ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்





தீபிகா படுகோனேவின் லேட்டஸ்ட் ஃபிட்னஸ் டிரெய்னர் யாஸ்மின் கராச்சிவாலா. இவர் சொல்கிற பயிற்சிகளைத்தான் தீபிகா செய்கிறார்; இவர் சொல்வதைத்தான் சாப்பிடுகிறார். ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தில் புது லுக்கில் வரப் போவதாக அறிவித்திருக்கும் தீபிகா, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு யாஸ்மினோடுதான் செல்கிறார். ஆனால் யாஸ்மின் தனது பயிற்சிக்காக நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதால் கிர்ரடித்துக் கிடக்கிறது தயாரிப்பாளர் தரப்பு.

இவா லோங்கோரியாவுக்கு திடீரென அரசியல் ஆசை வந்துவிட்டது. சின்ன லெவலில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று டெக்சாஸ் மாகாணத்தில் ஏதாவது ஒரு நகரத்தின் மேயர் பதவிக்குப் போட்டியிடத் தீர்மானித்திருக்கிறார். அழகு நடிகர் ஜார்ஜ் குளூனி அவருக்கு அரசியல் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாறு படத்தில், மேரி கோம் வேடத்தில் ப்ரியங்கா சோப்ரா நடிப்பது தெரிந்ததே! இந்தப் படம் ஒருபுறம் விறுவிறுப்பாகத் தயாராகிவர, இன்னொரு பக்கம் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் அப்படியே புத்தகமாக ரெடியாகிறது. படம் ரிலீஸ் ஆகும்போது புத்தகமும் வெளியாகுமாம். ‘‘இந்தியாவில் இப்படி நடப்பது இதுதான் முதல் முறை’’ என்கிறார்கள்.

ராணி வேடத்தில் நடிப்பது சுலபம். ஆனால் ராணியாகவே வாழ ஆசைப்படுகிறார் கெல்லி ப்ரூக். ‘ஒருநாள் முதல்வர்’ போல ஒரே ஒருநாள் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் வாழ்க்கையை வாழ்ந்து, அந்த அரண்மனை அனுபவத்தைப் பெறுவதற்கு ஆவலாக இருக்கிறதாம் அவருக்கு!

மூன்று ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு இப்போதுதான் லைம்லைட்டுக்கு வந்திருக்கிறார் நர்கீஸ் ஃபக்ரி. அடுத்தடுத்து படங்கள், விளம்பர வாய்ப்புகள் என முன்னேறிக் கொண்டிருக்கிறார். இந்த நேரம் பார்த்து அவரது காதலர் உதய் சோப்ராவுக்கு கல்யாண ஆசை வந்துவிட்டது. ‘‘இப்போதே கல்யாணம் செய்துகொள்ளலாம். படங்களை சீக்கிரம் முடித்துவிட்டு வா’’ என நர்கீஸை நச்சரிக்க ஆரம்பித்து விட்டார். சினிமாவா, காதலா... எதைத் துறப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறார் நர்கீஸ்.