யாருக்கும் தெரியக்கூடாது!



இந்த இடத்தில் லிங்க்கிடமிருந்து உலகத்தரம் வாய்ந்த நடிப்புத்திறன் கொண்ட நடிகன் வெளிப்பட்டான். வர்ஷாவின் வார்த்தைகள் காதில் விழாத மாதிரி நடந்துகொண்டு, டி.வி&யைப் போட்டான். பேப்பரை ஒழுங்கு செய்தான். தண்ணீர் குடித்தான். பென் ட்ரைவ் ஒன்றையும் தேட முயன்றான். வர்ஷா சலனமின்றி இவற்றைப் பார்த்து பின், ‘‘டேய் குத்தாலிங்கம், நான் என்ன கேட்டேன், நீ என்ன பண்ணீட்டு இருக்கற?’’ என்றாள்.
‘‘கேட்டியா... என்னது?’’

வர்ஷா முகத்தைத் திருப்பிக்கொண்டாள். இவளை சமாதானப்படுத்தாமல் அப்படியே விட்டுவிடலாம் என லிங்க் உத்தேசித்துப்போக, அவளே இயல்புநிலைக்குத் திரும்பினாள். ‘‘நாம சந்தோஷமா இருந்ததை செல்லுல எடுத்து வச்சிருந்தியே, அதைக் கொடு, பாத்துட்டுத் தரேன்...’’
லிங்க் வேறொரு அறையுள் சென்று சிறிதுநேரம் திருதிருவென விழித்துவிட்டு புதிய கருத்துகளோடு திரும்பி வந்தான். ‘‘வர்ஷா, 20-20 ஓவர் கிரிக்கெட்டுக்கு மேலும் விறுவிறுப்பூட்ட யோசனை ஒன்று உள்ளது.

அதன்படி ஏற்கனவே இருக்கிற மூன்று ஸ்டம்ப்களுடன், மேலும் இரண்டு ஸ்டம்ப்கள் கூடுதலாக நடப்பட வேண்டும். சோழர்களின் மீது செல்வராகவனுக்கு ஏதாவது கோபம் இருந்தால், நேரடியாக நாலு வார்த்தை திட்டியிருக்கலாம். பொன்சேகாவின் கதியைப் பார்த்தாயா?’’
‘‘லிங்க், என்ன ஆச்சு உனக்கு... ஆறு மாசப் பழசான விஷயத்தை இப்ப பேசிக்கிட்டு இருக்கறே?’’

‘‘.................................’’

‘‘ஐ வான்ட் செல்...’’ லிங்க் சமாளிக்கும் வழிகள் அத்தனையும் அடைபட்டதை உணர்ந்து, மனதைத் திடப்படுத்திக்கொண்டு பதில் சொல்லத் தொடங்கினான். ‘‘வர்ஷா, நேற்று நான் சாப்பிடப்போகும்போது, ஒரு சின்னத்த...’’  இப்போது வர்ஷாவின் செல் ஒலிக்கத் தொடங்கியது. இவனது விவரிப்பை சுவாரஸ்யமின்றி கேட்டவள் செல்லில் தெரிந்த எண்களைப் பார்த்ததும் உற்சாகம் பெற்று மலர்ச்சியுடன், ‘‘ஹாய்...’’ என்று பேசத் தொடங்கினாள்.

லிங்க் மீண்டும் உயிர்பெற்று தன் பேக்குடன், தப்பிக்க வாசல் வரை வந்துவிட்டான். ‘‘டேய், நில்லுடா...’’ என்றாள் தன் செல்பேச்சை முடித்த வர்ஷா. ‘‘செல்லைத் தராம எங்க ஓடற?’’ லிங்க் உணர்ச்சி ததும்ப வர்ணித்த சம்பவத்தை உள்வாங்க வர்ஷாவுக்கு சிறிது நேரம் பிடித்தது. ‘‘என்னடா சொல்ற?’’
‘‘ஆமா, வர்ஷா... அந்த செல் மிஸ் ஆயிட்டுது...’’ பாவிகள் கையில் செல் சிக்காமல் இருக்கட்டும். அதை எடுப்பவர்கள் அடுத்தவர்களின் நாகரிகத்தை மதிப்பவர்களாக இருக்கட்டும். நேற்றிரவு நான் இழந்த தூக்கத்தையும் பட்ட வேதனைகளையும் வர்ஷா, உனக்கு எப்படிப் புரிய வைப்பேன்?

