யார் என்னிடமே ஆர்வமுள்ளவர்களாகவும், என்னையே தியானிப்பவர்களாகவும், என்னையே அடையத்தக்க குறிக்கோளாகவும் கொண்டிருப்பார்களோ... அவர்களின் யோக க்ஷேமங்களை நானே ஏற்றுக் கொள்கிறேன்.
- பாபா மொழி
‘உன்னுடைய மாதுளம்பழ சிவந்த உதட்டில்
அள்ளிப் பருகணும் அதன் ரஸத்தை
நான் வீரன் - கொஞ்சம் தட்டிக் கொடு
என் அன்பார்ந்தவளே...
வருவேன் குதிரையில் படபடவென்று
என் நெஞ்சிற்கு இனியவளே...’
- எதிரிலிருந்த மேஜைமீது தட்டியபடி லாவணி பாடிக் கொண்டிருந்தார் கண்பத் தத்தாத்ரேய சஹஸ்ரபுத்தே என்னும் தாஸ்கணு. எந்த வார்த்தையை எப்படிப் போட்டால் சிறப்பாகப் பாடல் அமையும் என அங்குமிங்கும் மாற்றிப் பொருத்தி இயற்றிக் கொண்டிருந்தார். அந்தக் கவிதையில் அவர் மனம் லயித்திருந்தது. ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஒரு சிப்பாய் அங்கு வந்து, அவருக்கு சல்யூட் அடித்து விட்டு, ‘‘சார், டெபுடி கலெக்டர் அவர்கள் உங்களைக் கூப்பிட்டிருக்கிறார்’’ என்றான்.
‘‘இப்போதேவா?’’
‘‘ஆமாம்’’
தாஸ்கணு எழுந்தார். அவர் இயற்கையிலேயே கவிதை வரம் வாய்க்கப் பெற்றவர். ஆனால், அரசாங்கம் தன்னைப் புரட்சிக்காரன் என்று எண்ணிவிடக் கூடாது என்பதற்காக போலீஸ் வேலையில் இருந்தார். டியூட்டியில் இருக்கும்போதும், அவருக்குக் கற்பனை தோன்றும். ஆனால், மேலதிகாரி கூப்பிட்டால் போக வேண்டுமே! கற்பனையையும் கவிதை எழுதுவதையும் உடனே மூட்டை கட்டி வைத்துவிட்டு, வேலைக்குச் செல்வார். இப்பொழுதும் அப்படித்தான்.
ஆனால், தற்போதைய மேலதிகாரி மிகவும் நல்லவராகவும் பண்புள்ளவராகவும் குடும்பஸ்தராகவும் இருந்தார். எனவே, அவர் எப்பொழுதும் தன்னுடன் பேச வேண்டும், தானும் அவருடன் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்று தாஸ்கணு ஆசைப்பட்டார். காரணம், அந்த அதிகாரி சிறந்த சாயி பக்தரான நாராயண் கோவிந்த் எனப்படும் நாநா சாகேப் சாந்தோர்கர் ஆவார்.
தாஸ்கணுவைப் பார்த்ததும் மகிழ்ச்சி பொங்க நாநா சொன்னார்... ‘‘வாருங்கள் கவியரசே! உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். உட்காருங்கள்.’’
‘‘வேண்டாம் சார்! உங்களுக்கு முன் நான் நிற்பதுதான் மரியாதை’’ என்று தாஸ்கணு வணக்கத்துடன் சொன்னார்.
மேலும் சிரித்துக்கொண்டே நாநா சொன்னார். ‘‘நீங்கள் எனக்குப் பிரியமானவர். மிகவும் திறமை உள்ளவர். சிறந்த இலக்கியவாதியான உங்களிடத்தில் சரஸ்வதி பிரசன்னமாக இருக்கிறாள். நீங்கள் வேலையில் கீழ்நிலையில் இருந்தாலும், அதில் மிகவும் திறமைசாலி. உட்காருங்கள். உங்களுடன் நிறைய பேச வேண்டும்.’’
