இலக்கியம் சமூகத்தை திருத்தாது




கடந்த ஞாயிறு மறைந்த புஷ்பா தங்கதுரை, ஜனரஞ்சக எழுத்துலகின் பெரிய அடையாளம். அவரின் எழுத்தை தொடர்ந்து வாசித்து வந்தவர்கள் எளிமையான மொழி ஆளுமையையும் சுவாரஸ்யத்தையும் அருமையான கதைப்போக்கையும் அறிந்து வந்திருக்கிறார்கள்.
அவரைப் போல் வார்த்தை அடைசல் இல்லாமல் தமிழில் எழுதியவர்கள் - எழுதுகிறவர்கள் மிகக் குறைவு. ‘திரு அரங்கன் உலா’ அவருடைய ஆகச் சிறந்த பதிவு. ‘குங்குமம்’ 16-11-2001 இதழில் வெளிவந்த அவரது நேர்காணல் இங்கே அவரது நினைவாக... இடறல் இல்லாமல், தகவல் தொகுப்பாக மட்டும் நின்றுவிடாமல், சொல் மிகைப்பு இல்லாமல் இருக்கும் இந்த நேர்காணல் கூட அவரது நடைப்போக்கின் ஒரு சான்றுதான்.

‘‘சிறுகதை எழுதுகிறீர்கள். அதற்கு குறிக்கோள்எதுவும் உண்டா?’’
‘‘எதையும் நான் வைத்துக் கொள்வதில்லை. சமூகப் பிரக்ஞை, சமூகச் சீர்
திருத்தம் என்கிற மாதிரி எதுவும் கிடையாது. கதையில் அது தானாக வந்தால் உண்டு. இல்லாவிட்டால் இல்லை.’’
‘‘எல்லோரும் இப்படி இருந்துவிட்டால், சமூகம் என்ன ஆவது?’’
‘‘எதுவும் ஆகாது. அதன் வழக்கப்படியே போய்க்கொண்டி ருக்கும். கதை சமூகத்தைச் சீர்திருத்தும் என்பது எல்லாம் பழைய நூற்றாண்டுக் கொள்கை. தற்கால மேனாட்டு எழுத்தாளர்கள் கூறுவதை நீங்கள் கேட்கவில்லையா? ‘கதைக்கு சமூகப் பிரக்ஞை வேண்டும். சமூகச் சீர்திருத்தம் வேண்டும். மனிதனை உயர்த்த வேண்டும்’ என்றெல்லாம் உலகில் நிலவி வரும் அத்தனை நோக்கங்களையும் போட்டுவிட்டு,   ‘Be interesting’   என்பதுதான் அவர்கள் தரும் ஒரே விளக்கம்! எதைச் சொன்னாலும் Be interesting, அவ்வளவுதான்!’’

‘‘வேறு எதுவும் தேவையில்லையா?’’
‘‘சாதாரணமாக நாம் எதற்குமே மேனாட்டு எழுத்தாளர்களைத்தான் குறிக்கோளாக எடுக்கிறோம். எடுத்துக்காட்டாக எடுக்கிறோம். அந்த மேனாட்டு தற்கால எழுத்தாளர்கள் கூறுவதை தயவுசெய்து படித்துப் பாருங்கள். கம்யூனிச சிந்தனை கொண்ட ஒரு அமெரிக்க எழுத்தாளரே கூறுகிறார் -‘என்னால் சமூகத்தைத் திருத்தவும் முடியாது; அதே நேரம் கெடுக்கவும் முடியாது.’ தற்காலத்தில் வெகுஜனப் பத்திரிகைகள் நிறைய இருக்கின்றன. பத்து லட்சம் விற்கிறது என்றுகூட வைத்துக்கொள்வோம். ஆனால், இத்தனை கோடி மக்களிடையே இது வெகு அற்பம். அதிலும் ஏதோ ஒரு வாரத்தில், ஏதோ ஒரு மூலையில் கதை எழுதிவிட்டு, சமூகம் அதைப் படித்து, உருகி, மாறப்போகிறது என்று நினைப்பது எனக்குச் சரியாகத் தோன்றவில்லை.’’
‘‘அப்படியானால் சமூகம் எப்படி மாறுகிறது?’’
‘‘அதன் காரணங்களே தனியாக இருக்க வேண்டும். அது ஒரு மேக்ரோ (Macro) விஞ்ஞானமாக இருக்கும். ‘சமூகம் தன்னாலேயே மாறுகிறது’ என்கிறார் விவேகானந்தர்.’’
‘‘இலக்கியக் கதைகள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?’’
‘‘நன்றாக இருந்தால் ரசிக்கிறேன்.’’

