நிழல்களோடு பேசுவோம்





ஒரு அறுபட்ட தலைமுறை

‘உயரமான கோபுரங்களைப் பார்க்கும் மனிதர்கள், அவை இடிந்து விழ வேண்டும் என்று விரும்புகிறார்கள்’ என தஸ்தாயேவ்ஸ்கி ஒரு முறை எழுதினார். பிரமாண்டத்தின் முன் மனிதனின் தன்முனைப்பு சுக்குநூறாக நொறுங்கி விழுகிறது. தன்னைச் சிதறடிக்கும் எந்த ஒன்றையும் அழிக்கவே அந்த தன்முனைப்பு விரும்புகிறது. சமீபத்தில் முதல்முறையாக தஞ்சாவூர் போயிருந்தேன். தஞ்சை பெரிய கோயிலை அண்ணாந்து பார்த்தபோது மனம் விம்மியது. முதல்முறையாக இந்தக் கோயிலைப் பார்க்கிறேன். ராஜராஜ சோழனின் 1028வது சதயத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. மக்கள் எல்லா பக்கமும் வெயிலில் சூடேறிய கல்தரையில் செருப்பில்லாமல் நடந்து கொண்டிருந்தார்கள்.

தமிழர்களின் கலை வரலாற்றில் மகத்தான படைப்பு. சிற்பங்களாலும் கோபுரங்களாலும் நிறைந்திருந்த அந்த பிரமாண்டமான வெளி, சட்டென மனதை எல்லையற்று விரியச் செய்தது. காலத்தின் செவிகள் திறந்து, எண்ணற்ற உளிகள் ஒலிக்கும் ஓசையை ஒரு கணம் கேட்டேன். மனித மனதின், விரல்களின் சொல்லித் தீராத நுட்பங்களுக்கு சாட்சியமாக திரும்பிய திசையெங்கும் கல் உருக்கள் உயிர்பெற்று வந்தவண்ணம் இருந்தன. அவற்றின்முன் ஆங்காங்கே காணப்பட்ட நவீன டிஜிட்டல் பேனர்கள் மிகவும் அற்பமாகக் காட்சியளித்தன.

காலத்தின் பெரும் நடனம் ஒன்று நிகழ்வதைப் போலிருந்தது. இந்த ஆயிரம் ஆண்டுகளில் எவ்வளவு மனிதர்களின் ஏக்கங்களாலும் கனவுகளாலும் இந்த வெளி நிரப்பப்பட்டிருக்கக் கூடும்! எவ்வளவு எவ்வளவு ரகசியப் பிரார்த்தனைகளால் இந்த இடம் சூடேறியிருக்க வேண்டும்?

காதலர்கள் ஆங்காங்கே பிராகாரங்களின் மறைவுகளில் மகிழ்ச்சியுடனும் கவலையுடனும் பேசிக்கொண்டிருந்தார்கள். உடன் வந்த நண்பர் நுழைவாயில் கோபுரத்தை சுட்டிக் காட்டி, ‘‘உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் இந்தக் கோபுரத்தை அண்ணாந்து பார்க்கக் கூடாது. பார்த்தால் அவர்கள் பதவிக்கு சிக்கல் வரும் என ஐதீகம் இருக்கிறது’’ என்றார். ஒரு மரத்தைக் காட்டி, ‘‘இதில் ஒரு பெரிய பல்லி இருக்கிறது. அது கண்ணில் பட்டால் அதிர்ஷ்டம். ஆனால் அப்படிப் பார்த்ததை யாரிடமும் சொல்லக் கூடாது’’ என்றார். ரொம்ப நேரம் நின்று பார்த்தேன். கண்ணில் படவில்லை. ஒவ்வொரு தலமும் இப்படி எண்ணற்ற ஐதீகங்களாலும் விசித்திரமான புனைவுகளாலும் காலங்காலமாய் மனிதர்களைத் தன்னை நோக்கி ஈர்த்துக்கொண்டிருக்கிறது.

வெளியே வரும்போது தொல்லியல் துறை அனுமதிக்காததால் கோயில் வளாகத்திற்குள் நுழைய முடியாமல் தெருவோரம் நின்றுகொண்டிருந்த ராஜராஜ சோழனின் சிலையைக் காட்டினார்கள்.