‘‘நன்றி சார்!’’
‘‘கண்பத் சஹஸ்ரபுத்தே, நான் ‘தாஸ்கணு’ என்கிற உங்களுடைய புனைப்பெயரில் அழைத்தால் பரவாயில்லையா?’’
‘‘சார்! நீங்கள் இப்படிச் சொன்னது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது’’ என்றார் தாஸ்கணு.
‘‘நல்லது! நான் உங்களுக்கு எப்பொழுதும் பாபாவைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். அவருடைய தத்துவ ஞானம், யோகநெறியில் அவருக்கு இருக்கும் செழுமை, அவர் செய்த அற்புதமான லீலைகள்... இவை பற்றிச் சொல்லியிருக்கிறேன்.’’
‘‘ஆமாம். எனக்கு இவை எல்லாம் பிடித்திருக்கின்றன. நானும் பாபாவை ஒரு முறை தரிசிக்க வேண்டும். அந்த பாக்கியம் எனக்கு எப்பொழுது கிடைக்குமோ... பார்க்கலாம். நான் உங்களுடன்தான் வருவேன். ஆனால் சார்...’’
‘‘என்ன?’’
‘‘நான் ஆன்மிகக் கவிஞன் அல்ல. பொழுதுபோக்கு மற்றும் சிருங்காரமான பாட்டுகள் எழுதும் கவிஞன். பாபா என்னை அருகில் அழைப்பாரா?’’
‘‘தாஸ்கணு... ஒரு முறை பாபாவின் மனதில் தோன்றிவிட்டால், உன்னை அருகில் அழைப்பது மட்டுமல்ல... நேர்மை உள்ளவனாகவும் மாற்றிவிடுவார்.’’
‘‘அப்படியென்றால்..?’’
‘‘நீங்கள் லாவணி எழுதுகிறீர்கள். சிருங்காரம் என்பதும், வாழ்க்கையின் ஒரு மகத்தான பகுதியாகும். அதில் ஆபாசம் இல்லாமல் இருந்தால், அதுவும் பவித்திரமானதுதான். ஆனால், உங்களுடைய கவித்தன்மைக்கு உண்மையான வழி என்னவென்று பாபாவே சொல்வார். கம்பளிப்பூச்சி போன்ற அருவருப்பைத் தரும் உயிரினங்களைக்கூட அழகுள்ளவையாகவும் உபயோகமுள்ளவையாகவும் மாற்றக் கூடியவர் சாட்சாத் சாயியே ஆவார். எதற்கும் முடிவு எடுப்பவர் அவர்தான். நீங்களோ நானோ அல்ல.’’
‘‘உண்மையா? சமீபத்தில் பாபா செய்த அற்புத நிகழ்ச்சி ஏதேனும் தெரியவந்ததா?’’
‘‘ஆமாம். எனக்கு கோபால் குண்ட் என்றொரு நண்பர் இருக்கிறார். தலைசிறந்த சாயி பக்தர். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவர் நிறைய முயற்சிகள் செய்தார். மருத்துவம், பிரார்த்தனை எதுவும் பலிக்கவில்லை. கடைசியில், அவர் சாயிபாபாவை சரணடைந்தார். அவரின் அருளால் குழந்தை பிறந்தது.’’
‘‘சாயி நிஜமாகவே உயர்ந்தவரும் சக்தி படைத்தவரும் ஆவார். நீங்கள் ஒருமுறை என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.’’
‘‘கட்டாயமாக! ஆனால், நான் இன்று உங்களை வேறொரு வேலை நிமித்தமாக அழைத்திருக்கிறேன்.’’
‘‘கட்டளை இடுங்கள்!’’
