கவலையை மறக்கச் செய்வதில் போதையைவிட வேலையே சிறந்த மருந்து!
- ரால்ஃப் வால்டோ எமர்ஸன்
உங்கள் பணி இடத்திலும், அதைத் தாண்டி உங்கள் சொந்த வாழ்க்கையிலும் சிலரைப் பார்த்திருப்பீர்கள். அவர்களின் மலர்ந்த கண்களில் எவ்வித சலனமும் காணப்படாது. முகத்தில் தெளிவும், வார்த்தைகளில் உறுதியும் காணப்படும். அவர் அருகில் இருந்தாலே உங்களுக்கு ஒருவித நிம்மதி ஏற்படும். அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நீங்கள் நம்புவீர்கள்.
வேறு சிலரும்கூட, ‘‘என்னப்பா, இத வாங்கலாமா?’’, ‘‘பையன எந்தக் காலேஜ்ல சேக்கலாம்?’’ என சந்தேகத்தையோ, ஆலோசனையையோ கேட்டுக்கொள்வார்கள். அவரது பணி இடத்தில்கூட, ‘‘அவரே சொல்லிட்டாரா... அப்ப சரிதான்...’’ என்று அவர் அறியப்பட்டிருப்பார். இப்படி அவரது வார்த்தைகள் மதிக்கப்படுவதற்கும், அவரது அண்மை தன்னம்பிக்கை தருவதற்கும் என்ன காரணம்?
நம்பிக்கைக்குப் பாத்திரமானவர், உலக அறிவுள்ளவர், படிப்பாளி என எத்தனையோ காரணங்கள் இருப்பினும், அவர்களின், ‘முடிவெடுக்கும் திறன்’ என்கிற திறமைதான் பிரதான காரணமாக இருக்க முடியும். டாண் டாண் என முடிவெடுத்து வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு எனப் பேசுபவர்களிடம்தான் இயல்பாகவே இப்படி ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கும்.
நம்மில் பலருக்கும் அறிவுக்குப் பஞ்சம் கிடையாது. முறையாகப் பயன்படுத்தப்படாத அறிவு, குழப்பத்தையே தரும். இந்தக் காரணத்தால் நம்மில் முடிவெடுக்கத் தெரியாத குழப்பவாதிகள் அதிகம். பல்வேறு வாய்ப்புகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று மனம் குழம்பித் திணறுகிற நேரத்தில், யாராவது ஒருவர் ‘‘நீ இத செஞ்சு பாரு, சரியா வரும்’’ என்று ஆணித்தரமாக சொல்லும்போது, நம் மனம் அதை ஏற்றுக்கொள்கிறது. முடிவெடுப்பவர்கள் ஏனென்று தெரியாமலேயே மதிக்கப்படுகிறார்கள், பெரும்பாலும் மறைமுகமாகவேனும்.
முடிவெடுப்பது ஒரு கலை என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. அது ஒரு பழக்கம். ஹேபிட். குணாதிசயம் என்றே மதிப்பிட விரும்புகிறேன். நீங்கள் அதிகம் படித்திருக்கலாம்; உலக விஷயங்கள் பலதையும் தெரிந்திருக்கலாம். இவையெல்லாம் உங்களுக்கு முடிவெடுக்க உதவலாமே தவிர, இவை இருப்பதாலேயே ஒருவர் முடிவெடுக்கும் ஆற்றலைப் பெறுகிறார் என்று சொல்லிவிட முடியாது. அப்படிச் சொன்னால், அதிகம் படித்தவர்களுக்கு குழப்பமே இருக்கக் கூடாதே...