‘‘உங்களை அது மேலே இழுத்துப் போகவில்லை? ஒரு மனநிறைவு ஏற்படுமே?’’
‘‘ஏன்? அது சாதாரண கதையிலும்தான் நேர்கிறது. இலக்கியம், கர்நாடக சங்கீதம் போல் என்போம். சிலர்தான் ரசிக்க முடியும். பலர் ரசிப்பது துக்கடா பாடல்கள்தான். நான் இரண்டையும் ரசிக்கிறேன். நிறைய பேர் இதில் உண்டு என்று நம்புகிறேன்.’’
‘‘இலக்கியமும், சாதாரண கதையும் ஒன்று என்கிறீர்களா?’’
‘‘ஒரு கொச்சையான உதாரணம் இருக்கிறது. பலர் ஒரு பெக் மதுவால் போதை அடைந்தால், சிலருக்கு நாலு பெக்குகள் தேவை. இலக்கிய ரசிகர்களுக்கும் இப்படித்தான்.’’
‘‘அப்போது நம் கருத்துகள் தவறா?’’
‘‘சென்ற நூற்றாண்டில் ‘இலக்கியம் சமூகத்தைப் பாதிக்கும்’ என்ற கருத்து நிலவியது. ஆனால், உலக முன்னேற்ற அடிப்படையில் கருத்துகள் மாறி வரும். தற்காலக் கருத்து நிறைய மாறிவிட்டன. நாம்தான் அதனோடு ஒட்டாது இருந்துவிட்டோம்.’’
‘‘நீங்கள் பிறர் எழுத்துக்களால் பாதிக்கப்படவில்லையா?’’
‘‘பாதிக்கப்பட்டிருக்கிறேன். பிறர் எழுதும் விதங்கள் என்னை பாதித்திருக்கின்றன. அவர்கள் எழுதும் கருத்துக்களால் அல்ல; நானே சமூகத்தில் ஒரு யூனிட். என்னை வைத்துக்கொண்டு சமூகத்தைப் பார்க்கிறேன். பிறர் எழுத்துக்கள் என்னை மாற்றி விடுவதில்லை.

உலகில் எவ்வளவு பெரிய ஞானிகள், அறிஞர்கள் தோன்றி இருக்கிறார்கள். அவர்களால் முடியாத ஒன்றை நான் செய்துவிட முடியுமா?’’
‘‘உங்கள் எழுத்துக்கள் காலத்தை வென்று நிற்க முடியுமா?’’
‘‘நிச்சயம் முடியாது. அப்படி முடிந்தால், சமூகம் மாறாமல் அப்படியே நிற்கிறது என்று அர்த்தம். சமூகம் இப்போது ஒரே வேகத்தில் மாறிக்கொண்டிருக்கிறது. போன ஆண்டு நோபல் பரிசு பெற்ற நாவலைக்கூட இப்போது யாரும் நினைப்பதில்லை. யார், எந்தக் கதைக்கு வாங்கினார்கள் என்பது மறந்து விடுகிறது. அந்த அளவுக்கு வேகம்!’’

‘‘இலக்கிய ஏடுகள் பற்றி என்ன கூறுகிறீர்கள்?’’
‘‘அவைகள் பெரும்பாலும் ரொம்ப நாள் இருப்பது கஷ்டம். சில ஜீவித்து கிட்டத்தட்ட வெகுஜனப் பத்திரிகையின் அந்தஸ்துக்கு வந்துவிடும். யாரோ ஒரு வசதி படைத்த நபராலோ, பலராலோ இவை நடைபெறுகின்றன. இவற்றில் எழுதும் எழுத்துகளை சொற்பமாகப் படித்திருக்கிறேன். இதில் உள்ள எழுத்தாளர் பெரும்பான்மையினருக்கு (ஒரு 75 சதவீதம் வைத்துக்கொள்ளலாமா?) கதைக் கற்பனை சரியாக வருவதில்லை. வாக்கிய ஜாலங்களை வைத்தே எழுதிவிட்டு, ‘இதுவேதான் கதை, இதுவேதான் ரசனை’ என்கிறார்கள்.’’

‘‘தமிழில் விமர்சனங்களைப் பற்றி?’’
‘‘இவைகளைப் பெரும்பாலும் எழுத்தாளர்களே செய்வதாகத் தெரிகிறது. அதனால் வேண்டுதல், வேண்டாமை நிறைய வந்துவிடுகிறது. மலையாளத்தில்
அறிஞர்களே - பெரும்பாலும் பேராசிரியர்களே - விமர்சகர்களாக வருகிறார்கள். அவர்கள் பாலர் மலரிலிருந்து உயரிய கதைகள் வரை எல்லாவற்றையுமே ஒரு இலக்கிய வளர்ச்சியாக ஏற்றுக்கொள்கிறார்கள்.’’
- கே.பி.