e கடை



ஆன்லைன் பழக்கடை

ஆப்பிள் முதல்
பப்பாளி வரை
ஆன்லைனில்
விற்கிறார் தியாகராஜன்.
அழுத்திப் பார்த்து,
அழுகல் பார்த்து தேடித் தேடி
வாங்கும் மக்களின் மனநிலையை
மாற்றி இவர்
ஜெயித்த
கதை இது...

மண்ணச்சநல்லூருக்கு அருகிலுள்ள துடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். அப்பா சேலம் உருக்காலையில் மேலாளர். அண்ணன், ஸ்டேட் வங்கி அதிகாரி. தியாகராஜனையும் அரசு ஊழியராக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் அப்பா. அதற்காவே எஞ்சினியரிங் படிக்க வைத்தார். ஆனால் தியாகராஜனுக்கு ஆர்வமெல்லாம் பழ வியாபாரத்தில். ஆன்லைன் பழ வியாபாரம். தியாகராஜன் நடத்தும் www.frrutto.com  என்ற ஆன்லைன் பழக்கடை, இந்தியாவின் டாப் ரேட்டிங் இ-காமர்ஸ் ஷாப்பிங் வரிசையில் இடம் பிடித்திருக்கிறது. நம்மூர் அன்னாசி, சப்போட்டா முதல் தென் ஆப்ரிக்க பியர்ஸ், அமெரிக்க திராட்சை, தாய்லாந்து ரம்பூட்டான், சீன துரியன், எகிப்து மங்குஸ்தான் வரை 55 வகையான பழங்களை இந்த இணையத்தில் வாங்கலாம்.

‘‘தலைமுறை தலைமுறையா விவசாயம் செஞ்ச குடும்பம். 32 ஏக்கர் விவசாய பூமி இருக்கு. முழுக்கவும் வாழை சாகுபடி. அப்பாவும், அண்ணனும் விவசாயத்தை விட்டு நகர்ந்துட்டாங்க. என்னால முடியல. மத்தவங்களைப் போல ‘கிடைக்கிறது கிடைக்கட்டும்’னு விவசாயம் பண்றதில எனக்கு உடன்பாடில்லை. லாபகரமா செய்யணும்; அல்லது விவசாயம் சார்ந்த ஏதாவது தொழில் செய்யணும். 
ஆனா வீட்டுல வேற மாதிரி கனவு கண்டாங்க.

அவங்களை புண்படுத்த விரும்பாம எஞ்சினியரிங் முடிச்சேன். கேம்பஸ் இன்டர்வியூவிலயே ஒரு பெரிய கம்பெனியில வேலை கிடைச்சுச்சு. நாலு வருஷத்துக்கு மேல அந்த வேலையில ஒட்டியிருக்க முடியல. வேலையை விட்டுட்டு வந்து, ‘விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்து ஏதாவது தொழில் பண்றேம்பா’ன்னு அப்பாகிட்ட சொன்னேன். ‘உனக்கு சரின்னு பட்டா யோசிக்காம செய்’னு சொல்லிட்டார்.

முதல்ல வாழைப்பழ ஏற்றுமதி செய்யலாமான்னு யோசிச்சேன். அதுபத்தி ஆய்வுகளை ஆரம்பிச்சேன். சந்தைப்படுத்துறதுலதான் ஒரு பொருளோட வெற்றி இருக்கு. நம்ம விவசாயிகள் அதுல ரொம்பவே பின்தங்கி இருக்காங்க. எந்தப் பகுதிக்கு எப்படி பொருளை சாகுபடி பண்றதுங்கிற அளவுக்கு தொழில்நுட்பத்துல பல நாடுகள் முன்னேறியாச்சு. உலகத்துலயே அதிக வாழை உற்பத்தி பண்றது நாமதான். உலக உற்பத்தியில 21%. ஆனா 0.1% அளவு கூட ஏற்றுமதியாகலை.

11% உற்பத்தி பண்ற பிலிப்பைன்ஸ் 99% ஏற்றுமதி செய்யுது. வாய்ப்புகளை நாம பயன்படுத்திக்கல. உற்பத்தியை கையாளும் திறமையிலயும் நாம பின்தங்கி இருக்கோம். ஒரு வாழைத்தாரை வெட்டி, பழுக்க வச்சு விற்கிறதுக்குள்ள 40% வீணாகுது. இந்த இழப்பை விவசாயிகள் கணக்குக்கே கொண்டு வர்றதில்லை. பூச்சிக்கொல்லிகளோட அளவு, தரம்னு பல பிரச்னைகளைக் கடந்து வாழை ஏற்றுமதி செய்யறது சவாலான வேலைன்னு தெரிஞ்சுது. 
  
