லைட்ஹவுஸ் இனி...டூரிஸ்ட் ஸ்பாட்!





‘மெட்ராஸ சுத்திப் பாக்கப் போறேன்... மெரினாவில் சுண்டல் வாங்கித் தாரேன்... லைட்ஹவுசில் ஏறி நிக்கப் போறேன்...’ என இனி மீண்டும் பாட்டெழுதலாம். 19 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் லைட்ஹவுஸை சுற்றிப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது மத்திய அரசின் கப்பல் போக்குவரத்துத் துறை. வரும் 14ம் தேதி குழந்தைகள் தினத்தில் புதுப்பொலிவுடன் திறப்புவிழா காண்கிறது சென்னை கலங்கரை விளக்கம்.

‘‘கடந்த 1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு சென்னை உட்பட இந்தியாவிலுள்ள அனைத்து லைட்ஹவுஸ்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக படிப்படியாக சுற்றுலாவிலிருந்து விலக்கப்பட்டது. அலுவலக வேலைகள் மட்டுமே அங்கு நடந்துவந்த வேளையில், இப்போது மத்திய அரசு மீண்டும் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதி வழங்கியுள்ளது. சென்னை மண்டலத்தின் கீழ் இயங்கும் 24 லைட்ஹவுஸ்களில் சென்னை, மாமல்லபுரம், கன்னியாகுமரி, கேரளாவிலுள்ள விழிஞ்சம் ஆகியவை சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படுகிறது’’ என்கிறார் லைட்ஹவுஸ் புதுப்பிக்கும் பணியிலிருந்த அதிகாரி ஒருவர்.

150 அடி உயரம் கொண்ட சென்னை லைட்ஹவுசில் பத்து மாடிகள் உள்ளன. இதில் ஒன்பது மாடி வரை லிஃப்ட்டில் பயணிக்கலாம். இந்தியாவில் லிஃப்ட் வசதியுள்ள ஒரே லைட்ஹவுஸ் இதுதான் என்கின்றனர் இங்குள்ள அதிகாரிகள். தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த லிஃப்ட்டில் 12 பேர் பயணிக்கலாம்.

‘‘சென்னை லைட்ஹவுஸ் இருநூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. 1796ம் ஆண்டு சென்னையின் முதல் லைட்
ஹவுஸ் அமைந்திருந்த இடம் இதுவல்ல!’’ என புதிர் போட்டுப் பேசத் தொடங்கினார் லைட்ஹவுஸ் துறையின் சென்னை மண்டல இயக்குநர் டி.ராமதாஸ்.

‘‘பிரிட்டிஷ் அரசு இந்தியா வந்த பிறகு கடல் வாணிபத்திற்காக ஆங்காங்கே கலங்கரை விளக்கங்களை ஏற்படுத்தினர். சென்னையின் முதல் லைட்ஹவுஸ் 1796ல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்தான் எழுப்பப்பட்டது. அப்போது அதன் உச்சியில் பன்னிரண்டு விளக்குகள் தேங்காய் எண்ணெய் ஊற்றி ஏற்றப்பட்டன. அந்த ஒளிதான் கப்பல் மாலுமிகளுக்கு சென்னையை அடையாளம் காட்டியது. அதன் பிறகு 1844ல் இப்போதுள்ள ஐகோர்ட் வளாகத்துக்குள் மேம்படுத்தப்பட்ட லைட்ஹவுஸ் ஒன்று அமைக்கப்பட்டது. தற்போதுள்ள இந்த லைட்ஹவுஸ் 1977ல் திறக்கப்பட்டது. எண்ணெய் விளக்கில் ஆரம்பித்தது இப்போது சக்தி வாய்ந்த எலக்ட்ரிக்கல் லைட்டில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. இதன் வெளிச்சம் கடலுக்குள் 25 நாட்டிக்கல் மைல் தூரம் வரை தெரியும். சென்னை லைட்ஹவுஸ் பத்து வினாடியில் இரண்டு முறை ‘ஃப்ளாஷ்’ செய்யும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. சங்கேதக் குறியீடு மூலம் கப்பலில் இருப்பவர்களுக்கு இரண்டு முறை ஃப்ளாஷ் வந்தால் அது சென்னை என்பது தெரிந்துவிடும்’’ என்றவர், மேலும் சில தகவல்களை அடுக்கினார்.

‘‘இந்த லைட்ஹவுசின் கீழே அருங்காட்சியகம் ஒன்றை அமைத்து வருகிறோம். அதில், பழைய விளக்குகள் எப்படி இயங்கின? இப்போதுள்ள விளக்குகளின் தொழில்நுட்பம் என்ன? ஆகியவற்றை விளக்கத்துடன் சொல்ல இருக்கிறோம். இது குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்காகவே கப்பல் போக்குவரத்துத் துறை, குழந்தைகள் தினத்தில் இந்த லைட்ஹவுஸ் பார்வைக்கு வர வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. மேலும், இந்த லைட்ஹவுஸின் உச்சியில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு ரேடார் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 60 நாட்டிக்கல் மைல் தூரம் வரை செல்லும் கப்பல்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியும். இவற்றையெல்லாம் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம்’’ என்கிறார் அவர்.
லைட்ஹவுஸ்... இனி வெயிட்டான டூரிஸ்ட் ஸ்பாட்!
- பேராச்சி கண்ணன்
படங்கள்: புதூர் சரவணன்