குட்டிச்சுவர் சிந்தனைகள்





ஆல்தோட்ட பூபதி
இஸ்ரோ விஞ்ஞானிகள் செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பறாங்கன்னு கேள்விப்பட்டவுடனே நான் என்னவோ லிப்ஸ்டிக் போட்ட  நம்ம கிராமராஜன் வாய்க்கும், சோலார் ஸ்டார் வாய்க்கும் ராக்கெட் அனுப்பறாங்கன்னு நினைச்சுட்டேன். அப்புறம்தான் தெரிஞ்சது, அதை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பறாங்கன்னு. விடுவோமா? குங்குமம் வாசகர்களுக்காக ஹவர் டூ ஹவர் அப்டேட் பண்ணாம விட மாட்டோம்! இந்தா புடிங்க...
*   மங்கள்யான் விண்கலத்தை எடுத்துக்கிட்டு ராக்கெட் செவ்வாய் கிரகத்துக்கு கிளம்பறதுக்கு ரெண்டு நாள் முன்னாடியே, ரஜினி சார் செவ்வாய்க் கிரகத்துக்கு போயி, க்ளைமேட் எப்படி இருக்கு, தரையிறங்க வானிலை நல்லா இருக்கான்னு பார்த்துட்டு இஸ்ரோவுக்கு பிரத்யேகமா தகவல் தந்திருக்காரு.
*   மங்கள்யான் என்றால் செவ்வாய் கலம். அது போறது செவ்வாய் கிரகத்துக்கு, அனுப்பறது செவ்வாய் தினத்தன்று, கலரும் மஞ்சள் என பயங்கர சென்டிமென்ட். இதை சிவபெருமான் வந்து மதுரை ஆதீனம் கனவுல சொல்ல, அவரும் இஸ்ரோகிட்ட சொல்லியிருக்காரு.
*   தோனி, ரோகித் சர்மா, விராட் கோலி பேட்டிங் புடிக்காத நாளா பார்த்துதான் மங்கள்யான அனுப்பியிருக்காங்க. எதுக்குனா, அவங்க சிக்ஸ் அடிக்கிறப்போ பந்து பட்டு ராக்கெட்டோட இண்டிகேட்டர், சைடு மிரர் எல்லாம் உடைஞ்சிடக் கூடாதுல்ல!
*   இப்போ ஏவப்பட்ட மங்கள்யான் என்னென்ன போட்டோ புடிச்சு அனுப்புச்சுன்னு பார்ப்போம்...
செவ்வாய் கிரகத்துக்கு போற வழில முதல்ல புடிச்ச போட்டோல இருந்தது, ‘வயசுக்கு வந்த வளர்மதிக்கு வாழ்த்துகள்’னு பாசக்கார பசங்க வச்சிருந்த ப்ளெக்ஸ் பேனர்தான். இவிங்க ஸ்பெல்லிங் மிஸ்டேக் ப்ளெக்ஸ் செவ்வாய் கிரகம் வரை போயிடுச்சு.
செவ்வாய் கிரகத்துல இறங்கியவுடனே கண்ணுல எடுத்து அனுப்பிய முதல் போட்டோல இருந்தது சென்னை மாநகராட்சியோட ‘டேக் டைவர்ஷன்’ போர்டு...
செவ்வாய் கிரகத்து பஸ் ஸ்டாண்ட போட்டோ எடுக்கச் சொன்னா, விண்கலம் எடுத்து அனுப்பியது நம்ம மீசைக்கார அண்ணாச்சியோட ஐயங்கார் பேக்கரி போட்டோ. அதுல பேக்கரிக்கு இந்தப்புறம் ஒரு செல்போன் ரீசார்ஜ் கடை, அந்தப்புறம் ஒரு டீக்கடை.
மங்கள்யான் எடுத்து அனுப்பிய மூணாவது போட்டோல இருந்தது நம்ம டாஸ்மாக்! சான்ஸ்லெஸ்... மங்கள்யான செவ்வாய் கிரகத்துல தண்ணி இருக்கான்னு பார்க்கச் சொன்னா, தண்ணி இருக்கிற இடத்துக்கே போயி போட்டோ எடுத்திருக்கு.


அப்படியே விண்கலத்த விவேகானந்தர் தெருல ஒரு வீட்டுக்கு அனுப்பினா, வீட்டு ஹால்ல இருக்கிற டி.வில மெகா சீரியல் ஓடிக்கிட்டு இருக்கிற போட்டோவ அனுப்புது. என்ன நாடகம்னு பார்க்க கேமராவ ஜூம் பண்ணியிருக்காங்க, அப்போ பார்த்து, ‘‘உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?’’ன்னு த்ரிஷாவோட விளம்பரம். அது முடிஞ்சா, அனுஷ்கா பட்டுப்புடவை விளம்பரம்.

கேமராவ திருப்பி வீட்டோட பின்பக்கம் விட்டா, அது எடுத்து அனுப்பிய போட்டோல ஒரு புருஷன் துணி துவைக்கிற போட்டோ வருது.
விண்கலம் அடுத்து போனது செவ்வாய் கிரகத்தின் முக்கியமான வீதி. அங்க அது எடுத்து அனுப்பிய போட்டோல இருந்தது ஒரு பையன் பைக் ஓட்ட, ஒரு பெண் ஹெல்மெட் போட்டுக்கிட்டு, சுடிதார் ஷால் வச்சு முகத்த மறைச்ச மாதிரி ஒரு போட்டோ.

