சாயி



ஷீரடி பாபாவின் புனித சரிதம்

மனதின் அடி ஆழத்தில் இருக்கும் விருப்பத்தை சாயி பாதங்களில் பிரேமையுடன் நிவேதனம் செய்துவிட்டு பூரண விசுவாசத்துடன் பலனை எதிர்பார்த்தால், சாயி அவரை நல்ல வழியிலேயே நடத்துகிறார் : பாபா மொழி

தாஸ்கணுவும் நாநாசாகேப் சாந்தோர்கரும் காகாசாகேப் தீட்சித்தும் மசூதிக்கு வந்தார்கள். பாபாவின் பாதங்களில் தலை வைத்து வணங்கிய தாஸ்கணு, ‘‘பாபா, நானோ ஒரு வேலைக்காரன், சாமானியன். நான் எப்படி இதை எழுதுவேன்? படிக்காத எனக்கு இது எப்படிப் பொருந்தி வரும்?’’ என்றார்.

பாபா சிரித்தார்.
‘‘கணு, தன்னம்பிக்கையை விடாதே. நீ லாவணியை நன்றாக எழுதுகிறாய். லாவணி எழுதும்பொழுது இருக்கும் தன்னம்பிக்கை, மகான்களின் சரித்திரங்களை எழுதும்பொழுதும் பாடும்பொழுதும் இருக்கட்டும். இந்த சிருஷ்டியின் மகத்துவத்தைப் பார். இந்தத் தன்னம்பிக்கை என்கிற வார்த்தையை மனிதன்தான் கண்டுபிடித்தான். மரம், செடி, கொடி, பசு, பட்சி இவையெல்லாம் அதைப் பற்றி சர்ச்சை செய்வதே இல்லை. தன்னம்பிக்கையுடனே அவை செயல்படுகின்றன. இறைவனின் உத்தரவு என்று நினைத்து செயலில் இறங்க வேண்டும்.

இது நடக்குமா, நடக்காதா, நடுவில் நின்றுவிடுமா என யோசித்து எதையும் பாதியில் நிறுத்தக்கூடாது. உன் பணியைச் செய்; அடுத்து என்னவாகும் என்பதை அல்லாவிடம் விட்டுவிடு. அவர் மேல் நம்பிக்கை வை. அவர் பார்த்துக்கொள்வார். ஆலமரத்தின் விதை எவ்வளவு சின்னது... ஆனால், அதன் தன்னம்பிக்கை எவ்வளவு பெரிது! பூமியில் நடப்பட்டதும் அது, தன் தளிர்களை மேலே விடுகிறது. காலப்போக்கில் அதன் வேர் நாலாபக்கமும் ஊன்றி, நாளடைவில் பெரிதாக வளர்ந்து ஆலமரமாகிறது. ‘நாம் ரொம்ப சின்னதாக இருக்கிறோமே, இதிலிருந்து ரொம்பப் பெரிதாக வளர்ந்து மரமாவோமா’ என்று ஒரு கணம் அது எண்ணியிருந்தால், முளையிலேயே வாடி வதங்கியிருக்கும்! ஆனால் அது அப்படி எண்ணுவதில்லை. தன்னுடைய வேலையை ஆரம்பித்து, பிறகு பிரமாண்டமான மரமாகிறது!’’

சிறிது நேரம் பாபா பேசாமல் இருந்தார். பிறகு தொடர்ந்தார்... ‘‘கணு! உனது ஆற்றலை நான் அறிந்திருக்கிறேன். என்னுடைய கட்டளை இருக்கும்போது ஏன் பயப்படுகிறாய்? நான் உனக்கு உதவுகிறேன். ஒன்றை மறக்காதே. எப்பொழுது இறைவனைப் பற்றிப் பாடுகிறாயோ, எழுதுகிறாயோ, அப்பொழுது இறைவனுக்கு நீ அளப்பரிய சேவை செய்கிறாய். சின்ன பாட்டிலில் அத்தரை அடைப்பவன் கூட வாசனையுடன் திகழ்கிறான்! நினைவில் கொள். இதுதான் சன்மார்க்கத்திற்கான வழி. தாழ்வு மனப்பான்மையை விட்டொழி. கோயிலில் போய் உட்கார். எழுத ஆரம்பித்து விடு. எழுத எழுத, எல்லாம் சரியாக வரும். வெற்றி நிச்சயம். இந்தா உதி!’’ என்று சொன்னவர், தாஸ்கணுவுக்கு உதி பிரசாதம் கொடுத்தார்.

