நியூஸ் வே





வாள் சண்டை கற்று, குதிரையேற்றம் பழகி, எடை குறைத்து கச்சித தோற்றத்துக்கு வந்திருக்கிறார் அனுஷ்கா. தெலுங் கிலும் தமிழிலும் மெகா பட்ஜெட்டில் தயாராகும் ‘ருத்ரம்மா தேவி’ படத்துக்காகத்தான் இந்த மெனக்கெடல்! காகதீய வம்சத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மகாராணி ருத்ரம்மா தேவியாக நடிக்கும் அனுஷ்கா வுக்கு உடைகள், நகைகள், கிரீடம், வாள் என எல்லாமே 13ம் நூற்றாண்டு ஆவணங்களை ஆராய்ச்சி செய்து உருவாக்கினார்கள்.

அஜித்திடம் பேட்டி முடிந்துவிட்டால் உடனே வெளியே கிளம்பிவிட முடியாது. மறுபடியும் ஒரு சூடான தேனீருடன், எடுக்கப்பட்ட புகைப்படங்கள், புதுசாய் வாங்கிய கேமரா, பறக்கும் விமானங்கள்... அதை இயக்கிக் காட்டுவது என ஆர்வமாகி விடுவார். நிச்சயம் ‘தல’, வெறும் நடிகரல்ல...

பெங்களூருவில் ‘ஆரம்பம்’ பார்த்து விட்டு கமல் பாராட்டியிருக்கிறார். ‘‘நீங்க இங்கே இருந்திருந்தால் உங்களுக்காக தனி ஷோ ஏற்பாடு செய்திருப்போம்’’ என்று யூனிட்டில் மகிழ்ந்துபோய் சொன்னார்களாம். எப்படியோ... ஹீரோக்களிடம் சுமுகமான உறவு மலர்ந்தால் சந்தோஷம்!

இரண்டு படங்களையும் கிட்டத்தட்ட முடித்துவிட்டு ரெடியாக இருக்கிறார் ஜெயம் ரவி. அடுத்து சில புது இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார். அவருக்கு சொல்லப்படும் கதை ஆர்யாவுக்கு பொருத்தமாக இருந்தால், அங்கே டைவர்ட் செய்து அனுப்பி விடுகிறார். நண்பேன்டா..!


‘மங்கள்யான்’ விண்கலம் வெற்றி
கரமாக விண்ணில் ஏவப்பட்டதும், இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணனை போனில் தொடர்புகொண்டு பாராட்டினார் பிரதமர் மன்மோகன் சிங். ‘பிரதமரிடம் செல்போன் இல்லை’ என சமீபத்தில் சொல்லப்பட்ட தகவலை உறுதி செய்வது போல, பிரதமர் தனது இல்ல தொலைபேசியிலிருந்து பேசும் படத்தை கவனமாக வெளியிட்டிருக்கிறார்கள் அதிகாரிகள்.

தான் நடித்த ‘ராஜா ராணி’, ‘ஆரம்பம்’ இரண்டு படங்களும் மெகா ஹிட்டான சந்தோஷத்தில் இருக்கிறார் நயன்தாரா. அடுத்த தமிழ்ப் படம், ‘இது கதிர்வேலன் காதல்’. தெலுங்கில் வெங்கடேஷுடன் ‘ராதா’ படத்தில் டைட்டில் ரோலில் நடிக்கிறார். ஏற்கனவே வெங்கடேஷ் ஜோடியாக டைட்டில் ரோலில் நடித்த ‘லக்ஷ்மி’, ‘துளசி’ படங்கள் ஹிட்டானதால் சென்டிமென்டாக ‘ராதா’ ஹாட்ரிக் வெற்றியைத் தரும் என்று நம்புகிறார்.


மறந்துகூட ‘ஜில்லா’ படத்தின் வசனங்கள், காட்சிகள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியே வந்து விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறார் விஜய். ஒவ்வொரு நாளும் அதற்கான முன்னேற்பாடுகள் கவனமாகக் கையாளப்படுகின்றன. ஒரு டைம் லைன் கொடுத்த கஷ்டத்தை பாருங்க பாஸ்..!

