கவிதைக்காரர்கள் வீதி





விதைக்கப்பட்டவர்களின் குரல்

வீடுகளும் கல்லறைகளும்
கோயில்களும் அழிக்கப்படுகையில்
ஒரு நாய்க்குட்டி இடமற்றுத் திரிகிறது

கல்லறையற்றிருக்கும் மரித்தோருக்கும்
வீடற்றிருக்கும் மனிதர்களுக்கும்
இடம் மறுக்கப்பட்ட கடவுள் என்ன செய்வார்?

இருப்பவர்களின் வீடுகள் அழிக்கப்படுகையில்
மாண்டு போன தனது பிள்ளையின்
அழிக்கப்பட்ட கல்லறைக்காய்
ஒரு துண்டு நிலம் கேட்கிறாள்
கார்த்திகை மாதக் காந்தள் மலரோடு
அலையும் தாயொருத்தி

பிள்ளைகளும் இல்லை
கல்லறைகளும் இல்லை
கனவைப் போல பூத்திருக்கும்
காந்தள் பூ மரங்களில்
எரிகின்றன விளக்குகள்

வாழும்பொழுதும்
மரணத்திற்குப் பின்னரும்
இடம் மறுக்கப்படுகையில்
இருப்பவர்களும் இறந்தவர்களும்
என்ன செய்ய முடியும்

எதற்காக இறந்தோம்
எதற்காக இருந்து கொண்டிருக்கிறோம்

நீ நினைப்பாய்
கடவுளுக்குக்கூட நிலம் மறுக்கப்படுகையில்
என்ன நம்பிக்கையோடு இருக்கிறார்களென!

எனது நிலத்தின் கல்லறைகள்
மரணத்தை விரும்புபவையல்ல
அழகியதொரு வாழ்வின் கனவோடு
புதையுண்டு போனவர்கள்
வசிக்கும் வீடுகள்

குழந்தைகளின் குரலாக
கல்லறைகளின் குரலாக
நாம் கேட்போம்

ஏனெனில்
இது எமது தாய் நிலம்
நாம் யாருடைய நிலத்தையும் அபகரிக்கவில்லை
தீபச்செல்வன்