பத்து நிமிஷம் கழிச்சு அது அனுப்பிய போட்டோல, ஒரு பையனும் பொண்ணும் மொட்டை வெயில்ல ஒருத்தர் மடில ஒருத்தர் படுத்துக்கிட்டு லவ்வுற போட்டோ. அட, செவ்வாய் கிரகத்துல பீச் எல்லாம் இருக்குப்பா!
செவ்வாய் கிரக பீச் சுண்டல எடுத்த போட்டோ அடுத்து வந்துச்சு. அட, அந்த சுண்டல மடிச்சுக் கொடுத்த பேப்பர் எல்லாம், இந்தியாவுல காணாம போன நிலக்கரி ஊழல் கோப்பு பேப்பர்கள்.

அடுத்து, விண்கலம் செவ்வாய் கிரகத்தின் முக்கிய சாலையை எடுத்து அனுப்பிய போட்டோ. அதுல இருந்தது ஒரு சரவண பவன் ஹோட்டல், ஒரு முனியாண்டி விலாஸ், ஒரு துணிக்கடை, ஒரு நகைக்கடை.

கொஞ்சம் அவுட்டர் வர வச்சு போட்டோ எடுக்க வச்சா, வந்த போட்டோல நம்ம சின்னத்திரை நட்சத்திரங்க எல்லாம், ‘சென்னைக்கு மிக அருகில்’னு வீட்டு மனை விக்கிற போட்டோ. இது என்னடா அதிசயம்னு எல்லா விஞ்ஞானிகளும் மண்டைய பிச்சுக்கிட்டா, அப்புறம்தான் மேட்டர் தெரியுது... ராக்கெட் கிளம்பிய வேகத்துல, விண்கலத்துல பொருத்திய கேமரா கழண்டு சென்னை பக்கத்துல விழுந்திடுச்சுன்னு.
அட நன்னாரிப் பயலே, இம்புட்டு நேரம் நாம பார்த்த போட்டோ எல்லாம் சென்னை சிட்டி போட்டோதானா?

சாதாரண பெண்கள் க்ஷிஷி சினிமா ஸ்டார்கள்
*   சாதாரண பெண்ணுக்கு வருஷா வருஷம் ஒரு வயசு அதிகரிக்கும்; சினிமா நடிகைக்கு நாலு வருஷத்துக்கு ஒரு தடவ ஒரு வயசு அதிகரிக்கும்.
*   சாதாரண பெண்கள் குளிச்சு முடிச்சுட்டு மேக்கப் போடுவாங்க; சினிமா நடிகைகள் மேக்கப் போட்டுட்டு படத்துல குளிப்பாங்க.
*   சாதாரண பெண்கள் டிரஸ்ஸோ சுடிதாரோ, தைச்சுட்டு போடுவாங்க; சினிமா நடிகைகள், டிரஸ்ஸ உடம்புல போட்டுக்கிட்டு அப்புறம் தைப்பாங்க.
*   சாதாரண பெண்கள் கஷ்டப்பட்டு படிச்சு டாக்டராவாங்க; சினிமா நடிகைகள் நடிக்க வராட்டி ஈசியா டாக்டர் ஆகியிருப்பாங்க!
*   சாதாரண பெண்கள் கல்யாணம் பண்ண ஆண்களைக் காதலிப்பாங்க; சினிமா நடிகைகளோ கல்யாணமான ஆண்களைக் காதலிப்பாங்க.
*   சாதாரண பெண்கள், சினிமா நடிகைகள் விளம்பரத்துல சொல்ற சோப்புல குளிப்பாங்க; சினிமா நடிகைகள், சாதாரண பெண்கள் போடுற சோப்புல குளிக்க மாட்டாங்க!
*   சாதாரண பெண்கள் புடவை கட்டுவாங்க, விளம்பரத்துல வர மாட்டாங்க; சினிமா நடிகைகள் புடவை விளம்பரத்துல வருவாங்க, ஆனா கட்ட மாட்டாங்க.
*   சாதாரண பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது மெகா சீரியல்; சினிமா நடிகைக்கு வாய்ப்பு குறையும்போது மெகா சீரியல்!

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்...
அடுத்த வாரம் வரப் போற இடைத்தேர்தலை விட்டுட்டு, ஆறு மாசம் கழிச்சு வர்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர் அறிவிச்சுக்கிட்டு இருக்கும் மருத்துவர்!

குளுகுளு ஹோட்டல்களும், குஷன் நாற்காலிகளும், கோயிலை விட சுத்தமான சினிமா தியேட்டர்களும், ஐந்து நட்சத்திர விடுதிகளும், அதை விட ஆடம்பரமான ஆஸ்பத்திரிகளும் லட்சக்கணக்கில் துணியடுக்கி வைத்திருக்கும் பிரமாண்ட ஜவுளிக்கடைகளும், கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் தங்க நகைக்கடைகளும், ஆளை உள்ளிழுக்கும் பஞ்சு மெத்தைகளும், சொன்னதைச் செய்யும் கம்ப்யூட்டர்களும், தட்டினால் பணம் தரும் மெஷின்களும், வானம் தொடும் கட்டிடங்களும், வெண்ணெயாய் வழுக்கும் ரோடுகளும், அதில் வழுக்கிக்கொண்டு போகும் கார்களும் இருந்தால் என்ன?
சுகமாய் காது குடைய, பாசமாய் வீட்டுக் கோழி விட்டுப் போகும் இறகு கிடைக்குதா இந்த நகரத்தில்?