‘அரசு அலுவலகங்களிலேயே அதிக மனித உரிமை மீறல்கள் நடப்பது காவல் நிலையங்களில்தான்’ என்கிறது ஒரு ஆய்வு. பாதிக்கப்பட்டவர்கள் கூட காவல்நிலையம் செல்வதை கசப்பாகக் கருதும் அளவுக்கு மனிதம் தடுமாறும் இடமாக மாறியிருக்கிறது காவல் நிலையம். அலைக்கழிப்பு, மரியாதைக் குறைவு, மிரட்டல், அதிகார வார்த்தைகள், லஞ்சம், கட்டப்பஞ்சாயத்து... அரசியல்வாதிகளின் பரிந்துரை இல்லாமல் காவல் நிலையத்துக்குப் போனால் அவமானமே மிஞ்சுகிறது.
பல காவல் நிலையங்களில் புகார் கொடுத்து ஒப்புகை ரசீது பெறுவதென்பதே சாகசம் தான். அதிலும் எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) போடச் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும். கண்ணுக்கு முன் நடந்த குற்றம் என்றால் கூட அவ்வளவு எளிதில் எப்.ஐ.ஆர். போட மாட்டார்கள். ‘இந்தப் பிரச்னைக்கு அந்தப் பிரச்னை எவ்வளவோ தேவலாம்பா’ என்று கருதியே பலர் குற்றங்களைச் சகித்துக்கொண்டு வாழப் பழகி விட்டார்கள்.
இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்றம் நம்பிக்கையளிக்கும் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த லலிதாகுமாரி, தன் 8 வயது மகளைக் காணவில்லை என்று புகார் அளித்தார். காவல்துறை வழக்குப் பதிவு செய்யாமல் லலிதாவை அலைக்கழிக்க, அந்த அவலம் பத்திரிகைகளில் வெளிவந்தது. அந்த செய்திகளைப் படித்து அதிர்ந்த உச்ச நீதிமன்றம், தாமாகவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச், காவல் நிலையங்களின் போக்கைக் கண்டித்ததோடு, ‘குற்ற வழக்குகளில் காலதாமதம் செய்யாமல் எப்.ஐ.ஆர். பதிவு செய்யவேண்டும்’ என்றும், ‘குடும்பம், திருமணம், மருத்துவம், வணிகம் சார்ந்த சிறு வழக்குகளில் அடிப்படை ஆதாரம் இருந்தால் 7 நாட்களுக்குள் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும்’ என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
‘‘இந்த தீர்ப்பு காவல் நிலையங்களை தூய்மைப்படுத்தும்’’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ‘‘ஏற்கனவே உச்ச நீதிமன்றமும், பல உயர் நீதிமன்றங்களும் இதுபற்றி பல தீர்ப்புகளை வழங்கியுள்ளன. ஆனால், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்சே இந்தத் தீர்ப்பை வழங்கியிருப்பதால், இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா முழுவதும் ஆண்டுக்கு சுமார் 7.20 லட்சம் வழக்குகள் பதிவாகின்றன. இதில் சுமார் 2 லட்சம் வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவாகின்றன. மற்றவை சிறு குற்றங்கள். பல காவல் நிலையங்களில் ஏழை, எளியவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் கொடுக்கும் புகார்களுக்கு மதிப்பே இருப்பதில்லை. அதிகார வர்க்கத்துக்கு மட்டுமே காவல்துறை தலைவணங்குகிறது. பிப்ரவரி 2012ல் தேனியைச் சேர்ந்த ஒரு பெண் காவல் நிலையத்தில் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தப் புகார் மீது எப்.ஐ.ஆர் பதிவுசெய்ய 15 மாதங்கள் போராட வேண்டியிருந்தது. தாழ்த்தப்பட்ட, பழங்குடிப் பெண்களுக்கு நிகழும் பல கொடுமைகள் வழக்காகப் பதிவு செய்யப்படுவதே இல்லை. காவல் நிலையத்தையே கட்டப்பஞ்சாயத்துக் கூடமாக மாற்றி பிரச்னையை முடித்து விடுகிறார்கள்.
அண்மைக்காலமாக காவல்துறை மீதான புகார்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை வழக்காக பதிவு செய்யப்படுவதில்லை. 2012ல் இந்தியா முழுவதும் காவல்துறை மீது 57 ஆயிரத்து 363 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் வெறும் 2,289 புகார்களில் மட்டுமே எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. அதில், 42 போலீசாருக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது.
