நிழல்களோடு பேசுவோம் கலாசார வறுமையும் கலாசார தனிமையும்



புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் 20 நிமிடம் நடனமாடுவதற்காக நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கு 1.5 கோடி ரூபாய் அவருக்கு சம்பளம் தரப்பட்டது என்ற செய்தி மிகவும் பரபரப்பாக கடந்த வாரம் அடிபட்டது. உண்மையில் எவ்வளவு கொடுத்தார்கள் என்று யாருக்கும் தெரியாது.

ஆனால் மூன்று கோடி ரூபாயில் ஒரு நடனம் என்றதும் பலருக்கும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஒரு டிக்கெட்டின் விலை எட்டாயிரம் ரூபாய். புத்தாண்டிற்கு முதல் நாள் மாலை ஐந்தாயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. டிக்கெட் கிடைக்காதவர்கள், இவ்வளவு காசு கொடுக்க முடியாதவர்கள், இதற்காக வெளியே பொருமிக் கொண்டிருந்தார்கள்.


சத்யஜித் ரேயின் ‘ஜல்சாகர்’ படத்தில் மறக்க முடியாத காட்சி ஒன்று உண்டு. ஒரு ஜமீன்தார் ஒரு நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பார். அங்கே புதிதாக வளர்ந்து வரும் முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த பணக்காரன் ஒருவனும் வந்திருப்பான். நடனத்தின்போது ரூபாய் நோட்டுக்களை எடுத்து அந்தப் பெண் மீது எறிவதற்கு அந்த பணக்காரன் முயற்சிப்பான். ஜமீன்தார் அதைத் தன் கைத்தடியால் தடுப்பார். ‘அது அவமரியாதையான ஒரு செயல்’ என்பதைக் குறிப்பால் உணர்த்துவார்.

முதலாளித்துவ சமூகத்தின் முக்கியமான பிரச்னையே, எல்லா கலைகளையும் பணத்தால் அளவிடுவது மட்டுமல்ல... அந்தக் கலைகளை பணத்தால் அவமதிப்பதுமாகும். நமது காலத்தில் இதை நான் உணராத நாளே இல்லை. நமது பாரம்பரியக் கூத்துகளும் கலைகளும் சினிமாவின் வருகைக்குப் பின்பு எப்படி காபரே டான்ஸாக மாறின என்பதைக் கண்ணெதிரே பார்த்தவர்கள்தானே நாம். திருவிழாக்களில் நடனமாடும் பெண்களின் மீது ரூபாய் நோட்டுக்களை எடுத்து எறிபவர்களைக் கண்டிருக்கிறேன். அவர்கள் ஜாக்கெட்டில் ரூபாய் நோட்டுகளை குத்தி விடுபவர்களைப் பார்த்திருக்கிறேன். இந்தக் கலாசாரம்தான் இப்போது 6 நிமிட நடனத்திற்கு எட்டாயிரம் ரூபாய் செலுத்துவதற்கான வடிவமாக உயர்வு பெறுகிறது.

இப்போது நிறைய குட்டிக் குட்டி பணக்கார்கள் உருவாகி விட்டார்கள். நிறைய காசு வரும் வேலைகள் கணிசமாக உருவாகி விட்டன. இந்தப் பணம் ஏராளமான அடையாள சிக்கல்களையும் உளவியல் பிரச்னைகளையும் அவர்களுக்கு உருவாக்குகிறது. அவர்கள் பணத்தாலும் பொருள்களாலும் கேளிக்கைகளாலும் மட்டுமே தங்கள் கலாசார உறவுளையும் சமூக உறவுகளையும் உருவாக்கிக் கொள்கிறார்கள்.

என்ன பிராண்ட் ஷூ அணிவது, வார இறுதி நாட்களில் எந்த பார்ட்டிக்குச் செல்வது என்பன போன்ற விஷயங்களில்தான் அவர்களது சமூக அந்தஸ்தும் சுய அடையாளமும் நிர்ணயமாகிறது. அதற்கு வெளியே ஒரு உலகம் இல்லை. எந்தவிதமான பொழுதுபோக்குகளும் இல்லை. குடியும் குடி சேர்ந்த கேளிக்கைகளுக்கும் அப்பால் ஒரு சமூகத்திற்கு கொண்டாட எதுவுமே இல்லை. இவர்கள் உயர் வருமானம் பெறும் பிரிவினர்.

