தாஜ்மகால் மட்டும் இல்லாவிட்டால் ஆக்ராவுக்கு ஏன் போக வேண்டும்? சச்சின் ஆடாத கிரிக்கெட் மேட்ச்சை ஏன் பார்க்க வேண்டும்?
- 24 ஆண்டுகளாக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் டெண்டுல்கர் ஓய்வுபெறும்போது பலரும் கேட்கும் கேள்வி இது. கிரிக்கெட் ரசிகர்களையும் தாண்டி இந்தியாவின் பெருமைக்குரிய அடையாளமாக சச்சினை எல்லோருக்கும் தெரியும். அவரது கிரிக்கெட் சாதனைகளை புள்ளிவிவரங்களோடு எல்லோரும் அலசி விட்டார்கள். எவரெஸ்ட்டுக்கு இணையாக இருக்கும் அந்தப் பட்டியல் இங்கே எதற்கு?
சச்சின் தனது கிரிக்கெட் வாழ்க்கை மூலம் இளைய தலைமுறைக்கு ஏராளமான பாடங்களைக் கொடுத்திருக்கிறார். எந்தத் துறையிலும், எந்த இடத்திலும் அதைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுவது சாத்தியம். அந்தப் பாடங்களில் பத்து இங்கே...
எளிமையே மந்திரச்சாவிதோல்வியைக் கூட தாங்கிக் கொள்வார்கள்; வெற்றியில் சிலர் ஆடும் ஆட்டம் இருக்கிறதே... உலகில் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து சச்சினை தனித்துக் காட்டுவது, அவரது எளிமையும் பணிவும்தான். எதிரிகளும் அவரைப் புகழக் காரணம் இதுதான். எத்தனை உயரங்களுக்குப் போனாலும், காலைத் தரையில் வைத்திருப்பவர்களைத்தான் உலகம் மதிக்கிறது.
தன்னம்பிக்கை கொள் 1993ம் ஆண்டு. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான செமி ஃபைனல் மேட்ச். 6 பந்துகளில் 6 ரன் எடுத்தால் தென் ஆப்ரிக்கா ஜெயித்துவிடும். அந்தக் கடைசி ஓவரை யார் போடுவது என அசாருதீன், கபில்தேவ், ஜடேஜா, ஸ்ரீநாத் என எல்லோரும் நீண்ட நேரம் ஆலோசிக்கிறார்கள். சச்சின் பெரிய பௌலர் கிடையாது. ஆனாலும் கேப்டன் கையிலிருந்து பந்தை கிட்டத்தட்ட பிடுங்கி, பந்துவீசத் தொடங்கினார். பேட்ஸ்மேன்கள் விளாசுகிற கடைசி ஓவரில் சச்சின் விட்டுக் கொடுத்தது வெறும் மூன்று ரன். இந்தியாவுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிடைத்தது. முழுநேரப் பந்துவீச்சாளர்களே தயங்குகிற ஒரு விஷயத்தை சச்சின் துணிந்து செய்ததற்குக் காரணம், அவரது தன்னம்பிக்கை. கடினமான முடிவுகளை துணிந்து எடுக்க வேண்டும்; அதற்காக வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்கத் தயங்கக் கூடாது. தன்னம்பிக்கை இருந்தால்தான் ரிஸ்க் எடுக்கும் தைரியம் வரும்.
ஆகச் சிறந்ததாக ஆகுசச்சின் அடைந்த பல சாதனைகள், இதற்குமுன் யாரும் செய்யாதவை. அதன்பின் அவர் சும்மா இல்லை. ஒருகட்டத்தில் அவரது சாதனைகளை அவரே முறியடிக்க ஆரம்பித்தார். மிகச் சிறந்த ஒன்றை நீங்கள் செய்துவிட்டால், அதன்பிறகு அதைவிட சிறந்ததையும் நீங்களே செய்ய வேண்டும். அதுதான் உன்னதத்தை அடையும் வழி.
வேட்கையோடு இருஒரு வேலையை ஒரே மாதிரி நான்கைந்து ஆண்டுகள் செய்தாலே பலருக்கு அலுத்துவிடும். அதை மிக உன்னதமாகச் செய்ய வேண்டும் என்ற நினைப்பே தோன்றாது. செக்கு மாடு போல உழல்வார்கள். ஒரே கிரிக்கெட்டை 24 ஆண்டுகளாக சிறப்பாக சச்சின் ஆடியதற்குக் காரணம், அந்த விளையாட்டு மீது அவர் கொண்டிருந்த வேட்கை. காலையில் எழும்போதே, ‘இன்று பொழுது எப்போது முடியுமோ’ என்ற நினைப்போடு வேலை பார்ப்பவர்கள் சிகரங்களைத் தொடுவதில்லை. நீங்கள் ரசிக்கும் ஒரு வேலையைச் செய்யுங்கள்; அந்த வேலைமீது காதல் கொள்ளுங்கள். அந்தக் காதலே, உங்களை அதில் மிகச்சிறந்தவராக மாற்றுகிறது!