தாஸ்கணுவின் தாழ்வு உணர்ச்சி அகன்றது. பாபாவின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தார். தான் எதற்காக வாழுகிறோம் என்கிற கேள்விக்கான விடை கிடைத்தது.
சித்திக் பாளங்கே! கல்யாண் என்னுமிடத்தில் வசிக்கும் ஒரு தார்மீக முஸல்மான். எப்பொழுதும் குரானைப் படிப்பதும் ஓதுவதுமாக இருந்தார். குரான் அவருக்கு அத்துப்படி. அவருடைய குரல் இனிமையானது. அல்லா மீது அவருக்கு அளவில்லாத ஈடுபாடு. எப்பொழுதும் அல்லா தியானமே.

எல்லோருக்கும் உதவி செய்தல், ஆலோசனை கூறுதல், வழி காட்டுதல், நமாஸ் ஓதுதல், மத சம்பந்தமான எண்ணங்களைப் பிறருக்குச் சொல்லுதல்... இவற்றை மகிழ்ச்சியாக முன்னின்று செய்தார். மெக்கா, மதினாவுக்கு ஹஜ் யாத்திரை போய் வந்ததால் ‘ஹாஜி’ என்று பெரிதும் மதிக்கப்பட்டார். சாய்பாபாவின் புகழ் பற்றிக் கேள்விப்பட்டதும், அவருக்கு பாபாவை சந்திக்கும் ஆவல் தோன்றியது. ஒருநாள் தன் மகனைப் பார்த்து, ‘‘மகனே, நான் ஷீரடிக்குப் போகணும்’’ என்றார்.

‘‘ஷீரடியா? எதற்கு?’’ - அதிசயத்துடன் மகன் கேட்டான்.
‘‘அங்கு ஒரு பக்கீர் இருக்கிறானாம். பெயர் சாய்பாபாவாம். இறைவனின் வேலைக்காரன். அவனைப் போய்ப் பார்க்கணும்.’’
‘‘முஸ்லிமா?’’
‘‘இருக்கலாம்.’’

‘‘ஹஜ் போய்வந்த பிறகு, எந்த சாதுவையும் பார்க்கத் தேவை இல்லாதபோது, என்ன அவசியமிருக்கிறது அவரைச் சந்திக்க? மேலும் நீங்கள் ஒரு சூஃபி ஹாஜி. மக்கள் உங்களைப் பார்க்கத்தான் வருகிறார்கள்.’’
‘‘எல்லாம் சரிதான். ஆனால் எனக்குச் சொல்லத் தெரியவில்லை. என் மனசு அவரைப் பார்க்க விரும்புகிறது!’’
‘‘சரி, எப்பொழுது கிளம்புகிறீர்கள்?’’
‘‘நாளைக்கே’’

‘‘சரி, நான் உங்களுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறேன்.’’
சித்திக் மறுநாள் பயணம் மேற்கொண்டு ஷீரடியை அடைந்தார். தரிசனத்திற்காக மசூதியில் கூட்டம். சித்திக் படியேறி மேலே வருவதைப் பார்த்த பாபா, ‘‘நில்... மேலே வர வேண்டாம்!’’ எனக் கத்தினார்.

