எங்கு என்மீது ஆத்மார்த்தமான அன்பு காட்டப்படுகிறதோ, அங்கு நான் இருப்பேன். அதைவிட நான் உங்களிடம் கோருவது வேறு என்ன இருக்க முடியும்!
- பாபா மொழி
கடைசியில் தாஸ்கணு நாநாவுடன் ஷீரடிக்கு வந்தார். பாபாவின் திவ்ய சொரூபம் கண்டு தன்னையே மறந்தார். இப்பொழுதுதான் முதல்முறையாக பாபாவை தரிசிப்பதாக அவருக்குத் தோன்றவில்லை. அவருக்கும் பாபாவுக்கும் ஜென்ம ஜென்மங்களாகத் தொடர்பு இருந்தது போல் உணர்ந்தார்.
''பாபா, இவர் தாஸ்கணு. காவல்துறையில் அதிகாரியாக இருக்கிறார். மேலும் பெரிய கவிஞரும் ஆவார்.’’
‘‘நாநா, எனக்கு இது முன்பே தெரியும்’’ என்ற பாபா, ‘‘நானும் இவரும் சந்தித்துக்கொள்வது இது முதல்முறை அல்ல. பல ஜென்மங்களாக நாங்கள் ஒருவரையொருவர் அறிவோம். இல்லையா நடிகனே?’’ என்று தாஸ்கணுவைக் கேட்டார்.
இதைக் கேட்டு தாஸ்கணு ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். பாபாவைப் பற்றி சாஸ்திரிஜி சொன்னது சரியாக இருந்தது. தாஸ்கணுவின் மனதில் உளைந்து கொண்டிருந்த எண்ணத்தை பாபா வெளிப்படுத்தினார். மேலும் தன்னை ஒரு நடிகன் என்று சொன்னது பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தது. முதல் சந்திப்பிலேயே இவ்வாறு தன்னைப் பற்றிய விவரங்களைச் சொன்ன எந்தவொரு மகானையும் தான் பார்த்ததில்லை என்று நினைத்துக்கொண்டார்.
‘இவர்தான் என் குரு’ என்ற எண்ணம் உறுதியாயிற்று. இவர் தனக்கு மட்டும் குரு அல்ல, உலகத்திற்கே குரு ஆவார்.
‘‘பாபா, நீங்கள் பெரிய மகான். உங்களுடைய எண்ணங்கள் பரந்து இருக்கின்றன. நீங்கள் முக்காலமும் உணர்ந்த ஞானி...’’
‘‘தாஸ்கணு, கொஞ்சம் அமைதியாக உட்கார். உன்னுடைய லாவணியை நான் கேட்க வேண்டும்’’ என்றார் பாபா.
‘‘நீங்கள் லாவணி கேட்பதா?’’
‘‘என்னவாகும்? ஆகாயம் கீழே விழுந்துவிடுமா? கடல் என்ன பொங்கிவிடுமா? அடேய், மகான்கள் சூரியனைப் போன்றவர்கள். சூரியனின் கிரணங்களுக்கு தீண்டாமை என்பது இல்லை. தவிர, கிரணங்கள் பவித்திரமில்லாத பொருட்கள் மீது விழுந்தால் அவை தூய்மையாகிவிடுகின்றன. முற்றத்தில் துளசி இருக்கிறது, மல்லிகை, முல்லை போன்ற கொடிகளும் இருக்கின்றன. அவை எப்படி முற்றத்தின் அழகை அதிகப்படுத்துகிறதோ, அதைப் போல இலக்கியத்தில் எந்த மாதிரியான விஷயம் இருந்தாலும், அது சரஸ்வதி தேவியின் அழகைக் கூட்டும். எனவே ஒரு லாவணியை எடுத்து விடு, கேட்கலாம்!’’
‘‘உங்கள் உத்தரவு பாபா!’’
