சகுனியின் தாயம்



‘‘சார், இதுக்கு எப்படி நீங்க அனுமதிச்சீங்க?’’ மேல் மூச்சு வாங்க கேட்டாள் டாக்டர் தேன்மொழி. நிமிர்ந்து அவளைப் பார்த்து புன்னகைத்த ராம், ரிலாக்சாக நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தார். வயது நாற்பது என்பதற்கு அடையாளமாக காதோரம் நரை பூத்திருந்தது.

 க்ளீன் ஷேவ். கண்ணாடி  அணிந்திருந்தார். கழுத்தில் தொங்கிய சங்கிலி எப்படியும் மூன்று பவுன் இருக்கும். லேசாக விழுந்த தொந்தி மேஜையை முட்டியது. சுகாதாரத்துறை அதிகாரியாக கடந்த வாரம்தான் பொறுப்பேற்றிருந் தார்.


‘‘எதைப் பத்தி கேட்கறீங்க டாக்டர்?’’
‘‘விஷக் காய்ச்சலுக்கு மருந்து தர்ற நிறுவனம் கூடவே நோயாளிகளை ஆய்வு செய்யறதைப் பத்தி...’’
‘‘யூ மீன் மெடிகோ நிறுவனம் இப்ப செஞ்சுகிட்டு இருக்கறதா?’’
‘‘ஆமா...’’

‘‘அதுல என்ன தப்பு இருக்கு?’’
‘‘சட்டப்படி இது குற்றம் சார்...’’
‘‘லுக் டாக்டர்... ‘லா’ பத்தி எனக்கு நீங்க சொல்லித் தர வேண்டாம். எல்லாமே முறைப்
படிதான் நடக்குது!’’

‘‘எது சார் முறை? அமெரிக்க மருந்து நிறுவனமான ‘கிளாஸ்கோ ஸ்மித்கிளைன்’ பகிரங்கமா அம்பலப்பட்ட விஷயத்தை நீங்களும் பேப்பர்ல படிச்சிருப்பீங்களே..?’’
தேன்மொழி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் கண்கள் இடுங்க அவளை உற்றுப் பார்த்தார் ராம். நாசி துடிக்க தொடர்ந்தாள் தேன்மொழி.

‘‘பரவால்ல, நானே சொல்றேன். ‘எங்க நிறுவனம் தயாரிக்கிற மருந்தை பரிந்துரைக்கிற டாக்டர்களுக்கு எந்த பரிசும் வழங்க மாட்டோம். வருடத்துக்கு ஒருமுறை அவங்க குடும்பத்தோட வெளிநாட் டுக்கு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்ய மாட்டோம்...’ இதைத்தான் ‘கிளாஸ்கோ ஸ்மித்கிளைன்’ நிறுவனம் ஓப்பனா சொல்லியிருக்கு...’’
‘‘இதை எதுக்கு இப்ப என்கிட்ட சொல்றீங்க?’’

‘‘ஏன்னா, இந்த பொறுப்புக்கு வர்றதுக்கு முன்னாடி ஃபேமிலியோட நீங்க மொரீஷியஸ் போயிட்டு வந்திருக்கீங்க...’’
‘‘தேன்மொழி...’’‘‘கத்தாதீங்க சார். உங்க இன்ப சுற்றுலாவுக்கு எந்த மருந்து நிறுவனம் ஸ்பான்சர் செஞ்சதுன்னு நான் கேட்கலை. அது எனக்கு அவசியமும் இல்லை. பட், மெடிகோ நிறுவனம் நம்ம மக்களை ஆராய்ச்சி பண்ண நீங்க எப்படி சம்மதிச்சீங்கன்னு எனக்கு தெரிஞ்சாகணும்...’’

