மச்சிலி



உலகிலேயே அதிக முறை புகைப்படம் எடுக்கப்பட்டவள். ஃபேஸ்புக் சமூக இணையதளத்தில் ரசிகர் வட்டம் கொண்டவள். ‘லேடி ஆஃப் தி லேக்’ என்று பெருமையோடு அழைக்கப்படுபவள். ஆண்டுக்கு 46 கோடி ரூபாய் இந்தியாவுக்கு வருமானம் ஈட்டித் தருபவள். வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கியவள். அழகி என்றாலும் அருகில் நெருங்க அனுமதிக்காதவள்.  யார் இவள்?

வேட்டையாட முடியாமல் தளர்ந்து கிடக்கும் மச்சிலிக்காக, ஆட்டுக்குட்டியையோ, கன்றுக்குட்டியையோ அது உலவும் லாக்கர்டா வனப்பகுதியில் ஏதாவது மரத்தில் கட்டிப் போட்டு வைக்கிறார்கள் பூங்கா ஊழியர்கள்.

ராஜஸ்தான் மாநிலம் ரந்தாம்பூர் தேசிய பூங்காவில் வசிக்கிற பெண் புலி! வயது 15. முகத்தில் மீனை நினைவூட்டும் கோடுகள் காணப்படுவதால் ‘மச்சிலி’ என்ற செல்லப்பெயர் இவளுக்கு!  சராசரியாக காடுகளில் வாழும் புலிகளின் வாழ்க்கை 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் முடிவடைந்து விடும். இயற்கையாகவே புலிகள் 10 வயதை எட்டும்போதே முதுமை தொற்றிக் கொள்ளும். மச்சிலிக்கும் இப்போது அந்தப் பிரச்னைதான். சரியாக தற்போது 15 வயதாகும் மச்சிலிக்கு உடல் சுருங்கி தளர்ந்து போய்விட்டது. முன்பு செழிப்பாக பெருத்து இருந்தபோது பலரும் கேமராவில் இதை ஷூட் செய்தார்கள். ரந்தாம்பூர் தேசிய பூங்காவில் டூரிஸ்டுகள் சுற்றிப் பார்க்கவரும் பகுதியில் இதன் நடமாட்டம்தான் அதிகம் இருக்கும்.

இப்போது இது உடல் இளைத்து, நடக்கக் கூட தெம்பு இல்லாமல் படுத்தே கிடக்கிறது. ஆக்ரோஷமாக காட்டில் எதிரொலிக்கும் மச்சிலியின் உறுமலும் மாயமாய் மறைந்து விட்டது. உணவைக்கூட வேட்டையாடி உண்ண முடியாத துர்பாக்கிய நிலை. மான்களைக் கண்டால் ஒரே ஜம்ப்பில் எகிறி அடித்து சாப்பிட்ட மச்சிலிக்கு, இப்போது உணவு தேடியே வருகிறது. வேட்டையாட முடியாமல் தளர்ந்து கிடக்கும் மச்சிலிக்காக, ஆட்டுக்குட்டியையோ, கன்றுக்குட்டியையோ அது உலவும் லாக்கர்டா வனப்பகுதியில் ஏதாவது மரத்தில் கட்டிப் போட்டு வைக்கிறார்கள் பூங்கா ஊழியர்கள்.

ஆனால், என்ன பயன்? உணவு கிடைத்துவிட்டதே என ஆசையாக பக்கத்தில் சென்றால்கூட, மச்சிலியால் சாப்பிட முடியவில்லை.
4 மாதங்களுக்கு முன் மச்சிலியின் குட்டியை ஸ்வாஹா செய்யத் துடித்தது ஒரு முதலை. அதனுடன் வயதான நிலையிலும் கடும் சண்டையில் ஈடுபட்டது மச்சிலி. இறுதி வெற்றி மச்சிலிக்கே என்றாலும், சண்டையில் 3 பற்களை இழந்துவிட்டது. பற்கள் பறிபோனதால், மாமிசத்தை இழுத்துக் கடித்து உண்பதும் சிரமமாயிற்று.

‘‘மச்சிலி இந்த தேசியப் பூங்காவிலேயே ரொம்ப ஃபேமஸ். அதிக பார்வையாளர்கள் பார்த்து ரசித்த ஒரே புலி மச்சிலிதான். இதுவரை 11 குட்டிகளை ஈன்றிருக்கிறது. சென்ற ஆண்டு ‘டிராவல் ஆபரேட்டர்ஸ் ஃபார் டைகர்ஸ்’ அமைப்பு மச்சிலிக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கவுரவித்தது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஒரு கோடி டாலர் வரை எங்கள் தேசிய பூங்கா வருமானம் ஈட்ட கடந்த பத்து ஆண்டுகளாக சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறது மச்சிலி. இப்போது முதுமையில் போராடுவது ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. இனி என்ன நடக்குமோ...’’ என்று மச்சிலியின் எதிர்காலம் பற்றி பதற்றத்துடன் கூறுகிறார் பூங்காவின் இயக்குனர் ஷெகாவத்.

மச்சிலியைப் பார்க்க இன்னும் பலர் ஆர்வமாகவே இருக்கிறார்கள். ஆனால், அதற்கு இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். அக்டோபர் முதல் தேதி பூங்கா மீண்டும் திறக்கப்படும்போது மச்சிலி காட்சி தரவேண்டும் என்பதே புலி நல விரும்பிகளின் வேண்டுதல்!

- திருச்சி கார்த்தி