“நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல’’ன்னு சொல்ற கட்டுப்பாடான குடும்பத்த சேர்ந்த பொண்ணுங்க மனசுல காதல் எப்படி வந்துச்சுன்னுகூட கண்டுபிடிச்சுடலாம் போல... ஆனா எவ்வளவு இறுக்கமா போர்த்தினாலும்,
பெட்ஷீட்டுக்குள்ள குளிரு எப்படி வந்துச்சுன்னுதான் கண்டுபிடிக்க முடியல. 5 மணிக்கு பால்காரர் நம்ம வீட்டு வாசல்ல வீசிட்டுப் போற பால் பாக்கெட் ஐஸ்கட்டி ஆகிடுது. அதிகாலைல வாக்கிங் போகலாம்னு வெளிய வந்தா, எட்டுத் திக்கும் போர்த்திக் கிடக்கும் பனி மூட்டத்துல, எதிர்ல வர குப்பை வண்டி கண்ணுக்கு தெரிய மாட்டேங்குது.
வாக்கிங் போறவங்கள பார்த்தா, ஏதோ பாம் வைக்க வந்த பாகிஸ்தான் டெர்ரரிஸ்ட் மாதிரி மண்டை முழுக்க மப்ளர் போர்த்திக்கிட்டு கலர் கலரா டெர்ரர் காட்டுறாங்க. பாத்ரூம் பைப்ப தொறந்தா, ஏதோ இமயமலைல இருந்து நேரா தண்ணி கனக்ஷன வாங்குன மாதிரி சும்மா ஜில்லுன்னு தண்ணி கொட்டுது. அடிக்கிற குளிருக்கு ஸ்வெட்டர் போட்டுக்கிட்டுதான் குளிக்கணும் போல. குடிக்க அண்டாவுக்குள்ள டம்ளர விட்டா, ஏதோ ஐஸ்பெட்டிக்குள்ள கைய விட்ட மாதிரி ஃபீலிங் தருது.
இந்த வருஷம் இப்படி கடுமையா குளிர் இருக்கக் காரணம் என்னன்னு ரொம்ப நேரம் யோசிச்சேன்... எனக்கு என்ன தோணுதுன்னா, வெளியூர் கிளம்பறப்ப இந்த கடவுள் கண்டிப்பா தன் வீட்டு ப்ரிட்ஜ தொறந்து போட்டுட்டுப் போயிருக்கணும். இல்லன்னா, இம்புட்டு முரட்டுத்தனமா குளிராதுல்ல!
புத்தாண்டுக்கு புதுசு புதுசா அதை வாங்கணும், இதை வாங்கணும்னு எல்லோரும் ஆசைப்படுற மாதிரி, பலரும் புத்தாண்டுக்கு புது கேர்ள் ஃபிரண்ட் புடிக்கணும்னும் ஆசைப்படுவீங்க.புதுசா புடிக்கணும்னா பழச கழட்டி விட்டாகணுமே? இதோ சில வழிகள்... * முதல் ஸ்டெப், அந்தப் பொண்ணுக்கு ரீசார்ஜ் பண்ணி விடுறத நிறுத்தணும். ஐஸ்கிரீம் வாங்கித் தர சொன்னா ரெண்டு நாளைக்கு ரெண்டு ரூபா குச்சி ஐஸோ, குல்பி ஐஸோ வாங்கித் தரணும். வேணும்னே கையேந்தி பவன்ல சாப்பிட கூட்டிட்டுப் போகணும். இப்படி ஒரு வாரம் செஞ்சா, 33% பொண்ணுங்க
பிச்சுக்கிட்டு போயிடுவாங்க.
* ஒரு வாரம் உங்க ஆளு போன் பண்ணினா எடுக்கக்கூடாது. ஒரு எஸ்.எம்.எஸ் கூட உங்க போன்ல இருந்தும் போகக்கூடாது. சப்போஸ் உங்க ஆளு வேற நம்பர்ல இருந்து கால் பண்ணிட்டா, பிரச்னை இல்ல... அப்படியே ஏதாவது ஒரு பொண்ணு பேர சொல்லி, ‘‘சௌக்கியமா’’ன்னு விசாரிக்கணும்.