‘‘டாக்டர், யூ ஆர் கிராஸிங் த லிமிட்...’’
‘‘நோ சார். என் லிமிட்டுக்கு உட்பட்டுத்தான் நான் கேட்கறேன். யோசிச்சுப் பாருங்க. ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி ‘கிளாஸ்கோ ஸ்மித்கிளைன்’ இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டதுக்கு என்ன  காரணம்? அமெரிக்காவுல இருக்கிற சமூக ஆர்வலர்கள். அவங்களோட தொடர் போராட்டங்களோட விளைவாதான் அந்த நிறுவனம் செஞ்ச தப்பு வெளிச்சத்துக்கு வந்தது. ரூபாய் ஆயிரத்து 800 கே £டியை அபராதமா செலுத்தி, இனி நாங்க அப்படி செய்ய மாட்டோம்னு மன்னிப்பு கேட்டாங்க.

‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’, ‘ஃபைசர்’, ‘அஸ்ட்ராஜெனகா’, ‘மெர்க்’, ‘எலி லில்லி அண்ட் அல்லர் ஜன்’... இப்படி உலகளவுல முன்னணில இருக்கிற எல்லா மருந்து நிறுவனங்களும் அபராதம் செலுத்தியிருக்கு. காரணம், தங்களோட நிறுவன மருந்தைத்தான் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கணும்னு  அவங்க கட்டாயப்படுத்தியது. இப்படி அமெரிக்காவுல அம்பலப்பட்டுப் போனவங்க இந்தியாவுல வாலாட்ட வந்திருக்காங்க. இதை நாம அனுமதிக்கணுமா?’’
‘‘அப்ப விஷக் காய்ச்சல் பரவி நம்ம நாட்டு மக்கள் செத்தா பரவாயில்லன்னு சொல்றீங்களா?’’

‘‘நான் அப்படிச் சொல்லலையே சார்...’’
‘‘இங்க பாருங்க தேன்மொழி... விஷக் காய்ச்சலுக்கான மாத்திரை ‘மெடிகோ’கிட்டதான் இருக்கு. அதை நமக்கு குறைந்த விலைல கொடுக்க முன்வந்திருக்காங்க. அதுக்கு பிரதிபலனா நோயாளிகளை  ஆராய்ச்சி பண்ணறோம்னு சொல்றாங்க...’’

‘‘அங்கதான் சார் அவங்களோட கிரிமினல் புத்தி இருக்கு...’’
‘‘ஒரு நிமிஷம் டாக்டர்... ஆராய்ச்சின்னா, உடனே ஊர் பேர் தெரியாத மருந்தை உடம்புல செலுத்தி டெஸ்ட் பண்ணறதுன்னு நினைச்சீங்களா?’’
‘‘ஆமா...’’

‘‘மை காட்... இப்படி தப்பா புரிஞ்சுக்கிட்டதுனாலதான் என் மேல கோபப்பட்டீங்களா?’’
‘‘என்ன சார் சொல்றீங்க?’’
‘‘இங்க பாருங்க டாக்டர்... என் ரத்தத்துலயும் நாட்டுப்பற்று ஓடுது. அப்படியெல்லாம் எலி, முயல் மாதிரி நம்ம மக்களை பரிசோதிக்க அனுமதிக்க மாட்டோம்...’’
‘‘அப்படீன்னா மெடிகோ நிறுவனம் நம்ம மக்கள் மேல பண்ற ஆராய்ச்சி?’’
‘‘அது ஆரோக்கியம் தொடர்பானது...’’

