சீஸன் சாரல் பாபனாசம் அசோக்ரமணி



சஞ்ஜய் சுப்ரமணியம் கச்சேரி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொஸைட்டியில். கும்பகர்ணன் தன்னுடைய சகோதரர்களான ராவணன், விபீஷணனோடு பிரம்மாவின் அருள்பெற யாகம் நடத்தினான். பிரம்மா தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டபோது,

கும்பகர்ணனின் நாக்கு குளறி, ‘இந்திராஸனம்’ என்பதற்கு பதில், ‘நிதர்ஸனம் வேண்டும்’ என்று கேட்க, ‘தூங்கிக் கொண்டே இருக்கக் கடவாய்’ என்று அருள் செய்யப்பட்டது. அந்தப் பரம்பரையில் வந்த பலர், மார்கழி மாசத்திலாவது சீக்கிரம் எழ வேண்டும் என்ற அக்கறையில், ஆண்டாள், கிருஷ்ணன் பேரில் பாடிய பாட்டுகள்தான் திருப்பாவை.

காலையிலேயே குளித்து, காலை 6 மணி முதல் சபா வாசலில் நோன்பு இருந்து டிக்கெட் வாங்கி, இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் ஹாலில் மக்கள் வெள்ளம் திரண்டிருந்தது. சஞ்ஜய், ‘ஆழிமழைக் கண்ணா..’ என திருப்பாவை பாட ஆரம்பித்தவுடன், ஆண்டாளை திருப்தியுடன், நன்றியுடன் வணங்கி, காலை ஆறு மணிக்கு எழுந்து ஹாலுக்கு வந்ததால், மாலை 7 மணிக்கு பாசுரத்தைக் கேட்க பாக்கியம் கிடைத்தது என்று மகிழ்ந்தனர்.

ஆண்டாள் இந்தப் பாட்டு மூலம் வருண பகவானிடம் ‘உலகத்திற்கு மழை வேண்டும்’ என்று கேட்டும் மழை பெய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால், சஞ்ஜய் பாடிய ‘வாழ உலகினில் பெய்திடாய்’ என்ற அடியின் நிரவலில், உள்ளே இசை மழை, இன்ப வெள்ளம்தான். அன்று ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் வாசித்த மிருதங்கமும் சேர்ந்ததால் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில்... என்ன அருமையான கை அது! புஷ்பலதிகா ராகத்தை சஞ்சயைத் தவிர யார் பாடுகிறார் இப்போது? ‘ஜெய ஜெய பத்மநாப’ கீர்த்தனை அருமை. அதற்கு மஹாதேவ சர்மா வயலின் ரொம்ப அனுசரணை. ‘சுஜனஜீவனா’ கமாஸ் ராக கீர்த்தனையை அழகாகப் பாடி, கீரவாணி ராகத்தில் சஞ்சய் மூழ்கினார். ராகத்தில் இனிமேல் பாக்கியில்லை எனும்படி எல்லா சஞ்சாரங்களையும் கேட்க முடிந்தது. ‘கலிகியுண்டே’ கீர்த்தனைக்கு ராஜாராவ் வாசித்த சுகம் சொல்ல வார்த்தை இல்லை. தனி ஆவர்த்தனம் அருமையோ அருமை.

அந்தக் காலத்தில் விஸ்வநாதய்யர் விருத்தத்துக்கு மக்கள் காத்திருந்தது போல, சஞ்சயோட ராகம், தானம், பல்லவிக்காக எல்லோரும் ஆவலோடு காத்திருந்தார்கள். மோகனம் ராகம் பாடி, தானம் விட்ட அழகில் அனைவரும் பரமானந்தத்தில் வீடு போய்ச் சேர்ந்தார்கள். ரஞ்சனி - காயத்ரி கச்சேரி கலா ரசனா சபையின் ஆதரவில் சின்மயா ஹாலில் நடந்தது. அந்த ஹால் அமைப்பே அழகு. கச்சேரியில் இந்த இரண்டு பேர் பாடல், ரசிகர்களை மயக்கியது. லதாங்கி ராகம் அருமை.