தமிழகத்தை விட சிறிய மாநிலமான கேரளாவில் 3193 புகார்கள் பெறப்பட்டுள்ளன. சட்டீஸ்கரில் 1918 புகார்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் வெறும் 363 புகார்கள்தான். பெரும்பாலான புகார்கள் ஏற்கப்படுவதேயில்லை. பேச்சுவார்த்தையிலேயே முடித்துவிடுகிறார்கள். இந்த நிலையை உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிச்சயம் மாற்றும். அரசியல், அதிகார, பணக்குறுக்கீடு குறையும். இதன்படி, புகாரைப் பெற்று எப்.ஐஆர் தராத போலீசார் மீதே எப்.ஐ.ஆர் போட முடியும். மத்திய உள்துறை அமைச்சகமும், இந்தியன் இன்ஃபர்மேஷன் ஆஃப் பப்ளிக் ஒப்பீனியன் என்ற அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வில், காவல்துறைக்கு குறுக்கீடாக இருப்பதாக 2 விஷயங்களைக் குறிப்பிடுகிறார்கள். ஒன்று அரசியல். இன்னொன்று ஊழல். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இந்த 2 குறுக்கீட்டையும் களையக்கூடும்’’ என்கிறார் ‘எவிடென்ஸ்’ அமைப்பின் இயக்குனர் கதிர்.
‘‘பாதிப்பை உணரமுடிகிற குற்றங்களில், புகாரைப் பெற்றவுடனே எப்ஐஆர் பதிவு செய்துவிட வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது. ஆனால் புகாரைப் பெற்றுக்கொண்டு எதிர்த்தரப்பை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதும், ‘கவுன்ட்டர் பெட்டிஷன்’ பெற்று வழக்கைத் திருப்புவதும்தான் நடக்கிறது. காவல் நிலையத்திலேயே தீர்ப்பை எழுதிவிடுகிறார்கள். காவல்துறை என்பது ஒரு சமூக அங்கம். குற்றங்களைத் தடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்கத்தான் காவல்துறை. ஆனால் காவல் நிலையம் மக்களுக்கு இணக்கமில்லாத ஆதிக்க மனோபாவம் உள்ள இடமாக மருவி விட்டது. இந்தியாவில் வருடத்துக்கு 60 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்படுவதில்லை என்று புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. காவல்நிலையத்தில் இருந்து கோர்ட்டுக்குப் போகும் நிலை மாறி, இப்போது கோர்ட்டுக்குப் போய் காவல் நிலையத்துக்கு வரவேண்டியுள்ளது. எப்.ஐ.ஆர் போட்டால், புலன் விசாரணை செய்ய வேண்டும்; குற்றவாளியைக் கைது செய்து கோர்ட்டில் ரிமாண்ட் செய்யவேண்டும்; எவிடென்ஸ் தயாரிக்க வேண்டும்; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றத்தை நிரூபிக்க வேண்டும்; இப்படி தொடர்ச்சியான வேலைகள் இருப்பதால்தான் இதைத் தவிர்க்க காவல்துறை நினைக்கிறது. ஆனால் இந்த வேலைகளை எல்லாம் செய்வதற்காகத்தானே காவல்துறை இருக்கிறது’’ என்கிறார் வழக்கறிஞர் பழனிமுத்து.
இதுபற்றி ஓய்வுபெற்ற டி.ஜி.பி நட்ராஜிடம் பேசினோம். ‘‘இதில் நிறைய குழப்பங்கள் உள்ளன. சில குற்றங்களுக்கு ‘உடனடியாக எப்.ஐ.ஆர் போடக் கூடாது. விசாரித்த பிறகே போட வேண்டும்’ என்று நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குகின்றன. சி.ஆர்.பி.சி 154 பிரிவின்படி குற்றவாளியைப் பிடிக்கக்கூடிய குற்றங்களில் உடனடியாக எப்.ஐ.ஆர் போட வேண்டும் என்றும் நீதிமன்றங்கள் சொல்கின்றன. காவல் நிலையங்களைப் பொறுத்தவரை பணிகள் சரியாகத்தான் நடக்கின்றன. காவல்துறைக்கு என்று சில அதிகாரங்களும், உரிமைகளும் உண்டு. கைது செய்வது, விசாரிப்பதெல்லாம் சூழலைப் பொறுத்து அமையும். எல்லா வழக்கையும் ஒன்றுபோல அணுக முடியாது. எல்லாப் புகார்களுக்குமே சி.எஸ்.ஆர் எனப்படும் ரசீது தரப்படுகிறது. அதன்பிறகான விசாரணையில், புகாரின் உண்மைத்தன்மையை வைத்து மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வழக்குப் பதிவு செய்ய மறுக்கும் பட்சத்தில் சி.ஆர்.பி.சி 157வது பிரிவுப்படி கோர்ட்டுக்குப் போய் டைரக்ஷன் வாங்கவும் வாய்ப்பிருக்கிறது. எல்லா புகார்களுக்கும் எப்ஐஆர் பதிவு செய்யவேண்டும் என்பது காவல்துறை அதிகாரிகளுக்கு தேவையற்ற பணிச்சுமையையும், அழுத்தத்தையுமே உருவாக்கும்’’ என்கிறார் நட்ராஜ்.
- வெ.நீலகண்டன்