கு.அருணாசலம்
‘‘ராமநாதா... ராமநாதா... என்னப்பா,
கூப்பிடக் கூப்பிடப் போய்க்கிட்டே இருக்கே?’’ - அலுப்போடு கேட்டார் பெரியசாமி. ராமநாதன், பெரியசாமி இருவருமே சமீபத்தில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள். ஒரே பகுதியில் வசிக்கும் நெடுநாள் நண்பர்கள். காலையில் வாக்கிங் முதல் ஆபீஸ் வரை ஒன்றாகப் போய் வந்து கொண்டிருந்தவர்கள்.
‘‘ஆமா! நீ என்னை ராமநாதான்னு கூப்பிட்டா எப்படி திரும்பி பார்ப்பேன்? இப்போ எனக்கு நான் வச்சிக்கிட்ட பேரு, ராம்!’’ என்றார் ராமநாதன்.
‘‘அட, ரிட்டயர்டு ஆன பிறகு நீ ரொம்பத்தாம்பா மாறிட்டே! தலைக்கு டை அடிக்கிறே, மீசையை ட்ரிம் பண்ணிட்டே, ஜீன்சும் டி-ஷர்ட்டும் போட்டுக்கறே. இப்பதான் இளமை திரும்புதாக்கும்!’’ - கேலியாகக் கேட்டார் பெரியசாமி.
‘‘பேரை சுருக்கிக்கிட்ட மாதிரி, முதுமையையும் சுருக்கிக்க இது ஒரு முயற்சிப்பா. நம்ம தோற்றத்தை இளமையா மாத்தும்போது, மனசுலயும் புதுமையான இளமையான தெம்பு வருது. உள்ளத்தைப் பலப்படுத்தி, உடம்பு பலத்தை மீட்கும் முயற்சிதான் இது! உளவியல்ரீதியா இதுல எனக்கு நல்ல பலன் தெரியுது!’’ - ராமநாதன் சொன்னது பெரியசாமியை ரொம்பவே பாதித்தது.
‘‘ராம்... நீ சொன்னது கரெக்ட் மச்சி. இனி என் பேரும் பெரியசாமி இல்ல... சாம்ஸ்!’’ என்றார் பெரியசாமி. மன்னிக்கவும்... சாம்ஸ்!