‘‘புரியலை சார்...’’
‘‘தெளிவாவே சொல்லிடறேன் தேன்மொழி. அடிக்கடி நம்ம மக்களுக்கு ஏன் காய்ச்சல் வருது? அவங்க உடம்புல எதிர்ப்பு சக்தி ஏன் குறைவா இருக்கு? இதை சரிசெய்ய என்ன பண்ணணும்...  என்ன டானிக் தரணும்... இதைத்தான் மெடிகோ ஆராயப் போகுது. அதுக்காகத்தான் விஷக் காய்ச்சல்ல பாதிக்கப்பட்ட எல்லார்கிட்டேந்தும் ப்ளட் சாம்பிள்... யூரின் சாம்பிள் எடுக்கறாங்க...’’
தேன்மொழி அமைதியாக இருந்தாள். மேலோட்டமாக பார்க்கும்போது ராம் சொல்வது சரியென்றே தோன்றியது. ஆனாலும் எங்கோ இடித்தது. அது என்ன என்று அவளுக்கே தீர்மானமாக தெரிய வில்லை. இன்னும் ஆழமாக ஆராய வேண்டும். அப்போதுதான் உண்மை புலப்படும். அதுவரை மவுனமாக இருப்பதே சாலச் சிறந்தது.

‘‘இப்ப உங்க சந்தேகம் தீர்ந்திருக்கும்னு நினைக்கறேன்... போய் வேலையை பாருங்க...’’
தலையசைத்துவிட்டு வெளியே வந்தாள்.

அதே நேரம் ஸ்காட் வில்லியம்ஸ் மர்மமாக சிரித்துக் கொண்டிருந்தான். தேன்மொழி வேலை பார்க்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்திருந்த அனைத்து நோயாளிகளிடம் இருந்தும் எடுக்கப் பட்ட ரத்தப் பரிசோதனையின் முடிவு அவன் லேப்டாப்பில் மின்னிக் கொண்டிருந்தது.

மகிழ்ச்சியுடன் அதை பார்த்தான். ரெட் மார்கெட்டில் அவன் நிறுவனம் ஆதிக்கம் செலுத்த இந்த டேட்டா போதும்...
‘‘அலாவுதீன்... ப்ளீஸ் என்னைக் காப்பாத்து...’’ மிரட்சியுடன் சுற்றிலும் பார்த்தபடி மகேஷ் குரல் கொடுத்தான்.
எந்த பதிலும் வரவில்லை. மீண்டும் கத்தினான். அது எதிரொலியாகிக் கரைந்தது. பயத்துடன் வாசலைப் பார்த்தான். மரம் உயரத்துக்கு நெருப்பு எரிந்து  கொண்டிருந்தது. இதை எப்படிக் கடப்பது?  நினைக்கவே பயமாக இருந்தது. விளக்குடன் அப்படியே படிக்கட்டில் அமர்ந்தான். அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
‘அழாத மகேஷ்...’ அலாவுதீனின் குரல் ஒலித்தது.

கண்களைத் துடைத்தபடி எழுந்தான்.
‘‘அப்ப எனக்கு ஹெல்ப்
பண்ணறியா?’’
‘பண்ணறேன். பதிலுக்கு நீ ஒரு உதவி செய்யணும்...’
‘‘என்னன்னு சொல்லு... கண்டிப்பா செய்யறேன்...’’
‘பேச்சு மாற மாட்டியே?’
‘‘மாட்டேன்...’’

‘ப்ராமிஸ்?’
‘‘ப்ராமிஸ்...’’
‘ஓகே. உடனே நீ வீட்டுக்கு போகக் கூடாது...’
‘‘என்னது?’’
‘ஆமாம் மகேஷ். ஒரு சாபத்தாலதான் நான் இப்படி யார் கண்ணுக்கும் தெரியாம இருக்கேன்...’
‘‘யார் உனக்கு சாபமிட்டது?’’

‘வௌவால் கோட்டைல இருக்கிற சூனியக்காரக் கிழவி...’
‘‘அச்சச்சோ...’’
‘அந்த சூனியக்கார கிழவி ஒரு அருவியை பாதுகாத்துட்டு இருக்கா. அவளுக்கு தெரியாம அந்த அருவித் தண்ணியை நீ கொண்டு வந்து எம் மேல தெளிக்கணும். அப்பத்தான் எனக்கு சாப விமோ சனம் கிடைக்கும். இதை மட்டும் செஞ்சுட்டு நீ வீட்டுக்கு போ...’
பதில் சொல்லாமல் மகேஷ் அமைதியாக இருந்தான்.

