டெல்லி மாணவியின் பெற்றோர் உருக்கம்நிர்பயா... ஓடும் பஸ்ஸில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட டெல்லி மருத்துவ மாணவி. இந்த தேசத்தில் பெண்களுக்கு இவ்வளவுதானா பாதுகாப்பு என நூறு கோடி கன்னங்களிலும் அறைந்து சொன்ன அந்தச் சம்பவத்தை அத்தனை சீக்கிரம் மறக்க முடியுமா? மகளின் இறப்புக்குப் பிறகு, முதன்முறையாக ‘ரிட்ஸ்’ மாத இதழ் நடத்திய விருது நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தென்னிந்தியாவுக்கு - சென்னைக்கு வந்திருந்தனர் நிர்பயாவின் பெற்றோரான பத்ரிநாத் -ஆஷா தேவி.
‘‘குற்றுயிரும் குலையுயிருமாக நிர்பயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது நாங்கள் உடைந்து போனோம். அவளின் இறப்பு எங்களை தவிக்க வைத்தது. ஆனால், இந்த நாடே அவள் இறப்புக்காக வருந்தியபோது... எங்களுக்கு ஆதரவாக வீதியில் வந்து நின்றபோது... பெருமிதமாக இருந்தது. அவள் இறப்புக்குக் காரணமான அந்த மிருகங்கள் தண்டிக்கப்பட்டபோது... எங்களுக்கும் துளி மகிழ்ச்சி கிடைத்தது.
‘குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மட்டுமல்ல... இனி, இது போன்ற நிலை எந்தப் பெண்ணுக்கு ஏற்படக் கூடாது’ என்றும் தனது இறுதி நிமிடங்களில் நிர்பயா ஆசைப்பட்டாள். முதல் ஆசை நிறைவேறியுள்ளது. இன்னொரு ஆசையும் நிறைவேறுவதற்கான விழிப்புணர்வு தூண்டப்பட்டிருக்கிறது.
அரசாங்கம், சமூக அமைப்புகள், மக்கள், மீடியா என்று அனைத்து தரப்பிலிருந்தும் எங்களை கனிந்த கண்களோடு பார்க்கிறார்கள். ‘என்ன இருந்து என்ன... ஆசை மகள் இல்லையே’ என்ற நினைப்பு அவ்வப்போது தலை தூக்கும். எங்கள் மகளுக்காக வீதியில் வந்து நின்று போராடிய அத்தனை பெண்களையும் எங்கள் மகளாக நினைத்து மனதைத் தேற்றிக் கொள்கிறோம். இது போன்ற கொடூரம் இனியும் நடக்காமல் இருக்க வேண்டும் என்ற எண்ணப் பொறியை எங்கள் மகளின் இறப்பு ஏற்படுத்தியுள்ளதால், நிர்பயா எங்களுடன் வாழ்ந்துகொண்டிருப்பதாகவே நினைக்கிறோம்.’’
‘‘ஆனாலும் நிர்பயா வழக்கில் மரண தண்டனை வழங்கியதற்கு ஒரு பக்கம் எதிர்ப்பு இருக்கிறதே?’’
‘‘நிர்பயா வழக்கைப் பொறுத்தவரை நியாயமான தீர்ப்பு கிடைத்துள்ளதாகவே நினைக்கிறோம். அதை நாங்கள் வரவேற்கிறோம். இது போன்ற கொடூர செயல்களில் ஈடுபடுகிறவர்கள் யாராக இருந்தாலும், ஈவு, இரக்கம் காட்டாமல் மரண தண்டனை கொடுக்க வேண்டும். எங்கள் மகள் பள்ளி நாட்களிலிருந்து நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் மாணவியாக திகழ்ந்தாள். எல்லா போட்டிகளுக்கும் கை தூக்கி கலந்து கொண்டு, நிறைய பரிசுகளை வாங்கி வந்து வீட்டில் அடுக்கியிருக்கிறாள். பிசியோதெரபி படித்து எங்கள் குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற அவளின் கனவு கருகிப் போனதற்கு காரணமே அந்த இரக்கமற்ற பாவிகள்தான். அவர்களைப் போன்றவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதே சரியான தீர்ப்பு!’’
‘‘நிர்பயாவின் மறைவுக்குப் பிறகும் இது போன்ற சம்பவங்கள் தொடர்கிறதே..?’’‘‘உண்மைதான். ஒரு பக்கம் இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், இன்னொரு பக்கம் பாலியல் வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பது வருத்தம் தருகிறது. இன்றைய இளைஞர்களுக்கு உள்ளுக்குள் தனி மனித ஒழுக்கம் வேண்டும். பெண்களைத் தங்கள் சகோதரியாகவும் தாயாகவும் நினைக்க வேண்டும். நம் சகோதரி இப்படி பாதிக்கப்பட்டால் அந்த வலி எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும். கல்லூரியில் படிக்கும் மாணவிகளும், இளம்பெண்களும் நமது பண்பாட்டை மீறாத உடைகளை உடுத்த வேண்டும். இளைஞர்கள் இனக்கவர்ச்சி எண்ணங்களைத் தவிர்த்து நல்ல பழக்கவழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். நமது கலாசாரத்தை விட்டு விலகி வேறு திசையில் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை முறையும் இதுபோன்ற தவறுகளுக்குக் காரணமாக இருக்கிறது. பெற்றோரும் பிள்ளைகளை சரியான நேரத்தில் கண்டித்து வளர்க்க வேண்டும். பெற்றோர் கொடுக்கும் சுதந்திரத்தை பிள்ளைகளும் மீறாமல் நடக்க வேண்டும்... இதெல்லாம் நடக்காதவரை இப்படிப்பட்ட சம்பவங்கள் நிற்காது!’’
‘‘சமீபத்தில் மும்பை போலீஸ் கமிஷனர், இந்தித் திரையுலகை அழைத்து கூட்டம் நடத்தி, சமூகத்தை பாதிக்கும் வகையில் ஆபாச அதிரடி காட்சிகள் சினிமாவில் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட சினிமா காட்சிகளும் பாலியல் குற்றங்களுக்கு காரணமென்று நினைக்கிறீர்களா?’’
‘‘நிச்சயமாக. நிஜ வாழ்க்கையில் நடப்பதை கதையாக எடுத்த காலம் போய், திரைப்படங்களில் சித்தரிக்கப்படும் காட்சிகளை நிஜத்தில் பிரதிபலிக்கும் ஆபத்தும் நடந்துகொண்டிருக்கிறது. காதலில் ஆரம்பித்து எல்லாமே அப்படித்தான் இருக்கிறது. இதுவும் ஒரு காரணமாக இருந்தாலும் நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொள்வதன் மூலம் இது போன்ற பாலியல் குற்றங்கள் குறையும். அதற்கான விழிப்புணர்விற்காக இந்தியாவின் எந்த மூலையிலிருந்து எந்த அமைப்பு அழைத்தாலும் நாங்கள் வரத் தயார்!’’
- அமலன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்