ஆர்யாவுக்கு  சின்ன ஆபரேஷன். வெறும் நான்கு நாட்கள் ஓய்வெடுத்து விட்டு, சேஃப்டி பெல்ட் போட்டுக் கொண்டு ஐதராபாத்திற்கு நடிக்கக் கிளம்பிவிட்டார். என்னதான் சொல்லுங்கள்... ப்ளேபாய் இமேஜுக்கு இவ்வளவு டைம் கீப் அப் பண்றது பெரிய விஷயமாச்சே!


அஞ்சலி அடிக்கடி சென்னை வருகிறார். ஏர்போர்ட் வரைக்கும் தென்படுகிறவர், ‘‘என்ன, சௌக்கியமா?’’ என யாரும் கேட்டு முடிப்பதற்குள் அங்கேயிருந்து காணாமல் போய்விடுகிறார். மீண்டும் நான்கு நாட்கள் கழித்து தான் ஏர்போர்ட் வருகிறார். ‘எங்கே இருக்கிறார், எதற்கு வருகிறார், ஏன் திரும்புகிறார்’ என யாருக்கும் புரியவில்லை.

‘சண்டியர்’ என்று ‘விருமாண்டி’க்கு பெயர் வைத்துவிட்டு கமல் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. அதில் மகா எரிச்சலாகி கமல் கொடுத்த ஒரு பேட்டி, இன்றைக்கும் யூ டியூபில் பிரசித்தம். அப்படிப்பட்ட பதற்றமான தலைப்பில் இப்போது படம் எடுக்கிறார்கள். தலைப்பிற்கு ஏதும் பிரச்னை இல்லையென்றால் கமல் என்ன சொல்வாரோ!


சைலன்ஸ்
வெற்றி நடிகர் ‘எப்படியும் நண்பியை மறுபடியும் லைம்லைட்டுக்குக் கொண்டு வந்தே தீருவேன்’ என சபதம் செய்துவிட்டார். இப்போது ஆர்வமாக எல்லா ஹீரோ நண்பர்களிடமும் போன் செய்து பேசி, நடிக்க ஏற்பாடு செய்கிறார். ‘‘இவர் பொறுப்பா நடிக்கிறதை விட்டுட்டு வேற வேலையைப் பார்க்கிறார்’’ என பொருமுகிறார்கள் அவரது புரடியூசர்கள். காதல் வந்தால் இப்படித்தான் ஆகும்னு தெரியாதா..!
கொஞ்சம் கொஞ்சமாக தலைமைச் செயலகத்தை இளகச் செய்துவிட்டார்கள் தமிழ் சினிமாக்காரர்கள். இப்போது சந்திக்கப் போயிருந்த குழுவிடம் சிரிக்க சிரிக்க பேச்சுவார்த்தை நடந்ததாம். இதுவரைக்கும் இருந்த டென்ஷன், படம் திரையிட முடியாமல் விழுந்த முட்டுக்கட்டை எல்லாம் இனிமேல் இருக்காது என நிம்மதியாகச் சொல்கிறார்கள். உலக நாயகன் படத்திற்கு இனி பிரச்னையே இல்லை என்கிறார்கள்.

இயக்குனர் ஆஷிக் அபுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ரீமா கல்லிங்கல். எளிமையான இந்தத் திருமணத்தின்போது ஒரு துளி தங்க நகை கூட அணிந்து கொள்ளவில்லை ரீமா. ‘‘வரதட்சணைக் கொடுமையால் ஏராளமான இளம்பெண்கள் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள். பெற்றோர்கள் பலரும் மகளின் திருமணத்துக்கு நகை வாங்க உழைத்தே களைத்துப் போகிறார்கள். என்னால் முடிந்த அளவு தங்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முயற்சி’’ என்கிறார் ரீமா.

‘‘குழந்தைக்கு அம்மாவா நடிக்கணுமா... ரம்யா நம்பீசனை கூப்பிடுங்க’’ என்று மலையாளத் திரையுலகில் கோரஸ் எழுப்புகிறார்கள். இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அம்மா கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொள்கிறார் ரம்யா. ஏற்கனவே ‘லெஃப்ட் ரைட் லெஃப்ட்’ படத்தில் அம்மா கேரக்டரில் நடித்தவர், இப்போது ‘ஃபிலிப்ஸ் அண்ட் த மங்கி பென்’ படத்தில் குழந்தைக்குத் தாயாக நடிக்கிறார்.