நிழல்களோடு பேசுவோம்





மதகுருக்களாகும் நீதிபதிகள்
ஒரு பெண்கள் பள்ளியில் பேசக் கூப்பிட்டிருந்தார்கள். அழைக்க வந்த ஆசிரியையிடம், ‘‘எதைப் பற்றிப் பேசினால் பொருத்தமாக இருக்கும்’’ என்று கேட்டேன். ‘‘எல்லாம் ஒன்பதாம், பத்தாம் வகுப்பு மாணவிகள். இப்பவே காதல்... அது இதுன்னு டைவர்ட் ஆகிடறாங்க. நீங்க கொஞ்சம் ஒழுக்கத்தைப் பற்றிப் பேசினால் நல்லா இருக்கும்’’ என்றார். நான் யோசித்துக்கொண்டே போனேன். அந்தக் குழந்தைகளின் முகத்தைப் பார்த்தபோது அவர்களிடம் பாலியல் தொடர்பாக பேசுவதற்கு மிகவும் சங்கடமாக இருந்தது. மாறாக, ‘கல்வி என்ற ஆயுதத்தால் மட்டுமே இந்த சமூகம் பெண்கள் மீது நிகழ்த்தும் கொடுமைகளை எதிர்த்து நிற்க முடியும்’ என்பது பற்றி பேசினேன். எந்த நிலையிலும் யாருக்காகவும் அவர்கள் கல்வியைக் கைவிடக் கூடாது என்பது பற்றிப் பேசினேன். அவர்கள் முகம் கொஞ்சம் கொஞ்சமாக பிரகாசமடைந்துகொண்டே வந்தது.

பெண்களுக்கு துணிச்சலையும், எதிர்குணத்தையும், எதிர்காலம் குறித்த பெரிய கனவு களையும் விதைப்பதுதான் அவர்களை உறுதிமிக்கவர்களாக மாற்றும். அதுவே இளம்பருவத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பல உணர்வுபூர்வமான குழப்பங்களைக் கடந்து செல்ல உதவும்.

ஆனால் நம் பெண்களை அதை நோக்கித்தான் நாம் தயார் செய்கிறோமா? வெறுமனே அவர்களை குற்ற உணர்விற்கும் பயத்திற்கும் ஆளாக்கும் ஒழுக்க போதனைகளைத்தானே செய்துகொண்டிருக்கிறோம்?
சமீபத்தில் ஒரு வழக்கில் நீதிபதி ஒருவர் தெரிவித்த கருத்துகள், இந்திய சமூகம் எப்படி சிந்திக்கிறது என்பதற்கான உதாரணம். பொதுவாக இன்று நியூஸ் மேக்கர்கள், நீதிபதிகள்தான். பெரும்பாலான விவாதங்கள் அவர்களது பொன்மொழிகளைச் சுற்றியே நடக்கின்றன. வழக்கிற்கும் சட்டத்திற்கும் அவர்கள் சொல்கிற சித்தாந்தங்களுக்கும் பல சமயங்களில் எந்த சம்பந்தமும் இல்லாவிட்டாலும்கூட, அவை சுவாரசியமானவை என்பதில் சந்தேகமில்லை. அதிலும் காதல் திருமணங்கள், கலப்புத் திருமணங்கள், ஆண் - பெண் உறவுகள் தொடர்பாக நமது நீதிபதிகள் பலர் கடும் குழப்பங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை தீர்ப்புகளில் தெரிவிக்கும் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. அவர்கள் சட்டத்தின் பிரதிநிதியாக இருப்பதைவிட, சமூக பொதுக்கருத்துகளின் பிரதிநிதியாகவே நின்று பேசுகிறார்கள்.

டெல்லியில் வசித்த பீகாரைச் சேர்ந்த ஒரு பெண், தனது 13 வயது மகளைக் காணவில்லை என்று கடந்த 2010ம் ஆண்டு போலீசில் புகார் தெரிவித்தார். பின்னர் பீகாரில் கண்டுபிடிக்கப்பட்ட அந்தப் பெண், ‘எனக்கு 18 வயது ஆகிவிட்டது. எனது விருப்பப்படியே நான் காதலனுடன் சென்றேன்’ என்று காவல்துறையினரிடம் கூறினாள். மேலும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த தங்களைப் பிரிக்கப் பார்ப்பதாகவும் குற்றம் சாட்டினாள். மீட்கப்பட்டபோது அந்தச் சிறுமி கர்ப்பமடைந்து இருந்ததால், ‘எனது மகளைக் கடத்திக் கற்பழித்துவிட்டார்’ என்று காதலன் மீது அந்தப் பெண்ணின் அம்மா புகார் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி விரேந்தர் பட், காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் மேல் தொடரப்படும் பொய் வழக்குகளைக் கண்டித்தார். பெண்கள் காதலனுடன் சென்றுவிடும்போது சம்பந்தப்பட்ட ஆண்கள் மீது கடத்தல், கற்பழிப்பு என பொய் வழக்குகள் குவிந்து கிடப்பதால், நீதிமன்றத்தின் நேரம் விரயமாவது பற்றியும் குறிப்பிட்டார். மேலும் எந்தக் குற்றத்திலும் ஈடுபடாத அந்தப் பெண்ணின் காதலரை விடுவித்தும் உத்தரவிட்டார்.