அந்த தருணத்துல தேசிய சணல் உற்பத்திக் கழகம், சணல் பொருட்களுக்கான ஏஜென்சிகளை நியமிச்சுக்கிட்டிருந்தாங்க. தமிழகத்துக்கு ஏஜென்ட் ஆனேன். பெரும்பாலும் நம் மக்களுக்கு சணல்னா சாக்குப்பை மட்டும்தான் நினைவுக்கு வரும். ஆனா சணல் மூலம் நிறைய கைவினைப் பொருட்கள், டெக்ஸ்டைல், கார்மெண்ட்ஸ் மெட்டீரியல்கள் தயாரிக்கலாம். அப்படித் தயாரிச்சு வெளிநாட்டுக்கு அனுப்புற திட்டத்தோட ஒரு அலுவலகத்தையும் திறந்தேன். அதுக்காக உலகம் முழுவதும் இருக்கிற ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் பத்தின டேட்டாவையும் சேகரிச்சேன். கொள்முதல் முடிஞ்சு ஏற்றுமதிக்கான வேலைகள் நடந்தப்போ சணல் வாரியத்துல ஸ்டிரைக். எல்லாப் பொருளும் குடோனிலேயே தங்கிடுச்சு.

வியாபாரம்னா, லாபத்தைப் போலவே நஷ்டமும் இயல்பானதுதான். அதுலக முடங்கிப் போகாம மீண்டு வரக் கத்துக்கணும்ங்கிறது காலம் எனக்கு உணர்த்திய பாடம். அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சுக்கிட்டிருந்தப்போ, என் அலுவலகத்துக்கு பக்கத்துல பூண்டு மண்டி வச்சிருந்த நண்பர் வந்து, ‘உங்க தொடர்புகளை வச்சு சீனாவில இருந்து பூண்டு இறக்குமதி பண்ணிக் கொடுங்க’ன்னு கேட்டார். ஒரு கதவை மூடிட்டு இன்னொரு கதவை இறைவன் திறந்துட்டார்னு நினைச்சு அதுல இறங்கிட்டேன். சீனாவின் ஷாண்டாங் மாகாணத்துல பூண்டு ஏராளமா விளையுது. அங்கே போய் வியாபாரம் பேசிக்கிட்டிருந்தேன். அப்போ மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார், ‘மகாராஷ்டிர பூண்டு விவசாயிகள் பாதிக்கப்படுறாங்கன்னு சொல்லி, இறக்குமதிக்கான அனுமதியை ரத்து பண்ணிட்டார்’னு தகவல் வருது.

‘இடப்புறம் வழி அடைபட்டுட்டா திகைச்சு நிக்காதே; வலப்புறம் திரும்பி நட. நடக்கிறதை மட்டும் நிறுத்தாதே’ன்னு சீனாவுல ஒரு பொன்மொழி உண்டு. வலப்புறம் திரும்பினேன். ஆப்பிள் தோட்டம். எதைப் பத்தியும் யோசிக்காம ஒரு கண்டெய்னர் ஆப்பிளை வாங்கிட்டேன். அதுக்கு முன்னால பழ வியாபாரத்துல நேரடி அனுபவம் இல்லை. ஏதோ தைரியத்துல இறங்கிட்டேன். சென்னையில ஆப்பிள் வந்து இறங்குற நேரத்துல அடுத்த அடி. ‘சீனாவில் பறவைக் காய்ச்சல்னு பீதி கிளம்பிடுச்சு. சீனா பழத்தை யாரும் வாங்கத் தயாரில்லை.

சுரேஷ்னு ஒரு நண்பர் இருந்தார். எம்.பி.ஏ. பட்டதாரியான அவருக்கு பழ வியாபாரத்துல நல்ல அனுபவம் உண்டு. அவர் உதவியோட தமிழகம் முழுதுமுள்ள சில்லறை வியாபாரிகளுக்கு 5 பெட்டி, 10 பெட்டின்னு அனுப்பினேன். கணிசமான இழப்பு. ஆனா, இந்தத் தொழில்ல ஜெயிக்கணும்ங்கிறதுல உறுதியா இருந்தேன். கையில இருந்த நகைகளை வித்து அம்மா பணம் கொடுத்தாங்க.
அப்போ அமெரிக்க ஆப்பிளுக்கு நல்ல மரியாதை. உடனடியா அமெரிக்கா கிளம்பிட்டேன். அங்கிருந்து ஆப்பிள் இறக்குனேன்.