* உங்க கேர்ள் ஃபிரண்ட் நடமாடுற இடத்துல, யாரோட ஃபிகரையாவது ரெண்டு நாளைக்கு கடன் வாங்கி, அப்படி இப்படின்னு அவ கண்ணுல படுற மாதிரி நடமாடணும். அந்த புள்ளைய ரோட்டுல பார்த்தாலும் இந்த புள்ளையோட சிரிச்சுக்கிட்டே போயிடணும். முடிஞ்சா, ‘‘நான் சும்மானாச்சிக்கு வாய மட்டும் வச்சுக்கிறேன், நீயே முழு இளநீரையும் குடிம்மா’’ன்னு அக்ரிமென்ட் போட்டுட்டு, ரெண்டு பேரும் ஒத்த இளநீர குடிக்கிற மாதிரி சீன் போடணும்.
* பொண்ணுக்கு அண்ணனோ, தம்பியோ இருந்தா... வலுக்கட்டாயமா போயி வம்பிழுக்கணும். ‘‘பொண்ணும் என்னுதுதான், ரீuஸீனும் என்னுதுதான்’’னு ‘போக்கிரி’ விஜய் கணக்கா சீன் போட்டுடணும். முடிஞ்சா பாடி ஸ்ப்ரேவுக்கு பதிலா, 65 ரூபா குவாட்டர சட்டையில தெளிச்சுக்கிட்டு போறது ரொம்ப நல்லது.
எப்ப பார்த்தாலும் சிகரெட் பிடிக்கமாட்டேன், பீர் அடிக்க மாட்டேன்னே புத்தாண்டு உறுதிமொழி எடுத்துக்கிறாங்க. இந்த வருஷம் குட்டிச்சுவர் எடுத்துக் கொடுக்கும் சில புத்தாண்டு உறுதிமொழிகள் கீழே... பிடிச்சிருந்தா நீங்களும் பின்பற்றலாம்!
* ஓசில வரும் டைரிகளையும், காலண்டர்களையும் கண்டிப்பாக வருஷம் முடிவதற்குள் பயன்படுத்துவேன்.
* பொங்கல், தீபாவளி சமயங்களில் டாஸ்மாக் தனது டார்கெட்டை அடைய, தீயா வேலை செய்வேன்.
* ஒரு காதல் தோல்விக்கும் அடுத்த காதலுக்கும் இடையே கண்டிப்பா ரெண்டு வாரம் இடைவெளி விடுவேன்.
* டி.வி. பஞ்சாயத்து நிகழ்ச்சிகளில் ஒரு பணக்காரனாவது தன் பிரச்னைகளை சொல்வதை பார்த்தே ஆக வேண்டும்.
* இந்த வருஷம் பெட்ரோல் விலை 145 தடவைக்கு மேல் ஏறாமல் இருக்க சாமியை தினமும் வேண்டுவேன்.
* மிச்ச ஒரு ரூபாய்க்கு பதிலாக கடைக்காரர் தரும் சாக்லேட்டை வாங்க மாட்டேன்.
* கள்ளக்காதல் செய்தி வராமல் ஒரு நாளாவது பேப்பர் படித்திட வேண்டும்.
* டூவீலரை கண்டிப்பாக ஆறு மாசத்துக்கு ஒரு தடவையாவது துடைப்பேன்.
* செல்போனை தினம் 23 மணி நேரத்துக்கு மேல் நோண்ட மாட்டேன்.
* மினிமம் பேலன்ஸ்க்கு மேலே 100 ரூபாயாவது பேங்க் அக்கவுன்ட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்வேன்.
* நாட்டைப் பற்றி கவலைப்படாமல், யாரு அதிக நோட்டை தள்ளுகிறார்களோ அவர்களுக்கே ஓட்டு போடுவேன்.
* நாராயணசாமி சொல்லும் அந்த 15வது நாளை இந்த வருஷம் பார்த்தே தீருவேன்.
* இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறிவிடும் என்பதை கண்டிப்பாக நம்புவேன்.
இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்!
மீனவர்களுக்காக இருந்தாலும் சரி, மின்சாரத்துக்காக இருந்தாலும் சரி... வழக்கம் போல மத்திய அரசுக்கு கடிதம் மட்டுமே எழுதும் தமிழக அரசு!
ஆல்தோட்ட பூபதி