போர்க்கள கல்லூரிகள்... ஆயுதம் ஏந்தும் மாணவர்கள்!



ஒரு காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கென்று ஒரு மரியாதை இருந்தது. இன்று..? மக்கள் பயந்து ஒதுங்குகிறார்கள். திடீரென்று ரயிலுக்குள் ஏறி வெட்டுகிறார்கள். பேருந்தில் ஏறி கத்தியால் குத்துகிறார்கள். சாலையை மறித்து வாகனங்களை உடைக்கிறார்கள்.

 பேருந்து உடையும் அளவுக்கு தட்டி பாட்டுப் பாடி அமர்க்களம் செய்கிறார்கள். பேருந்து கூரையில் ஏறி நின்று அசிங்கமாக டான்ஸ் ஆடுகிறார்கள். தினமும் ஏதாவது ஒரு அடிதடிச் செய்தி. கல்லூரிகளில் ஆயுதங்கள் கைப்பற்றப்படுகின்றன. வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிக்கும் கல்லூரிக் காலத்தில் அக்கறையோடு படித்து ஆளாக வேண்டிய மாணவர்கள் ஏன் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு அலைகிறார்கள்?

''கல்லூரிக்குள் என்றைக்கு அரசியல் நுழைந்ததோ, அன்றைக்கே அது போர்க்களம் ஆகிவிட்டது’’ என்கிறார்கள் அக்கறையுள்ள மாணவர்கள். கல்லூரிக்குள் அரசியல் நுழைவது ஒன்றும் புதிதல்ல. மாணவர்களுடைய அரசியல் எழுச்சி தமிழகத்தின் தலையெழுத்தையே தீர்மானித்த காலம் ஒன்று உண்டு. ஆனால் இப்போது நுழைந்துள்ளது, ஆபத்தான அரசியல்.

‘‘மாணவர் வன்முறை தனியார் கல்லூரிகளில் இல்லை. அரசுக்கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அடித்தட்டு குடும்பத்து மாணவர்கள் மத்தியில்தான் உருவாகிறது. இதற்கு பல சமூக காரணங்கள் உள்ளன. படிப்பை முடித்ததும் நல்ல வேலை கிடைக்கும் என்ற நிலை இல்லை. ஏன் படிக்கிறோம் என்று தெரியாமலே பலர் படிக்கிறார்கள். அரசுக் கல்லூரிகளில் மிகப்பெரிய அக்கறையின்மை நிலவுகிறது. நிதி ஒதுக்கீடு குறைவு, ஆசிரியர் பற்றாக்குறை என பல பிரச்னைகள். மாநிலக் கல்லூரியில் 3ல் 1 பங்கு காலியிடம் இருக்கிறது. கிராமப்புற கல்லூரிகளில் இன்னும் அதிகம். ஆசிரியர்கள் இல்லாததால் நிறைய வகுப்புகள் கேன்சலாகி விடுகின்றன. மாணவர்களுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது.

நான் தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியில் படிக்கும்போது வாரத்தில் 2 நாள் தனித்திறன் நிகழ்ச்சிகள் நடக்கும். பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, நாடகம் என்று மாற்றி யோசிக்கவும், திறமையை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்பு இருந்தது. அதற்காக நிறைய உழைக்க வேண்டியிருந்தது. இன்று எந்த அரசுக்கல்லூரியிலும் அப்படியான நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. கல்லூரிகளில் டுடோரியல் சிஸ்டம் ஒன்று உண்டு. 20 முதல் 30 மாணவர்கள் ஒரு ஆசிரியரின் கீழ் ஒப்படைக்கப்படுவார்கள்.