அர்ப்பணிப்பு காட்டுசச்சின் 24 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடுகிறார். அவருக்குத் தெரியாதது எதுவுமில்லை. ஆனாலும் தனது கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பாகவும் பல மணி நேரம் பயிற்சி செய்தார். ஒரு பள்ளிச் சிறுவனின் ஆர்வத்தோடு அவர் தினம் தினம் கற்றார். அர்ப்பணிப்பையும் கடின உழைப்பையும் கொடுப்பவர்கள் மட்டுமே புதியன கற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொரு துறையிலும் திறமைசாலிகளுக்கு பஞ்சமில்லை. ஆனால் அர்ப்பணிப்போடு உழைப்பவருக்கே வானம் வசப்படுகிறது!
உறுதி காட்டுஎத்தனை காயங்கள், எத்தனை விமர்சனங்கள்... நீண்ட பயணத்தில் எதற்குக் கலங்கி இருந்தாலும் அவர் காணாமல் போயிருப்பார். ஆனால் தீர்மானமான உறுதி, அவரை சிகரம் தொட வைத்தது. உங்கள் வேலையை அற்புதமாகச் செய்ய, புதிதாக எதையும் செய்ய, நீங்கள் தயாராக இருக்கும்போது உங்களைத் தடுப்பது நீங்கள் மட்டும்தான். அந்தத் தடையை
உறுதியால் அகற்றிவிட்டால் போதும்... பயணம்
சுகமாகிவிடும்!
சுய ஒழுக்கம் முக்கியம்சச்சினைப் போலவே ஆட வந்த, அவரோடு ஒப்பிடப்பட்ட, அவரைவிட சிறந்தவர் என அடையாளம் காட்டப்பட்ட பலர் காணாமல் போயிருக்கிறார்கள். சச்சின் இன்னமும் புகழேணியின் உச்சியில் நிற்கிறார். வெற்றியில் கிடைக்கும் புகழ், அதிகாரம்... எல்லாம் பாதை மாற்றி விடும். அடிப்படை வேலையை, இலக்கை கோட்டை விடுவார்கள். சுய ஒழுக்கம் மட்டுமே சரியான பாதையில் கவனம் செலுத்த வைக்கும். கடுமையாக தங்களை சுய விமர்சனம் செய்பவர்களுக்கே வாழ்க்கைப் பாதை மலர் விரித்து இனிமை காட்டுகிறது.
கவனம் தேவைபேட்ஸ்மேனை அவுட்டாக்க வேண்டும் என்ற இலக்கோடுதான் ஒவ்வொரு பௌலரும் பந்து வீசுகிறார்கள். அதை அடித்து அடித்துத்தான் ரன் எடுக்க வேண்டும். எத்தனை தாக்குதல்கள், எத்தனைவிதமான ஃபீல்டிங் உபாயங்கள்... போர்முனை போல தாக்குதல் தொடுக்கும் களத்தில் நின்று, சாதனை உச்சங்களை அடைய எவ்வளவு கவனம் வேண்டும்! உங்கள் வேலையில், தொழிலில், மற்றவர்களைவிட அதிக கவனம் செலுத்தினால்தான், யாரும் செல்லாத பாதையில் உங்களால் பயணிக்க முடியும்.
இலக்கு வைவாழ்க்கையில் தான் என்ன செய்ய வேண்டும் என சச்சின் சில இலக்குகள் வைத்திருந்தார்; அவற்றை அடைவதற்கான திட்டங்களும் அவரிடம் இருந்தன. ஒவ்வொரு கட்டத்திலும் அதைச் செய்தபிறகே அவர் ஓய்வை அறிவித்தார். உங்களிடம் அபார திறமை இருக்கலாம். ஆனால் இலக்குகளும், அவற்றை எட்டுவதற்கான வழிமுறைகளும் இல்லாவிட்டால், உங்கள் திறமை காட்டில் காய்ந்த நிலவு போல ஆகிவிடும்! சவாலான, சாத்தியமான இலக்குகள் வாழ்க்கையில் அவசியம்!
பதிலடி கொடு‘அவ்வளவுதான்... சச்சின் இதோடு காலி’ என எத்தனை முறை எழுதியிருப்பார்கள்! ஒருமுறைகூட சச்சின் அதற்கு தனது பேச்சால் பதிலடி தந்ததில்லை; விளையாட்டால்தான் தந்தார். திறமையும் உழைப்பும் அர்ப்பணிப்பும் காட்டுபவர்கள், எத்தனை தோல்விகளுக்குப் பிறகும் மீண்டும் வெல்வார்கள்; அவர்கள் வாயால் பேசுவதில்லை. தங்கள் உழைப்பால் பதிலடி கொடுக்கிறார்கள்.
- அலோக் ஸ்ரீவத்ஸவா