நியூஸ் வே



ஒரு வருஷமாக படங்கள் இல்லாததால் கொஞ்சம் குண்டாகி விட்டார் அசின். அதனாலோ, என்னவோ... மீண்டும் வாய்ப்புகள் வரிசை கட்டி வருகின்றன. சர்வதேச அழகுசாதன நிறுவனம் ஒன்று, அசினை தங்களது இந்திய பிராண்ட் அம்பாசிடராக நியமித்து இருக்கிறது. 'ஆல் ஈஸ் வெல்’ படத்தில் அபிஷேக் பச்சனோடு ஜோடி சேர்கிறார்.

 இந்தமுறை பெரிய ரவுண்ட் வர வேண்டும் என்ற ஆசையில், ‘‘நான் பெரிய ஸ்டார்களோடு தான் நடிப்பேன் என கண்டிஷன் போடுவதில்லை. நல்ல வாய்ப்பாக இருந்தால் புதுமுக நடிகருடனும் ஜோடி சேர ரெடி!’’ என ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் அவர். 

கே.வி.ஆனந்தின் ‘அனேகன்’ படத்தில் நடிக்கிறார் தனுஷ். அதில் வில்லனாக நடிக்கும் கார்த்திக்கிடம் பயங்கரமாக செட்டாகி விட்டாராம் தனுஷ். பழைய காதல் கதைகளை காதோடு காதாகப் பேசி மகிழ்கிறார்கள். பாவம், ஹீரோயின் தனியாக இருந்து தவிக்கிறாராம்.

வடநாட்டு கதைக்களத்தை ஏ.ஆர்.முருகதாஸும், விஜய்யும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். ‘துப்பாக்கி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இவர்கள் கைகோர்க்கும் புதிய படத்தின் கதைக்களம் கொல்கத்தா. பூஜையும் அங்கிருக்கும் காளி கோயிலில்தான் போட்டார்கள். இதில் விஜய்யுடன் ஜோடி சேர்வது சமந்தா. இந்திப் படத்திலும் தீவிரமாக இருந்துகொண்டு, விஜய் படத்திற்கான ஸ்கிரிப்டிலும் மெனக்கெடுகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ‘துப்பாக்கி’யை விட ஹாட்டான ஆக்ஷன் படமாம். ஜிம்மில் உடம்பை ஏற்ற வேண்டியிருக்குமாம். படத்தை ரொம்பவும் நம்புவதால், எல்லா நிபந்தனைகளுக்கும் ரெடியாகி விட்டார் விஜய்.

தன் படத்தில் கபடியை அங்கீகாரப்படுத்திய சுசீந்திரன், இப்போது கிரிக்கெட்டுக்கு புது வர்ணம் பூசுகிறார். கிரிக்கெட் வீரரான விஷ்ணு நடிக்கும் படத்தில் கிரிக்கெட் வீரராகவே நடிக்கிறார் அவர். சுசீந்திரனுக்கு கிரிக்கெட் தெரியுமா?

‘இரண்டாம் உலகம்’ ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதால், அவசர அவசரமாக ஒரு வெற்றியைக் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் செல்வராகவன். தனுஷ் கிடைக்காத நிலையில் அவர் கையில் சிக்கியிருக்கிறார் சிம்பு. ஏற்கனவே விக்ரமை வைத்து இயக்குவதாக இருந்த ‘சிந்துபாத்’ கதையைத்தான் சிம்புவுக்கு பொருத்தமாக டிங்கரிங் செய்திருக்கிறார் செல்வா என்று செவிவழி செய்தி கசிகிறது.

ஆண்ட்ரியாவை யாரும் சுலபத்தில் கேள்வி கேட்க முடியாது. பாடல் பாடுவதாக இருந்தால், பாடல் முழுவதற்கும் உள் அர்த்தம் வரைக்கும் கேட்டு விட்டுத்தான் ஒப்புக்கொள்வார். ஆனால், நடிக்கும் விஷயத்தில் அப்படியே உல்டா! வேறு எந்த ஹீரோயினாவது நடிக்க மறுக்கும் கேரக்டரை வம்படியாகக் கேட்டு வாங்கி, அடுத்தவர் நிராகரித்ததற்காகவே நடிப்பார்!

அஜித்தை ஷங்கர் இயக்குவது பற்றி கோடம்பாக்கத்தில் பேச்சு இருக்கிறது. சமீபத்தில் ஒரு விழாவில் பார்த்துக்கொண்ட இரண்டு பேரும் நலம் விசாரித்து, சில வார்த்தைகள் ‘ஐ’ பற்றிப் பேசிப் பிரிந்திருக்கிறார்கள். அப்படியே இருந்தாலும் கௌதம் மேனன், கே.வி.ஆனந்த் படங்களுக்குப் பிறகுதான் ஷங்கராம்.

