கர்ணனின் கவசம்





குள்ள மனிதனுக்கு வியர்க்க ஆரம்பித்தது. சகுனி எப்படி தாயத்தை உருட்டுவார் என்று கணக்கிட்டுத்தான் அந்த மாய சிறைக்குள் நடக்க ஆரம்பித்தான். ஆனால், அது முடிவில்லாத பயணமாகவே இருந்தது. எடுத்து வைத்த அடிகளில் பிழையுமில்லை; பிசிறுமில்லை. கணக்கு சரிதான். என்றாலும், எதிர்முனையை அடையவும் முடியவில்லை. முகம் தெரியாத நண்பர்களை சந்திக்கவும் இயலவில்லை.

எடுத்த முயற்சிகள் எல்லாம் வீண்தானா? கர்ணனின் கவசத்தை எதிரிகளிடம் பறிகொடுக்க வேண்டியதுதானா? எந்த வகையிலாவது தான் காப்பாற்றிவிடுவோம் என்று நம்பிக் கொண்டிருக்கும் தன்னைச் சேர்ந்த மற்ற எட்டு பேரையும் பலிகொடுக்க வேண்டியதுதானா..?
முடிவற்ற கேள்விகள் சுற்றிச் சுற்றி வர, அவன் மனதில் மெல்ல மெல்ல அச்சம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.

வேண்டுமானால் கணக்கை மாற்றி அடியெடுத்து வைப்போமா?
நொடியில் பூத்த சிந்தனையை பொசுக்கிவிட்டு, ‘என்ன ஆனாலும் சரி... பின்வாங்க வேண்டாம்...’ என்ற முடிவுடன் பழையபடியே சகுனி தாயம் உருட்டுவது போல் நடக்க ஆரம்பித்தான்.
‘‘என்னது... திரும்பவும் சொல்லு...’’ - ரவிதாசன் ஆக்ரோஷத்துடன் ஃபாஸ்ட்டின் சட்டையைப் பிடித்தான்.

‘‘எதுக்கு இப்ப டென்ஷனாகறீங்க?’’ பாய்ந்த சூ யென், இருவரையும் விலக்கினான்.
‘‘முட்டாள்...’’ - ரவிதாசன் அவனைத் தள்ளிவிட்டு ஃபாஸ்ட் டின் பக்கம் திரும்பினான். ‘‘எதையும் மறைக்காம சொல்லு...’’
‘‘நீங்க சொல்லவிட்டால்தான...’’ என்றபடி கசங்கிய தன் சட்டையைச் சரி செய்தவன், சொல்ல ஆரம்பித்தான். ‘‘வந்தது விதுரரான்னு தெரியாது. ஆனா, அதுதான் தன்னோட பேருன்னு சொன்னாரு. ரொம்ப வயசானவர். கழுத்துவரைக்கும் வெள்ளை நிற தாடி இருந்தது. கண்கள்ல ஒளின்னா ஒளி அப்படியொரு ஒளி. அழுக்கான ஜிப்பாவும், தூசு படிஞ்ச வேஷ்டியும் கட்டியிருந்தாரு. துவைச்சு பல மாசமாகியிருக்கும். ஆனா, எந்த துர்நாற்றமும் வரலை...’’

