சிறுவர் இலக்கியம் இங்கே புறக்கணிக்கப் படுகிறது!






நாம் பள்ளிப் பருவத்தில் படித்த துப்பறியும் நாவல்களும், காமிக்ஸ்களும் இன்று பார்க்கவே முடியாத பொருளாகிவிட்டன. குழந்தைகள் வாசிப்புத் திறனற்று கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் முடங்குகிறார்கள். இது ஒரு சமூக ஊனம். குழந்தை இலக்கியங்கள் மூலம்தான் நல்ல ஆக்கபூர்வமான மனிதர்களை உருவாக்க முடியும். இல்லையென்றால், சகமனிதனை மதிக்காத, வெறும் பொருளாதாரத்தை மட்டும் நம்பும் இயந்திரங்களால்தான் வருங்காலம் கட்டமைக்கப்படும்!’’ - வார்த்தைகளால் எச்சரிக்கிறார் எழுத்தாளர் யூமா வாசுகி. ‘ரத்த உறவு’ நாவல் மூலம் இலக்கிய உலகில் தனிக் கவனம் பெற்றவர். ஓவியர், கவிஞர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகம் கொண்ட இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய நூல்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.

‘‘குழந்தைகளுக்கான உலகத்தைப் பற்றிப் பேச இங்கு யாருமில்லை. அவர்களுக்கான சிறந்த சிறுகதைகளோ, நாவல்களோ, ஏன்... சாதாரண கதைப் புத்தகங்களோ கூட இங்கே பரவலாக இல்லை. எனது பள்ளிப் பருவத்தில் ‘மணிபாப்பா’, ‘ரத்னபாலா’, ‘பொம்மை வீடு’ உள்ளிட்ட சிறார் மாதப் பத்திரிகைகள் சின்னச்சின்ன கதைகளோடு வரும். 30 காசுகளில் குழந்தைகளுக்கான ஏராளமான கதைப் புத்தகங்களும் கடைகளில் கிடைக்கும். ஆனால், இன்று சகல தரப்பிலும் சிறார் இலக்கியத்தின் மீது கவனமே இல்லாமல் போய்விட்டது. தமிழ்ப் பத்திரிகைகள் கூட சிறுவர்களுக்கான வெளியீடுகளை சிரத்தையின்றி தயாரிக்கின்றன. இன்றைய உலகை நீங்கள் எப்படி மாற்ற நினைத்தாலும் அதை சிறாரிடம் இருந்துதான் துவங்க வேண்டும். ஆனால், இன்றைய நிலையில் சிறுவர்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள். ஆளுமையும் தலைமைப் பண்பும் இல்லாமல் வெறும் பிரதிகளாக மாற்றப்படுகிறார்கள். இது ஆபத்தான போக்கு’’ என்கிற யூமா வாசுகி, கேரளாவில் இந்த நிலை அப்படியே தலைகீழ் என்கிறார்...

‘‘மலையாளத்தில் சிறார் இலக்கியத்தை அதற்கென உள்ளவர்கள் மட்டும்தான் எழுத வேண்டும் என்றில்லை. பால் சக்காரியா, உரூப், பொற்றைக்காடு, எம்.டி.வாசுதேவன் நாயர், ரேணுகுமார், டாக்டர் ஸ்ரீகுமார் என முன்னணி எழுத்தாளர்கள் பலரும் சிறார் இலக்கியத்திற்கான பங்களிப்பை மனப்பூர்வமாக செய்துள்ளனர். பேராசிரியர் சிவதாஸ் எழுதிய ‘உமாகுட்டியின் அம்மாயி’ என்ற நாவல், மரணத்தைப் பற்றி குழந்தைகளுக்குக் கவித்துவமாகச் சொல்கிறது. அங்கே அரசே ‘பால சாகித்திய இன்ஸ்டிடியூட்’ என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 1981ல் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் மூலம், பலதரப்பட்ட சிறார் இலக்கிய நூல்கள் தயாரிக்கப்படுகின்றன. சிறார்களுக்கான ‘தளிரு’ என்ற பத்திரிகையையும் கொண்டு வருகிறது. அடுத்து ‘கேரளா சாஸ்திர சாகித்ய பரிஷத்’ என்கிற மார்க்சிஸ்ட் கட்சியின் அறிவியல் இயக்கத்தில் இருந்தும் சிறார் இலக்கியத்திற்கான அபூர்வமான நல்ல நூல்கள் வருகின்றன. ‘யுரேகா’ என்ற இதழையும் அங்கு நடத்துகிறார்கள்.
 

இவற்றில் சில இதழ்களை சிறார்களே ஆசிரியர் பொறுப்பில் இருந்து தயாரிக்கும்படிச் செய்கின்றனர். இது போல் தமிழகத்தில் ஒரு நிறுவனமும் இல்லை. பெரியவர்கள் தங்கள் இலக்கியங்களுக்காக பல்வேறு அமைப்புகளை நாடிச் செல்ல முடியும். ஆனால், சிறுவர்களால் அது முடியாது. நாம்தான் அதை உருவாக்கித் தர வேண்டும்’’ என்கிறவர், ‘‘இதனை அரசே செய்தால் நன்றாக இருக்கும்’’ என எதிர்பார்ப்போடு குறிப்பிடுகிறார்.

‘‘இங்கே சிறுவர் இலக்கியம் என்பது சின்னப் பிள்ளைக்கான விஷயம்தானே என்கிற ஏளனப் பார்வைதான் மற்றவர்களிடம் இருக்கிறது. கொ.மா. கோதண்டம், முல்லை தங்கராசன் போன்றவர்கள் முன்பு செயல்பட்டனர். இப்போது விஷ்ணுபுரம் சரவணன், விழியன் போன்றவர்கள் சிறார் இலக்கியத்திற்கான பங்களிப்பைச் செய்கின்றனர். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பாரதி புத்தகாலயம் உள்ளிட்ட பதிப்பகங்கள் சிறார் இலக்கியங்களை நல்ல முறையில் பதிப்பித்து வருகின்றன. இதில் சிலர் விடுபட்டிருக்கலாம். ஆனால், குறைவு என்பது அனைவரும் ஏற்கக் கூடியதுதான்.

இன்றைய பெற்றோரும் ஆசிரியர்களும் சிறார்களிடம் பணம் சம்பாதிக்கும் மனநிலையை மட்டுமே உருவாக்குகிறார்கள். நன்கு படித்து ‘வொயிட் காலர்’ வேலைக்குச் செல்ல வேண்டும் என்கிற ஒரே கனவு மட்டுமே அவர்களிடம் உள்ளது. குழந்தைகளைக் கூட சுயநல விரும்பிகளாக மாற்றிவிடும் இந்தப் போக்கு, ஆபத்து நிறைந்தது. உலகின் முக்கிய ஆளுமைகளாக வலம் வந்த பலரும் அவர்களின் பாட்டி, தாய் சொல்லிய கதைகளைக் கேட்டு வளர்ந்தவர்களே. அதுதான் அவர்களுக்கு புதியதோர் பாதையை வகுத்துக் கொடுத்தது. இன்று நம்மவர்களிடம் கதை சொல்லல் என்ற மரபே போய்விட்டது. பெற்றோரும் ஆசிரியர்களும் அதைச் செய்ய வேண்டும். அதோடு, சிறார்களிடம் வாசிப்புப் பழக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான சிறார்களை வளர்த்தெடுக்க முடியும்!’’
- பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்