கவிதை எழுதும் பிரதமர்!



‘உன்னை இழந்தால் நான் என்ன செய்வேன்... எனக்கே புரியவில்லை! உன் கரங்கள் என்னைத் தழுவாவிட்டால் நான் என்ன ஆவேன்...’ - இப்படி காதல் கிறுக்கனாக கவிதைகளில் பினாத்தியிருக்கும் இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு வயசு 73.

கவிதை எழுதும் பிரதமர்கள் நமக்குப் புதிதில்லை. வி.பி.சிங்கும், நரசிம்ம ராவும், வாஜ்பாயும் எழுதாத கவிதைகளா? ஆனால் பெர்லுஸ்கோனி விவகாரமே வேறு!  பிஸியான நிர்வாகப் பணிகளுக்கு இடையே கிடைத்த நேரத்தில் அவர் எழுதிய 13 கவிதைகள் ஒரு ஆல்பமாகவே வெளிவந்திருக்கிறது. ‘வித் லவ் யூ கேன்’ என்ற அந்த ஆல்பத்தில் இருக்கும் அத்தனை பாடல்களிலும் காதல் ரசம் சொட்டுகிறது. அவர் யாரை நினைத்து இதை எல்லாம் எழுதினார் என்ற கேள்விக்குத்தான் விடை இல்லை.

பெர்லுஸ்கோனியின் ஒரிஜினல் மனைவி வெரோனிக்கா லாரியோ. காதல் திருமணம்தான். ஆனால் கணவரின் ஆட்டங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், சமீபத்தில்தான் பிரிந்தார் அவர். பிரிவுக்கு முக்கிய காரணம், நவோமி லெடிசியா என்ற மாடல் அழகி. உள்ளாடை விளம்பரங்களில் நடிக்கும் இந்த இளம்பெண்ணின் பதினெட்டாவது பிறந்தநாள் பார்ட்டிக்காக தனது வேலைகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு தனி விமானத்தில் பறந்துவந்தார். ‘எந்தப் பெண்ணிடமும் இல்லாத ஏதோ ஒன்று இந்தப் பெண்ணிடம் இருக்கிறது’ என்று பெர்லுஸ்கோனி புளகாங்கிதத்தோடு புலம்பினார். விளைவு, டைவர்ஸ்!

‘லெடிசியாவை வர்ணித்துத்தான் கவிதை எழுதினார் பெர்லுஸ்கோனி’ என அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்ல, ‘அதெல்லாம் கிடையாது. அவருக்குப் பிடித்த பெண் மரிய தெரசா டி நிகாலோ மட்டும்தான்’ என சிலர் ‘பெட்’ கட்டுகிறார்கள். இது யாரு புதுசா எனக் குழம்புகிறவர்களுக்கு அப்டேட் தகவல்... 38 வயது டி நிகாலோ ஒரு விலைமாது. பிரதமர் ஓய்வெடுக்க தனது பண்ணை வீட்டுக்கு வந்தபோது, அவருடன் தங்கி சர்ச்சையில் சிக்கியவர். இந்த ரகத்தில் அவருக்கு நெருக்கமான பெண்களின் பட்டியல் சற்றே நீளமானது என்றாலும், அதில் டி நிகாலோ மீது பெர்லுஸ்கோனிக்கு தனி நேசம் உண்டு.

இப்படி சர்ச்சைகள் தொடர்ந்தாலும், பாடல் ஆல்பத்தை உருவாக்கிய பாடகர் மரியானோ, ‘‘பிரதமர் தன் மனைவியை நினைத்து கவிதை எழுதவில்லை’’ என்றிருக்கிறார். ஜொள்ளு மன்னனே உண்மையை சொல்லிட்டா தேவலை!

- ரெமோ