‘‘அவர்தான் உங்களை திரிசங்கு சொர்க்கத்துக்கு அனுப்பி வைச்சாரா?’’
‘‘ஆமா...’’
‘‘துரியோதனன் உங்ககிட்ட எந்த விவரமும் கேட்கலையா?’’
‘‘இல்ல...’’
‘‘சங்கர்... ஏய் சங்கர்...’’
‘‘என்னப்பா...’’ - திடுக்கிட்டு ரவிதாசனை நோக்கித் திரும்பினான் சங்கர்.
‘‘எதுக்கு பாலாவையே உற்றுப் பார்த்துட்டு இருக்க?’’
‘‘சும்மாதான்...’’
‘‘மண்ணாங்கட்டி... உன்னையும் ஃபாஸ்ட் சொல்ற தாத்தாதான் திரிசங்கு சொர்க்கத்துக்கு அனுப்பி வைச்சாரா?’’
‘‘அப்படித்தான் நினைக்கறேன்...’’
‘‘நினைக்கிறயா... அப்படின்னா?’’
‘‘ஃபாஸ்ட் சொல்ற அடையாளங்கள் அப்படியே நான் சந்திச்ச தாத்தாவோட பொருந்துது. ஸோம்பியா இருந்த என்னை வியாசர் குணமாக்கினாரு. சோழ இளவரசி குந்தவை என்னை அந்த தாத்தாகிட்ட ஒப்படைச்சாங்க...’’
‘‘குடியே மூழ்கிடுச்சு...’’ - பற்களைக் கடித்தான் ரவிதாசன். ‘‘நீங்க எல்லாரும் சந்திச்சது விதுரரை இல்ல...’’
‘‘பின்ன?’’ கோரசாக அனைவரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

பாலாவின் விரல் வழியே ஆன் ஆன சாட்டிலைட் போனில் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த குந்தி, இடி இடியென சிரித்தாள். அந்த எதிரொலியில் திரிசங்கு சொர்க்கமே அதிர்ந்தது. ரவிதாசன் என்ன சொல்லப் போகிறான் என்பது அவளுக்குத் தெரியாதா என்ன? அவளுக்குத் தெரிந்ததைத்தான் கபாடபுரத்தில் ரவிதாசனும் அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
‘‘அந்த வயசானவரு பேரு விமலானந்தா... ஆனா, அவரோட உண்மையான பேரு என்ன தெரியுமா?’’
‘‘இந்திரன்...’’ - தாராவைத் தொடர்ந்து வெளியே வந்த ஆதித்யா, நடராஜரைச் சுற்றி வானில் பறந்து கொண்டிருந்த விமலானந்தரை நோக்கி மரியாதையுடன் தலை வணங்கினான்.
‘‘வாட்...’’ - பிரமிப்புடன் அவனை ஏறிட்டாள் தாரா.

‘‘எஸ்... தாரா... விமலானந்தரா உன் முன்னால தோன்றினவரும்... சென்னைலயும், மும்பைலயும் உன் கால்ல விழுந்தவரும் இந்திரன்தான்...’’
‘‘எந்த இந்திரனை சொல்ற? அந்தணரா மாறுவேஷத்துல போய் கர்ணன்கிட்டேந்து கவசகுண்டலத்தை வாங்கினாரே... அவரா..?’’
‘‘அவரேதான்...’’ என்று ஆதித்யா முடிக்கவும், விண்வெளி வீரரைப் போல் கவச உடை அணிந்த விமலானந்தர் என்கிற இந்திரன் அவர்களை அணுகவும் சரியாக இருந்தது.
கண்களைப் பாதி மூடியபடி தாயத்தை தன் கைகளில் உருட்டிய சகுனி, அதை தரையில் வீசவில்லை.
‘‘என்ன மாமா... என்ன விஷயம்?’’ துரியோதனன் பரபரத்தான்.
‘‘கணக்கு தப்பாகுதுன்னு நினைக்கறேன்...’’ கண்களைத் திறக்காமல் சகுனி முணுமுணுத்தார்.
‘‘என்ன சொல்ற?’’ - பரமேஸ்வர பெருந்தச்சனின் நெற்றி சுருங்கியது.
‘‘ஆதித்யாவும், தாராவும் மாய உலக சூத்திரத்தை உடைச்சிட்டாங்க...’’
‘‘நவகிரகங்கள்?’’
‘‘நவகிரகங்களா?’’ - கண்களைத் திறந்த சகுனி, பரமேஸ்வர பெருந்தச்சனை குழப்பத்துடன் பார்த்தார்.
‘‘அதான்... சுரங்கத்துல சிக்கின அந்த ஒன்பது பேர்...’’
‘‘அதுல ஒருத்தன் மட்டும் வழியைக் கண்டுபிடிக்க முயற்சி பண்ணிகிட்டு இருக்கான்...’’
‘‘குள்ளமா இருக்கானா?’’
‘‘ஆமா...’’
‘‘நினைச்சேன்... இனி தாயம் சரிப்படாது...’’
‘‘அப்ப இந்த முறையும் நமக்கு கர்ணனின் கவசம் கிடைக்காதா?’’ - துரியோதனன் சோர்வுடன் நாற்காலியில் அமர்ந்தான்.
‘‘யார் சொன்னது? பொக்கிஷம் நமக்குத்தான்...’’ பரமேஸ்வர பெருந்தச்சனின் கண்கள் ஜொலித்தன.