முதல் வருடம் 6 கண்டெய்னர். 2வது வருஷம் 80 கண்டெய்னர். இன்னைக்கு 300 கண்டெய்னர் வருது. தமிழகம் மட்டுமில்லாம ஆந்திரா, கேரளா வரைக்கும் நம்ம சரக்குதான். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிலி, சீனா, எகிப்துல இருந்தெல்லாம் இப்போ பழங்கள் இறக்குமதி செய்யறேன்...’’ - பெருமிதமாக வெற்றிக்கதையைப் பகிர்ந்து கொள்ளும் தியாகராஜன், யீக்ஷீக்ஷீuttஷீ.நீஷீனீ ஆரம்பித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது.

‘‘ஐ.டி செக்டாரோட வளர்ச்சிக்குப் பிறகு வெளிநாட்டுப் பழங்களுக்கு இங்கே நல்ல வரவேற்பு. அதே நேரம் உள்நாட்டுப் பழங்களுக்கு சரியான விலை கிடைக்கிறதில்லை. இரண்டையும் ஒரே கோட்டுல இணைச்சு, ஆன்லைன் விற்பனையில இறங்க திட்டமிட்டோம். டிபார்ட்மென்டல் ஸ்டோருக்குப் போய் பழம் வாங்கினா, பார்க்கிங், பில்லிங், டைமிங்னு பல பிரச்னைகள். அதை விரும்பாதவங்க நிச்சயம் ஆன்லைனுக்கு வருவாங்க. ஆனா பலரும் பழங்களைத் தொட்டுப் பார்த்து வாங்கவே விரும்புவாங்க. தீர்க்கமான நம்பிக்கையை உருவாக்கினா மட்டுமே பாக்காம வாங்கறது சாத்தியம். பழங்களோட நியூட்ரிஷனல் வேல்யூ, ஹெல்த் பெனிபிட், ஃபிரஷ்னஸ்...

இந்த மூணு விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இணையதளத்தை வடிவமைச்சோம். பீச், அபார்ட்மென்ட்கள்ல ஈவென்ட் நடத்தி விளம்பரம் செஞ்சோம். முதல்நாள்லயே 60 ஆர்டர். முழுமையா நம்பிக்கை வந்துடுச்சு. படிப்படியா பிசினஸை விரிவுபடுத்திட்டோம். இன்னைக்கு சென் னை முழுவதும் பிசினஸ். 5000 ரெகுலர் கஸ்டமர்கள். தினமும் சராசரியா 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல விற்பனையாகுது’’ என்கிறார் தியாகராஜன்.

இதில் 24 மணி நேரமும் பழங்கள் ஆர்டர் செய்யலாம். 24 மணி நேரத்துக்குள் அழகாக பேக் செய்யப்பட்டு பழம் வீட்டுக்கு வரும். ஆன்லைனில் பணம் செலுத்தலாம். வீட்டுக்கு வந்தபிறகும் தரம் பார்த்து பணம் தரலாம். 250 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தால் இலவச டோர் டெலிவரி. இதுதவிர, பழ சந்தாவும் வைத்திருக்கிறார்கள். ரெயின்போ, ஹேப்பி பேமிலி, டயாபடிக், ப்ரக்னன்ஸி, வெயிட்லாஸ் என பல சந்தாக்கள் உண்டு.

சந்தா கட்டுபவர்களுக்கு, வாராவாரம் குறிப்பிட்ட பழங்கள் வீடு தேடி வந்து கொண்டிருக்கும். காம்போ பேக்கிங், லவ் கிஃப்ட், ஆனிவர்சரி கிஃப்ட், பர்த்டே கிஃப்ட், கிராண்ட் பேரன்ட்ஸ் கிஃப்ட் பேக்கிங்குகளும் உண்டு. கட்டிங் ப்ரூட்ஸ் பாக்கெட்டுகள், பார்ட்டி ஆர்டர்களும் கிளிக் செய்யலாம். அந்த சீனப் பொன்மொழிக்கு உயிர் கொடுத்திருக்கிறது தியாகராஜனின் வெற்றி.

‘இடப்புறம் வழி அடைபட்டுட்டா திகைச்சு நிக்காதே; வலப்புறம் திரும்பி நட. நடக்கிறதை மட்டும் நிறுத்தாதே’ன்னு சீனாவுல ஒரு பொன்மொழி உண்டு. அதுதான் என் வாழ்க்கையை மாற்றியது!

படங்கள்: ஆர்.சந்திரசேகர்

றீவெ.நீலகண்டன்