ஒருவரது நடவடிக்கையை ஐந்து நிமிஷம் கவனித்தாலே அஜித்திற்கு போதும்... அவரை அப்படியே இமிடேட் செய்து விடுவதில் கில்லாடி. தன் நெருங்கிய நண்பர்களை மட்டுமே மகிழ்விக்க அஜித் அடிக்கடி காட்டுகிற வித்தை இது. இன்னொரு கொசுறு... அஜித் தான் எடுத்த புகைப்படங்களை கண்காட்சியில் வைக்கத் திட்டமிட்டு இருக்கிறார். அதுக்காகவாவது வருவீங்களா தல!

இளையராஜாவின் தீவிர ரசிகர் மயில்சாமி. ராஜாவின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அவரைச் சந்தித்து, தாமரை மொட்டு மாலை, புல்லாங்குழல் மாலை என வித்தியாசமான மாலைகள் அணிவித்து ராஜாவின் மனம் குளிர வைப்பாராம்.

சிக்கன் பிரியாணி, மட்டன் சாப்ஸ், மீன் வறுவல் என்று ஒரு சமயத்தில் அசைவ அயிட்டங்களை வெளுத்துக் கட்டிய த்ரிஷா இப்போது சுத்த சைவத்திற்கு மாறியுள்ளார். ‘நான்வெஜ்’ என்ற வார்த்தையில்கூட நானுக்கும் வெஜ்ஜுக்கும் கிலோ மீட்டர் இடைவெளி விட்டுப் பேசுகிறாராம்.

இதுவரை சம்பாதித்த பணத்தையெல்லாம் திரட்டி ‘சொகுசு பேருந்து’ படத்தை தயாரித்து இயக்கினார் ராசு மதுரவன். படத்தின் வேலைகள் முடிந்த நிலையில் மரணம் அவரைத் தழுவிக் கொள்ள... இக்கட்டான சூழ்நிலையில் தவிக்கிறது அவரது குடும்பம். சமீபத்தில் நடந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சேரன், ‘ஜே ஜே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தின் முதல் நாள் சென்னை நகர வசூலை ராசுமதுரவன் குடும்பத்துக்குக் கொடுப்பதாகப் பேசியது சற்றே ஆறுதல்.

ஒரு ஆப்பிள், கொழுப்பு குறைக்கப்பட்ட ஒரு டம்ளர் பால் - இது காலை உணவு. எண்ணெய் அதிகம் இல்லாத குழம்பு வகை சாப்பாடு மதிய உணவு. மாலை 7 மணிக்கு இரண்டு சப்பாத்தி அல்லது இரண்டு இட்லி. தற்போது ஹன்சிகாவின் டயட் சார்ட் இதுதான்.

நடிப்புக்கான விருதுகள் பெறும்போதெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாத கமல்ஹாசன், இம்முறை பத்மபூஷண் விருது அறிவிப்புக்குப் பிறகு மீடியா, நண்பர்களுடன்
அதனைக் கொண்டாடி மகிழ்ந்து வருகிறார். ‘விஸ்வரூபம்’ பிரச்னையை எல்லோரிடமும் பகிர்ந்துகொண்டதால், சந்தோஷமான இந்த நிகழ்வையும் அனைவருடனும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கமே காரணமாம்.

சைலன்ஸ்

‘‘ஒரு படத்தில் ஹீரோயினே இல்லாமல் நடிக்க முடியுமா... அதுமாதிரி ஒரு கதை ரெடி பண்ண முடியுமா...’’ என சில டைரக்டர்களிடம் விஜய்சேதுபதி கேட்டிருக்கிறார். ராப்பகலாக டி.வி.டி.க்களை புரட்டிப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் இயக்குநர்கள்.

மூணுஷா நடிகை முன்னிரவில் தோழிகளோடு டிஸ்கொதே போனது அந்தக் காலம். அதே ஓட்டலுக்கு பகலில் நண்பர், நண்பிகளோடு வந்து அடங்காமல் சிரித்துக் கொண்டு சாப்பிட்டுப் போவது இந்தக் காலம். ஏதோ ஒரு மாற்றம் வரப்போகுது சாமிகளா! நம்பர் நடிகை டைரக்டரிடம் காதல் தோல்வி அடைந்தது பற்றிப் புலம்பியது இது... ‘‘மயக்கத்தில் பரிசுகளாகவே இழந்தது மட்டுமே 30 லகரத்தைத் தாண்டும். காதல் போனால் போகுது... காசும் போயிடுச்சே!’’