‘‘புரியலையே...’’
‘‘புரியும்படியா சொல்றேன்...’’ என்று தன் கைகளைத் தேய்த்துக் கொண்ட பரமேஸ்வர பெருந்தச்சன் சொல்லத் தொடங்கினார். ‘‘மணல் மனிதனே 58 ரிஷிகள் தவம் செய்யும் மணல் குகைகளாக சிதறியிருக்கிறான். ஜடாயுவின் சிறகில் மறைந்திருக்கிறாள் தாரா. அவளது சிரசில் வீற்றிருக்கிறாள் சரஸ்வதி. சரஸ்வதியின் மறைவே, காளிங்கனின் நர்த்தனம். நர்த்தனத்தின் முடிவே மதுரை வெள்ளியம்பல நடராஜர். நடராஜரின் சொரூபமே கபாடபுரத்தின் இருப்பு. அந்த இருப்பின் சுவாசத்தில் துடிக்கிறது பொக்கிஷத்தின் வரைபடம். வரைபடத்தின் புள்ளிகளே இன்றைய கோயில்கள். சிற்பங்களின் மொழியே தேடும் புதையலின் திசைகள்...’’
‘‘இது...’’ சகுனி இழுத்தார்.
‘‘வியாசர் என்கிட்ட சொன்ன ரகசியம்...’’
‘‘அப்ப சரி...’’ என்று உற்சாகமான சகுனி, தாயத்தை தன் கைகளில் உருட்டத் தொடங்கினார்.
‘‘இனி இது எதுக்கு மாமா..?’’
‘‘எப்படியும் கவசம் நமக்குத்தான் துரியோதனா... அதுக்கு முன்னாடி நவகிரகங்களை அழிக்க வேண்டாமா?’’ என்றபடி உருட்டிய தாயத்தை தரையில் வீசினார்.
‘‘நம்மோட இறுதி மூச்சு நிற்கப் போகுது...’’ மத்திம மனிதனின் குரலில் உணர்ச்சி இல்லை.
‘‘எதை வச்சு இந்த முடிவுக்கு வந்த?’’ உயரமான மனிதன் கேட்டான்.

‘‘நெருப்புப் பந்து நிற்காம நம்மை நோக்கி உருண்டு வருது பாருங்க...’’
அவன் சுட்டிக் காட்டிய திசையை மற்ற ஏழு பேரும் பார்த்தார்கள். அவர்களை விழுங்குவதற்காக நெருப்புப் பந்து வேகமாக வந்து கொண்டிருந்தது.
சட்டென்று நின்றான் குள்ள மனிதன். இது சக்கர வியூகம். குருக்ஷேத்திரப் போரில் அபிமன்யு சிக்கிக் கொண்டது மாதிரியான சூழல். உள்ளே புகுந்துவிட்டோம். வெளியேற வழியில்லை. அப்படித்தான் எதிரிகள் நினைக்கிறார்கள். அதை முறியடிக்க வேண்டும். கிருஷ்ணா காப்பாற்று...
ஒரு முடிவுடன் 3டி காம்பினேஷன் க்யூபின் புதிரை விடுவிப்பது போல் மாய உலகின் ஃபார்முலாவை பிரேக் செய்ய ஆரம்பித்தான்.
‘‘அடுத்து நாம என்ன செய்யணும்?’’ - தாரா கேட்டாள்.
‘‘அந்த நடராஜரை அணுகணும்... அப்பத்தான் நம்ம நண்பர்களைக் காப்பாத்த முடியும்...’’ - என்றான் ஆதித்யா.
‘‘எப்படி?’’
‘‘கோபி பாக்யா மதுவ்ரதா; சிருங்கிசோ தாதி சந்திகா; கால ஜீவிதா கடவா; கால ஹலா ரசந்தரா...’’ என்று உச்சரித்தார்
விமலானந்தா உருவில் இருந்த இந்திரன்.

