நியூஸ் வே





சிம்பு இப்போ சின்சியர். காலையில் பாண்டிராஜ் படத்திற்கு ஆஜராகிவிடுகிறார். சாப்பிடப் போனால் கூட டைரக்டரிடம் பர்மிஷன் வாங்குகிறார். நடுவில் அதேமாதிரி கௌதம் மேனன் படத்திற்குப் போவதற்கும் அனுமதி கேட்டு இருக்கிறார். இரண்டு நாள் டிஸ்கஷன் முடித்து விட்டு வந்துவிட்டார். ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ என்ன ஆச்சு?

அமலா பாலுக்கும் அசினுக்கும் இருக்கும் ஒற்றுமைகளைப் பட்டியலிடுகிறது கோலிவுட் கோஷ்டி ஒன்று. இருவரும் கேரளத்து வார்ப்புகள். ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். இருவருமே அப்படி ஒன்றும் கலர் இல்லை. பரபரப்பாக அறிமுகமாகி, அதே வேகத்தில் பாலிவுட் வரைக்கும் போய், அப்புறம் சர சரவென வாய்ப்புகளை இழந்தார் அசின். அமலாவும் இப்போது அதே ரூட்டில் இருப்பதாக பேச்சு!

சிவகார்த்திகேயன் ‘ஆடி’ கார் வாங்கினாலும் வாங்கினார். தமிழ் சினிமாவே ‘ஆடி’ப் போயிருக்கிறது. வழக்கம் போல தனுஷின் ஆசீர்வாதத்தாலும், ஏற்பாட்டாலும்தான் இந்தக் காரை வாங்கினாராம். வாங்கியாச்சா... அழகா வீட்டுல வச்சுப்புட்டு ரஜினி மாதிரி அம்பாசிடர்ல வாங்கப்பா..!

கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவுக்குப் போன கமல், அங்கு மேற்கு வங்க மம்தா பானர்ஜியைப் பார்த்து உருகிவிட்டார். மேடையில் உட்காராமல் பரபரவென சுழன்று விழா ஏற்பாடுகளை மம்தா கவனித்த விதத்தில் பூரித்துப் போய், ‘‘முதல்முறையாக நான் அவரை சந்திக்கிறேன். இங்கே ஒரு முதல்வரைப் பார்க்கவில்லை. சகோதரியைப் பார்க்கிறேன்’’ என நெகிழ்ந்தார். இந்தமுறை கொல்கத்தா விசிட்டில் நேதாஜி வாழ்ந்த வீட்டையும் சுற்றிப் பார்த்துவிட்டு வந்திருக்கிறார் கமல்.

திடீரென தமிழ் சினிமாவில் காமெடிக்கு போட்டி பெருகிவிட்டது. வடிவேலு சென்னையிலேயே வந்து தங்கி ஓவர் போனில் எல்லோரிடமும் பேச ஆரம்பித்து விட்டார்; அடுத்து பரத் படத்திலும் நடிக்கிறார். சூரி தன் ரேட்டை உயர்த்திவிட்டார். ‘நம்மளையும் கவனிங்கப்பா’ என விவேக்கும் அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகி விட்டார்.

ரொம்ப நாளாக தேங்கியிருந்த ‘யான்’ மறுபடியும் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறார் ஜீவா. ஒரு சிறு காட்சியில் ரவி கே.சந்திரனின் அன்புக்காக அமிதாப் நடிப்பார் என்கிறார்கள்.

அடுத்த பாலாவின் படம் கரகாட்டத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கிறதாம். கிட்டத்தட்ட சசிகுமார் நடிப்பது முடிவாகிவிட்டது. மதுரை வட்டாரத்தில் ஒரு காலத்தில் புகழ்பெற்ற கரகாட்டத்தின் பெருமையையும் கதை பேசுமாம்.

அஜித்திற்கு இப்போதைய இளம் டைரக்டர்களில் அட்லி மேல்தான் க்ரேஸ். அவர் இயக்கத்தில் ஒரு படம் நடித்துவிட தீர்மானித்துவிட்டாராம். அட்லிக்கு க்ரீன் சிக்னல் கொடுக்கப்பட்டு, கதை தயார் செய்வதில் எங்கோ தலைமறைவாகி விட்டார். ஏ.ஆர்.முருகதாஸின் புது வெர்ஷன் மாதிரி இல்லை அட்லி!