வர்ஷா இந்த இக்கட்டான நிலைமையைப் புரிந்துகொண்டு, அவனுக்குப் பக்கபலமாக இருந்துகொண்டு செல்லைத் தேட களத்தில் இறங்க வேண்டும்.
‘‘நமக்கு மட்டும் ஏன் இப்படி கஷ்டம் வருது? வர்ஷா, இப்பக்கூட அந்த செல்லுக்கு ட்ரை பண்றேன், பார்... ரிங் போய்ட்டே இருக்கு. நான் செஞ்ச மடத்தனம் அதை சைலன்ட் மோடுல வச்சிருந்தது. யாரோட பேக்லயாவது தெரியாம விழுந்திருந்தாக்கூட, அதுல இருந்து சத்தம் கேட்காது...’’

‘‘........................’’

‘‘இப்ப என்ன பண்றதுன்னு புரியல வர்ஷா. யார்ட்ட சொல்றதுன்னும் புரியல. ஆனா, நம்பிக்கை இருக்குடா. எப்படியாவது செல் கிடைச்சிரும்னு... வர்ஷா, பயமா இருக்கு...’’ அவள் ஸ்தம்பித்துப்போய் இருந்தாள். அவளது உதடுகள் நடுங்கின. கண்கள் அலை பாய்ந்தன. அருகிலிருந்த பாட்டிலை எடுத்து நீரைப் பருகினாள். மூடாத பாட்டிலிலிருந்து எஞ்சிய நீர் வழிந்தோடியது. பின், ‘‘லிங்க்...’’ என்றாள் உறுதியான குரலில். ‘‘இப்ப, இன்னும் ரெண்டு செகண்ட்ல எனக்கு அந்த செல் வந்தாகணும்...’’

‘‘இவ்வளவு நேரம் நான் என்ன சொல்லிட்டிருந்தேன்?’’

‘‘அதெல்லாம் தெரியாது, எனக்கு இப்ப செல் வந்தாகணும்...’’

‘‘வர்ஷா...’’

‘‘எனக்குத் தெரியும். செல் உங்கிட்டதான் இருக்கு. நீ நடிக்கற...’’

‘‘.........................’’

‘‘அத வச்சு நீ என்னை ப்ளாக் மெயில் பண்ணப்போற, அப்படித்தான?’’

இவ்வளவு நேரம் கட்டுப்பாடுடன் இருந்த வர்ஷா இப்போது கத்தத் தொடங்கினாள். பாய்ந்து அவனை அறைந்தாள். சட்டையைப் பிடித்து உலுக்கினாள். ‘‘தெரியும்டா எனக்கு, நீ என்னை ப்ளாக்மெயில் பண்ணப்போற...’’ ‘‘வர்ஷா, நீ என் உயிர்... இவ்வளவு நாள் என்னோட பழகி இருக்கற... என்னைப் போய்...’’ மேலும் அறைகள் மற்றும் ஆங்கில வசவுகள்.

‘‘நான் கனடா மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிருவனோன்னு உனக்குப் பொறாமை. பெரிய அமவுன்ட் கறக்கறதுக்கு ப்ளான் பண்ற... டேய், அப்படி எதுவும் பண்ணீராதடா... ப்ளீஸ்டா!’’ ‘‘வர்ஷா, என்னை நம்பு, ப்ளீஸ்... நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல...’’ ‘‘டேய், நான் ரொம்ப கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவ... ஐயோ, கடவுளே, இப்ப எத்தனை பேர் நான் உன்னோட கூத்தடிக்கறதைப் பாத்துட்டு இருக்காங்களோ... வெளிய தெரிஞ்சா, என் குடும்பமே தற்கொலை செஞ்சிக்கும்... டேய், குத்தாலிங்கம்... என்னடா செஞ்சு தொலைச்ச... என்னோட சேவிங்ஸ் எல்லாத்தையும் உங்கிட்ட கொடுத்துடறேன்... என்னை விட்டுருடா. நீ நல்லவன்னு நம்பித்தான உன்னோட இவ்வளவு நாள் இருக்கறேன்.

நீ சொன்னபடி எல்லாம் நடந்தேன். நான் ஏதாவது உன் மனசை புண்படுத்தி இருந்தாக்கூட மன்னிச்சிருடா...’’

‘‘.........................’’

‘‘ஐயோ, இனிமே நான் எப்படி வெளில தலைகாட்டப் போறேன்? என் ப்ரமோஷன், என் மேரேஜ்... டேய், நான் உன்னையே மேரேஜ் பண்ணிக்கறேன், செல்போனைக் காட்டுடா...’’ ‘‘வர்ஷா, நிலைமையைப் புரிஞ்சுக்கோ... நிஜமாவே தொலைஞ்சு போச்சு!’’