முடிவெடுக்க பிரச்னையை அலசி, ஆராய்கிற தன்மை இருக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னால், அதுவும் வேண்டும்தான். ஆனால், ஒவ்வொரு விஷயத்தையும் அலசி ஆராய்ந்து, ‘இதைச் செயல்படுத்தினால் இந்த விளைவு வரும்... இதை எதிர்கொள்கிறபோது இந்த இந்தப் பிரச்னைகள் வரும்... இப்படி வந்தால்...’ என நூல் பிடித்துச் செல்லும் அலசலுக்கு முடிவே கிடையாது. வாழ்க்கை முழுக்க இப்படி அலசி ஆராய்ந்து தோய்த்து தொங்கப் போடுபவர்கள் ‘இன்னும் முடிவெடுக்கவில்லை’ என்ற முடிவைத்தான் எடுக்க முடியும்.
பின் எதுதான் வேண்டும்?
முடிவெடுக்க துணிச்சல் வேண்டும். அது குருட்டுத் துணிச்சலாகக் கூட இருந்துவிட்டுப் போகட்டும். இந்தத் துணிச்சல் இல்லை என்றால் உங்களால் முடிவெடுக்கவே முடியாது. இந்தத் துணிச்சல் வருவதற்கு, வாழ்க்கை பற்றிய புரிதல் ஏற்பட வேண்டும். பொறுப்புணர்ச்சியும் தேவை.
ஏன் வாழ்க்கை பற்றிய புரிதல் வேண்டும்? எந்த முடிவுமே நூறு சதவீதம் நல்ல முடிவாகவோ, முழுக்க முழுக்க தவறான முடிவாகவோ இருக்கவே முடியாது. நேற்று நல்ல முடிவு எனப் பாராட்டப்பட்டது இன்று மோசமான முடிவாகத் தோன்றலாம். ஒரு முடிவு எல்லா காலத்திலும் நன்மைகளைக் கொட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இன்று நீங்கள் எடுக்கிற முடிவு நாளை தவறான விளைவுகளைத் தந்து விட்டாலும், அதில் ஒரு ஓரமாய் ஒட்டியிருக்கிற நல்ல விஷயங்களை அடையாளம் கண்டு அவற்றை ஒப்புக்கொள்கிற மனப்பக்குவம் வேண்டும். இதற்கு வாழ்க்கையைப் பற்றிய தெளிவு வேண்டும்.
வாழ்க்கை பற்றிய புரிதல் இருந்தால் உங்களிடம் நம்பிக்கை இயல்பாகவே ஏற்படும். ‘எதுவும் எங்கும் ஓடி விடாது. இந்த சிக்னலில் தவற விட்டால் என்ன? அடுத்த சிக்னலில் பிடித்து விடலாம்’ என்ற மனோபாவம்தான் வாழ்க்கை.
மகாகவி காளிதாசரின் கவிதைகளையும் இன்னொரு போட்டிக் கவிஞரின் கவிதைகளையும் ஆற்றில் போட்டு, மேல் எழும்பி வரும் கவிதையே சிறந்தது என்று முடிவெடுக்க நினைத்தார்களாம். அப்போது எதிரணி கவிஞருக்கு ஒருவேளை காளிதாசரின் படைப்புகள்தான் சிறந்ததோ என்று ஒரு கண நேர சந்தேகம் ஏற்பட்டதாம். இதனாலேயே அவரது படைப்புகள் நீரில் மூழ்கினவாம். இந்தக் கதையில் யார் சிறந்த கவி என்பது முக்கியமல்ல... தன் படைப்பு பற்றி காளிதாசருக்கு இருந்த நம்பிக்கைதான் கவனிக்க வேண்டியது. உங்கள் மீதான நம்பிக்கை... உங்கள் முடிவின் மீதான நம்பிக்கை உங்கள் மனதில் உறுதியாக இருக்க வேண்டும். அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று மாற்றிக் கொண்டே இருந்தீர்கள் என்றால், உங்கள் முடிவின் மீது உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்று பொருள்.
ஏன் பொறுப்புணர்ச்சி?