தாஸ்கணு அழகான ஒரு லாவணியைப் பாடினார். குரல் மிக இனிமையாகவும் ஈர்ப்பு நிறைந்ததாகவும், வார்த்தை உச்சரிப்புகள் தெளிவாகவும் இருந்தது. லாவணி முடிந்ததும் எல்லோரும் கைதட்டினார்கள்.
‘‘நன்றாகப் பாடல் வரிகளை இயற்றுகிறாய், நன்றாகவும் பாடுகிறாய். அல்லாவின் பூரண அருள் உனக்கு இருக்கிறது. இப்பொழுது நீ ஒன்று செய்ய வேண்டும்.’’
‘‘என்ன சாயி?’’
‘‘உன்னுடைய லாவணிப் பாடல்களின் நடையும் தாளம் முதலானவையும் அப்படியே இருக்கட்டும். ஆனால் அது ஒரு கருத்தை வெளிப்படுத்தும்படியாக இருக்கட்டும்’’ என்று பாபா புன்முறுவலுடன் சொன்னார்.
‘‘அப்படியென்றால்... எனக்குப் புரியவில்லை?’’
‘‘பைத்தியக்காரா! நீ பெண்களின் உடல் அழகையும் சிருங்காரத்தையும் வர்ணித்துப் பாடுகிறாய். ஆனால் அந்த அழகு, நிமிடத்திற்கு நிமிடம் அழிந்துகொண்டே வரும். நீ அழகைப் பற்றிப் பாட நினைக்கிறாய். ஆனால், அந்த சௌந்தர்யம் நிலைத்து இருக்கவேண்டும்!’’
‘‘அப்படிப்பட்ட அழகு எது?’’
‘‘எண்ணங்களின் அழகு நிரந்தரமானது.’’
‘‘எண்ணங்கள் என்பது ஞானத்தின் நிலைப்பாடு ஆகும். அது கவிதையில் எப்படி வரும்?’’
‘‘தாஸ்கணு, காவியம் என்பது எளிமையான முறையில் சொல்லப்பட்ட சுவை மிகுந்த தத்துவஞானமாகும்.’’
அப்போதுதான் தாஸ்கணுவுக்கு உறைத்தது. ஏதோ புதிய விஷயங்களை முதல்முறையாகக் கேட்பது புரிந்தது.
‘‘பாபா, நீங்கள் சொல்லுங்கள். உலகம் மாறுவதாக எனக்கு இப்போது தெரிகிறது. புரட்சிகரமான எண்ணத்திற்கு இதுதான் சமயம் என்று தோன்றுகிறது!’’
‘‘உண்மைதான். புரட்சி என்பது வாழ்க்கையில் இயற்கை. அதுதான் வாழ்க்கையின் சட்டமாகும். இந்த சந்தர்ப்பத்தை நீ கெட்டியாகப் பிடித்துக் கொள். ஒன்றை நினைவில் வை. தற்காலிகமாகப் புரட்சி உண்டாவதில்லை. அதில் நீ முழு உணர்வுடன் ஈடுபட்டால், நல்ல ஆரம்பம் ஏற்படும்!’’
‘‘உண்மையாகவா?’’
‘‘கடவுளின் கடாட்சத்தால் நிரந்தரமான அழகின் தரிசனம் கிடைக்கும். சரீர அழகை வர்ணிப்பதை விட்டுவிட்டு, ஆத்மாவின் நிஜ அழகைக் காண உன் பார்வையைத் திருப்பு. அப்படிச் செய்தால் உனக்கு பெரிய கஜானாவே தென்படும். இன்றைக்கு இவ்வளவு போதும். அடேய் ஷாமா, விருந்தாளிகளுக்குக் குடிக்க, சாப்பிட ஏதாவது கொடுப்பா!’’
தாஸ்கணுவை அழைத்து வந்தது குறித்து நாநாசாகேப் சாந்தோர்கர் பெருமகிழ்ச்சியடைந்தார். அவர் மனதிலிருந்த எண்ணம் நிறைவேறும் போலிருந்தது.
