+2 இயற்பியல் சென்டம் வாங்க டிப்ஸ்!



இயற்பியலில் சென்டம் கனவை நனவாக்கும் ஒரு மதிப்பெண் மற்றும் மூன்று மதிப்பெண் கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என கடந்த இதழில் பார்த்தோம். அடுத்ததாக ஐந்து மதிப்பெண் கேள்விகளை எதிர்கொண்டு முழு மதிப்பெண்களையும் அள்ளுவது பற்றி பார்க்கலாம்.

''இயற்பியலில் சென்டம் வாங்க புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியம். ஏனெனில், மாணவர்களை ஏமாற்றுவதற்காகவே குழப்பமான முறையில் சிறு மாறுதலுடன் கேட்கப்படும் கேள்விகள், பல நேரங்களில் பலரது சென்டம் கனவைத் தகர்த்திருக்கிறது. இப்படிப்பட்ட கேள்விகளைப் புரிந்துகொள்ள, தெளிவாகப் படித்து வைத்துக் கொள்வது அவசியம்.

எனவே மாணவர்கள் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்து நான்கைந்து தடவை திருப்புதல் தேர்வை எழுதிப் பார்ப்பது அவசியம். அல்லது இரண்டு இரண்டு அத்தியாயங்களாகப் பிரித்து தேர்வு எழுதியும் பார்க்கலாம்’’ என்கிறார் ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் இளவரசன். கடந்த ஆண்டு இந்தப் பள்ளியிலிருந்து மட்டுமே 16 பேர் இயற்பியலில் சென்டம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்காக அவர் தரும் டிப்ஸ்...

அடிக்கடி கேட்கப்படும் 5 மார்க் கேள்விகள்

1. மின்விசைக் கோடுகளின் பண்புகள் யாவை?
2. வீட்ஸ்டோன் சமனச்சுற்றின் சமன் செய்வதற்கான நிபந்தனையைப் பெறுக?
3. மீ கடத்தியின் பண்புகள் யாவை?
4. மின்னாற் பகுத்தலின் விதியைக் கூறி நிரூபி.
5. டேனியல் மின்கலத்தின் செயல்பாட்டை விவரி?
6. கால்வனோ மீட்டரை எவ்வாறு அம்மீட்டராக மாற்றலாம், விவரி? அல்லது எவ்வாறு ஓல்ட் மீட்டராக மாற்றலாம் விவரி?
7. மின் மாற்றியில் ஏற்படும் பல்வேறு இழப்புகளை விவரி?
8. சுருள் அடங்கிய பரப்பை மாற்றுவதன் மூலம் மின் இயக்கி விசையை எவ்வாறு தூண்ட முடியும்?
9. புரூஸ்டர் விதியை நிரூபி?
10. ஹைட்ரஜன் நிறமாலை - விவரி?
11. ஒளிமின் விளைவிற்கான ஐன்ஸ்டீன் சமன்பாட்டை பெறுக.
12. ஒளி மின்கலத்தின் பயன்பாடு யாவை?
13. நீள்குறுக்கம் - விவரி?
14. டி பிராக்லி அலைநீளத்திற்கான சமன்பாட்டைப் பெறுக.
15. காஸ்மிக் கதிரின் குறுக்குக் கோட்டு விளைவை விவரி?
16. டி மார்கன் தேற்றத்தைக் கூறி நிரூபி?
17. இலக்கமுறை தகவல் தொடர்பின் சிறப்புகள் மற்றும் வரம்புகள் யாவை?
18. திவி பரப்பியின் செயல்பாட்டை தெளிவான கட்டப் படத்துடன் விவரி?
19. 20 ஓம் மின்தடை கொண்ட கால்வனோ மீட்டர் ஒன்று 50 மில்லி ஆம்பியர் மின்னோட்டத்திற்கு ஒரு முழு விலகலை கொடுக்கும் எனில், 1) 20 ஆம்பியர் அளக்கும் அம்மீட்டராக 2) 120 ஓல்ட் அளக்கும் ஓல்ட் மீட்டராக எவ்வாறு மாற்றலாம்?
20. கதிரியக்க செயல்பாடு ஒரு க்யூரி என்றிருக்கும் ரேடியத்தின் நிறை ஏறக்குறைய ஒரு கிராம் எனக் காட்டு. (ஸிணீ  ) ரேடியத்தின் அரை ஆயுட்காலம் 1600 ஆண்டுகள்.