தஞ்சை பெருவுடையார் கோயில், தமிழர் கலை மரபின் உன்னதங்களைக் காட்டும் ஒரு நினைவுச் சின்னம் என்றால், நவீன வரலாற்றில் தமிழர்கள் அடைந்த குருதிப் பலிகளையும் சித்ரவதைகளையும் படுகொலைகளுக்கு ஆளானவர் கதைகளையும் சொல்லும் இன்னொரு நினைவுச் சின்னமும் அங்குதான் இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட ‘முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்’, தமிழர்களின் தியாக வரலாறு குறித்த மிகச்சிறந்த ஆவணப் பதிவு. ஒருபுறம் சுதந்திரப் போரிலும் மொழிப் போரிலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் உயிர் நீத்த தமிழகத் தியாகிகளின் படங்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இன்னொரு புறம் ஈழ விடுதலைப் போரில் குருதிப் பலியானவர்களின் வரலாறுகள். பார்க்கப் பார்க்க மனம் கனத்து கசந்து போனது. யுத்தக் காட்சிகள் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. சிதைந்த உடல்களின் வெளி, ஒரு கொடுங்கனவாக நம்முன் எழுந்து நிற்கிறது. அந்தக் கனவின்மீது இருட்டு மெல்ல வந்து கவிவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். தமிழர்களின்மீது படியும் வரலாற்று இருள் அல்லவா அது? ஒரு சமூகம் தான் பலிகொடுத்த மனிதர்களை மீள நினைக்கும்போதுதான் தனது மொழிசார்ந்த இனம்சார்ந்த பொறுப்புகளை இனம் கண்டுகொள்கிறது. தமிழர்களுக்கு அந்த வரலாற்று நினைவை ஆழமாக எழுப்புகிறது அந்த படுகளங்களின் காட்சிக்கூடம்.

ராஜராஜ சோழன் எழுப்பிய சிலைகளுக்கும் நவீன தமிழர்கள் எழுப்பும் சிலைகளுக்கும்தான் எவ்வளவு வித்தியாசம்? இந்த ஆயிரம் வருட இடைவெளியில் ஒரு இனம் மேலும் மேலும் அழிவின் பாதையில் இட்டுச் செல்லப்பட்டது. ஆனால் இன்றைய தமிழர்களில் பெரும்பாலானோருக்கு ராஜராஜ சோழனையும் தெரியாது; முள்ளிவாய்க்காலையும் தெரியாது. ஆங்காங்கே யாரோ சில இளைஞர்கள் கோபத்தோடு கண்ணீர் மல்க முஷ்டி உயர்த்தி குரல் கொடுக்கிறார்கள். பெரும்பான்மை மக்களுக்கு பிழைப்பைத் தவிர வேறு எந்த வரலாற்று ஞாபகங்களும் இல்லை. வரலாறு என்பது அவர்களைப் பொறுத்தவரை பாடப் புத்தகத்தில் சொல்லப்படும் கதைகள். சமகால வரலாறு என்பது செய்தித் தாள்களில் கடந்து சென்று விடும் வரிகள்.

ஒரு தலைமுறையே பொருள் சார்ந்த கனவுகளில் மூழ்கி, தனது எல்லா வேர்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டுவிட்டது. அவர்களுக்கென்று ஒரு பிரத்யேகமான உலகம் இருக்கிறது. அந்த உலகத்தைத் தவிர, தாங்கள் வாழ்கிற சமூகம், பண்பாடு, வரலாறு குறித்து அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் பிணைப்பும் இல்லை. கண்ணிகள் அறுபட்ட ஒரு தலைமுறை. அது தனது சொந்தப் பண்பாட்டை உள்ளூர வெறுக்கிறது. தனது சொந்த மொழியைப் பேச கூச்சப்படுகிறது. அது எங்கோ தனது சொந்த ஆன்மாவிலிருந்து முறிந்து போய்விட்டது.

தமிழர்களின் இதயங்களில் தோல்வியுணர்ச்சியும் தாழ்வுணர்ச்சியும் ஆழமாக நிரம்பியிருக்கின்றன. நமது கண்கள் தாழ்ந்து போயிருக்கின்றன. நாம் எந்த தன்னம்பிக்கையும் இல்லாதவர்களாக வரலாற்றின் முன்பு நின்றுகொண்டிருக்கிறோம். நமது தெய்வங்களை அழிய விட்டுவிட்டு, சினிமா நடிகர்களையும் அரசியல்வாதி களையும் நம் கோயில்களில் நிரப்பிவிட்டோம். நமது தியாகிகளும் மாவீரர்களும் நமது இதயங்களில் இல்லை. அவர்கள் எங்கோ கற்சிற்பங்களாகி உறைந்து போய் விட்டார்கள்.