‘‘உன் கால்ல வேணாலும் விழறேன்... கொடுத்துருடா! எப்படில்லாம் உன்னோட பழகியிருக்கேன்... என்னைக் கஷ்டப்படுத்த உனக்கு எப்படிடா மனசு வந்தது?’’ கொஞ்ச நேரம் கதறி அழுதாள். எதையெல்லாமோ எடுத்து அவன் மேல் வீசினாள். ‘‘அசந்த நேரத்துல ஏதேதோ சொல்லி, என்னை மயக்கி, ரிக்கார்ட் பண்ணிட்ட... துரோகி. உன்னை நம்பினேன் பார், அதான் நான் செஞ்ச தப்பு...’’

‘‘வர்ஷா, நீ அழற... நான் அழலை. நிஜமாவே தொலைஞ்சுபோச்சு. எடுத்தவன் உன்னை மட்டுமா பாக்கப்போறான்? என்னையும்தான் பாக்கப்போறான்...’’
‘‘ப்ளீஸ்...’’ & கை எடுத்துக் கும்பிட்டாள். காலில் விழுந்தாள். ‘‘கொடுத்துருடா...’’

‘‘வர்ஷா...’’

‘‘டேய், இவ்வளவு நேரம் நீ ஜோக் பண்றதானே?’’

லிங்க் பதில் பேசவில்லை. வர்ஷா சிறிது யோசித்து, ‘‘ஓகே... நான் இப்பவே தற்கொலை பண்ணிக்கப்போறேன். சும்மா போகமாட்டேன். நீதான் காரணம்னு சொல்லிட்டுத்தான் போவேன்...’’ என்றவள் வெறி பிடித்து தன் அறையுள் ஓட முற்பட, லிங்க் அவள் மேல் பாய்ந்து, தடுத்து, கட்டிலில் தூக்கிப் போட்டான். ‘‘வா, ரெண்டு பேரும் சூசைட் பண்ணலாம். நீ நம்பற மாதிரி எப்படிச் சொல்றதுன்னு எனக்குத் தெரியல வர்ஷா... நீ நம்பித்தான் ஆகணும்.’’

‘‘......................’’

‘‘ரெண்டு பேரும் சேர்ந்து என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம், வர்ஷா... இனிமே, தற்கொலை அப்படி இப்படின்னு பேசாத... ப்ளீஸ்!’’ ‘‘அதான, நான் ஏன் சாகணும்? உன்னை ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்...’’ என்றாள் வர்ஷா. நிதானமாக அவளது செல்லை எடுத்தாள். ‘‘கௌதம்...’’

‘‘இது நாம ரெண்டுபேரும் சம்பந்தப்பட்ட விஷயம். இதுல மூணாம் மனுஷன் தலையீடு தேவையில்ல... நீ செய்யறது சரியில்ல, வர்ஷா...’’
‘‘நான் உன்னை நம்பல லிங்க். எப்ப நீ ப்ளாக்மெயில் ஐடியாவுக்கு வந்தியோ, அப்பவே எல்லாம் முடிஞ்சுபோச்ச. ச்சே, கூசுது. உன்கூட போய் இவ்வளவு நாள் இருந்தேனே, இப்பவாவது உன் சுயரூபம் தெரிஞ்சுதே... பாவி!’’

லிங்க் தன் நிலைமையை மேலும் விளக்குவதற்குள் கௌதம் வந்துவிட்டான். ‘‘ஹாய், என்ன ஆச்சு வர்ஷா? ஏன் ரூம் தாறுமாறா இருக்கு? உன் முகம் சிவந்து போயிருக்கு...’’ வர்ஷா மனமுடைந்து மீண்டும் அழுதுவிட்டு, ‘‘நான் ஏமாந்துட்டேன்டா, கௌதம்...’’ என்றாள். ‘‘டேய் குத்தாலிங்கம், இவளை என்னடா செஞ்ச..?’’ லிங்க் பேசாமல் உட்கார்ந்திருந்தான். கௌதம் வர்ஷாவை நெருங்கியதும், அவன் மேல் சாய்ந்து கொண்டு கண்ணீர், தகவல், மேலும் கண்ணீர், மேலும் தகவல் அளித்தாள்.

‘‘மை காட்...’’

‘‘இவனை நம்பி ஏமாந்துட்டேன். அப்படி இப்படி இருந்தத செல்லுல பதிவு பண்ணிட்டான். அடுத்து என்னை மிரட்டப் போறான். இவனை நாலு தட்டு தட்டி செல்லை வாங்குடா...’’

‘‘பொய். வர்ஷா, உன் முழு சம்மதத்தோடதான் எல்லாம் நடந்தது...’’