‘‘புரிஞ்சுதா?’’ - கேட்டான் ஆதித்யா. கண்கள் விரிய அவனைப் பார்த்தாள் தாரா.
‘‘அதேதான். வட்டத்தின் விட்டம்... மையத்தை அணுக வேண்டியதுதான்...’’ என்றபடி அவள் இடுப்பை அணைத்தவன், அந்தரத்தில் பறந்தபடியே நடராஜரை நெருங்கினான்.
‘‘வெள்ளியம்பல நடராஜர் வலது காலைத்தானே தூக்கிட்டு ஆடுவாரு. அதுமாதிரி சிற்பம்தானே மதுரைல இருக்கு..?’’
‘‘ஆமா... இப்ப எதுக்கு அந்த சந்தேகம் தாரா?’’
‘‘இந்த நடராஜர் இடதுகாலை தூக்கிட்டு ஆடறாரே..?’’
‘‘ஸோ வாட்? பேசாம வா...’’
இருவரும் ‘வெளி’யில் நர்த்தனமாடிக் கொண்டிருந்த நடராஜரை நெருங்கினார்கள். விமலானந்தர் மனமுருக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.
‘‘தாரா... நீயும் நானும் ஒரே நேரத்துல நடராஜரோட காலைத் தொடணும்...’’
‘‘ஏன்..?’’ என்று கேட்க நினைத்த தாரா, ‘‘சரி...’’ என்றாள்.
‘‘ஒன்... டூ... கமான் தாரா... த்ரீ...’’ என்று ஆதித்யா கத்தினான். அடுத்த விநாடி இருவரும் ஒருசேர நடராஜரின் காலைத் தொட்டார்கள்.
குள்ள மனிதனின் கணிப்பு வீண் போகவில்லை. மாய உலகின் ஃபார்முலாவை பிரேக் செய்துவிட்டான். சக்கர வியூகத்தை தகர்த்துவிட்டு வெளியேறிவிட்டான்.
ஆனால் -

3டி காம்பினேஷன் க்யூபின் புதிரை விடுவித்த மறுநொடி, அவன், தான் சந்திக்க வேண்டிய நண்பர்களை சந்திக்கவில்லை. பதிலாக எப்போதும் உடனிருக்கும் எட்டுப் பேரை எதிர்கொண்டான்!
ஆம், எங்கிருந்து புறப்பட்டானோ, அதே இடத்துக்கு வந்து சேர்ந்தான்.
அதிர்ந்தது குள்ளன் மட்டுமல்ல, மற்ற எட்டுப் பேரும் கூடத்தான்.
உருண்டு வந்த நெருப்புப் பந்துக்கும் அவர்களுக்குமான இடைவெளி சரியாக மூன்றடிதான். பாய்ந்த வெப்பத்தின் வீச்சில் ஒன்பது பேரின் சருமமும் பொசுங்க ஆரம்பித்தது.
‘‘சபாஷ் மாமா...’’ என கைகொட்டிச் சிரித்தான் துரியோதனன். அந்தச் சிரிப்பில் சகுனியும், பரமேஸ்வர பெருந்தச்சனும் கலந்து கொண்டார்கள்.
வலது கையால் நடராஜரின் பாதத்தைத் தொட்ட ஆதித்யா, இடது கையால் தன் மடியிலிருந்த காமதேனுவின் பாலை எடுத்தான். நடராஜரின் பாதங்களில் அதை அபிஷேகம் செய்தான்.
அடுத்த கணம், நடனமாடிக் கொண்டிருந்த நடராஜர் மறைந்தார். அங்கு விஸ்வரூப தரிசனத்துடன் கிருஷ்ணர் காட்சி தந்தார். அவரைச் சுற்றிலும் வானவில் படர்ந்தது.
ஒன்பது பேரையும் விழுங்க வந்த நெருப்புப் பந்து சட்டென்று ஆஜானுபாகுவான மனிதனாக மாறியது.