சென்னை போன்ற ஒரு நகரத்திற்கு பிழைப்பிற்காக வந்து சிறுசிறு வருமானங்களில் உயிர் வாழ்ந்து, பெரும் கலாசாரத் தனிமையில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் வேறு ரகம். இவர்கள் கடற்கரையில் புத்தாண்டு தினத்தில் பெரும் கூட்டமாக நின்றுகொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குப் போக வேறு இடம் இல்லை. செலவழிக்க பெரிய காசு எதுவும் இல்லை. பெரும் கலாசாரத் தனிமை அவர்களைச் சூழ்ந்திருக்கிறது. இவர்களுக்கும் குடியைத் தவிர வேறு போக்கிடம் இல்லை. தெருத் தெருவாய் குடிக்கிறார்கள்.

புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது விற்பனையாகும் மது விற்பனை குறித்த கணக்குகள் ஒரு அரசாங்கத்திற்கு உற்சாகம் தரலாம். ஆனால் அவை ஒரு சமூகம் அடையும் வீழ்ச்சியின் அடையாளம். தீபாவளி, பொங்கல் என எல்லா விழா நாட்களிலும் மது விற்பனை தொடர்பான அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வெளிவருகின்றன. என்னுடைய புகார், குடியின் மீது அல்ல. குடியே கொண்டாட்டங்களின் மையமாக மாறுவதுதான் பிரச்னை. இது மிகப்பெரிய கலாசார வறுமையின் அடையாளம்.

எந்தவிதமான மதிப்பீடுகளும் இல்லாத ஒரு சமூகத்தில் இதுதான் நடக்கும். ஒரு குழுவில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வது, அல்லது ஒரு பெரிய கும்பலில் தன்னைக் கரைத்துக்கொள்வது. அந்தக் குழு அல்லது கும்பலின் மனோபாவமும், அதன் அழகியல் மதிப்பீடுகளும் கேளிக்கைகளும் வர்த்தக நிறுவனங்களாலும் ஊடகங்களாலும் நிர்ணயிக்கப்படுகின்றன. குழுவிலோ, கும்பலிலோ இல்லாதவர்கள் தனிமைப்பட்டு விடுகிறார்கள். அவர்களுக்குக் கொண்டாட் டங்கள் மட்டுமல்ல, பேச்சுத்துணைக்குக்கூட ஆள் இருக்காது.

கூட்டு வாழ்க்கை என்பது ஒரு கும்பல் கலாசாரமாக எப்படி மாறுகிறது என்பதை யோசித்தால், நமது சமூகப் பொருளாதார வாழ்வில் நடந்த எத்தனையோ மாற்றங்கள் நினைவுக்கு வரும். மனிதர்கள் எல்லா நேரமும் ஏதாவது ஒரு கும்பலில் மறைந்துகொள்ளவே விரும்புகிறார்கள். அவர்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு தனிமை உணர்ச்சி அதிகமாகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு கும்பலின் நிழல் தேவையாக இருக்கிறது.

இன்னொரு முக்கியமான விஷயம், தமிழர்கள் தங்கள் பாரம்பரிய கொண்டாட்டங்கள் அனைத்தையும் இழந்து விட்டார்கள். ஒரு விவசாயம் சார்ந்த பண்பாட்டின் அத்தனை விழாக்களும் துடைத்து எறியப்பட்டுவிட்டன. மிக ஆழமான மன அழுத்தம் ஒட்டுமொத்த சமூகத்தையும் பீடித்திருக்கிறது. நமக்கு என்ன இருக்கிறது கொண்டாட? என்ன சமூக உறவுகள் இருக்கின்றன? இன்று நமது விழாக்கள் என்பது வர்த்தக நிறுவனங்களின் ஒரு சிபாரிசு மட்டுமே. கொண்டாட்டங்களே இல்லாத ஒரு சமூகத்தில் கும்பல் கொண்டாட்டங்கள் உருவாவது இயற்கை.

புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்மீது காவல்துறை கெடுபிடிகள் அதிகரித்துவிட்டன. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, குடி மற்றும் குடியினால் ஏற்படும் விபத்துகள். இரண்டாவது, பெண்களின் மீதான பாலியல் வன்முறைகள். கும்பல் கலாசாரத்திற்கும், இந்த இரண்டிற்கும் இடையே எப்போதும் நெருக்கமான தொடர்பு இருந்து வந்திருக்கிறது. சக மனிதன் மீது பொறுப்பும் அக்கறையும் தார்மீக நெறியும் இல்லாத ஒரு சமூகம், கொண்டாட்டங்களை குற்ற இயல்பு கொண்டதாக மாற்றிவிடுகிறது.