பாபாவின் ருத்ர முகத்தைக் கண்டு, எல்லோரும் பயந்தனர். சித்திக்கும் பயந்து விட்டார்.
பாபா முக்காலமும் அறிந்தவர் என்று சித்திக்கிற்குத் தெரியும். ஹாஜி போன்றவர்கள் மீது அன்பு காட்டுகிறவர், தயாள குணமுள்ளவர் என்றெல்லாம்கூட கேள்விப்பட்டிருந்தார். தான் ஹஜ் யாத்திரைக்குப் போய் வந்ததையும், முஸ்லிம்களால் போற்றப்படும் சாது என்பதையும் பாபா முன்கூட்டியே ஞானத்தால் அறிந்துகொண்டு, தன்னைக் கண்டதும் எழுந்துவந்து வெகு விமரிசையாக இருகரம் நீட்டி வரவேற்பார் என எதிர்பார்த்தார். அதில் மண் விழுந்ததால் திகைத்துப் போய் நின்றார்.

‘‘பாபா’’ - அவர் குரல் எழுப்பினார்.
‘‘நான் ஒரு தடவை சொன்னது சொன்னதுதான். இங்கே வராதே...’’ - பாபா முகம் சிவக்கச் சொன்னார்.
‘‘ஆனால், நான் ரொம்ப தூரத்தில்... கல்யாண் என்னுமிடத்திலிருந்து வந்திருக்கிறேன்...’’

‘‘அதனால் என்ன? நீ மெக்கா, மதினாவிலிருந்து வந்தாலும் இதே வார்த்தைதான். இங்கிருந்து போய்விடு...’’
‘‘ஆனால்...’’ ‘‘போய் விடு’’ என்றவர், ஷாமாவைப் பார்த்து, ‘‘ஷாமா, என் சட்காவைக் கொண்டா. இந்தக் கிழத்தை அடித்து நொறுக்குகிறேன். இவனுக்கு என் பாஷை ஏன் புரியவில்லை?’’ - பாபா கோபத்தில் கத்தினார்.

சித்திக் கலங்கினார். வேறு வழியே இல்லை. திரும்பி விடுவதுதான் நல்லது. இல்லையேல் பாபா தன்னை அடித்தாலும் அடித்து விடுவார் என பயந்தார். அங்கிருந்தபடியே கைகளைக் கூப்பி, ‘‘சரி, பாபா! ரொம்ப ஆசையுடன் உங்களைப் பார்க்க வந்தேன். இப்போது திரும்பிச் செல்கிறேன். ஆனால் ஒன்று. நீங்கள் என்னை அன்புடன் கூப்பிடும் வரை, நான் ஷீரடியை விட்டுப் போக மாட்டேன்’’ என்று சொல்லி, தலைகுனிந்தபடி அவ்விடத்தை விட்டு அகன்றார். ஆன்மிக ஒளியை கை நிறைய அள்ளிக்கொண்டு போக வந்தவர், இருளில் வெறுங்கையுடன் திரும்பியது போல உணர்ந்தார். அவருடைய கால்கள் தள்ளாடின.

மதிய வேளை. எங்கும் அமைதி. காற்றில்லாமல் மரத்தின் இலைகள்கூட அசையவில்லை. வெயில் கொளுத்தியது. சுவரெல்லாம் சூட்டினால் உஷ்ணமடைந்தன. காற்றில் பறக்கும் தூசிகள்கூட அக்னிக் குண்டத்திலிருந்து வந்தது போல் வெப்பமாகத் தாக்கின. காட்டில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு, மாடுகள்கூட, வெயிலின் கொடூரம் தாங்காமல், நிழலைத் தேடின. பறவைகள் வெயில் தாங்காமல் வீட்டின் கூரையில் தஞ்சமடைந்தன. பக்தர்கள் வியர்வையில் நனைந்தபடி வந்து, அவரை தரிசித்துச் சென்றார்கள்.

பாபா அவர்களைக் கூர்ந்து கவனித்தார். ‘இந்த மனிதர்கள்தான் எவ்வளவு எளிமையானவர்கள். வரும் சங்கடத்தை அறியாதவர்கள். அதை எப்படி சமாளிப்பது என்றும் தெரியாதவர்கள். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையே இல்லாதவர்கள். பிறகு ஓடியாடி, அழுது புலம்பி, அவமானப்பட்டு, கடைசியில் துக்கப்படுவார்கள்’ என நினைத்தார்.