நீதிபதி இதுவரை செய்தவை அனைத்தும் சட்டப்படியானவை. ஆனால் வழக்கில் அவர் சொன்ன சில கருத்துகள், அவரை சமூகத்தின் பிரதிநிதியாக மாற்றுகிறது. ‘‘நாட்டில் நடைபெறும் கௌரவக் கொலைகள் பெரும்பாலும் காதல் திருமணங்களால்தான் ஏற்படுகின்றன. இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, குழந்தைகளை பொறுப்போடு வளர்க்க வேண்டும். மொபைல் போன்கள், இன்டர்நெட், கேபிள் டிவி என பல்வேறு வசதிகளை நமது வீடுகளில் பயன்படுத்தி வருகின்றோம். இந்நிலையில், பெற்றோர்கள்தான் தமது பிள்ளைகளுக்கு சமுதாய ஒழுக்க நெறிமுறைகளையும் நீதிக் கல்வியையும் கற்பிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளனர்.

அப்போதுதான் அவர்கள் நல்லது எது, கெட்டது எது என்பதைத் தெரிந்து கொள்வார்கள்.’’
இதே நீதிபதி இதற்கு 10 நாட்களுக்கு முன் வேறொரு வழக்கில் கூறிய வேறொரு கருத்தையும் இந்த இடத்தில் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும். ஒருவர் தனது சகோதரரின் மைத்துனியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அழைத்துச் சென்று பாலுறவில் ஈடுபட்டார். பின்னர் அவர் திருமணத்திற்கு மறுக்க, அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அந்த நபரை விடுவித்து தீர்ப்பளித்த நீதிபதி, ‘‘பெண்கள் சமூக மற்றும் ஒழுக்க விதிகளுக்கு கட்டுப்பட்டு, முறையான திருமணத்திற்கு முன் உறவில் ஈடுபடக் கூடாது. தானே விரும்பி பாலியல் இன்பத்தை அனுபவித்துவிட்டு பின்னர் பிரச்னை வந்தால் தன்னைக் கற்பழித்துவிட்டதாக அழக் கூடாது. பெற்றோர்கள் தங்களை மோசமாக நடத்தக் கூடாது என்பதற்காக பெண்கள் இவ்வாறு பொய்யான புகார்களை அளிக்கின்றனர்’’ என்றார். இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

18 வயதான ஒரு பெண், தான் விரும்பியவருடன் உறவு கொள்வதை சட்டம் எதிர்ப்பதில்லை. ஆனால் பாலியல்ரீதியாக ஒரு பெண் ஏமாற்றப்படும் சந்தர்ப்பங்களை நீதிபதி புரிந்துகொள்ள மறுக்கிறார். இந்த இரண்டு வழக்குகளிலும் நீதிபதியின் கருத்துகள், ‘பெண்கள் ஒழுக்கக்கேடாக நடந்துகொள்வதுதான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம்’ என திட்டவட்டமாக வலியுறுத்துகிறது. இது சமூகத்தின் மொத்த ஒழுக்கத்தின் சுமையையும் பெண்களின் தலையில் ஏற்றுகிற ஒரு சமூக மனநிலையின் வெளிப்பாடு.

பெண்கள் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வது, நமது சாதிய சமூகத்தின் கொடுமைகளாலும் பெற்றோர்களின் வன்முறையாலும் தான் என்பதை நீதிபதி பார்க்க மறுக்கிறார். சாதி வெறியும் போலி குடும்ப கௌரவமுமே ஆள் கொணர்வு வழக்குகள், மற்றும் போலி பாலியல் வழக்குகள் தொடுக்கப்படுவதற்கு முக்கியக் காரணம். இந்தச் சூழ்நிலையில், பெண்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய ஒழுக்கம் என்று நீதிபதி எதைக் கூறுகிறார்? ‘சாதி விட்டு சாதி, மதம் விட்டு மதம் காதலிக்கக் கூடாது’ என்றா? ‘பெற்றோர் பார்த்து வைத்த பையனைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்’ என்றா? பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தர விரும்புகிற, கற்றுத் தர முடிந்த ஒரே ஒழுக்கம் இதுதான்.

