நம்பிக்கைகளை விதைத்த பெரு விவசாயி



‘இனி விவசாயமே இல்லை’ என்று தீர்மானமான நேரத்தில்தான் அவர் வந்தார். ஊர் ஊராகப் போய் தாடியை நீவி விட்டபடி, மாடு, சாணம், மண்புழு என்று அவர் பேசிய பேச்சு பட்டமரத்தில் விட்ட துளிராக மக்கள் மனதில் நம்பிக்கையை ஊன்றியது. ‘இனிமேல் இதெல்லாம் சாத்தியமா?’ என்று தளர்ந்தவர்களைத் தட்டிக்கொடுத்து தைரியம் தந்தார். கரூருக்கு அருகில் முள்ளும் கல்லுமாகக் கிடந்த ஒரு பெருநிலத்தை வாங்கி, அனைத்து வார்த்தைகளையும் செயலாக்கிக் காட்டினார்.


நம்மாழ்வார் நம்பிக்கையை விதைத்த பெரு விவசாயி. அவர் உருவாக்கிய ‘வானகம்’ என்ற பசும்பண்ணை, இளைஞர்களின் தவக்காடு. ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டேயிருந்தார். இழந்த பாரம்பரியங்களைப் பற்றி பேசிக் கொண்டேயிருந்தார். விஷமில்லாத விவசாயத்திற்கான சாத்தியங்களை போதித்துக் கொண்டேயிருந்தார்.

 நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அவரின் வார்த்தைகளில் கட்டுண்டு வானகத்துக்குள் கூடடைந்தனர். தந்தைக்குரிய கனிவோடு அவர்களுக்கு விவசாயம் பழக்கி வயற்காட்டுக்கு அனுப்பினார். தமிழகமெங்கும் பல்லாயிரம் ஏக்கரில் நடந்து கொண்டிருக்கும் இயற்கை விவசாயத்துக்கான மூல வித்து நம்மாழ்வார்.      

 இயற்கைக்கு எதிராக, விவசாயத்துக்கு எதிராக எது நடந்தாலும் அங்கே நம்மாழ்வாரின் குரலே முதல் முழக்கமாக இருந்தது. டெல்டா விவசாயத்துக்கு முடிவுகட்டும் மீத்தேன் வாயு திட்டத்துக்கு எதிராக பெரும் எழுச்சியை கட்டமைத்துக் கொண்டிருந்த தருணத்தில்தான் நம்மாழ்வாரை இயற்கை தன்னோடு இணைத்துக் கொண்டது.

நம்மாழ்வாரின் 75 ஆண்டு பயணம் நிறைவடைந்திருக்கிறது. அவர் உருவாக்கிய எழுச்சியும் அவர் மீட்டுத் தந்திருக்கிற பாரம்பரியமும் எந்நாளும் நிலைக்கும். இயற்கைக்கு அழிவே இல்லை.

- வெ.நீலகண்டன்