‘என்ன யோசிக்கிற?’
‘‘அதில்ல அலாவுதீன்... திரும்பவும் இங்க வந்தா மந்திரவாதி என்னை பிடிச்சுக்க
மாட்டானா?’’
‘மாட்டான்...’
‘‘எப்படி சொல்ற?’’

‘ஆமாம் மகேஷ். அந்த அருவித் தண்ணியை நீ சொம்புல எடுத்ததுமே உன் பக்கத்துல நான் வந்து குரல் கொடுப்பேன். சட்டுன்னு நீ தண்ணிய தெளிச்சிடலாம்...’
‘‘அப்படீன்னா சரி. அந்த வௌவால் கோட்டை எங்க இருக்கு?’’
‘தெரியாது...’

‘‘உனக்கே தெரியலைனா அதை நான் எப்படி கண்டுபிடிக்க முடியும்..?’’
‘ராஜகுமாரி உதவுவா...’
‘‘எந்த ராஜகுமாரி?’’
‘மந்திரவாதி கடத்தின ராஜ
குமாரி...’

‘‘யாரு? என்னை இங்க சிறை வைச்சாரே... அந்த தாத்தாவா?’’
‘ஆமா. உலகத்தையே ஆளணும்னு அவர் நினைக்கிறார். அதுக்கு பௌர்ணமி அன்னிக்கு பிறந்த அந்த ராஜகுமாரியை பூரண அமாவாசை அப்ப ரத்தினக் கம்பளத்துல வைச்சு பலி தரணும். அது க்காகத்தான் ராஜகுமாரியை முதல்ல கடத்தினாரு. அப்புறம் உன்னை வச்சு ரத்தினக் கம்பளத்தை எடுக்க திட்டம் போட்டாரு. நான் வந்து தடுத்துட்டேன்...’
‘‘அப்படீன்னா முதல்ல ராஜகுமாரியை மீட்கணும் இல்லையா?’’
‘ம்...’

‘‘சரி, ராஜகுமாரி எங்க இருக்கா?’’
‘நீதான் கண்டுபிடிக்கணும்...’
‘‘விளையாடாத அலாவு தீன்...’’

‘நிஜமாத்தான் சொல்றேன். ராஜகுமாரியை மந்திரவாதி எங்க மறைச்சு வைச்சிருக்கார்னு சத்தியமா எனக்கு தெரியாது...’
‘‘இப்படி எதுவுமே தெரியாதுன்னா நான் என்னதான் செய்ய முடியும்?’’
‘உனக்கு ரத்தினக் கம்பளம் உதவும் மகேஷ்...’

‘‘எது... பறக்கும் கம்பளமா?’’
‘ஆமா. இந்த விளக்கை யார் தேய்க்கிறாங்களோ அவங்களுக்கு ரத்தினக் கம்பளம் கட்டுப்படும். அதனால நீ எதுக்கும் கவலைப்பட வேண்டியதில்லை. என்ன சொல்ற?’
கன்னத்தை தட்டியபடி கொஞ்ச நேரம் சிந்தித்தான். எல்லாமே சுலபமாகத்தான் தெரிந்தது. ‘‘ஓகே அலாவுதீன். ராஜகுமாரியை காப்பாத்திட்டு வௌவால் கோட்டைக்கு போறேன். அருவித் தண்ணியை  உன் மேல தெளிக்கறேன்...’’

‘ரொம்ப தேங்க்ஸ் மகேஷ்...’ என்றபடி நெருப்பைக் கடப்பதற்கான வழியை அலாவுதீன் சொல்ல ஆரம்பித்தான்.
மாயக் கண்ணாடி வழியே இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மந்திரவாதி, புன்னகையுடன் தன் தாடையில் வளர்ந்திருந்த விழுதைத் தடவினார்.
அந்த விழுதுக்குள்தான் வௌவால் கோட்டை மறைந்திருக்கிறது.

