எங்க ஊருல ஒரு அண்ணன். எப்பவும் சும்மாதான் இருப்பாரு. ‘யய்யா... இந்த மூட்டையக் கொஞ்சம் தூக்கித் தாயேன்’னு வயசான கெழவி கேட்டாலும் எறங்கிச் செய்ய மாட்டாரு. ‘இப்படி சில்லறை விசயத்துக்கெல்லாம் என்னைய எதிர்பாக்காதீங்க...
நான் உலகத்துக்காக பொறந்தவன்’னு பேசுவாரு. அவரச் சுத்தி எப்பவும் இளவட்டப் பயலுக கூட்டம் இருக்கும். ‘எலேய்... அமெரிக்கான்னா என்னன்னு தெரியுமாலே?’ன்னு ஆரம்பிப்பாரு. அப்படியே ரைட்டுல ஒடிச்சி சைனாவுக்கும் ஜப்பானுக்கும் வந்து, அப்படியே லெஃப்ட் எடுத்து ரஷ்யாவுக்கும் ஒரு எட்டு போயிட்டு மறுபடி ஓட்டு வீட்டு திண்ணையில அவர் வந்து லேண்ட் ஆகறதுக்குள்ள ரெண்டு பய தூங்கிருப்பான். நாலு பய ஓடிருப்பான்.
காலண்டர் பொன்மொழி மாதிரி அவரு கைவசம் இருக்குறது கொஞ்சம் தகவல்தான்ணே. எல்லாத்தையும் சொல்லி முடிச்சிட்டாருன்னா திரும்ப மொதல்ல இருந்து ரிப்பீட் ஆகும். இதைக் கேட்டுக் கேட்டுக் கிறுக்குப் பிடிக்கிற பல பயலுக தப்பிச்சி அவர் சங்காத்தமே வேணாம்னு வந்துருவானுங்க. அவன் போனா என்ன? அடுத்து, அவன் வயசுல உலகத்தைப் புரட்டணும், உருளைக் கிழங்கு சிப்ஸை ஒழிக்கணும்னு ஆவலோட இன்னொருத்தன் வராமலா போயிருவான். வாரவன் வந்துக்கிட்டே இருப்பான். போறவன் போயிக்கிட்டே இருப்பான். முகம் மாறுமே தவிர, ‘அஞ்சாறு பயலுக... அதுக்கு நடுவுல இவரு’ங்கற சீன், மாறவே மாறாது.
இவரு மட்டும் ஏன் இப்படி இருக்காரு? ஏன் எந்த வேலைக்கும் போறதில்ல? பஞ்சாயத்து போர்டு பிரச்னைக்கெல்லாம் இவரு ஏன் கண்டம் விட்டுக் கண்டம் கண்டனம் தெரிவிக்கிறாரு? ஒண்ணுமே எனக்குப் புரிஞ்சதில்ல. ஒருநாளு ஏதோ ஒரு மேடையில அந்த அண்ணனைக் கூப்பிட்டு கௌரவப்படுத்தினாங்க. அப்ப குடுத்தாங்க பாருங்க ஒரு அறிமுகம்.
‘அஞ்சா நெஞ்சன்... அறிவுக் கருவூலம்... முழுநேர சமூகப் பணியாற்றும் அண்ணன்’னு அவரு பேரைச் சொன்னதும் எனக்கு சிரிப்பு வந்துருச்சி. அட, சமூகப் பணின்னா இதானா? ஊருக்குள்ள கெழவிமாரைக் கேட்டீங்கன்னா, ‘வெம்போக்கி, கூறுகெட்டபய, கறிவலிச்ச கழுதை, கூமுட்டை’ன்னு அவருக்கு விதவிதமா பட்டம் கொடுப்பாங்க. இங்க என்னடான்னா முழுநேர சமூகப் பணியாம்ல!
அன்னிக்கு நான் சில விசயங்களை யோசிச்சேன்ணே. ஒண்ணு...
நல்லதுக்குக் காலமில்லைங்கற மாதிரி இந்த அண்ணனோட நல்ல மனசை எங்க ஊரு புரிஞ்சிக்கிடாம இருக்கணும். இல்லாட்டி, நெஜமாவே அவரு வெறுமனே பொழுதைப் போக்குற வெம்போக்கியாதான் இருக்கணும். எதுவா இருந்தாலும் அந்த ரூட்டு நமக்கு வேணாம்! ஏன்னா, எதையும் செய்யிறவன் பேச மாட்டான்!
ஆனாலும் அடுத்தவங்களுக்கு உதவுற குணம் நமக்கு கூடப் பெறந்ததுண்ணே... நாம விட்டாலும் அது நம்மளை விடாது. ஊருல இருக்கும்போதே இளைஞர் சங்கத்துல மோசமானவனும் முக்கியமானவனும் நாந்தான். சினிமாவுல வர்றா மாதிரி அது ஒண்ணும் வருத்தமில்லா வாலிபர் சங்கமில்லண்ணே... ஒவ்வொருத்தனுக்கும் அங்க ஓராயிரம் வருத்தம் உண்டு. அடுத்தவனுக்கும் அப்படி ஒரு வருத்தம் வந்துரக் கூடாதேன்னுதான் வேலைய விட்டுட்டு அதுல கெடந்து கஷ்டப்பட்டோம். பேசறதுக்கெல்லாம் எங்களுக்கு நேரமில்ல... பெஞ்சு போட வசதியில்ல... ஆனா, ஒரு பொதுக் காரியம்னா முன்னால நிப்போம்.
