சந்தோஷின் செல்போன் ஒலித்தது. ‘‘என்னப்பா... காலைல ஆறு மணிக்கெல்லாம் பிசினஸ் காலா?’’ - கேட்டான் சஞ்சய். ‘‘இல்லை.. பர்சனல். இது ஹோம் மினிஸ்டர்’’ - சிரித்தான் சந்தோஷ்.
இருவரும் நண்பர்கள். சஞ்சய் பிசினஸ்மேன்; சந்தோஷ் பிசினஸ் டெவலப்மென்ட். அதாகப்பட்டது மார்க்கெட்டிங் மேனேஜர். இருவரும் கடின உழைப்பாளிகள். பிசினஸ் விஷயமாக வட மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணம் இன்னோவாவில் கிளம்பியிருந்தார்கள்.
‘‘ம்... சொல்லும்மா. பையன் என்ன செய்றான்?’’ என்ற சந்தோஷுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து ஆறு மாதங்கள்தான் ஆகிறது.
‘‘பால் சாப்பிட்டானா? நைட் நல்லா தூங்கினானா?’’
‘‘..............’’
‘‘அப்படியா... ஃபேனுக்கு நேரா அவனை படுக்க வைக்காதே. ஸ்பீடு குறைச்சு வச்சிக்கோ... மல்லாக்க படுக்க வைக்காதே. ஒருக்களிச்சு தூங்க வை. இருமல் தொந்தரவு இருக்காது!’’
‘‘.............’’
‘‘சரி... சரி... அப்புறமா டாக்டர்கிட்ட காட்டிட்டு வந்துடு. ஓகே... பை!’’
செல்போனை அணைத்து விட்டு, ‘‘குழந்தைக்கு சளித் தொந்தரவு... நைட் சரியா தூங்கலையாம்’’ என்ற சந்தோஷின் முகத்தில் கவலை ரேகைகள்.
‘‘எல்லாம் சரிதாம்பா! பையனைப் பற்றி எல்லாம் கேட்டியே, வொய்ஃப் சாப்பிட்டாங்களா... தூங்கினாங்களான்னு ஒரு வார்த்தை கேட்டியா?’’ என்றான் சஞ்சய்.
சந்தோஷ் மழுப்பலாகச் சிரிக்க... ‘‘விடு... விடு... நானும் அப்படித்தான்’’ என்றான்.