மரபு என்பது நமக்கு சாதிப் பெருமைகளைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. வரலாறு என்பது நமக்கு சொல்லப்பட்ட சில கட்டுக்கதைகளைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. பண்பாடு என்பது நமது மூடத்தனங்களையும் போலி ஒழுக்கங்களையும் தவிர ஒன்றுமே இல்லை. யோசித்துப் பார்த்தால் அவை எல்லாமே எங்கோ இடையில் வந்து ஒட்டிக்கொண்டவை என்று புரியும்.

தமிழர்களுக்கு ஒரு வாழ்வியலும் ஒரு சமூகப் பண்பாடும் இருந்தது. அது எங்கோ ஓரிடத்தில் நிர்மூலமாக்கப்பட்டது. ஒரு இனம் தனது பழமையான வேர்களைத் தேடிச் செல்வது என்பது பழம்பெருமைகளுக்காக அல்ல. தனது வரலாற்று அவமானங்களையும் இழிவுகளையும் துடைத்துக்கொள்வதற்காக! ஆனால் நமது வரலாற்றைத் தேடும் முயற்சிகள் எல்லாமே புதிய இழிவுகளை உருவாக்கிக்கொள்வதற்காகவே இருந்திருக்கின்றன.

தமிழர்களுக்கு வரலாற்று நீதி வழங்குவதற்கோ அவர்கள் சாதனைகளைக் கொண்டாடுவதற்கோ இந்த உலகில் யாரும் இல்லை. நமது மகத்தான இலக்கியப் பிரதிகளில் சாம்பல் மூடிக் கிடக்கிறது. நமது மகத்தான ஆசிரியர்களை நாம் இறந்த காலத்தின் கானகங்களில் விட்டுவிட்டோம். வெற்று அரசியல் அரட்டைகளும் வெற்று சவால்களும் காற்றில் நிரம்பியிருக்கின்றன. நமது மரபான கலைகள் கண் முன்னால் செத்துக்கொண்டிருக்கின்றன. நமது சொந்த நிழல்களையே நாம் தாண்டிப் போய்விட்டோம். மின்னஞ்சலைக் கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் என்கிறார்கள். ஒரு தமிழர் ஆஸ்கர் விருது வாங்கினார் என்கிறார்கள். எவ்வளவு பெரிய பண்பாட்டு அழிவின் சாம்பல் மேட்டில் நின்று நம்மீது விழும் இந்த ரோஜா இதழ்களை முகர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ஒரு அறுபட்ட தலைமுறை யின் கடைசிக் கண்ணிகளாக நாம் இதையெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.
(பேசுவோம்...)

மனுஷ்ய புத்திரன் பதில்கள்
ரோகித் சர்மா பெங்களூர் மேட்ச்சில் அடித்த 209 ரன்கள் குறித்து?
- ஆர்.கார்த்திகேயன், சென்னை.
ஒரு நட்சத்திரம் உதிரும்போது உதயமாகும் இன்னொரு புதிய நட்சத்திரம். இது கிரிக்கெட்டின் தீராத விநோதம்.
நான்கு வழிச்சாலைகளால் விபத்துகள் தொடர்கதையாகக் காரணமென்ன?
- எஸ்.பி.பாபு, முள்ளிக்காடு.
சிறந்த சாலைகள் சிறந்த வாகன ஓட்டிகள் இருக்கும்போதுதான் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
எஃப்.எம் ரேடியோக்களில் படத்தின் பெயர் சொல்லாமல் பாடல்களை ஒலிபரப்புகிறார்களே?
- கு.அருணாசலம், தென்காசி.
படத்துக்கும் பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பதால் இருக்கலாம்.
இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் நிறைய செல்லம் கொடுத்து வளர்க்கிறார்களே?
- எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.
செல்லம் கொஞ்சவே குழந்தைகள். இந்த உலகில் எப்போதும் சில குழந்தைகளுக்கு செல்லம் கிடைக்கிறது. பெரும்பாலான குழந்தைகளுக்கு தண்டனைகள் மட்டுமே கிடைக்கின்றன.
மக்களின் மௌனம், அரசியல்வாதிகளின் மௌனம் - என்ன வேறுபாடு?
- எஸ்.கணேசன், திருச்சி-18.
இரண்டுமே ஒரு தேசத்திற்கு ஆபத்து.



