மெட்ரோ ரெடி!





சென்னை மக்களும், சென்னைக்கு வரும் மக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. அடுத்த ஆண்டு மத்தியில் இதில் மக்கள் பயணம் செய்யலாம்.
அதற்குமுன் ‘சென்னை மெட்ரோ’ பற்றி சில டீடெய்ல்ஸ்...
*   இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் கொல்கத்தாவில் ஓடியது. இப்போது டெல்லியில்தான் மெட்ரோ அதிக பயன்பாட்டில் இருக்கிறது. தினம் 200 ரயில்கள். 20 லட்சம் பேர் பயன்படுத்துகிறார்கள்.

கொல்கத்தா, பெங்களூரு, குர்கான், ஜெய்ப்பூரை அடுத்து மெட்ரோ வரும் ஐந்தாவது நகரம் சென்னை. கொச்சி, ஐதராபாத், மும்பை திட்டங்களும் வேகமாக நடக்கின்றன.
*   சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், மீனம்பாக்க விமான நிலையம், கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் என எல்லா போக்குவரத்து முனையங்களையும் இணைக்கும் விதமாக மெட்ரோ திட்டம் அமைவது சென்னையில் மட்டும்தான்!
*   இரண்டு பாதைகளில் 42 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இவற்றில் 9 ரயில்கள் பிரேசிலில் உருவாகின்றன; மற்ற 33 இங்கேயே உருவாகிறது.
*   ஒரு ரயிலில் 4 பெட்டிகள் இருக்கும்; இடையில் தடுப்புகள் கிடையாது. எஞ்சினிலிருந்து கடைசி வரை பார்க்கலாம். 176 பேர் உட்கார்ந்தும், 1100 பேர் நின்றும் பயணிக்கலாம்.
*   ஒவ்வொரு பெட்டியிலும் 2 தானியங்கி கதவுகள். டிரைவர்தான் திறந்து மூடுவார். ஃபுட்போர்டு அடிக்க முடியாது. அவசரத்துக்கு திறக்க தனி பட்டன் உண்டு.
*   மற்ற மெட்ரோக்களில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என பிரித்ததில்லை. சென்னையில் மட்டும் தனியாக ஒரு முதல் வகுப்பு பெட்டி உண்டு. பெண்களுக்கும் இதில் பாதி இடம்!

*   எல்லா பெட்டிகளுக்கும் ஏ.சி. கண்காணிப்பு கேமராவும் உண்டு. டிரைவர் தனது இருக்கையில் இருந்தபடி பெட்டிகளைக் கண்காணிப்பார்.
*   நிறைய பேர் இறங்க வேண்டியிருந்தால், கூடுதல் நேரம் நிறுத்தும்படி டிரைவரிடம் பேசலாம். இதற்கு பெட்டியில் போன் உண்டு. மாற்றுத் திறனாளிகள் இறங்க கூடுதல் நேரம் கேட்டு பட்டனை அழுத்தலாம்.
- ரெமோ