன்றவை மனதில் எழுந்தால், அவற்றை என்னிடம் அர்ப்பணித்து விடுங்கள். நீங்கள் எல்லாவற்றிலிருந்தும்
விடுதலை அடைவீர்கள்.
(தொடரும்...)