‘‘தாஸ்கணு, உஸ்மானாபாத் அருகில் இஸ்லாம்பூர் என்கிற ஊர் இருக்கிறது. அங்கு வாமன் சாஸ்திரி என்னும் பெரிய பண்டிதர் இருக்கிறார். அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். மேலும், அவர் ஒரு சிறந்த ஆன்மிகவாதி. ஸாய்கோண்டா என்னுமிடத்தில் அவரை வரவேற்று, தேவையான வசதிகளைச் செய்துகொடுப்பதற்காக, நான் உங்களை அனுப்புகிறேன். நீங்கள் போக முடியுமா?’’
‘‘அப்படிப்பட்ட பெரிய மனிதருக்கு உதவி செய்ய, நான் கட்டாயமாகவும் சந்தோஷமாகவும் போகிறேன்.’’
‘‘சரி, நீங்கள் போகலாம்.’’
‘‘நன்றி சார்!’’
குறிப்பிட்ட நேரத்திற்கு தாஸ்கணு, ஸாய்கோண்டாவிற்குச் சென்றார். வாமன் சாஸ்திரியும் வந்து சேர்ந்தார். தாஸ்கணு அவருக்கு வேண்டியவற்றையெல்லாம் செய்தார். இருவரிடையேயும் நல்ல நட்பு ஏற்பட்டது.
தாஸ்கணு ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னார்... ‘‘சாஸ்திரிஜி, நான் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும்!’’
‘‘அவசியம் சொல்லுங்கள்.’’
‘‘தாங்கள் என்னை சீடனாக ஏற்றுக்கொண்டு, மந்திரத்தை உபதேசிக்க வேண்டுமென மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.’’
வாமன் சாஸ்திரி ஒரு வினாடி அமைதியாக இருந்தார். அவர் எதிர்காலத்தைப் பற்றி யோசனையில் இருந்தார். பிறகு சொன்னார்... ‘‘தாஸ்கணு, உங்களுடைய எல்லா வேண்டுகோளையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால், அதில் சிலவற்றை நான் ஏற்றுக்கொள்கிறேன்.’’
‘‘அப்படியென்றால்..?’’
‘‘நான் உங்களை சிஷ்யன் என்று ஏற்றுக்கொள்ள முடியாது’’ - சாஸ்திரி உறுதியாகச் சொன்னார்.
‘‘சாஸ்திரிஜி, நான் பொழுதுபோக்காகவும், லாவணி போன்ற கேளிக்கை நிறைந்தும் பாட்டுகளை எழுதுவதால் என்னை நிராகரிக்கிறீர்களா?’’ - தாஸ்கணுவின் குரலில் நடுக்கம்.
இதைக் கேட்டு வாமன் சாஸ்திரி உரக்கச் சிரித்துக்கொண்டே சொன்னார்... ‘‘சேச்சே... பொழுதுபோக்கு மற்றும் லாவணி இவையெல்லாம் மட்டமானவை என்று யார் சொன்னது? இவை யாவும் சிறந்த கலைகள்தான். நானும் இந்தக் கலையைப் பற்றி நிறைய படித்திருக்கிறேன். நான் இதை இழிவுபடுத்துவதாக எண்ண வேண்டாம்.’’
தாஸ்கணுவிற்குக் கொஞ்சம் சமாதானம் ஏற்பட்டது. ஆனால், சாஸ்திரியின் நிராகரிப்பிற்கு முக்கியமான காரணம் தெரியவில்லை.
‘‘நான் உங்கள் குரு ஆக முடியாது. உங்களுக்கு குருவாகும் தகுதியுடையவர் இந்த உலகத்திலேயே ஒரு பெரிய மகான் ஆவார். சிறிது நாட்களில் அவரை சந்திப்பீர்கள். அவர் உங்களுடைய வாழ்க்கையையே மாற்றிவிடுவார். அவருக்காகக் கொஞ்சம் பொறுத்திருங்கள்’’ என்றார் சாஸ்திரிஜி.
‘‘சரி, ஆனால் நீங்கள் என்னுடைய கோரிக்கையில் ஒரு பாகத்தை ஏற்றுக்கொள்வதாகச் சொன்னீர்கள். அது என்ன?’’
