நல்லா கேட்டுக்கோங்க ரசிகர்களே... ஹன்சிகாவுக்கு கடந்த நான்கு நாட்களாக காய்ச்சல். அக்கறையில் டாக்டரிடம் பிரிஸ்கிரிப்ஷன் வாங்க ஓடுகிறவர்கள் தடுக்கி விழ நேரலாம் ஹன்சிகா மனசில். காய்ச்சலின் ஹீட்டை தணிக்க ஹன்சிகாவிடம் ஒரு கூல் பேட்டிக்கு ஆயத்தமானோம். ‘நோ பர்சனல்’ என்ற ஒரே நிபந்தனையுடன் ஆர்வமாகப் பேச முன்வந்தார் இந்த கரன்ட் கனவுக் கன்னி!
‘‘தமிழ்நாட்டு ரசிகர் மத்தியில்கூட ஹன்சிகா காய்ச்சல்தான் அடிக்குது போல?’’
‘‘அப்படியா... என்னோட ரசிகர்கள் எல்லாருக்கும் நான் நன்றி சொல்லிக்கிறேன். அப்புறம், இயக்குனர்கள், ஹீரோக்கள் எல்லாரையுமே நான் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். ‘அரண்மனை’, ‘பிரியாணி’, ‘மான்கராத்தே’, ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ அப்புறம் ராஜசேகர் இயக்கத்தில் ஜெயப்ரதா மேடம் தயாரிக்கும் படம், தெலுங்கில் ‘கோல்மால் 3’ உட்பட நான்கு படங்கள் என்று இந்த வருஷம் மட்டும் ஒன்பது படங்கள் வரிசையில் காத்திருக்கின்றன. ஓய்வெடுக்க, இப்படி ஏதாவது உடம்புக்கு முடியாமல் போனால்தான் உண்டு...’’
‘‘அப்போ நீங்கதான் நம்பர் ஒண்ணா?’’
‘‘அப்படி நான் நினைக்கல. எந்த இடத்தில் இருக்கோம் என்று கணக்கு பார்ப்பதை விரும்பல. என்னோட வேலைதான் எனக்கு எனர்ஜி. ஒரே வருஷத்தில் சிம்ரன், ஜோதிகாதான் அதிக படங்களில் நடிச்சிருக்காங்கன்னு எங்கிட்ட சில பேர் சொல்லியிருக்காங்க. அவங்க இரண்டு பேருமே எனக்குப் பிடித்த நடிகைகள். அவங்களோட என்னை கம்பேர் பண்ணி பேசுறதே பெரிய பரிசு; பெருமை. இது எல்லாமே ரசிகர்களோட அன்பும் வரவேற்பும் இல்லாமல் சாத்தியமாகாது.’’
‘‘திடீர்னு ஸ்லிம் ஆகிட்டீங்களே?’’
‘‘ குழந்தை நட்சத்திரமா நடிக்க வந்தேன். அப்போதிலிருந்தே கொஞ்சம் குண்டாத்தான் இருப்பேன். இப்போ அந்த உடல் வாகை மாற்றணும்னு தோணிச்சு. அதான் ஸ்லிம் ஆகிட்டேன். பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாவும் தெலுங்கில் ஹீரோயினாவும் அறிமுகமானேன். இருந்தாலும் தமிழ்ப் படங்களில் நடிக்கும்போதும் சென்னையில் இருக்கும்போதும்தான் தாய் வீட்டில் இருப்பது மாதிரி உணர்கிறேன்!’’
‘‘சின்ன குஷ்புவான உங்களுக்கு ரசிகர்கள் கோயில் கட்ட கேட்டிருக்காங்களா?’’
‘‘கேட்பதா... மதுரை பக்கத்துல கட்டியே முடிச்சிட்டாங்க. ஜனவரி 13ம் தேதியே அதுக்கு திறப்பு விழா நடத்தியிருக்காங்க. ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்புக்கு நன்றி. ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும், கோயில் கட்டும் அளவுக்குப் போவதை நான் விரும்பலை. நானும் ஒரு சக மனுஷிதான். என்னை கடவுளாக்கிப் பார்க்க வேண்டாம். ஏழைகள் மீதும் ஆதரவற்றோர் மீதும் இரக்கம் காட்டி அவங்களுக்கு உதவி செய்தால் என் மனசு சந்தோஷப்படும்.’’
‘‘ ‘அரண்மனை’யில் மூன்று ஹீரோயின்களில் ஒருத்தரா நடிக்கிறீங்களே..?’’
‘‘அந்தப் படத்தில் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான கேரக்டர். சுந்தர்.சி என்கிட்ட கதை சொன்னப்பவே, என் கேரக்டருக்கு உள்ள முக்கியத்துவம் தெரிஞ்சது. மத்தபடி அதில் பத்து ஹீரோயின்கள் நடித்தால் கூட கவலையில்லை. த்ரில் ப்ளஸ் காமெடி கலந்த ‘அரண்மனை’யில் என் கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்...’’
‘‘ஒரு பக்கம் சூர்யா, விஜய்க்கு ஜோடி போடுறீங்க. இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் கூட நடிக்கிறீங்க..?’’
‘‘என்னைப் பொறுத்தவரை கதைதான் ஹீரோ. சிவகார்த்திகேயனும் இன்னிக்கு பெரிய ஸ்டார்தான். அருமையான நடிகரும் கூட. அதை தன்னோட படங்களில் நிரூபித்தும் காட்டி
யிருக்கார். அவருக்கு ஜோடியா, ‘மான்கராத்தே’வில் நடிப்பதில் மகிழ்ச்சிதான். அதோட தலைப்பைப் பார்த்துட்டு, ‘கராத்தே போடுறீங்களா?’ன்னு கேட்குறாங்க. அது காமெடி படம். கராத்தேவுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை...’’
‘‘காதல் பற்றி உங்கள் கருத்து?’’
‘‘ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது.’’
‘‘உங்கள் காதல் தொடர்பாக சமீபத்தில் வெளியான செய்திகள் பற்றி?’’
‘‘நோ கமென்ட்ஸ். என்னோட பர்சனல் பற்றி எழுதுவதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.’’
‘‘தமிழ்நாடு தாய் வீட்டு உணர்வைத் தருவதா சொன்னீங்களே... தமிழ்நாட்டு மருமகளாகிடுவீங்களா?’’
‘‘ம்ம்ம்...’’
- நிபந்தனையை மீறிய கேள்வி என்பதால் இதை டீசன்டாக டிஸ்குவாலிஃபை செய்த ஹன்சிகாவுக்கு நடப்பதெல்லாம் நல்லதாகவே அமையட்டும்!
- அமலன்
அட்டை மற்றும் ஸ்பெஷல் படங்கள்: ஆண்டன்தாஸ்