இப்பவும் நல்லா ஞாபகம் இருக்கு. ஒரு தடவை தாமிரபரணியில வெள்ளம் வந்து தறிகெட்டு ஓடிச்சு. இன்னும் கொஞ்சம் விட்டா ஊரு முங்கிரும்னு ஒரு நெலம. உடனடியா வெள்ளத்த தடுத்தாகணும். கலெக்டரே நேர்ல வந்துட்டாரு... எல்லாரும் மணல் மூட்டையப் போட்டு தண்ணியத் தடுக்க முயற்சி பண்ணினாங்க. அப்ப நாங்க ஆளும்பேருமா சேர்ந்து ஒரு பெரிய மரத்தை வெட்டினோம். ‘மண்ணு மூட்டையெல்லாம் பத்தாது. இந்த மரத்தை அப்படியே சாச்சு கேப்ல சொருகிடுவோம்’னு நாங்கதான் அதிகாரிகளுக்கே ஐடியா கொடுத்தோம்.
‘இவ்வளவு பெரிய மரத்தை எப்படி தூக்கி சரியா அந்த கேப்ல போட முடியும்’னு கேட்டாங்க அவங்க. ‘தண்ணிக்குள்ள எவ்வளவு பெரிய மரமா இருந்தாலும் வெயிட்டு தெரியாது. மொதல்ல தண்ணிக்குள்ள மரத்தைத் தள்ளிட்டு அப்புறம் தூக்கி வச்சிருவோம்’னு நாந்தான் சொன்னேன். சொன்னபடியே ஒத்தை ஆளா தண்ணிக்குள்ள எறங்கி அந்த மரத்தை அசைச்சு கரெக்டா முட்டுக் குடுத்து வச்சேன். தண்ணி எங்க ஊருக்குள்ள வரல. அப்ப எங்கூருல இது பெரிய சாதனை. ரெண்டு மாசத்துக்கு எல்லாரும் என்னையப் பத்தியே பேசுனாங்க. அதுக்கப்புறம் அவங்க விட்டாலும், நான் விடாம பேசிட்டிருந்தேன். புதுசா ஒரு வெளியூரு ஆளைப் பார்த்தா போதும்... நம்ம ஹீரோயிசம் கலந்த ஃப்ளாஷ்பேக்கைக் கேட்டப்புறம்தான் அவருக்கு ஊருக்குள்ள அனுமதி. ஒரு கட்டத்துல இது எனக்கே சங்கடமா போச்சு. அந்த ‘முழு நேர சமூகப் பணி’ அண்ணன் மாதிரி நானும் ஆயிருவேனோன்னு பயந்துட்டேன். பெறகு தான் சென்னைக்கு ஓட்டம்!
ஊரே என்னைப் பாராட்டின அந்த சமயத்துல கூட எங்கம்மா புளியமாத்துல அடிக்க வந்துட்டாங்கண்ணே. கோவமில்ல... பாசம்! தண்ணிக்குள்ள எறங்கினதுல எனக்கு ஆபத்து வந்துருமோன்னு பயம். இப்ப கூட என்கிட்ட சில பிள்ளைங்க பிராது கொண்டு வரும். ‘என் கிளாஸ்மேட்டுக்கு ஒரு சிலேட்டுக் குச்சி குடுத்ததுக்கு அம்மா அடிக்கிறாங்க’ன்னு. அப்போல்லாம் நான் அவங்களுக்கு சொல்ற அனுபவப் பாடம் இதான்... எதுவா இருந்தாலும் அம்மாகிட்ட சொல்லு. ஆனா, ஊருக்கு உதவுறதா இருந்தா மட்டும் சொல்லாம செய்யி! (இதெல்லாம் ஒரு அட்வைஸான்னு துப்பிப்புடாதீங்க. நான் என்ன ஐகோர்ட்டு ஜட்ஜா? நம்மளை மதிச்சி வர்றது இந்த மாதிரி அல்ல சில்ல கேஸ்தான். அதுக்கேத்த மாதிரிதானே அட்வைஸ் பண்ண முடியும்?)
ஆனா ஒண்ணுண்ணே... நான் ரோட்டுல படுத்துத் தூங்குற காலத்துல ஒரு கனவு கண்டிருக்கேன். அடுத்தவனுக்கு உதவி செய்யறேன் செய்யறேன்னு சொல்லி பப்ளிசிட்டி தேடுறதை விட, பப்ளி சிட்டி இருக்குற ஆளுங்க உதவி செஞ்சா என்னங்கறதுதான் அந்தக் கனவு. இப்ப நானே அந்தக் கனவை நனவாக்க வேண்டிய நேரம் வந்துட்டதா நினைக்கிறேன். அருண்பாண்டியனும் ராம்கியும் பெரிய மலையில இருந்து கீழ விழாம ஒருத்தரை ஒருத்தர் காப்பாத்தி கயித்துல தொங்கிக்கிட்டே கை குடுப்பாங்களே...
அது எனக்கு ரொம்பப் பிடிச்ச சீன். அதனால ‘இணைந்த கைகள்’ங்ற பேர்லயே ஒரு நற்பணி இயக்கத்தை தொடங்கலாம்னு ஒரு எண்ணம் இருக்கு. உங்க எல்லாரோட ஆசியும் இருந்தா அது என்னையும் தாண்டி பெருசா வளரும்! அடடா... செய்யிறவன் பேசக் கூடாதுங்கறது என் கொள்கையில்ல! அதனால நிறுத்திக்கறேன்!
இமான் அண்ணாச்சிதெரிஞ்ச வரைக்கும் சொல்லிட்டேன்!
தொகுப்பு: கோகுலவாச நவநீதன்
ஓவியம்: அரஸ்
படங்கள்: புதூர் சரவணன்