பொய் : ஒரு பக்கக் கதை





பாலாவும் ஷீலாவும் இரண்டு வருடமாகக் காதலிக்கிறார்கள். காதலை வீட்டில் சொல்லி கல்யாணத்தில் முடிப்பது எப்படி? அதைத்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘‘அருமையான ஐடியா...’’ எனத் துள்ளிக் குதித்தான் பாலா.

‘‘எனக்கு பொண்ணு பார்க்க, ஒரு தரகர்கிட்ட பேசியிருக்கார் அப்பா. அந்தத் தரகர் மூலமா உன் ஜாதகத்தை எங்க வீட்ல கொடுத்து, மேற்கொண்டு பேசச் சொல்லப்போறேன். கல்யாணம் யதார்த்தமா நடக்கற மாதிரி நடக்கட்டும். நாம ஏற்கனவே காத லிக்கற விஷயத்தை ரெண்டு வீட்டுக்கும் தெரியாம மறைச்சுடலாம்.’’ - பாலாவின் இந்த ஐடியாவைமட்டுமல்லாமல், அவனையும் நிராகரித்து நடந்தாள் ஷீலா.

‘‘ஏய் என்னாச்சு?’’
‘‘காதல்னா அதில் வீரம் இருக்கணும் பாலா. இவதான் எனக்குன்னு உறுதியா நின்னு ஜெயிக்கிற மனசு வேணும். காதலிச்சதையே மறைக்கிற கோழைத்தனம் உன்கிட்ட இருக்கு. எந்த விஷயமா இருந்தாலும் அணுகு முறையில நேர்மை இருக்கணும். அது உங்ககிட்ட ஆப்சென்ட். இப்ப உங்க பேரன்ட்ஸை ஏமாத்த நினைக்கிற நீங்க, இதே கோழைத்தனத்தால நாளைக்கு என்கிட்டயும் நிறைய விஷயங்களை மறைப்பீங்க. பொய் இல்லாம யாருமே இல்ல... ஆனா, இவ்வளவு திறமையா பொய் சொல்றவர்கிட்ட வாழ முடியாது!’’ - தீர்க்கமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள் ஷீலா. அவள் மனதில் பாரம் குறைந்திருந்தது.