‘‘இவை அனைத்தும் கொற்கை முத்துக்கள்...’’ கணீரென்று ஒலித்த யவன ராணியின் குரல் உப்பரிகையில் மறைந்திருந்த இளமாறனுக்கு துல்லியமாகக் கேட்டது.
‘‘இதை காண்பிப்பதற்காகத்தான் எங்களை அழைத்தீர்களா?’’ சேர மன்னர் மாந்தரஞ்சேரல் இரும்பொறை நிதானமாகக் கேட்டார்.
‘‘ஆம்...’’ யவன ராணி அதே நிதானத்துடன் பதில் அளித்தாள்.
‘‘இதுபோன்ற முத்துக்கள் எங்களிடமும் இருக்கின்றன...’’

‘‘கொற்கையில் இருந்து நாங்களும் தருவித்திருக்கிறோம்...’’
‘‘எங்கள் நாட்டு அங்காடிகளில் இதையும் வணிகர்கள் விற்கிறார்கள்...’’
எவ்வியும், திதியனும், எழினியும் அடுத்தடுத்து குரல் கொடுத்தார்கள்.

‘‘சற்று பொறுங்கள்...’’ அழுத்தம்திருத்தமாக சோழ மன்னர் பெருநற்கிள்ளி குரல் கொடுத்த பிறகே சலசலப்பு அடங்கியது. ‘‘யவன ராணியும், யவன நாட்டு அரசரும் என்ன சொல்ல வருகிறார்கள்  என்பதை முதலில் செவி கொடுத்துக் கேட்போம்...’’ என்றபடி யவன அரசரை ஏறிட்டார்.

புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக தன் இருக்கையில் இருந்து எழுந்த யவன அரசர், மெல்ல நடந்து தன் மகளின் அருகில் வந்தார். அவள் கரங்களில் இருந்த கொற்கை முத்துக்களை கொத்தாக  அள்ளியவர், உணர்ச்சி பொங்க பேசஆரம்பித்தார்.

‘‘துறைமுகம் இருக்கும் பல நாடுகளில் முத்துக்கள் எடுக்கப்படுகின்றன. என்றாலும் கொற்கையில் எடுக்கப்படும் முத்துக்களுக்குத்தான் மதிப்பு அதிகம். நாம் ஒவ்வொருவரும் விலை மதிப்பில்லாத இந்த  முத்துக்களை பெரும் பொருள் கொடுத்து வாங்குகிறோம். இதனால் பாண்டிய நாட்டு வணிகர்கள் மேலும் மேலும் செல்வந்தர்களாகிறார்கள். பாண்டிய மன்னனும் அசைக்க முடியாத சக்தியாக உரு வெடுத்துக் கொண்டிருக்கிறான். இதெல்லாம் உங்களுக்கு ஒப்புதல்தானா..?’’

அனைவரும் அமைதியாக இருந்தார்கள். ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஒவ்வொரு விதமான சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. யவன அரசரே தொடர்ந்தார்.
‘‘கொற்கையை விட புகார் பெரிய துறைமுகம்தான். ஆனாலும் பாண்டியன் அளவுக்கு சோழன் புகழ் பெறவில்லை. காரணம், முத்துக்கள். அதே போல்தான் சேர மன்னரும்.

அவர் நாட்டிலும் துறைமுகம் இருக்கிறது. அதனால் அவர் பயனடைகிறார். மறுக்கவில்லை. ஆனால், அந்தப் பயன், பாண்டியன் அளவுக்கு இல்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இப்படி இரு பெரும் அரசர்களும் கொற்கை முத்துக்களுக்கு முன்னால் தலைகுனிந்து நிற்கும்போது குறுநில மன்னர்களான உங்கள் நிலை குறித்து சொல்ல வேண்டியதில்லை...’’ என்று நிறுத்திவிட்டு தன் மகளைப் பார்த்தார்.ஒப்புதலாக தலையசைத்து விட்டு யவன ராணி தொடர்ந்தாள். ‘‘இந்த நிலை மாற வேண்டும் என்று என் தந்தை விரும்புகிறார்...’’
‘‘அதாவது..?’’ சேர மன்னர் இடை வெட்டினார்.