தாஸ்கணு இப்போது வாரா வாரம் வந்துகொண்டிருந்தார். நிரந்தரமான அழகு எது என்பதை அவர் புரிந்துகொண்டார். பாபாவின் தனித்தன்மையை அறிந்தார். இருந்தாலும் லாவணி எழுதுவதை அவர் நிறுத்தவில்லை. ஆனால், நிச்சயமாக அது குறைந்தது. பாபாவின் ஆலோசனைப்படி, புரட்சிகரமான எண்ணங்கள் தோன்றி மொட்டின் இதழ்கள் விரிவதுபோல மனதில் விரிந்தன.
பாபா என்றால் பேசும், நடமாடும் ஒரு தத்துவஞானி என்று அவர் அறிந்துகொண்டார். அவர் நிறைய தத்துவ நூல்களைப் படித்திருந்தார். ஆனால் அவற்றில் வெறும் சர்ச்சைதான் இருந்தது. பூமியில் இருப்பவர்களுக்கு ஆகாயத்திலிருந்து விரித்து வைத்த விஷயமாக அவை புலப்பட்டன. ஆனால் பாபாவின் அறிவுரைகள் என்னும் விதை இம்மண்ணில் உண்மையான வாழ்க்கை என்ன என்பதை விதைத்தது. வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும், அதில் புரட்சிகரமான தத்துவஞானத்தையும் கூறியது. இந்த வித்தியாசத்தை உணர்ந்துகொண்டதில், அவர் மகிழ்ச்சி அடைந்தார்.
பாபாவின் சன்னிதானத்திற்கு வந்ததால், மனித வாழ்க்கை குறித்தும், பிற தத்துவங்கள் குறித்தும் பூர்ணமாக அறிந்துகொண்டதில் அவர் திருப்தியடைந்தார்!
பீமாபாயி மசூதியின் முன் இருக்கும் முற்றத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். காலை வேளை. பாபா வெளியே போயிருந்தார். அவர் வரும் நேரமாயிற்று.
அச்சமயம் அவளை யாரோ ‘‘அக்கா’’ என்று கூப்பிட்டார்கள். திரும்பிப் பார்த்தால், தொழுநோயால் பீடிக்கப்பட்டிருந்த ஒரு பெண் நின்றிருந்தாள். அவளுடைய சில விரல்கள் தேய்ந்து உதிர்ந்துவிட்டன. மூக்கின் நுனியும் தொங்கிக்கொண்டிருந்தது. பார்க்கவே அருவருப்பாகவும் பயமாகவும் இருந்தது.
‘‘யார் நீ?’’ - கையிலிருந்த துடைப்பத்தைப் பக்கத்தில் வைத்துவிட்டு பீமாபாயி கேட்டாள். அவளிடம் பேசவே பயந்தாள். ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.
‘‘என் பெயர் சந்திரா...’’
‘‘எங்கிருந்து வருகிறாய்?’’
‘‘ரொம்ப தூரத்திலிருந்து...’’
‘‘எதற்காக வந்தாய்?’’
‘‘பாபா என் நோயைக் குணப்படுத்துவார் என்பதற்காக வந்தேன்.’’
‘‘சரி... சரி... உட்கார். பாபா வந்துவிடுவார்.’’
அவள் தூரத்திலிருந்த கட்டிலில் உட்கார்ந்தாள். பீமாபாயி அவசர அவசரமாகப் பெருக்கினாள். எந்த நிமிடத்திலும் பாபா வந்துவிடுவார். பெருக்கிய பிறகு, தண்ணீர் விட்டுத் துடைத்தாள். துளசிக்கு தண்ணீர் ஊற்றினாள். அதற்குள் பாபா வந்து அமர்ந்தார்.
‘‘பீமா...’’
‘‘இதோ வந்துவிட்டேன் பாபா.’’
‘‘பெருக்கிவிட்டாயா?’’