பாபனாசம் சிவன் பாடலான, ’பிறவா வரம் தாரும்’ கேட்ட ரசிகர்கள், ‘பிறந்தால் இவா பாட்டைக் கேட்டுண்டே இருக்கணும்’ என்ற முடிவோடுதான் இருந்தனர். நிரவல் இடம் ரொம்ப உருக்கம். ராஜீவ் வயலின் ஓஹோ. ‘ஸ்ரீவரலக்ஷ்மி’ கீர்த்தனையைப் பாடிவிட்டு, பிறகு பேகடா ராகத்தை காயத்ரி பாடப் பாட, ‘இப்படி விஸ்தாரமா இந்த ராகத்தைக் கேட்டு எவ்வளவு நாளாச்சு’ எனத் தோன்றியது. சௌக்கியம், வேகம், பிருகா எல்லாம் எவ்வளவு அளவு இருக்கணுமோ அவ்வளவு இந்த ராகத்தில் இருந்தது உண்மை. சிந்துபைரவி ராகத்தில் ராகம், தானம், பல்லவி. கேட்டுக்கொண்டே இருக்கலாம், இவர்கள் இரண்டு பேரும் பாடிய ராகத்தை. ‘சிந்து கங்கை கண்ட நாகரிகமே, மொழி, மறை, கலை தந்த பாரதமே’ பல்லவியின் வரிகளில் அர்த்தம் புரிந்ததால், மக்கள் இன்ப வெள்ளத்தில் புரண்டனர்.

அருண் பிரகாஷ் ஒரு ஞானமான மிருதங்க வித்வான். கச்சேரிக்கு எப்படி, எங்கே போஷாக்கு கொடுக்க வேண்டுமோ அப்படி அதை நன்றாகவே தருவார். பாட்டையே பல இடங்களில் கூட வாசிப்பார். அனிருத் கஞ்சிரா அருமை. ரஞ்சனி, காயத்ரி ‘ ஸிணீநிணீ’  பாவத்தோடு பாடுகிற எல்லா கச்சேரியிலும் மக்கள் வெள்ளம்தான். விஜய்சிவா கச்சேரி மியூஸிக் அகாடமியில். ‘ருசியான, சம்பிரதாயம் குறையாத ஒரு பாட்டுன்னா இவரோடதுதான்’ என்பது பலரின் அபிப்ராயம். சாகித்ய சுத்தம், ஸ்ருதி சுத்தம் என்று பல சொத்துக்களுக்கு அதிபதி அவர். மோகன வர்ணத்துக்குப் பிறகு, ‘ஐயே நீர் நடனம்’ என்ற ஸாவேரி ராக கீர்த்தனை மிக உருக்கம். தீட்சிதரின் ஆனந்த பைரவியும், ஸ்யாமா சாஸ்திரியின் ஆனந்த பைரவியும் நம் சங்கீதத்துக்குக் கிடைத்த பெரிய அதிர்ஷ்டம். தீட்சிதரின் ‘மானஸ குருகுஹ’ கீர்த்தனையை விஜய் பாட, ஒவ்வொரு வார்த்தையும் தேனாக இனித்தது.

சாருலதா ராமானுஜம் வயலின் பரம சௌக்கியம். மனோஜ் சிவா மிருதங்கம் வாசிச்சா கச்சேரியே பிரகாசம்தான். அப்படி ஒரு   Stylish   வாசிப்பு. கூடவே சுரேஷ் கடம் சேர்ந்து ரெட்டை வெடிதான். விஜய்சிவாவின் தோடி, கோடி விலை பெறும்.

ஸ்யாமா சாஸ்திரியின் ‘கருணாநிதி இலலோ’ கீர்த்தனையோட அழகு விஜய் பாடும்போது தெரிந்தது. ‘ப்ருஹந்நாயகியே! சங்கீதத்தை ரசிப்பவளே, அழகான பேச்சை உடையவளே’ என்று ஸ்யாமா சாஸ்திரி பாடிய கீர்த்தனையைக் கேட்டு எவ்வளவு நாளாச்சு! விஜய் சிவா கச்சேரிக்குப் போனால், வெளியில் அதிகம் புழக்கம் இல்லாத இரண்டு பாட்டையாவது கேட்கும் திருப்தி நிச்சயம் உண்டு.

வாணி மஹாலில் ‘மகாநதி’ ஷோபனா கச்சேரி. பத்மாசங்கர் வயலின், கணபதிராம் மிருதங்கம், சுந்தர் மோர்சிங் என்று அமர்க்களமான பக்கவாத்தியம். நாட்டக்குறிஞ்சி வர்ணம், ‘துளசிதள’, ‘யாரென்ன சொன்னாலும்’ கீர்த்தனைகளில் ஷோபனாவின் குரல் இனிமை ரசிகர்களைக் கவர்ந்தது. பந்துவராளி ராகமும், நிரவல் பாடிய ‘பரம தயாகர’ இடமும் அருமை. ‘மாதயை’ - வஸந்தா ராகத்தில் பாபனாசம் சிவன் பாடல் கேட்டு ரொம்ப நாளாச்சு. கீரவாணி ராகம், பத்மாசங்கர் வயலினோடு மகாநதி அருமையாகப் பாடினார். ‘கலிகியுண்டே’ கீர்த்தனைக்கு மிருதங்கம், சக்கை போடு. கணபதி கையில நாதம் ஓஹோ!

படங்கள்: புதூர் சரவணன்