‘‘உங்களுக்கு மந்திர உபதேசம் செய்கிறேன். அதன்படி, நீங்கள் சரியாக உச்சரித்து வரவும்.’’
‘‘சரி’’
‘‘நீங்கள் எந்த பகவானின்
பக்தர்?’’
‘‘நான் சிவனின் பக்தனாவேன்.’’
‘‘நன்று. நீங்கள் ‘ஓம் நமசிவாய’ என்கிற மந்திரத்தை உச்சரித்துக்கொண்டிருங்கள்!’’
‘‘எவ்வளவு முறை?’’
‘‘மந்திரம் ஜபிப்பதற்குக் கால நேரம் இல்லை. எப்படி சங்கீதக் கச்சேரிக்குத் தம்புராவின் நாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறதோ, அதைப் போல வாழ்க்கை என்னும் கச்சேரிக்கு மந்திர ஜெபம் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். சந்த் ஞானேஸ்வரர் சொன்னார்... மந்திர ஜெபமே உயிர்மூச்சாக இருக்கவேண்டும்.’’
தாஸ்கணு அவரை வணங்கிவிட்டு அந்த மந்திரத்தை உச்சரித்தார். சாஸ்திரியும் ஆசீர்வதித்தார்.
பிறகு அவர்கள் பேச்சு சாயிபாபாவைப் பற்றியதாக இருந்தது. இதை முதலில் தாஸ்கணு ஆரம்பித்தார். ‘‘சாஸ்திரிஜி, நீங்கள் சாயிபாபாவைப் பார்த்திருக்கிறீர்களா?’’
சாயியின் பெயரைக் கேட்டவுடனே, சாஸ்திரியின் முகத்தில் பக்தியுடன் கூடிய புன்னகை எழுந்தது. ‘‘தாஸ்கணு, சாயியை மிகவும் அருகில் பார்த்திருக்கிறேன். அவரை மனம் நிறைய தரிசித்திருக்கிறேன். அவருடைய பவித்திரமான அன்பு நிறைந்த பார்வையில் மூழ்கியிருக்கிறேன்.’’
இதைக் கேட்டு தாஸ்கணு ஆனந்தமடைந்தார். ‘‘சாஸ்திரிஜி! அவரைப் பற்றி நிறைய சொல்லுங்கள்’’ என்று கேட்டார்.
‘‘சொல்கிறேன். பாபாவின் நற்குணங்களைப் பற்றிச் சொல்வதில் மிகுந்த உற்சாகம் உண்டாகிறது. முன்பு ஒருமுறை ஷீரடிக்குச் சென்று மூன்று நாட்கள் தங்கி
யிருந்தபோது, அவருடைய நட்பு எனக்குக் கிடைத்தது.’’
‘‘அவர் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறார்?’’
‘‘அவருடைய உருவம் அசாதாரணமான அனுபவத்தைக் கொடுப்பதாக இருக்கிறது. அவர் மிகவும் தேஜஸ்வியாக இருக்கிறார். அவருடைய கண்களோ சூரிய ஒளிபோல் பிரகாசிக்கிறது. ஆனால், அதில் உஷ்ணமில்லை. ஆனால், அது நம் உடம்பிலுள்ள உஷ்ணத்தைக் குறைத்து, குளுமையாக்குகிறது. அவர் முக்காலங்களையும் உணர்ந்த ஞானியாவார்...’’
‘‘அவர் பேச்சு எப்படி இருக்கும்?’’
‘‘அவருடைய சொற்பொழிவிற்கு ஏற்றவாறு, சில சமயங்களில் அமைதி, கம்பீரம், அன்பு, கோபதாபம் எல்லாம் நிறைந்ததாக இருக்கும். ஆனால், அவருடைய கோபம், காற்றினால் கடலில் ஏற்படும் அலையைப் போன்றது. காற்று அடங்கியவுடன், கடல் எப்படி அமைதியாகிறதோ அதைப்போல், பாபா அமைதியாகவும் அன்பு நிறைந்தவராகவும் இருக்கிறார். சில சமயங்களில் அவருடைய பேச்சு புதிராக இருக்கும். ஆழ்ந்த அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். பாமர மக்களிடையே பேசும்போது, அவருடைய பேச்சும் குரலும் கரும்புச்சாறு, தேன், கல்கண்டு போலக் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். பேச்சின் ஒலி, காதுக்குள் செல்கிறது. அர்த்தம் இதயத்தைத் தொடுகிறது’’ என்று சாஸ்திரிஜி, உற்சாகமாகச் சொன்னார்.
