பொலிட்டிகல் பீட்



டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்த வெற்றியால், நாடாளுமன்றத் தேர்தலில் அதிரடியான புதுமுக வேட்பாளர்களைக் களமிறக்கும் ஆர்வம் எல்லா கட்சிகளுக்கும் வந்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனியின் அண்ணன் நரேந்திர சிங் டோனியை சமாஜ்வாடி கட்சி இழுத்துவிட்டது.

முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியை வளைத்துப் போடுவதற்கு பாரதிய ஜனதா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கால்பந்து வீரர் பைச்சுங் பூடியாவை டார்ஜிலிங் தொகுதியில் நிறுத்த முடிவு செய்திருக்கிறார். ஆதார் அட்டை பணிகளைச் செய்துவரும் நந்தன் நீலகேணியை பெங்களூருவில் நிறுத்த காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது.

நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகளால் ரொம்பவே நொந்து போயிருப்பவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகிதான்! எப்படியும் பா.ஜ.க மண்ணைக் கவ்வி விடும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். ‘‘வாக்களிக்கும் இயந்திரத்தில் கை சின்னத்துக்கான பட்டனை அழுத்துங்கள். மற்ற பட்டன்களைத் தொட்டால் ஷாக் அடிக்கும்’’ என்றெல்லாம் பிரசாரம் செய்தார். ரிசல்ட் வருவதற்கு முன்பே நிருபர்களைக் கூப்பிட்டு வெற்றி பார்ட்டி எல்லாம் வைத்தார். இப்போது அவமானத்தில் வெளியில் வருவதே இல்லை அவர்!

‘‘டெல்லியில் காங்கிரஸ் தோற்றதற்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டியே காரணம்’’ என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன். டெல்லியில் பத்து லட்சம் மலையாளிகள் உள்ளனர். ‘‘காங்கிரஸ் கட்சி உம்மன் சாண்டியை பிரசாரத்துக்கு அழைத்திருந்தால், அவர் எப்படியாவது ஓட்டுகளை வாங்கி ஷீலா தீட்சித் அரசைக் காப்பாற்றி இருப்பார். அவரைப் புறக்கணித்ததால் காங்கிரஸ் மோசமாகத் தோற்றது’’ என்கிறார் அச்சுதானந்தன். இவர் புகழ்கிறாரா, காலை வாருகிறாரா என்பது புரியாமல் குழம்பியிருக்கிறது காங்கிரஸ்.

டெல்லியில் ஆட்சி அமைத்திருக்கும் ஆம் ஆத்மி கட்சியைவிட அதிக கவனமாக இருப்பது பாரதிய ஜனதா கட்சிதான். ரகசிய கேமராவோடு வந்து கட்சி எம்.எல்.ஏக்களை ஏதாவது வம்பில் சிக்க வைக்கும் முயற்சியில் சில செய்தி நிறுவனங்கள் ஈடுபடக்கூடும் என தகவல் கசிந்ததாம். இதனால் எல்லோரையும் கவனமாக இருக்கச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் மற்ற கட்சியினருடன் ஜாலியாக தலைவர்கள் பேசுவார்கள். ரெக்கார்டர் பயத்தில் இப்போது புன்சிரிப்பைத் தாண்டி வேறெந்தப் பரிமாறலும் இல்லை.

சிறையிலிருந்து வெளிவந்த லாலு பிரசாத் யாதவ் பரபரப்பாகி விட்டார். இப்போது யாரையும் அவர் திட்டுவதில்லை; கிண்டல் செய்வதில்லை. உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாஃபர் நகர் பகுதிக்கு சமீபத்தில் அவர் போனார். உ.பி அரசையும், சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங்கையும் அவர் விமர்சிப்பார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், ‘‘கலவரத்துக்கு அதிகாரிகள்தான் காரணம்’’ என ஒரே போடாகப் போட்டார் லாலு!