பலூன் : விசாகப்ரியன்





ஒரே நாளில் இரண்டு திருமணங்கள்.
‘எந்தத் திருமணத்துக்குச் செல்வது?’ - குழம்பி நின்றான் பக்கிரிசாமி.
‘‘என்னங்க ஏதோ யோசனையில் இருக்கிற மாதிரி தெரியுது. கல்யாண வீட்டுக்குக் கிளம்பலையா?’’ - மனைவி பாண்டியம்மாள் கேட்டாள்.
‘‘இல்ல... நாணயக்காரத் தெரு கல்யாண வீடா? காடம்பாடி பங்களா கல்யாண வீடா? ரெண்டுல எங்கே போறதுன்னுதான் குழப்பம்...’’

‘‘குழப்பமே வேண்டாம். காடம்பாடி பங்களா கல்யாணம் பெரிய இடம். எல்லாரும் கார்ல வந்து இறங்குவாங்க. நாணயக்காரத் தெரு கல்யாண வீடு... நடுத்தரமான குடும்பம். அதுதான் நமக்குத் தோதான இடம். பிள்ளைங்க எல்லாம் உங்களைப் பார்த்தவுடனேயே ஓடி வருவாங்க’’ - பாண்டியம்மாள் சொன்னாள்.

‘‘நீ சொல்றதும் சரிதான். நம்ம வியாபாரத்துக்குத் தோதான இடம் நாணயக்காரத் தெரு கல்யாண வீடுதான். காடம்பாடி பங்களா கல்யாண வீட்டுல கூர்க்காவே நம்மளை விரட்டியடிப்பான். அப்புறம் எங்கே நாம பலூன் விற்கிறது..!’’ ஆதங்கத்தோடு பேசினான் பக்கிரிசாமி.
‘‘புரிஞ்சுக்கிட்டா சரிதான்...’’ என்றபடியே ஹீலியம் வாயு சிலிண்டரை எடுத்து சைக்கிள் கேரியரில் வைப்பதற்குக் கணவனுக்கு கை கொடுத்தாள் பாண்டியம்மாள்.