குத்து ரம்யா... ஸாரி, திவ்யா ஸ்பந்தனா... தப்பு, தப்பு, எம்.பி ரம்யா மீது கொதிப்பில் இருக்கிறது கன்னட திரையுல கம். நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர், அத்தனை ப்ராஜக்ட்களையும் அப்படியே டீலில் விட்டுவிட்டு அரசியலில் குதித்துவிட்டார். குறிப்பாக ஜெகதீஷ் ஹீரோவாக நடிக்கும் ‘நீர் டோஸ்’ படத்தின் பாதி ஷூட்டிங் ஓவர். ‘‘எப்போதோ படம் ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது. மாதம் 10 லட்ச ரூபாய் வட்டி கட்டுகிறேன்’’ என கண்ணைக் கசக்குகிறார் தயாரிப்பாளர். ‘‘நான் ஒன்றும் நடிப்புக்கு முழுக்குப் போடவில்லை. வெயிட் பண்ணுங்க... வர்றேன்’’ என்கிறார் திவ்யா.



‘அழகுராஜா’வில் தனது காமெடி தோல்வி அடைந்த பிறகு, டீமோடு ஒரு அவசர கால மீட்டிங் போட்டார் சந்தானம். இனி பெண்களைத் திட்டுவதையும் டபுள்மீனிங் வசனங்களையும்
கைவிடுவது, குறிப்பாக சில ஹீரோக்களோடு சேர்ந்து நடிப்பதைத் தவிர்ப்பது, இன்னும் சில புது ஹீரோக்களோடு சேர்ந்து நடிப்பது என பல முடிவுகள் எடுக்கப்பட்டன வாம். சிவப்பு நடிகர் தொடர்விவாதத்தில் கறுத்துப் போய் விட்டதுதான் செய்தி.

தான் நடித்த படத்துக்கே டப்பிங் கொடுக்க நேரமில்லாத அளவுக்கு பிஸியாக இருக்கும் விஜய்சேதுபதி, பட வாய்ப்பு இல்லாத காலத்தில் டப்பிங் கலைஞராக இருந்திருக்கிறார்.

அஜித்திற்கு அடுத்து டைரக்டர் ஷங்கர் தன் ட்விட்டர் பேஜில் ‘பாண்டிய நாடு’ பற்றி நாலைந்து வரிகளைப் போட்டாலும் போட்டார்... விஷாலும், சுசீந்திரனும் பரவசமாகி விட்டார்கள். ஷங்கருக்கே போன் போட்டு நன்றி தெரிவிக்க, ‘‘உள்ளதை சொன்னேன் பாஸ்’’ என சொன்னாராம் ஷங்கர். அடுத்து ஷங்கர் கண்ணில் பட்டு விடுவாரோ விஷால்..!

சைலன்ஸ்

முன்பெல்லாம் அப்பா பேச்சைக் கேட்டுக்கொண்டு எந்த நடிகரோடும் ஒட்ட மாட்டார் அந்த நடிகர். ஒதுக்குப்புறமாக வீடு அமைந்ததும் இதற்கு வசதியாகப் போய்விட்டது. பட ரிலீஸ் பிரச்னையின்போது யாரும் குரல் கொடுக்காததற்குப் பிறகுதான் இப்போது எல்லோரையும் அரவணைக்கிறார். அலைபேசியில் ஹலோ சொல்லி வைக்கிறார். போன் வரும்போது ஆச்சரியப்படுகிறார்கள் இளம் நடிகர்கள்.

சொந்தப் படம் தயாரிக்கும் மியூசிக் டைரக்டர், படத்துக்கு இசையமைப்பாளராக இன்னொருவரைத்தான் நியமித்தார். படமெல்லாம் முடிந்து பின்னணி இசைக்காக அவர் காத்துக்கொண்டிருக்க, காதும் காதும் வைத்த மாதிரி தன் படத்துக்கு தானே பின்னணி அமைத்துவிட்டாராம். இந்த முடிவை முன்னாடியே எடுத்திருக்கலாமே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் ‘நொந்த’ன்.

சூப்பர் ஸ்டாருக்கே ஜோடி போட்டவர்தான் என்றாலும் மழை நாயகியின் காட்டில் பட மழை இல்லாமல் காய்ந்துகொண்டிருக்கிறார். இனியும் காத்திருப்பது சரியில்லை என கல்யாண முடிவை எடுத்திருக்கிறார். இது காதல் கல்யாணம்தான். க்ரைம் படங்களை எடுப்பதில் கில்லாடியான அந்த தெலுங்கு இயக்குனர்தான் நடிகையின் மனசில் இருப்பவராம்.