ஒரு முடிவை எடுத்து விட்டு அது பாதகமான விளைவைத் தருகிறபோது சூழ்நிலை மீது பழியைப் போட்டு, ‘‘இதுக்குத்தான் நான் வேண்டாம், வேண்டாம்னு தலைல அடிச்சுக்கிட்டேன். எங்க விட்டீங்க?’’ என்பதோ, ‘‘நான் அப்பவே சொன்னேன். அவன்தான் கம்ப்பல் பண்ணினான்...’’ என்று அடுத்தவர்கள் மீது பழியைப் போடுவதோ, உங்களை முடிவெடுப்பாளர் ஆக்கி விடாது. ‘‘ஆமாம். நான்தான் முடிவெடுத்தேன். இப்படி ஆகி விட்டது. வருத்தப்பட்டு புண்ணியம் இல்லை. இனி நடக்க வேண்டியதைப் பார்க்கலாம்...’ என்று பொறுப்பேற்கும் தன்மை வேண்டும். இந்தப் பொறுப்பை ஏற்கத் தயங்கித்தான் நிறையப் பேர் முடிவெடுப்பதே இல்லை.
இப்படி வாழ்க்கை பற்றிய தெளிவும், பொறுப்புணர்ச்சியும் ஒருவரிடம் இருக்கும் என்றால், அவரிடம் ஏன் மலர்ந்த முகம் இருக்காது? அவரிடம் கம்பீரம் இல்லாமல் வேறு யாரிடம் இருக்கும்? மேற்சொன்ன பண்புகளை வளர்த்துக்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் பணி வாழ்வில் முன்னேறலாம். எனவேதான் நீங்கள் சமூகத்தில் பார்க்கிற பலர் உங்கள் மதிப்பீட்டில் படிக்காதவர்களாய் இருந்தாலும் வாழ்க்கையில் சாதிப்பதைப் பார்க்கலாம்.
வாகனம் ஒன்றை ஓட்டுகிறீர்கள். கடந்து செல்லும் வாகனம் ஒன்றை நீங்கள் முந்துவதாக இருந்தால், அதற்கும் உங்களுக்கும் உள்ள தூரம், செல்லும் வேகம், எதிரில் வரும் வாகனத்தின் வேகம், அது உங்களது வாகனத்தை அடையத் தேவைப்படும் நேரம்... எல்லாவற்றையும் நொடிப் பொழுதில் கணக்கிடுகிறீர்கள். தீர்மானிக்கிறீர்கள். இதில் ஏதாவது ஒன்று பிசகினாலும், உங்கள் கணக்கு தவறாகி விட்டாலும், நீங்கள் விபத்துக்குள்ளாகி விடுவீர்கள். நீங்கள் கணிக்கிறீர்கள்... திட்டமிடுகிறீர்கள்... முடிவெடுக்கிறீர்கள். இந்தத் திறமை இருக்கிற யாராலும் முடிவெடுக்க முடியும். எனவே, எல்லோராலும் முடியும்.
நீங்கள் எப்பேர்ப்பட்ட வேலை, பொறுப்பு, பதவியில் இருந்தாலும், உங்கள் வரையறைக்கு உட்பட்ட முடிவுகளை சில நேரங்களில் நீங்கள் மட்டுமே எடுத்தாக வேண்டும். எல்லா நேரத்திலும் உங்களை யாரோ வழி நடத்திக்கொண்டே இருக்க மாட்டார்கள். எல்லாவற்றுக்கும் உங்கள் பாஸையோ, மேனேஜரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், உங்களை யாரும் மதிக்கவே மாட்டார்கள். நீங்களும் வளர மாட்டீர்கள்... எனவே, முடிவுகளை எடுக்கப் பழகுங்கள். அதுவே உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்.
‘ஆம்லெட்டும் வேண்டும், முட்டையும் உடையக் கூடாது’ என்று நினைக்கும் குழப்பவாதிகளை பணி இடத்தில் யாரும் மதிக்க மாட்டார்கள். முடிவெடுக்கத் தெரிந்தவர்கள் வெற்றியுடன் மேலே சென்று கொண்டே இருப்பார்கள். ஆயிரம் யோசனைகளைச் சொல்பவர்களைவிட ஒரு செயல் புரிபவர் மதிக்கப்படுவார்; அது தோல்வியில் முடிந்தாலும்!
(வேலை வரும்...)