வரலாற்றில் என்றும் இருந்திராத அளவு பாலுணர்வினால் நிரப்பப்பட்ட ஒரு சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதில் யாருமே விதிவிலக்காக இல்லை. ஆண் - பெண் உறவுகள் தொடர்பான சிக்கல்களும் மயக்கங்களும் குழப்பங்களும் எல்லோர் மனதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் குழப்பங்களை நாம் உரிய முறையில் புரிந்துகொள்வது முக்கியம். மாறாக ஒழுக்கவியல் போதனைகளால் நாம் இந்தப் பிரச்னையை மேலும் சிக்கலாக்குகிறோம். பாதிக்கப்பட்டவர்களையே தண்டிக்கும் அளவுகோல்களையே மீண்டும் மீண்டும் உருவாக்கு
கிறோம்.

சிக்கலில் மாட்டிக்கொண்ட மனிதர்களை அதிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற உதவு
வதுதான் ஒரு நீதி அமைப்பின் கடமை. மாறாக சிக்கல்களுக்கான பொத்தாம்பொதுவான காரணங்களையும், தீர்வுகளையும் முன்னிறுத்த ஒரு மதகுரு போதும். சிவில் சட்டமும் நாகரிக உலகின் நீதியும் குருமார்களின் நீதியைக் கடந்தது. நீதிபதிகள் மதகுருக்களாகக் கூடாது.
(பேசலாம்...)

நெஞ்சில் நின்ற வரிகள்
அனுராதா ஸ்ரீராமும் கமல்ஹாசனும் ‘பம்மல் கே சம்பந்தம்’ படத்தில் பாடிய இந்த ஆறாத்துயரத்தின் பாடல், நிராகரிக்கப்பட்ட, மறுக்கப்பட்ட காதலின் துயரத்தை ஒரு மரணத்தின் துயரமாக மாற்றிவிடுகிறது. பிலாக்கணத்தின் தொனியில் பரவும் இந்தத் துயரத்தைக் கடந்து செல்வது அத்தனை எளிதல்ல. ‘ஏண்டி சூடாமணி காதல் வலியை பார்த்ததுண்டோடி’ என்று கேட்கும் கேள்வியின் நிர்க்கதியான நிலை மனம் கசியச் செய்கிறது. ‘கண்ணால் கண்ணீர்த் துளி எந்த நாளும் வார்த்ததுண்டோடி?’ என, புறக்கணிக்கப்பட்ட கண்ணீரின் சுமையை எல்லையற்றதாக மாற்றிவிடுகிறது.

‘பொண்ணுன்னா ஆணுலகம் கவிதை என்கிறதுகவிதைதான் கைவாளா ஆள கொல்கிறது’
என்பது சித்தர் மரபிலிருந்து கேட்கும் ஒரு குரல். ஆனால் அதில் வெறுப்பு இல்லை; சபித்தல் இல்லை. காதலும் கவிதையும் அழிக்கும் கைவாள் என்ற உருவகம் அதிர வைக்கிறது.

‘விட்டத மீண்டும் பெற விரும்பிடுதோ நெஞ்சம்தொட்டத மீண்டும் தொட்டுத் தொடர்கிறதோ எண்ணம்’
என்ற வரிகளில் நிராகரிப்பிற்குப் பின்னும் எஞ்சியிருக்கும் சாம்பலில் நம்பிக்கையின் கடைசிக் கனல் மினுங்குகிறது. எங்கெல்லாம் இழந்த காதல் இருக்கிறதோ அங்கெல்லாம் இந்தப் பாடல் இருக்கும். அதன் ரணத்தின்மீது இது படர்ந்து கொண்டிருக்கும்.

மனுஷ்ய புத்திரன் பதில்கள்
பனித்துளி படர்ந்த, இரண்டு ரோஜாக்கள் இருக்கும் வழவழ வாழ்த்து அட்டைகள் எல்லாம் என்ன ஆயிற்று?
- கி.ரவிக்குமார், நெய்வேலி.
ஒரு பனித்துளி போல நம் கண்முன்னால் உலர்ந்துபோன ஒரு காலம் அது.
டி.ராஜேந்தரைப் பற்றி?
- அ.முரளிதரன், மதுரை
அவரை என்னதான் காமெடியாக எல்லோரும் பார்த்தாலும், அவரது தீராத படைப்பு வேகமும் உற்சாக மும் என்றும் நான் கண்டு வியக்கும் ஒன்று. அவர் ஒரு அசலான உக்கிரம் கொண்ட கலைஞன்.
தமிழகத்தில் அடிக்கடி கலெக்டர்கள் மாற்றப்படுவது பற்றி?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
மந்திரிகள் அளவுக்கு கலெக்டர்களுக்கு ரிஸ்க் இல்லை.
காமன்வெல்த் மாநாட்டின் முக்கியத்துவம் என்ன?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்
இந்தியா அதில் கலந்துகொள்ளாமல் இருப்பதுதான் அதற்கு கிடைக்கக்கூடிய ஒரே ஒரு முக்கியத்துவம். அது நடக்கிறதா என்று பார்ப்போம்!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணியின் வாய்ப்பு என்ன?
- செ.முத்து, சத்தியமங்கலம்
இந்த டி.வி.காரங்களுக்குத்தான் பொழுது போகலைன்னா உங்களுக்குமா?