‘‘வர்ஷாவுக்கு ஏதோ மயக்க மருந்து கொடுத்து, அவள கற்பழிச்சிருக்கற. வசிய மருந்து கொடுத்து, அவளை உன் விருப்பப்படி நடக்க வச்சிருக்கற... இதுதான் நடந்தது. சைபர் க்ரைம் செக்ஷன்ல சொல்லி, உன்னை உள்ள தள்றேன்டா...’’ என்றான் கௌதம். ‘‘என்ன வர்ஷா, இப்படி சொல்லுவியா..?’’
‘‘சொல்றேன்...’’ என்றாள் வர்ஷா தயக்கத்துடனும் குழப்பத்துடனும்.

‘‘எனக்குத் தெரிஞ்சு போச்சுடா...’’ என்றான் திடீர் உற்சாகக் குரலில் லிங்க். ‘‘டேய் கௌதம், என் பின்னாலேயே வந்து அந்த செல்லைத் திருடினது நீ!’’
‘‘குட் ஜோக்!’’

‘‘வர்ஷா மேல ஏற்கனவே ஒரு கண்ணு. எங்களைப் பிரிக்கறதுக்காக நீயே திருடி இருக்கற... மரியாதையா செல்லைக் கொடு. நேத்து ரோட்ல, என்னைப் பாத்து ஏதாவது ப்ராப்ளமான்னு கேக்கலை?’’ என்றான் லிங்க்.

‘‘அது தற்செயலா நடந்தது. தவிர, உன் செல்லுல என்னென்ன கண்றாவிலாம் இருக்குதுன்னு எனக்கென்ன தெரியும்?’’

‘‘ரெண்டு பேர் லவ் பண்றாங்க, இப்படில்லாம் எடுத்திருப்பாங்கங்கற யூகத்துலதான்...’’

‘‘வக்கிர மனம் படைச்சவன்தான் இது மாதிரி யோசிப்பான். நான் அப்படிப்பட்ட ஆள் இல்லடா நாயே...’’ ‘‘நீ தாராளமா போலீசுக்குப் போ. நான் இதே பதிலச் சொல்றேன். உன்னையும் சாத்துவாங்க... வர்ஷா, தவறான முடிவு எடுத்தா, போறது எல்லார் மானமும்தான்...’’ வர்ஷா தலையில் கை வைத்து உட்கார்ந்தாள்.

‘‘சொல்லுடா, நீ சொல்றத எல்லாம் நம்ப மாட்டாங்க. வர்ஷா சொல்றதத்தான் கடைசில எல்லாரும் நம்புவாங்க... வர்ஷா, இனி இவன்கூட இருக்க வேண்டாம். என்னோட வந்துரு... உன்னை கண்ல வச்சு காப்பாத்தறேன்... டேக¢ யுவர் லக்கேஜஸ்...’’

ஐந்து நிமிடத்தில் வர்ஷா சின்ன சூட்கேஸுடனும் கௌதமுடனும், ‘‘தயவுசெஞ்சு கொடுத்துருடா’’ என்ற அலறலுடனும் சென்றாள். கௌதம் முறைப்புடன், ‘‘ஒருநாள் டைம்! செல்போன் வந்தாகணும்...’’ என்றான்.

அவர்கள் போவதைப் பார்க்கப் பிடிக்காமல் லிங்க் கண்களை மூடிக்கொண்டான். எல்லாமே அபத்தமாக இருந்தது. அடுத்து என்ன நடக்கும் என்று யோசிக்கவே பயமாக இருந்தது. தனது சந்தோஷ தினங்கள் எல்லாமே முடிந்து விட்டதாகவே தோன்றியது. கண்ணெதிரே இருந்தது அவனுடைய இன்னொரு செல். ஆத்திரமுடன் அதை நெருங்கி, பைத்தியம் பிடித்தவன் போல அதைக் கைப்பற்றி உடைக்க முயன்றபோது, கடைசி நொடியில் அவனிடம் ஒரு யோசனை. ‘திரும்பவும் ட்ரை பண்ணிப் பார்த்தால் என்ன? கடைசியாக ஒரு தடவை!’

தொலைந்து போன அவனது செல் எண்களை அழுத்தினான். ரிங் சென்றது. வழக்கம் போல் ஒலிக்கும். பிறகு தன்னாலேயே...
அதற்குள் யாரோ எடுத்துவிட்டார்கள் ‘‘ஹலோ, உங்க செல் தொலைஞ்சு போச்சேன்னு கவலைப்படறீங்களா? கையில கொஞ்சம் பணத்தோட, நான் சொல்ற அட்ரஸுக்கு வாங்க...’’ ‘களுக்’ சிரிப்புடன் ஒரு பெண்ணின் குரல்!

-ஷங்கர்பாபு