ஐந்து மார்க் ரகசியம்!

பிளஸ் 2 இயற்பியல் பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு சென்டம் வாங்கிய மாணவர்கள் குறைவுதான். அதில் ஒருவராகவும் மாநில அளவில் இரண்டாவதாகவும் தேர்ச்சி பெற்றார் நாமக்கல் வித்யா விகாஷ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.பழனிராஜ். தற்போது சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வரும் இவர் தரும் டிப்ஸ்:

‘‘கடந்த ஆண்டு இயற்பியல் பாடத்தில் சென்டம் வாங்கியவர்கள் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். ஆனால், 197, 198, 199 என மார்க்குகளை வாங்கியவர்கள் அதிகம். இதற்கு ஐந்து மதிப்பெண் வினாக்களும் கூட காரணமாகலாம். ஐந்து மதிப்பெண் வினாக்கள் ஏழுக்கு விடையளிக்க வேண்டும். இந்த 7 வினாக்களுக்கு பாடம்-2ல் 2 வினாக்கள், பாடம்-7ல் 2 வினாக்கள் கட்டாயம் கேட்கப்படும். அதேபோல், பாடம்-1, பாடம்-4, பாடம்-6, பாடம்-8 ஆகியவற்றில் தலா ஒரு வினா கட்டாயம் கேட்கப்படும். அனைத்துப் பாடங்களையும் படிப்பதோடு, இப்படி சில பாடங்களைத் தேர்ந்தெடுத்து அதிக கவனம் செலுத்தினாலும் ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்கலாம். ஆனால், இந்தப் பகுதியில் குறைந்தது ஐந்து கணக்கு தொடர்பான கேள்விகளாவது கேட்கப்படும்.

அவற்றிலும் கம்பல்சரி சம் ஒன்று கேட்பார்கள். அது எந்தப் பாடத்திலிருந்து கேட்பார்கள் என்பது தெரியாது. இந்த கம்பல்சரி சம்முக்காக எல்லா சம்களையும் படித்தே ஆகவேண்டும். இந்த சம்களின் விடை எழுதும்போது, யூனிட்களை சரியாக எழுத வேண்டும். மாற்றி எழுதிவிட்டால், ஒரு மதிப்பெண் குறைந்துவிடும். ஐந்து மதிப்பெண்ணில் ஒன்று குறைந்தாலும் சென்டம் வாங்குவது சிரமமாகிவிடும். அதனால், கவனமாகப் புரிந்துகொண்டு, திட்டமிட்டுப் படித்தால் சென்டம் உறுதி.’’