கொண்டாட்டம் என்பது ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மாற்றப்படுகிறது. சிலர் அத்துமீறுகிறார்கள், குற்றமிழைக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் அதற்காக ஒட்டுமொத்தமாக கெடுபிடிகளை அதிகரித்துக்கொண்டே போவது சரியா? பொதுவாக நமது அரசாங்கங்களும், கலாசாரக் கண்காணிப்பு செய்ய விரும்பும் அமைப்புகளும் இதை ஒரு சாக்காக கொண்டு மக்களின் கொண்டாட்ட மனநிலையை ஒடுக்க விரும்புகிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் இந்தப் போக்கு மிகவும் அதிகரித்துவிட்டது. ஒழுங்குபடுத்தலுக்கும் ஒடுக்குமுறைக்கும் நடுவே நமது அரசாங்கத்திற்கு என்றைக்குமே வித்தியாசம் தெரிந்ததில்லை.

ஒரு புத்தாண்டு தினத்தில் நடனங்கள், மது விருந்துகள் சார்ந்த கொண்டாட்டங்கள்தான் இருக்க வேண்டுமா? இதற்கு வெளியே இருப்பவர்கள் இந்த இரவைக் கொண்டாடுவதற்கான இடங்களும் உருவாக்கப்படலாமே? ஆங்காங்கே மக்கள் பங்கேறும் சிறு சிறு விளையாட்டுப் போட்டிகள், குழந்தைகளுக்கான வேடிக்கை நிகழ்ச்சிகள்,

 நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள் போன்றவற்றையெல்லாம் ஏற்பாடு செய்யலாம். மேஜிசியன்களை நகரத்திற்குள் வரவழைக்கலாம். மாறுவேடப் போட்டிகளை நடத்தலாம். சமூக நல்லிணக்கத்திற்காக ஊர்வலங்கள் நடத்தலாம். கவிதை வாசிப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யலாம். நாடகங்கள் போடலாம். பாட்டுப் போட்டிகள் நடத்தலாம். ஆடை, அணிகலன்களின் சிறப்புக் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யலாம். புத்தகங்களை அந்த இரவில் அதிரடித் தள்ளுபடியில் விற்கலாம். இப்படி ஒரு புத்தாண்டை கொண்டாட ஆயிரம் வழிகள் உருவாக்கலாம்.

சாராயத்தைவிட மனக்கிளர்ச்சி தரும் எத்தனையோ விஷயங்கள் நம்மிடம் இருக்கின்றன. எங்கோ நாம் அவற்றைக் கைவிட்டு விட்டோம்; அல்லது குடிக்காதவர்களை கொண்டாட்டங்களே இல்லாதவர்களாக மாற்றி விட்டோம். கொண்டாட்டங்களின் குற்றத்தன்மையை நாம் மாற்ற வேண்டும் என்றால், ஒடுக்குவதாலோ புறக்கணிப்பதாலோ அது சாத்தியமாகாது. மாறாக நாம் அதன் இயல்புகளை மாற்ற வேண்டும். மக்கள் கொண்டாடுவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். எல்லாவற் றையும்விட மக்களுக்குக் கொண்டாடக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

இவ்வளவு மன அழுத்தம் உள்ள ஒரு சமூகம் என்பது ஆபத்தானது. இந்த மன அழுத்தத்திலிருந்து இந்த மக்களை சற்றே விடுவிக்க வேண்டும் என்றால், அவர்களது பொழுதுபோக்கையும் கேளிக்கைகளையும் கொண்டாட்டங்களையும் இன்னும் வண்ணமயமானதாக்க வேண்டும். கும்பல் கலாசாரத்திலிருந்து விடுபட்டு வெவ்வேறு மக்களின் வெவ்வேறு விருப்பங்கள் சார்ந்த கொண்டாட்டங்களை உருவாக்க வேண்டும்.

எல்லாவற்றைவிட நமக்கு கொண்டாட்டங்கள் என்பது வருடத்தில் ஒரு சில நாட்களின் சடங்காக அல்லாமல் அது மனோபாவத்தில் வாழ்வியலின் ஒரு பகுதியாக அமைய வேண்டும். அதன் அர்த்தம் தினமும் குடிப்பது என்பதல்ல...