நெஞ்சில் நின்ற வரிகள்
இயற்கையின் கோலங்களும் மனித அனுபவத்தில் விசித்திரங்களும் ஏன் நிகழ்கின்றன என்ற எளிய கவித்துவ கேள்வியைக் கேட்டுக்கொண்டே செல்வதில் இருக்கும் மகிழ்ச்சிக்கு இணை ஏதும் இல்லை. அதற்கான அறிவியல்ரீதியான பதில்கள் மிகவும் எளிமையானவை. ஆனால் அந்தக் கேள்விகள் கேள்விகளாகவே இருக்கும்வரை அது ஒரு முடிவற்ற வியப்பின் இன்பத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. ‘பார்த்தால் பசி தீரும்’ படத்தில் கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல் அத்தகைய வியப்பை எப்போதும் தந்துகொண்டிருக்கிறது.
கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?

எழுதிச்செல்லும் இணையத்தின் கைகள்

பத்திரிகையாளர் கோவி.லெனின் சுள்ளென்ற அங்கதத்தோடு தனது முகநூல் பக்கத்தில் எழுதுபவர். பிறரைப் பற்றி மட்டுமல்ல, சுய எள்ளலும் கலந்த அவரது எழுத்துக்கு ஒரு உதாரணம்:

‘டை’ அடிப்பதாலும் ஜீன்ஸ் அணிவதாலும் வயதை மறைத்துவிடமுடியுமா?
உருது பேசும் முஸ்லிம் நண்பருக்கு வயது 24. கடந்த ஆண்டுதான் எம்.பி.பி.எஸ் முடித்தார். அவரும் நானும் இரவு 11 மணிவாக்கில் பேச ஆரம்பித்தால் விடிகாலை 4 மணி வரை பேசிக்கொண்டிருப்போம். மருத்துவம், அரசியல், விளையாட்டு, மதம், காதல், காமம் என நீளும் பேச்சு, சினிமாவைத் தொடாமல் முடிவுபெறாது. தமிழ்ப் படங்கள் பற்றி என்னிடம் கேட்பார். இந்திப் படங்கள் பற்றி அவரிடம் கேட்பேன். ஒருநாள், ‘‘எனக்குப் பிடித்த இந்திப் பாடல்களை பதிவு செய்து தருகிறீர்களா’’ என்று கேட்டேன். ஆச்சரியத்துடன் ‘‘சரி’ என்றார். பட்டியலைச் சொன்னேன். அரை டவுசர் வயதில் ரசித்த ‘பாபி’, ‘ஷோலே’வில் தொடங்கி ‘குர்பானி’, ‘ஏக் துஜே கே லியே’, ‘சனம் தேரி கசம்’, ‘ஹீரோ’, ‘மைனே ப்யார் க்யா’ என வளர்ந்து ‘1942 லவ் ஸ்டோரி’, ‘ரங்கீலா’ என என் பட்டியல் முடிந்தது.

மறுநாள் இரவு பதிவு செய்துகொண்டு வந்து கொடுத்தார். வழக்கம்போல பேசினோம். ஆனால், அன்று அவருடைய பேச்சில் வழக்கமான கலாய்ப்பு இல்லை. ரொம்ப மரியாதையாகப் பேசினார். ஏன் இன்று இந்த மாற்றம் என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘எதைப் பற்றி நாம பேசினாலும் நீங்க ஜாலியாகப் பேசுவதை வைத்து உங்களுக்கு என் அண்ணன் வயது இருக்கும்னு நினைத்தேன். ஆனா, இந்தப் படப்பாடல்களையெல்லாம் பதிவு செய்யணும்னு நீங்க சொன்னதும்தான் உங்களுக்கு கிட்டத்தட்ட என் அப்பா வயசுன்னு தெரியுது. இதிலே பல படங்கள் நான் பிறக்கிறதுக்கு பல வருஷம் முன்னாடி வந்தது. ஒன்றிரண்டு படங்கள் நான் கைக்குழந்தையா இருக்கிறப்ப ரிலீசானது சார். பரவாயில்லை.. இந்தப் பாட்டுகள் போலவே நீங்களும் மீஸ்மீக்ஷீரீக்ஷீமீமீஸீதான்’’ என்று வஞ்சப் புகழ்ச்சினார். நல்லவேளை... நான் மிகவும் ரசிக்கும் ‘மொகல் ஏ ஆசம்’ படத்தில் நவ்ஷாத் இசையில் அமைந்த பாடல்களைப் பதிவு செய்து தரும்படி கேட்கவில்லை. கேட்டிருந்தால், என்னை அவரது கொள்ளுத் தாத்தா ரேஞ்சுக்கு நினைத்திருப்பார். (நெசமாவே அந்தப் படம் நான் பிறக்குறதுக்குப் பல வருடங்கள் முன்னாடி ரிலீசானதுங்க!) https://www.facebook.com/govi.lenin?hc_location=stream