மறதி : கே.எம்.சம்சுதீன்
அம்புஜமும், சுமதியும் அடுத்தடுத்த போர்ஷன்வாசிகள். வழக்கம்போல இருவரும் கறிகாய் வாங்கிவிட்டுத் திரும்பும்போது சுமதி கேட்டாள்... ‘‘உன் வீட்டுக்காரர் காய்கறிக்கும் மளிகைக்கும் மாசம் ஐயாயிரம் ரூபாய் கொடுக்கறார்... அதுலயும் மிச்சம் பிடிக்கப் பார்க்கிறியா? வெங்காயம் வாங்கலையே...’’ “சேச்சே... அதெல்லாம் ஒண்ணும் இல்ல... வேற ஒரு காரணம் இருக்கு’’ என சஸ்பென்ஸ் வைத்து நிறுத்தினாள் அம்புஜம்.
வீட்டை நெருங்கியபோது, அம்புஜத்தின் கணவர் அலுவலகம் செல்ல பைக்கை உதைத்துக் கொண்டிருந்தார். ‘‘இந்தாங்க நூறு ரூபா... ஆபீஸ்ல இருந்து வரும்போது, ஒரு கிலோ வெங்காயமும் மிச்சத்துக்குத் தக்காளியும் வாங்கிட்டு வாங்க. எனக்கு வரவர மறதி அதிகமாகிப் போச்சு. மார்க்கெட்ல வாங்க மறந்துட்டேன்’’ என அவரிடம் பணத்தை நீட்டினாள் அம்புஜம். முனகலோடு வண்டி கிளம்பியது. உடனே சுமதி கேட்டாள், ‘‘நான்தான் ஞாபகப்படுத்தினேனே..!’’ ‘‘அட, நீ ஒண்ணு... ஆம்பளைங்களுக்கு விலைவாசியே தெரியலை. ஒரு கிலோ வெங்காயத்துக்கே எண்பது ரூபாய் போயிடும். மிச்சம் இருபதுக்குத் தக்காளி வாங்கிட்டு வருவார். எப்படி நூறு ரூபாய் கரையுதுன்னு அவருக்கும் புரியுமில்லே! அதோட, அடுத்த மாசமே ஐநூறு ரூபாய் அதிகம் கேட்டாலும் கொடுத்துடுவார். அதுக்குத்தான் இப்படி!’’ ‘‘அட..!’’ - மூக்கின் மேல் விரலை வைத்தாள் சுமதி.
|