‘‘முடிந்தது’’ என்று கூறி பாபாவை வணங்கினாள்.
‘‘நல்லா இரு!’’
‘‘பாபா’’
‘‘ம்...’’
‘‘சந்திரா என்னும் ஒரு பெண் உங்களைக் காண வந்திருக்கிறாள். கூப்பிடட்டுமா?’’
‘‘ம்...’’
‘‘ஏ சந்திரா, வா. பாபா கூப்பிடுகிறார்!’’
சந்திரா கீழே நின்றபடியே கை கூப்பினாள். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
‘‘சந்திரா, என்னம்மா நோயை இவ்வளவு தூரத்திற்கு வளர்த்து வந்திருக்கிறாய். வா... மேலே வா... யார் இந்த துவாரகமாயிக்கு வந்தாலும், அவர்களுடைய நோய் அகன்றுவிடும்... வா!’’ என அன்புடன் அழைத்தார் பாபா. ஆனால் அவள் அங்கேயே தயங்கி நின்றிருந்தாள்.
‘‘சந்திரா, உடம்பில் திமிர் இருக்கிறவர்களை பாபா மேலே வரவிடமாட்டார். அப்படித்தான் ஒரு வெள்ளைக்காரன் மூன்று நாட்களாக தவம் கிடந்தான். இருந்தாலும் பாபா அவனை மேலேறி வரச்சொல்லவில்லை. உன்னை மேலே ஏறி வரச் சொன்னது உன்னுடைய பாக்கியம்!’’ என்றாள் பீமாபாயி.
‘‘பாபா எனக்கு இந்த பயங்கர நோய் இருக்கிறது, எப்படி மேலே வருவது?’’
‘‘இதோ பார், நெருப்பு பற்ற வைத்த இந்த துனியைப் பார்த்தாய் அல்லவா. இது ஒவ்வொரு தீச்செயலையும் பஸ்பமாக்குகிறது. உன்னுடைய நோயையும் அது பஸ்பமாக்கும்... வா!’’
அவள் மேலே வந்தாள். பாபாவை வணங்கினாள். பாபா அவளைத் தன்னருகில் உட்கார வைத்தார். அவளுடைய கையை எடுத்து, தன் கையில் வைத்துக்கொண்டு, காயம்பட்ட விரல்களை வருடிக்கொண்டே சொன்னார்... ‘‘நீ நிறைய அனுபவித்துவிட்டாய். ஆனால், தங்களுடைய பாவ, புண்ணியங்களை அனுபவித்தே தீரணும். பொறுமையுடன் இன்னும் அனுபவிக்கிறாய். கவலைப்படாதே! இந்த நரக வேதனைக்கெல்லாம் ஒரு முடிவு சீக்கிரத்தில் வரும்’’ - பாபாவின் பேச்சைக் கேட்டு சந்திரா சந்தோஷமடைந்தாள்.
அவர் சூசகமாகச் சொன்னது புரியாவிட்டாலும், தன்னை தீரா நோயிலிருந்து பாபா காப்பாற்றுவார் என்பது அவளுக்குத் தெரிந்தது. பல வருடங்களுக்குப் பிறகு அவள் மனம் சமாதானமாயிற்று. நன்றாகக் குளித்து உடம்பு சீரானது போல உணர்ந்தாள்.
‘‘பாபா, இந்தக் கொடூரத்திலிருந்து என்னை விடுவியுங்கள்’’ என்று அவள் உணர்ச்சி மேலிட பாபாவின் காலில் விழுந்தாள்.
பாபா சடாமுடி போல சிதைந்திருந்த அவள் கூந்தலை அன்புடன் தடவிக்கொடுத்தபடி, ‘‘பீமா’’ என்று கூப்பிட்டார்.
‘‘என்ன பாபா?’’ கீழே இருந்தபடி இந்த அற்புதச் செயல்களைப் பார்த்துக்கொண்டிருந்த அவள் திகைப்போடு கேட்டாள். காரணம், அழுகிப்போன தேகம் கொண்ட சந்திராவைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது.