பாபாவின் குழப்பத்தை மகல்சாபதி அறிந்து கொண்டார். காரணம், பாபாவின் நடவடிக்கை விசித்திரமாக இருந்தது. பக்தர்கள் பாபாவின் காலில் விழுந்தார்கள். ஆனால் பாபா வழக்கம்போல் ஆசீர்வதிக்கவில்லை. அவர் வாயிலிருந்து எதுவும் வரவில்லை. பாபா ஏதோ ஒரு கவலையில் இருந்தார். சுட்டெரிக்கும் நல்ல மதியவேளை. திடீரென்று பாபா எழுந்து, தடதடவென்று கீழே இறங்கி மசூதியின் சபை மண்டபத்திற்கு வந்தார். அங்குமிங்கும் நிலை கொள்ளாமல் நடந்தார். அங்கும் பக்தர்கள் அவர் காலில் விழுந்தார்கள். அவர் வெகுண்டு எழுந்தார்.

‘‘டேய் மூர்க்கர்களா! போதும் என் தரிசனம். போங்கள்... சீக்கிரம் ஓடுங்கள்... அவசரம். உங்களுடைய இடத்திற்கு ஓடுங்கள். மாலை வேளையில் யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். பாதுகாப்பான இடமாகப் பார்த்து ஒதுங்குங்கள். இப்போதே ஓடுங்கள்...’’ - பாபா ஓலமிட்டார். அவருடைய அலறலைக் கேட்டு மக்கள் பயந்தார்கள். ஏதோ சங்கடம் நேரப் போகிறது என புரிந்தது. மகல்சாபதி, ஷாமா, தாத்யா மற்றும் எல்லா கூட்டத்தினரும் பயந்து பாபாவிடமே வந்தார்கள்.

‘‘பாபா, என்னவாயிற்று?’’
‘‘இன்னும் ஒன்றும் நடக்கவில்லை.’’
‘‘என்ன நடக்கப் போகிறது? நீங்கள் ஏன் இப்படி நிலைகொள்ளாமல் தவிக்கிறீர்கள்?’’ - மகல்சாபதி வினவினார்.
‘‘மகல்சாபதி, பயங்கர ராட்சஸன் வரப்போகிறான். பெரிய சேதத்தை விளைவிக்கப்போகிறான். மரணத்தை ஏற்படுத்தும் நோயைப் பரப்பிவிட்டுப் போகப்போகிறான். உங்களுக்கு ஏன் இதெல்லாம் புரியமாட்டேங்கிறது?’’
‘‘நாங்கள் அற்ப புத்திக்காரர்கள்!’’

‘‘எவ்வளவு ஜென்மங்களுக்குத்தான் அற்ப புத்தியுடன் இருப்பீர்கள்? என்னுடனேயே இருந்தீர்களானால் உங்களுக்கு என்ன உபயோகம்? அதனால் எனக்கு என்ன பயன்?’’
பாபா பெருங்கோபத்தில் இருந்தார். அவர் விடுகதை போலப் பேசுவது யாருக்கும் புரியவில்லை. எல்லோரும் விஷயத்தை அறியத் துடித்தார்கள்.
‘‘பாபா’’ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தாத்யா அழைத்தான்.
‘‘என்ன தாத்யா?’’

‘‘எந்த ராட்சஸன் வரப்போகிறான்?’’
‘‘அது தெரியவரும்.’’
‘‘எப்பொழுது வருவான்?’’
‘‘அவன், இந்த திசையை நோக்கிக் கிளம்பி விட்டான். அவன் பயணம் தொடங்கிவிட்டது. சாயங்காலத்திற்குள் வந்து முரட்டு விளையாட்டு விளையாடிட்டுப் போவான். உங்கள் எல்லோரையும் ஓட ஓட விரட்டுவான். உங்களுடைய வீட்டையெல்லாம் நாசப்படுத்தி விடுவான். எச்சரிக்கையுடன் இருங்கள்...’’
மறுபடி ஆழ்ந்த யோசனையில் மூழ்கினார், பாபா.