பதில்கள்

‘ஆம் ஆத்மி கட்சி’ நாடாளும் நிலைக்கு உயருமா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
அதற்குள் மற்ற கட்சிகள் அதை தங்கள் வழிக்குக் கொண்டுவந்து விடுவார்கள்.
அனுபவம் எப்போது பாடமாகிறது?
- சூர்யா ஸ்ரீதர், காஞ்சிபுரம்.
அது உபயோகப்படாதபோது!
பூமியின் துயரமான நாள் எது?
- கி.ரவிக்குமார், நெய்வேலி.
அது அழியும் நாள்...
காந்தியம் உயிரோடு உள்ளதா, செத்து விட்டதா?
- கே.வெ.ஆனந்த கிருஷ்ணன், சென்னை.
காந்தி செத்துட்டாரா, இருக்காரா என்கிற கேள்விக்கு என்ன பதிலோ, அதுதான் இதற்கும்.
இளம் எழுத்தாளர்களுக்கு உங்கள் அறிவுரை?
- ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.
நானே எனக்கு எப்படி அறிவுரை சொல்லிக்கொள்வது?
(சமூகம், இலக்கியம், சினிமா, அரசியல்... எதைப்பற்றியும் கேளுங்கள் மனுஷ்யபுத்திரனிடம். உங்கள் கேள்விகளை ‘மனுஷ்யபுத்திரன் பதில்கள், குங்குமம், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை -600004’ என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.email: editor@kungumam.co.in)
நெஞ்சில்  நின்ற வரிகள்

கண்கள் பேசும் கதைகளைத்தான் எத்தனை கவிதைகள் எத்தனை விதமாய் சொல்கின்றன... எத்தனை பாடல்கள் எத்தனை அர்த்தங்களை கண்டுபிடிக்கின்றன. நா.முத்துக்
குமாரின் இந்தப் பாடல், கண்கள் சொல்லும் கதைகள் முன்னால் நாம் பேச்சிழக்கும் மாயத்தை பேசுகிறது.
கதைகளை பேசும்
விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே...
இந்தப் பாடலில் ஒரு அபூர்வமான காட்சிப் படிமம் சட்டென வந்து மனதை நிறைத்து விடுகிறது
இருளும் இல்லாமல்
ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில்
குளிக்கிறதே...
அதே பாடலில் அதற்குப் பின் வரும் இந்த வரிகள் அவ்வளவு புத்தம் புதிதாக இருக்கின்றன...
கோயிலின் உள்ளே
நுழைந்திடும்போது
வருகிற வாசனை
நீயல்லவா
உன்னுடன் வாழும்
ஒவ்வொரு நொடியும்
சர்க்கரை தடவிய
நொடியல்லவா

எழுதிச்செல்லும் இணையத்தின் கைகள்

முத்துக்குமார் தமிழகத்தின் முக்கியமான அரசியல் விமர்சகர்களில் ஒருவர். தெளிந்த பார்வையுடன் தமிழக அரசியலை அணுகும் இவர் அரசியல் அல்லாமல் எழுதிய ஒரு சுவாரசியமான குறிப்பு இது...
வாக்கிங் போய்விட்டு வீடு திரும்பிய அம்மாவின் முகத்தில் வியர்வைக்குப் பதிலாக அத்தனை உற்சாகம். அத்தனை புத்துணர்ச்சி. என்னவென்று விசாரித்தேன். வழியில் அவருடைய பள்ளி ஆசிரியரைச் சந்தித்துப் பேசினாராம். சுமார் நாற்பது ஆண்டுகள் கழித்து இருவரும் சந்தித்திருக்கிறார்கள்.
ஆசிரியரிடம் சென்று தானே அறிமுகம் செய்துகொண்டாராம். உடனே அந்த ஆசிரியர், தனக்கே உரித்தான கம்பீரக் குரலுடன், ‘‘எந்த ஊர், என்ன க்ளாஸ் படிச்சே... எந்த வருஷம், எந்தத் தெரு, அப்பா பேரைச் சொல்லு...’’ என்று அடுத்தடுத்து கேள்வி கேட்டிருக்கிறார். பயபக்தியுடன் பதில் சொல்லியிருக்கிறார் அம்மா. ‘‘இப்போ எங்கே இருக்கே, பேரன், பேத்தி இருக்கா?’’ என்றெல்லாம் விசாரித்திருக்கிறார்.
அம்மாவுக்கு அளவு கடந்த உற்சாகம். ‘பள்ளியில் படித்தபோது, அந்த ஆசிரியரைப் பார்த்தால் என்ன மாதிரியான பயமும் மரியாதையும் நெஞ்சில் குடிகொள்ளுமோ, அப்படித்தான் இப்போதும் இருந்தது’ என்று பரவசப்படுகிறார் அம்மா.
ஆசிரியரிடம் நீங்கள் ஏதும் கேள்வி கேட்டீர்களா? என்று கேட்டேன். ‘‘இல்லையேப்பா’’ என்றார். https://www.facebook.com/r.m.kumar.94

(பேசலாம்...)