அந்த மாணவர்களின் கண்காணிப்பு, படிப்புத்திறன் அறிதல், தனித்திறன் ஊக்குவிப்பு எல்லாவற்றுக்கும் அந்த ஆசிரியர்தான் பொறுப்பு. யாராவது தவறு செய்தால், அவர் மீது அந்த ஆசிரியர் கூடுதல் கவனம் செலுத்துவார். தேவைப்பட்டால் கவுன்சலிங் கொடுப்பார். இன்றைக்கு அந்த அமைப்பு செயல்படுவதே இல்லை. மாணவர்களுக்கு நல்ல ரோல் மாடல்கள் கல்லூரிகளில் இல்லை. அவர்களை அரசியல்வாதிகள் இலக்கு வைக்கிறார்கள். கல்லூரித் தேர்தல்கள் பொதுத் தேர்தலை விடவும் வன்முறைக்களமாக மாறிவிடுகின்றன. சில இடங்களில் தங்கள் சுயலாபங்களுக்காக பேராசிரியர்களே மாணவர்களைத் தூண்டுகிறார்கள். மாணவர்களின் மனப்போக்கை மாற்றி அவர்களை சரியான திசைக்குத் திருப்ப கல்லூரி அளவில் மட்டுமின்றி சமூக அளவிலான திட்டங்கள் தேவை...’’ என்கிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ்.

பச்சையப்பா-மாநிலக்கல்லூரி; மாநிலக்கல்லூரி- புதுக்கல்லூரி; புதுக்கல்லூரி-நந்தனம்; நந்தனம்-பச்சையப்பா; அம்பேத்கர்-பச்சையப்பா... இப்படி சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கிடையே அடிக்கடி போர் நடக்கிறது. ‘‘எல்லா பிரச்னையுமே பஸ் ரூட்டில் இருந்துதான் தொடங்குகிறது’’ என்கிறார் மாநிலக் கல்லூரி மாணவரும், இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவருமான நிருபன்.

‘‘சென்னையில் 23 ரூட்கள் உள்ளன. ஒவ்வொரு ரூட்டிலும் ஒரு கல்லூரிக்கு ஒரு ரூட்டு தலை இருப்பார். ஒரு காலத்தில் ‘ரூட்’ என்பது ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருந்தது. இன்று ரூட் தலைகளுக்கு அரசியல் பின்னணி வந்து விட்டது. ரூட்டு தலையின் பின்னால் ஒரு மாணவர் கூட்டம் இருப்பதால், அரசியல்வாதிகள் அவர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள். இளம் தலைமுறை அரசியல்வாதிகள் தங்கள் பலத்தைக் காட்ட இந்த ரூட் தலைகள் மூலம் கல்லூரி மாணவர்களைக் குறி வைக்கிறார்கள். தேர்தல் நடந்தால் பெரிய தொகையை அரசியல்வாதிகளே செலவு செய்கிறார்கள்.

மாணவர்கள் தங்கள் ஹீரோயிசத்தைக் காட்ட வன்முறையே சிறந்த வழி என்று நினைக்கிறார்கள். அதற்கு சினிமாவும் சமூக ஊடகங்களுமே காரணம். ஒரே ரூட்டில் இரண்டு கல்லூரிகளின் மாணவர்களும் சேர்ந்து பயணம் செய்யும்போது, சின்னச் சின்ன சீண்டல்கள் கூட பெரிய பிரச்னையாகி விடுகின்றன. சாதாரணமாக தொடங்கும் பிரச்னை, அரசியல்வாதிகளின் தலையீட்டால் பெரிதாகிறது. ஒவ்வொரு ரூட் தலையும் தன் கெத்தை காண்பிக்க விரும்புகிறார். அதனால்தான் ஒரே கல்லூரிக்குள் இரண்டு ரூட்களின் மாணவர்கள் மோதிக்கொள்கிறார்கள். புதிய மாணவர்கள் பழைய மாணவர்கள் சொல்வதைக் கேட்டே ஆக வேண்டும். பிறகு அவர்களும் கற்றுக்கொள்கிறார்கள். சென்னையின் எல்லா கல்லூரி மாணவர்களும் ஒன்றாக கை கோர்த்தால் ஆக்கபூர்வமான பல மாற்றங்களை உருவாக்க முடியும். ஆனால் அதற்கான சூழலே இங்கு இல்லை’’ என்று வருந்துகிறார் நிருபன்.

இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் ராஜ்மோகன், வேறு சில சமூகக் காரணங்களை முன்வைக்கிறார். ‘‘பஸ் டே என்பது ஒரு காலத்தில் கௌரவமான நிகழ்ச்சியாக இருந்தது. வருடம் முழுவதும் தங்களோடு பயணிக்கிற ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் புத்தாடை எடுத்துத் தந்து, பயணிகளுக்கு இனிப்பு வழங்கி, பேருந்துக்கு மாலையிட்டுக் கொண்டாடுவார்கள். இன்று ‘பஸ் டே’ என்றாலே வன்முறை என்றாகிவிட்டது. வெட்டு, குத்து வரைக்கும் மாணவர்கள் வந்து நிற்கிறார்கள்.

நம் அரசுக்கு இந்தப் பிரச்னையின் வேர் புரியவில்லை. வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்னையாகவே இதை அணுகுகிறார்கள். வன்முறையில் ஈடுபடும் மாணவனைப் பிடித்து ஜெயிலில் போடுவதாலோ, கல்லூரியை விட்டு நீக்குவதாலோ இதைச் சரி செய்ய முடியாது. புறச்சூழலை சரிசெய்ய வேண்டும். சென்னையில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் 2 மணி நேரம் கூட மாணவர்கள் உள்ளே இருப்பதில்லை. கல்லூரி வளாகத்தில் ஒரு நூலகம், மொழியறிவை மேம்படுத்தும் வகுப்புகள், கலைத்திறனை வளர்த்தெடுக்கும் ஏற்பாடுகள்  இல்லை. நன்றாகப் பாடக் கூடிய மாணவனுக்கோ, நன்றாக நடனமாடும் மாணவனுக்கோ கல்லூரியில் களம் இல்லை. அதனால் பேருந்தில் பாடுகிறான். ரோட்டில் நடனமாடுகிறான்.

மாணவனின் குரலுக்கு எந்தக் கல்லூரியிலும் மதிப்பில்லை. ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையர் லிங்டோ தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி, கல்லூரி மாணவர் தேர்தல் தொடர்பாக நிறைய பரிந்துரைகளை அளித்துள்ளது. அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் மாணவர் தேர்தலை நடத்த வேண்டும் என்று யு.ஜி.சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆனால் ஓரிரு கல்லூரிகளில் நடந்த மோதல்களைக் காரணம் காட்டி மொத்தமாக எல்லா தேர்தலையும் நிறுத்தி வைக்கிறார்கள். மாணவன் நேர்மையாக தன் உரிமையைப் பேச வேண்டும். வன்முறை இல்லாத தேர்தலை நடத்த கல்லூரி நிர்வாகங்கள் முயற்சிக்க வேண்டும்.

மாணவர்களின் பிரச்னைகளை ஆய்வு செய்ய பேராசிரியர்கள், முதல்வர்கள், மாணவர் பிரதிநிதிகள், போலீஸ், சமூக ஆர்வலர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும். அவர்கள் மூலம் ஒரு வழிகாட்டி நெறிமுறையை உருவாக்க வேண்டும். மாறாக, காவல்துறை மூலம் பிரச்னையைத் தீர்க்க விரும்பினால், கல்லூரிகள் சீர்திருத்தப் பள்ளிகளைப் போலத்தான் காட்சியளிக்கும்...’’ என்கிறார் ராஜ்மோகன்.

ஒரு மாணவனுக்குப் பின்னால் ஒரு குடும்பத்தின் நம்பிக்கை இருக்கிறது. ஒரு நாட்டின் எதிர்காலம் இருக்கிறது. கல்லூரி என்பது கல்வி விளையுமிடம். அங்கே கத்திக்கும் அரிவாளுக்கும் வேலையில்லை. மாணவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்தால் மட்டுமே மாற்றத்துக்கான கதவு திறக்கும்!

 வெ.நீலகண்டன்