‘‘தாத்யா, ஷாமா, அப்பா, காசி... நான் சொல்வதைப் போலச் செய்யுங்கள். ஊருக்குள் போய், எல்லோரையும் எச்சரிக்கையுடன் இருக்கச் சொல்லுங்கள். குழந்தை குட்டிகளுடன் வீட்டிலேயே அடைந்து கிடக்கச் சொல்லுங்கள். யாரும் வெளியில் போக வேண்டாம். ஆடு, மாடுகளை பாதுகாப்பான இடத்தில் அடைத்து வைக்கச் சொல்லுங்கள்.’’
‘‘சரி!’’

‘‘ஒரு சிலர் காட்டிற்குப் போய், ஆடு, மாடு மேய்ப்பவர்களையும் விவசாயிகளையும் நல்ல திடமான இடமாகப் பார்த்து ஒதுங்கச் சொல்லுங்கள். யாருக்கு தங்குவதற்கு நல்ல பாதுகாப்பான இடம் இல்லையோ, அவர்கள் மசூதிக்கு வரட்டும். இங்கு ஒன்றும் நேராது.’’
‘‘சரி!’’
‘‘ஓடுங்கள், வேகமாக ஓடுங்கள். எவ்வளவு சீக்கிரம் வேலையை முடித்துவிட்டுத் திரும்ப முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வாருங்கள். இல்லாவிடில், திரும்பி வர முடியாமல் நீங்களே சங்கடத்தில் மாட்டிக் கொள்வீர்கள்!’’
எல்லோரும் புறப்பட்டுச் சென்றார்கள். மகல்சாபதி, பாபாவின் அருகில் உட்கார்ந்தார்.
‘‘பாபா... நீங்கள் இருக்கும்போது என்ன சங்கடம் வந்துவிடப்போகிறது? அதுவும், உங்கள் முன் அது என்ன செய்துவிட முடியும்?’’ - மகல்சாபதி அமைதியுடன், பாபாவிடம் கேட்டார்.
‘‘இல்லை மகல்சாபதி! நடக்கப்போகும் ஒவ்வொரு செய்கையையும் நான் தடுக்க முடியாது!’’

‘‘இருந்தாலும்... நீங்கள் இருக்கும்போது, பக்தர்களாகிய எங்களுக்கு என்ன பயம்?’’
‘‘இதைத்தான் குருட்டு நம்பிக்கை என்பேன். அன்பனே, இந்த சிருஷ்டி சக்கரம் எவ்வளவு பிரமாண்டமானது மற்றும் ரகசியமானது என்பது உனக்குத் தெரியாது. இதன் ஒவ்வொரு செய்கையின் முன்னும் என்னுடைய சக்தி ஒன்றும் பலிக்காது. ஒவ்வொரு செயலும், என் ஆதிக்கத்தில் இல்லை. சிருஷ்டியின் சக்கரம் சுழலும்போது, அதன்படி நானும் நடந்து கொள்ளவேண்டும். அந்த அல்லாவின் மனதில் என்ன இருக்கிறது என்று யாருக்குத் தெரியும்?’’ என்று சொல்லி பாபா மௌனமானார்.

ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்றறிந்து மகல்சாபதி கலக்கமடைந்தார். பாபாவின் தேகம் வெடவெடத்தது. நரம்புகள் புடைத்தன. கண்கள் நட்சத்திரம் போல பிரகாசித்தன. முகம் சூரிய வெப்பத்தால் நன்றாக சூடேறி மிகவும் சிவந்ததுபோலக் காணப்பட்டது.  

தாத்யா, ஷாமா போன்றவர்கள் பாபா தங்களுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றித் திரும்பும்போது சூரியன் மேற்கில் மறைந்துகொண்டிருந்தான். சடாரென்று பெருங்காற்று மசூதியினுள் நுழைந்ததும், பாபா திடுக்கிட்டு எழுந்து நின்றார்!
‘‘இன்று நான் உனக்கு அனுமதி கொடுக்க மாட்டேன். உன்னுடைய செய்கை நல்லதில்லை...’’
அவர் கர்ஜித்தார்.

(தொடரும்...)
வினோத் கெய்க்வாட்
தமிழில்: பி.ஆர்.ராஜாராம்