‘‘பீமா, நான் சொன்னபடி செய்வாயா?’’ பாபா வினவினார்.
‘‘இது என்ன கேள்வி? நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்பதுதானே இங்குள்ள முறை’’ கைகூப்பி பீமாபாய் சொன்னாள்.
‘‘பிறகு முடியாது என்று சொல்லக்கூடாது...’’
‘‘அப்படியெல்லாம் சொல்லமாட்டேன் பாபா!’’
‘‘சரி, இந்த சந்திராவை உன் வீட்டிற்கு அழைத்துச் செல். அவளைக் கவனித்துக் கொள். முடிந்தால், அவளுக்குத் தகுந்த சேவை செய்!’’
‘‘ஆ..!’’ - பீமாபாய் கலவரப்பட்டுக் கத்தினாள்.
‘‘இதோ பார்... இதற்காகத்தான் நான் முன்பே கேட்டேன். சரி விடு! நான் சொல்வதை உன்னால் செய்ய முடியாது. பரவாயில்லை. வேறு யாரிடமாவது சொல்கிறேன். மனப்பூர்வமாக சேவை செய்தால்தான் புண்ணியம் கிடைக்கும். கட்டாயத்தின் பேரில் செய்தால், அதற்கு பலன் இல்லை. சரி, நீ போகலாம்!’’
‘‘பாபா... நான் அவளை அழைத்துப் போயிருப்பேன். ஆனால்...’’
‘‘என்ன தடை?’’
‘‘அவளுக்கு தொழுநோயாச்சே...’’
‘‘அதனால் என்ன? அவள் என்னுடைய தங்கை. இப்பொழுது என்ன சொல்கிறாய்?’’
‘‘பாபா! இப்போதுதான் புத்தி வந்தது. என்னை மன்னியுங்கள். நீங்களே அவளுடைய சீழ் படிந்த கைவிரல்களைத் தொடும்போது, நான் ஏன் தொடக்கூடாது? அவள் எனக்கும் சகோதரி போல! சந்திரா, கிளம்பு என்னோடு! பாபா, ஆசீர்வதியுங்கள்.’’
‘‘இரண்டு பேரும் நலமுடன் வாழ்வீர்கள்’’ என்றார் பாபா ஆனந்தத்துடன். இருவரும் பாபாவை வணங்கிவிட்டு, பீமாபாயின் வீட்டிற்கு நடையைக் கட்டினார்கள்.
சந்திராவிற்கு தொழுநோய் வந்ததால் உறவினர்கள் அவள் உறவையே வெட்டிவிட்டார்கள். அவளுக்குத் தங்க இடமும் கிடைத்தது; பார்த்துக்கொள்ள ஓர் அக்காவும் கிடைத்துவிட்டாள், பாபாவின் கருணையால்.
பீமாபாய் ஒரு வெகுளி. பாபாவின் மேல் அளவுகடந்த மரியாதையும் அன்பும் வைத்திருந்தாள். பாபாவிற்கு சேவை செய்வதையே தன் வாழ்க்கையின் கடமையாகக் கொண்டிருந்தாள். பாபாவின் கட்டளையை நிறைவேற்றச் செயல்பட்டாள். இன்று
தான் முதன்முறையாக அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய மனம் சஞ்சலப்பட்டது, அதுவும் அஞ்ஞானத்தால். ஆனால், பாபா ஒரு கணத்தில் அந்த அஞ்ஞானத்தை அகற்றினார். இது ஒரு புரட்சிகரமான செயலாக இருந்தது.
தொழுநோயாளியின்மீது கொண்டிருந்த வெறுப்பை, அவளுடைய மனதிலிருந்து அகற்றித் தூய்மையாக்கினார். இதனால் அவள் வாழ்வும் பயனுள்ளதாயிற்று!
(தொடரும்...)