‘‘சாஸ்திரிஜி! பாபாவைப் பற்றி நீங்கள் சொல்வதைக் கேட்கவே இவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது. இன்னும் அவரை நேரில் பார்த்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்’’
‘‘உண்மைதான் தாஸ்கணு. ஆனாலும் இன்னும் பலருக்கு பாபாவின் மகத்துவம் தெரியவில்லை. நான் என்னுடைய வாழ்க்கையில் பல மகான்களைப் பார்த்திருக்கிறேன். சிலர் காட்டில் வாழ்கிறார்கள். சிலர் இமய
மலையில் இருக்கிறார்கள். சிலர் சித்தி மார்க்கத்தைத் தழுவி, சித்தியடைந்தார்கள். இவர்களில் சிலர் குடும்ப வாழ்க்கை முறை என்கிற அவலம் பிடிக்காமல், அதை விட்டு ஓடியிருக்கிறார்கள். ஷேகாவைச் சேர்ந்த கஜானன் மகராஜ், அக்கல்கோட்டின் ஸ்ரீஸ்வாமி ஸமர்த்த மகராஜ், இப்படிச் சிலரை உதாரணத்திற்காகச் சொல்லலாம். இவர்கள் எல்லோரையும் விட சாயிபாபா அபூர்வமானவர். அவரிடத்தில் எல்லா விதமான சக்திகளும் சித்திகளும் இருக்கின்றன. அவருடைய உண்மையான இருப்பிடம் சொர்க்கமாகும். ஆனால், அவர் இருப்பதோ இந்த உலகில்! ஒவ்வொரு கணமும் மனிதனின் வாழ்க்கையை உன்னத நிலைக்கு உய்விக்கவே அவர் பாடுபடுகிறார். ஜாதி பேதம் பார்க்காமல், மக்களுக்கு நன்மை செய்வதிலும், தர்மத்தை வளர்க்கவும் நாட்டம் கொண்ட வேறு ஒரு மகானை நான் பார்த்ததில்லை!’’
சாஸ்திரிஜி ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார். சாயியின் மகத்துவத்தை, பல சம்பவங்களிலிருந்து எடுத்துக் காட்டினார். தாஸ்கணு இதைக் கேட்டுத் திருப்தியடைந்தார். இப்பொழுது அவருக்கு பாபாவைப் பார்க்க வேண்டும் என்கிற தீரா ஆவல் எழுந்தது. இங்குள்ள டியூட்டி முடிந்ததும், ஷீரடிக்குச் செல்ல வேண்டும் என முடிவு செய்தார்.
அவருடைய மனத்தில் ஒரு சந்தேகம் எழுந்தது. ‘சாஸ்திரிஜி என்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், என்னுடைய குரு சாயியாக இருக்குமோ?’ - ஆழ்மனத்தில் ஒளிக்கீற்று ஒன்று தோன்றியது!
(தொடரும்...)
காற்று அடங்கியவுடன், கடல் எப்படி அமைதியாகிறதோ அதைப்போல், பாபா அமைதியாகவும் அன்பு நிறைந்தவராகவும் இருக்கிறார்.
பாபாவின் உண்மையான இருப்பிடம் சொர்க்கமாகும். ஆனால், அவர் இருப்பதோ இந்த உலகில்! ஒவ்வொரு கணமும் மனிதனின் வாழ்க்கையை உன்னத நிலைக்கு உய்விக்கவே அவர் பாடுபடுகிறார்.