சிக்கனம்



‘‘அம்மா நான் ஒரு பொண்ணைக் காதலிக்கறேன்’’ - சந்தோஷ் தயக்கமாகச் சொன்னான்.
‘‘என்னடா இப்படிச் சொல்றே? வயசு காலத்துல நீதான் என்னை கவனிப்பேனு பார்த்தா, இப்பவே காதல் அது இதுங்கறே..?’’ - அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினாள் அம்மா.
‘‘அதுக்கும் இதுக்கும் என்னம்மா சம்மந்தம்?’’

‘‘டேய், காதல் எப்பவுமே கண்ணை மறைக்கும்டா. காதலியோட ஆசைக்காகவும் வசதிக்காகவும் எல்லா பணத்தையும் செலவழிக்கத் தோணும். கல்யாணத்துக்குப் பிறகு, கண்டதை வாங்கித்தரச் செ £ல்லி அவ உன்னைப் படுத்துவா. செலவு கட்டுக்கடங்காது. தனிக்குடித்தனம் போகத் தோணும். அம்மாவையும் மறந்துடுவே... உன் வாழ்க்கையும் சந்தோஷமா இருக்காது!’’
‘‘நீ சொல்றதெல்லாம் சரிம்மா. ஆனா, நான் காதலிக்கிற பொண்ணு ரொம்ப சிக்கனம். நம்ம குடும்பத்திற்கு ஏத்த பொண்ணு!’’
‘‘எப்படி இவ்வளவு உறுதியா சொல்றே?’’

‘‘அவ செல்போனுக்கு நான்தான் 100 ரூபாய்க்கு டாப்-அப் பண்ணினேன். மூணு மாசமாச்சு. மறுபடி டாப்-அப் பண்ணச் சொல்லி கேக்கவே இல்ல. என்கிட்டப் பேசணும்னா கூட மிஸ்டு கால்தான்  கொடுக்கறா. இது ஒண்ணு போதாதா?’’ - கேட்டான் சந்தோஷ்.
டாப் மருமகள்தான் வரப் போகிறாள் என்ற நிம்மதி பிறந்தது அம்மாவுக்கு!               

கே.என்.எஸ்.மணியன்