* ஐந்து மதிப்பெண் பகுதியில் 12 கேள்விகள் கேட்கப்படும். இவற்றில் ஏழிற்கு விடையளிக்க வேண்டும். மொத்தம் 35 மதிப்பெண்கள். முதலில் நன்றாகத் தெரிந்த கேள்விகளைத் தேர்வு செய்து கொண்டு பதில் எழுத வேண்டும். இது உங்களது நம்பிக்கையை அதிகரிக்கும். இந்தப் பகுதியில் ஒரு கேள்வி, கட்டாயம் பதிலளிக்க வேண்டிய கணக்கு அடிப்படையில் கேட்கப்படும். கட்டாயக் கேள்வி தவிர, கூடுதலாக இரண்டு கேள்விகள் கணக்கு அடிப்படையில் கேட்கப் படுகிறது. ஆக, கணக்கு அடிப்படையில் மூன்று கேள்விகளுக்கு விடையளித்தால் 15 மதிப்பெண்கள் பெற்று விடலாம்.
* புத்தகம் 1 மற்றும் 2ல் பயிற்சி மற்றும் எடுத்துக்காட்டுக் கணக்குகள் என மொத்தம் 224 கணக்குகள் உள்ளன. இவற்றிலிருந்துதான் இந்தக் கணக்கு கேள்விகள் கேட்கப்படுகின்றன. இவற்றை ஒருமுறை போட்டுப் பார்த்தாலே 15 மதிப்பெண்களும் உங்கள் வசமாகிவிடும். கணக்கு கேள்விகளில் உள்ள வசதியே, இவற்றுக்கு பதிலளிப்பதால் எழுதும் நேரம் மிச்சமாகும் என்பதுதான். தெளிவாக எழுதிவிட்டால், மதிப்பெண் குறையாது.
* 2 மற்றும் 7வது அத்தியாயங்களிலிருந்து பத்து மதிப்பெண் கேள்விகள் கிடையாது என்பதால் இவற்றிலிருந்து தலா இரண்டு ஐந்து மதிப்பெண் கேள்விகள் கண்டிப்பாகக் கேட்கப்படுகிறது. இந்த அத்தியாயங்களைப் படித்துவிட்டால் 4 கேள்வி பிளஸ் 3 கணக்குகள் என முழு மதிப்பெண்களையும் எடுத்துவிடலாம். இருந்தும் இந்த நான்கு கேள்விகளிலிருந்து 2 கணக்கு கேள்விகள் கேட்டுவிட்டால் முழு மதிப்பெண் பெற இன்னும் 2 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டி வரும்.
* மற்ற அத்தியாயங்களிலிருந்து தலா ஒரு ஐந்து மதிப்பெண் கேள்வி கேட்கப்படுகிறது. இதில் 10வது அத்தியாயத்தில் கட்டப் படம் மற்றும் அனலாக் டிஜிட்டல் பயன்பாடுகள் பற்றிய கேள்விகள் வரும். அந்த அத்தியாயத்திலிருந்து பத்து மார்க் கேள்வியும் வருவதால் இதனைத் தெளிவாகப் படித்துக் கொண்டால் இரண்டிலும் மதிப்பெண்கள் பெற்றுவிடலாம்.
* அடுத்ததாக அனைத்து அத்தியாயங்களிலும் உள்ள சிறப்புப் பண்புகள், பயன்பாடுகள், வரம்புகள் பற்றிய கேள்விகள்... இவை பாயின்ட் பாயின்ட்டாக பதில் எழுத வேண்டிய கேள்விகள். இவற்றைப் படிப்பதும் சுலபம். உதாரணத்திற்கு மீ கடத்தியின் பயன்கள், லேசரின் பண்புகள்... இப்படியான கேள்விகள் வரும். எனவே இந்தக் கேள்விகளைப் படித்துவிட்டால் இந்தப் பகுதியில் நிச்சயம் 35 மதிப்பெண்களையும் அள்ளிவிடலாம்.
* மேலும் ஐந்தாண்டுகளாகக் கேட்கப்பட்ட பழைய கேள்வித்தாள்களை ஒருமுறை புரட்டிப் பாருங்கள். அவற்றிலுள்ள ஐந்து மதிப்பெண் கேள்விகளைப் படித்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்குக் கூடுதல் பலம் கொடுக்கும். அதோடு ஒவ்வொரு கேள்விக்கும் கீ பாயின்ட் இருக்கும். அவற்றை தெளிவாக அடிக்கோடிட்டுக் காண்பியுங்கள். உங்களுக்கு முழு மதிப்பெண்களையும் அள்ளித் தரும் வழி இதுவே! 
இதோடு அடிக்கடி கேட்கப்படும் ஐந்து மதிப்பெண் கேள்விகளை இங்கே கொடுத்துள்ளோம். ஐந்து மதிப்பெண்கள் கேள்விகளில் முழு மதிப்பெண்களையும் பெற்ற பிறகு மிச்சமிருப்பது பத்து மதிப்பெண் கேள்விகள். அதில் முழு மதிப்பெண்களையும் பெறுவது எப்படி? அடுத்த இதழில் பார்ப்போம்...

பேராச்சி கண்ணன்,
எம்.நாகமணி
படங்கள்: சி.சுப்ரமணியன், ஆர்.ஆர்.சுப்ரமணி