‘‘இது... இது... மணல் மனிதன்தானே?’’ மத்திம மனிதன் ஆச்சர்யப்பட்டான்.
‘‘அட ஆமா... சரஸ்வதி நதியை தேடிப் போனப்ப நாம வீழ்த்தின மனிதனேதான்...’’ உயரமான மனிதன் முணுமுணுத்தான்.
‘‘இல்ல...’’ - சட்டென்று பதிலளித்த குள்ள மனிதனை மற்ற எட்டு பேரும் பார்த்தார்கள்.
‘‘என்ன சொல்ற?’’
‘‘இவன் நாம சந்திச்ச மணல் மனிதன் இல்ல... அவனோட அண்ணன்... மண்ணால ஆனவன்தான். ஆனா, எரிகல் மனிதன்...’’ என்று குள்ள மனிதன் சொல்லி முடிக்கவும் கர்ஜனையுடன் அவர்களை நோக்கி அந்த எரிகல் மனிதன் அடியெடுத்து வைக்கவும் சரியாக இருந்தது.
‘‘ராஜி... ராஜி...’’ - பற்களைக் கடித்தான் ரவிதாசன். ‘‘ஆதித்யா கொடுத்தப்பவே நீ காமதேனுவோட பாலை வாங்கியிருந்தா இந்தளவுக்கு பிரச்னை முற்றி
யிருக்காது...’’ எங்கோ பார்த்தபடி முணுமுணுத்த ரவிதாசன், சட்டென்று திரும்பினான். ‘‘இதுக்கு மேலயும் தாமதிக்க முடியாது. ஆதித்யாவை அழிச்சுத்தான் ஆகணும்...’’
‘‘அவன்தான் இங்க இல்லையே?’’ ஃபாஸ்ட் ஆச்சர்யப்பட்டான்.

‘‘அதனால என்ன? பாலா இருக்காளே...’’ கண்களில் நயவஞ்சகம் வழிய அவளை நெருங்கினான். ‘‘இவளை எதுக்காக ருத்ரன்கிட்டேந்து அபகரிச்சேன்... நான் எங்க போனாலும் ஏன் இவளை சுமந்துகிட்டு திரிஞ்சேன்... இதுக்காகத்தான்...’’
‘‘ஆதித்திய கரிகாலனோட வம்சமா இருக்கறதாலதான் ஆதித்யாவை அழிக்கணும்னு நினைக்கறீங்களா?’’
‘‘அதுவும் ஒரு காரணம்...’’
‘‘அப்ப வேற காரணமும் இருக்கா?’’ - சூ யென் இடையில் புகுந்தான்.
‘‘இருக்கு. கர்ணனுக்கு அடுத்தபடியா அந்தக் கவசத்தை அணிஞ்சது ஆதித்த கரிகாலன்தான்...’’ என்று ரவிதாசன் சொல்லி முடித்ததும் பாலாவின் முகம் இறுகியது. அதைப் பார்த்து சங்கர் புன்னகைத்தான்.
இதையெல்லாம் சாட்டிலைட் போன் வழியே திரிசங்கு சொர்க்கத்தில் கேட்டுக் கொண்டிருந்த குந்தி அதிர்ந்தாள்.
(தொடரும்)