கோவையிலிருந்து என் சித்தப்பாவும், சித்தியும் எங்கள் வீட்டுக்கு வருவதாக தகவல் வந்ததுமே எனக்கு வயிற்றைக் கலக்கியது. மூன்று மாதங்களுக்கு முன்பு, நானும் என் மனைவியும், அதே சித்தப்பா வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தபோது, அவர்களின் கவனிப்பே சரியில்லை. ‘‘நாங்க எதையும் வீணாக்கறதில்ல...’’
என சொல்லிக் கொண்டு முந்தின நாள் வடித்து மீதமான சாப்பாட்டையே சூடு செய்து எங்களுக்குப் போட்டார்கள். எங்களுக்கு துளியும் பிடிக்காத கோவைக்காயை கறியாகவும் கூட்டாகவும் மாற்றி, என் மனைவியின் கோபத்துக்கு உள்ளானார்கள். இப்போது அவர்கள் எங்கள் வீட்டுக்கு வருகிறார்கள். மூன்றாவது டிகாக்ஷன் காபியும், பழைய சோறும் போட்டு, என் மனைவி அவர்களைப் பழி வாங்கப் போகிறாள் என்று நினைத்திருந்தேன். ஆனால், நடந்ததே வேறு.
சித்தப்பா, சித்தி தங்கியிருந்த இரண்டு நாட்களும் அவர்களுக்குப் பிடித்ததை முன்கூட்டியே கேட்டு, சமைத்துப் போட்டாள் என் மனைவி. எங்களின் ஏ.சி பெட்ரூமையும் அவர்களுக்குக் கொடுத்து உபசரித்தாள். அவர்கள் கிளம்பிய பிறகு, அவளிடமே இதற்கு விளக்கம் கேட்டேன்.
‘‘வந்தவங்களை எப்படி கவனிக்கணும்னு இப்ப நான் அவங்களுக்கு பாடம் எடுத்திருக்கேங்க. இதை விட வேற தண்டனை இருக்கா என்ன?’’ என்றாள் அவள் கூலாக!
ஒவ்வொரு ஆக்ஷனுக்கும் இதே மாதிரி பாஸிடிவ் ரீயாக்ஷன் இருந்தால் நல்லதுதான் என நினைத்து சந்தோஷப்பட்டேன்.
எஸ்.ராமன்