கடைசி பக்கம்





தயங்கித் தயங்கி மேனேஜரின் அறைக்குள் நுழைந்தான் சுரேஷ். ‘‘என்னப்பா?’’ என அன்பாகக் கேட்டார் மேனேஜர். சுள்ளென்று எரிந்து விழுகிற டைப் இல்லை அவர். அன்பாகப் பேசியே வேலை வாங்கி ஆபீஸை நடத்துவது சாத்தியம் என நிரூபித்துக் கொண்டிருப்பவர்.  

ஆபீஸில் மற்றவர்களைவிட சுரேஷை அவருக்கு ரொம்ப பிடிக்கும். ராத்திரி, பகல் பார்க்காமல் வேலை செய்வான். ஆனால் திடீரென லீவ் போட்டுவிட்டு, மறுநாள் வந்து ஏதாவது காரணம் சொல்வான். அது பொய் மாதிரியும் இருக்கும்; உண்மை போலவும் தெரியும். பெரும்பாலும் ‘அம்மாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போன’ சென்டிமென்ட் காரணங்கள்தான்.
இப்போது சுரேஷ் வந்ததும் லீவ் கேட்டுத்தான். ‘‘அம்மாவுக்கு மூட்டுவலி ரொம்ப அதிகமாயிடுச்சு. இப்ப போன் பண்ணாங்க. நாளைக்கு ஆயுர்வேத ட்ரீட்மென்ட்டுக்கு அழைச்சுப் போகணும்’’ என்றான்.

ஓகே சொன்ன மேனேஜருக்கு ஒரு விஷயம் உறுத்தியது. நாளை இந்த நகரத்தின் கிரிக்கெட் அணிக்கும் வெளிநாட்டு அணிக்கும் ஒரு முக்கிய மேட்ச் இருக்கிறது. இதேபோல முன்பு ஒருமுறை சுரேஷ் சொல்லாமல் லீவ் எடுத்த நாளிலும் ஏதோ மேட்ச் நடந்ததே!  
டேபிளில் இருந்த வருகைப் பதிவேட்டை எடுத்து செக் செய்தார். இந்த ஆண்டில் அவன் லீவ் எடுத்த அத்தனை நாட்களிலும் ஏதோ ஒரு முக்கிய மேட்ச் இருந்தது. அவனைக் கூப்பிட்டு, அவர் கண்டுபிடித்த விஷயத்தைச் சொன்னார்.

சுரேஷ் துளிகூட பதறவே இல்லை. ‘‘ஆமா சார்! கிரிக்கெட் மேட்ச் இருக்கற நாள்ல எல்லாம் எங்க அம்மா ஏன் இப்படி உடம்புக்கு முடியலைன்னு கரெக்டா சொல்றாங்க... நடிக்கறாங்களா?’’ என்றான்.
சிலருக்கு வாழ்க்கையே நடிப்பாகி விடுகிறது!