‘‘கொற்கை துறைமுகம் உங்கள் அனைவரது கட்டுப்பாட்டின் கீழும் வர வேண்டும். அங்கிருந்து எடுக்கப்படும் முத்துக்களால் நீங்கள் பயனடைய வேண்டும்...’’
‘‘அதெப்படி சாத்தியம்?’’ எருமையூரான் படபடத்தார். ‘‘ஏன் சாத்தியமாகாது? பாண்டிய நாட்டை உங்கள் அனைவரது ஆதிக்கத்தின் கீழும் கொண்டு வந்தால்..?’’
கனத்த மவுனம் அங்கு நிலவியது.

‘‘பாண்டிய மன்னர் சித்திரமாடத்து துஞ்சிய நன்மாறன் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். இளவரசரான செழியனுக்கு இன்னும் மீசை கூட முளைக்கவில்லை. இதுதான் சரியான தருணம். நீங்கள் அனை வரும் ஒன்று திரண்டு பாண்டிய நாட்டின் மீது போர் தொடுங்கள். உங்களுக்கு வேண்டிய அனைத்து தளவாடங்களையும் யவன நாடு தரும்...’’
‘‘பாண்டியனின் வீழ்ச்சியில் நீங்கள் ஏன் அக்கறை செலுத்துகிறீர்கள்?’’ - கண்கள் பிரகாசிக்க சேர மன்னர் கேட்டார்.

‘‘பாண்டிய வணிகர்களின் கொட்டம் ஒடுங்கும். எங்கள் வணிகர்கள் தலைநிமிர்ந்து நடப்பார்கள்...’’ பளிச்சென்று பதில் சொன்னார் யவன மன்னர்.
சோழனும், சேரனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘‘என் மகள் போர்த் தந்திரங்களில் வல்லமை படைத்தவள். யந்திர பொறிகளை அமைப்பதில் கெட்டிக்காரி. பாண்டியர்களின் புரவிப் படையை கணத்தில் செயலிழக்கச் செய்துவிடுவாள். இவளது திறமையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்காகத்தான் இவளை அழைத்து வந்திருக்கிறேன்...’’

உப்பரிகையில் மறைந்து நின்றபடி அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த இளமாறனின் ரத்தம் கொதித்தது. அதன் பிறகு கணமும் அவன் தாமதிக்கவில்லை. மேலிருந்து யவன ராணிக்கு அருகில்  குதித்தவன், தன் இடுப்பில் இருந்து குறுவாளை எடுத்தான். யவன ராணியின் கழுத்துக்கு அருகில் அதை வைத்தான்.

(தொடரும்)

காதல் எனப்படுவது யாதெனில்...

எம்.டி.முத்துகுமாரசாமி

‘‘காதலின் மொழிபெயர்ப்புகள் எண்ணற்றவை. தவறுகள்
மலிந்தவை. இலக்கணங்களையும் சூழல்களையும் பொருட்படுத்தாதவை. இலக்கு தவறி பொருள் பெறுபவை!’’

காதல் எனப்படுவது யாதெனில்...

‘‘காதல்
உள்ளத்தின் பசி
காமத்தின் ருசி!’’

நடிகை ரோகிணி

காதல் எனப்படுவது யாதெனில்...

‘‘காதலை காமம், ஈர்ப்பு, உன்னத உணர்வு, அன்பு... இப்படியும் சொல்கிறார்கள். எனக்குக் காதல் என்பது, பரஸ்பரம் மதித்தல்!’’

இயக்குநர் சுகா

கே.என்.சிவராமன்