பாரதிராஜாவுக்காக படம் எடுத்த இளையராஜா!



என் குருநாதர் இயக்கத்தில் ‘நிழல்கள்’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு ஒரு அதிகாலை நேரத்தில் நடந்தபோது எடுத்த படம்தான் இது’’ என தன் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் இயக்குனர் மனோபாலா. ‘‘ஆழ்வார்பேட்டையில் இருக்கும் கமல் வீட்டில்தான் ஷூட்டிங் தொடங்கியது.

கமல், மணிரத்னம், கிரேஸி ஸ்ரீராம், சந்தானபாரதி, நான் எல்லாம் அப்போது கமல் வீட்டிலேயேதான் அதிக நேரம் இருப்போம். எங்களை ‘ஆழ்வார்பேட்டை கும்பல்’ என்று கூட சொல்வாங்க. கமல் வீட்டில் ஷூட்டிங் நடத்த நான்தான் பர்மிஷன் வாங்கிக் கொடுத்தேன். அவர் வீட்டில் இல்லாததால், சாருஹாசன்தான் எங்களை வரவேற்றார். இடுப்புக்கு மேலே போடுற பெல்பாட்டம் பேன்ட், இறுக்கமான பெல்ட் என்று ‘பாபி’ பட ஸ்டைலில் பாரதிராஜா சார் வந்தார். அதைப் பார்த்துவிட்டு சாருஹாசன் கிண்டல் பண்ண... அந்த இடமே கலகலப்பானது.


மணிவண்ணன், நிழல்கள் ரவி, ராஜசேகர் என்று ‘நிழல்கள்’ நிறைய பேருக்கு முதல் படமாக அமைந்தது. ‘பொன்மாலைப் பொழுது...’ பாடல் மூலம் வைரமுத்து அறிமுகமானதும் அதில்தான். இளையராஜாவுக்கு மிகவும் பிடித்தமான படம் அது. கதை பிடித்துப்போனதால் இழைத்து இழைத்து மியூசிக் பண்ணினார். வழக்கமாக ஒரு படத்தின் பின்னணி இசையை இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடித்துவிடுவார் இளையராஜா. ‘நிழல்கள்’ படத்துக்கும் நான் இயக்கிய ‘பிள்ளை நிலா’ படத்துக்கும்தான் அவர் 5 நாட்கள் எடுத்துக்கொண்டார். கே.பாலசந்தர் இயக்கிய, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘நிழல்கள்’ இரண்டும் ஒரே நேரத்தில் வெளியானது. இரண்டுமே போராடும் இளைஞர்கள் பற்றிய படம்தான். ஆனால், ‘நிழல்கள்’ எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

அதனாலேயே இளையராஜா ‘பாவலர் கிரியேஷன்ஸ்’ என்ற பெயரில் சொந்தப் படக் கம்பெனியைத் தொடங்கி அதே குரூப்பை வைத்து தயாரித்த படம்தான், ‘அலைகள் ஓய்வதில்லை’. இயக்குனராக பாரதிராஜா, கதை ஆசிரியராக மணிவண்ணன், பாடலாசிரியராக வைரமுத்து, தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளராக இளையராஜா என அந்தப் படம் எல்லோருக்கும் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. இந்த நேரத்தில் இன்னொரு தகவலைச் சொல்ல நினைக்கிறேன். என்னுடைய ‘பிள்ளை நிலா’ படத்தின் பின்னணி இசை அப்போது கேசட்டாக வெளியிடப்பட்டு சூப்பர்ஹிட்டானது. இந்தியாவிலேயே பின்னணி இசை கேசட்டாக வந்து ஹிட்டான ஒரே படம் ‘பிள்ளை நிலா’ மட்டும்தான். என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்தது அந்தப் படமும் இளையராஜாவும்தான்!”

அமலன்
படம் உதவி: ஞானம்